சின்ன சின்ன சந்தோஷங்கள்

இன்னும் பல நல்ல தொழில்நுட்பங்களை இவர்கள் இன்ட்ரொடியூஸ் பண்ண  மாட்டேங்குறாங்க. இருக்கும் தொழில்நுட்பங்களையும் சரியா யூஸ் பன்றத்தில்ல. சும்மா கமர்ஷியல் படம் எடுக்குறாங்க.கமர்ஷியல் படம் எடுக்குறதுல ஒண்ணும் தப்பில்லை ‘சர்வர் சுந்தரம்’ ‘அருணாச்சலம்’ மாதிரி நல்ல கமர்ஷியல் படம் எடுத்தா பரவாயில்ல. அதுவும் இல்லை. அவங்கள மட்டும் குறை சொல்ல முடியாது. நாம எதுக்கு கைத்தட்டுறோமோ அதைத்தான அவங்களும் எடுப்பாங்க. இப்படி ஆயிரம் குறைகள் பத்தாயிரம் குத்தங்குறை கண்டுபிடிக்கலாம் கிழி கிழின்னு கிழிக்கலாம். அதை செய்றதுக்கு நிறைய பேர் இருக்காங்க.

ஒரு நாலஞ்சு வருஷம் முன்னாடியெல்லாம் மதன்ஸ் திரைப்பார்வை, திரை விமர்சனம் இது ரெண்டு மட்டும்தான் இருந்துச்சு. ஐம்பது நாள், நூறு நாள் விழா எடுத்தாங்க ஆனா இப்போலாம்  அப்படியில்ல. படம் ரிலீஸ் முன்னாடியே துபாய்ல மலேஷியால படம் பார்த்துட்டு பட்டுன்னு ஸ்டேட்டஸ் போடுறாய்ங்க. இதுல போதா குறைக்கு அண்ணன் RJ பாலாஜி வேற ரெண்டு வருஷம் கலக்கோ கலக்குன்னு கலக்கிட்டார். அதனால வெறும் வீக்கெண்ட், அதுவும் நேக்கா வெள்ளிக்கிழமை ரிலீஸ் பண்ணிட்டு அந்த வீக்கெண்ட் கலெக்ஷன மட்டுமே நம்பி படம் எடுக்குறாங்க.

ஒவ்வொருத்தரும் (சில நேரத்தில் இந்த ஊசி மிளகாயையும் சேர்த்துதான்) தனித் தனியா அது நொட்ட இது நொள்ளைன்னு சொன்னா யாரு நல்ல விஷயங்கள பத்தி பேசுறது? நாம பேசுவோம்.அதுக்குத்தான் இந்த போஸ்ட்.
ஆனா நிஜமாவே நம்மூரு சினிமாவில கூட சில சூப்பர் விஷயங்களெல்லாம் நடக்குதுங்க. அப்படி என் கண்ணில் பட்ட நாலு வரவேற்கத்தக்க முயற்சிகள். இதோ…


அன்னை காளிகாம்பாள்:
இந்த படத்தில் யானைக்கு கூலிங் கிளாஸ் போட்டு அழகு பார்த்த ராம.நாராயணன் அவர்கள் தனது அசிஸ்டண்ட் டைரக்டர்களின் பெயர்களை
“நாளைய இயக்குனர்கள்” என்று டைட்டிலில் போட்டு அழகு பார்த்திருக்கிறார்.
சமீபத்தில் கே.டி‌வியில் பார்த்த போது என் முகத்தில் ‘அடடே!’ ரியாக்ஷன்.

பாண்டிய நாடு:
பாண்டிய நாடு விளம்பரம்- ஒரு புதிய முயற்சி. பாண்டிய நாடு படம் பார்த்த பலர் ‘சூப்பர்..’ ‘சுசீந்தரன் இஸ் பேக்..’ ‘தீபாவளி ரேஸ் வின்னர்..’ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்கள். என்னடா இவன் இழுக்குறானே மாத்தி சொல்லி ஸீன் போட போறானா என்று திட்டாதீங்க. நான் இன்னும் படம் பார்க்கல. ஆனா அதுக்கு முன்னாடியே ஒரு நல்ல அபிப்ராயம் வந்துடுச்சு. முடி வெட்ட போயிருந்த போது, வெறும் விளம்பரங்கள் மட்டுமே நிரம்பி வழியும் சில தமிழ் நாளிதழ்கள் பரப்பி வைக்கப் பட்டிருந்தன.அத பார்க்கும் போது சலூன்ல வைக்கிறதுக்காகவே வெளிவருது போலன்னு தோணும். அதுல நீங்க நியூஸ் ஏதாவது இருக்கான்னு தேடனும் அந்த அளவுக்கு அதுல விளம்பரத்த தவிர ஒன்னுமே இருக்காது.
சரி கதைக்கு வருவோம். அந்த விளம்பரக் குப்பையில் ஒரு நல்ல விஷயம் தென்பட்டது.பாண்டிய நாடு படத்தின் விளம்பரம். ‘வெற்றிநடை போடுகிறது’, ‘ஆல் சென்டர்ஸ் மாஸ் ஹிட்’ என்று வழக்கமான ஆராதனை வாக்கியங்களுடன்தான் இருந்தது அது. ஆனால் ஒரு விஷயம் ‘ஆஹா…’ என்று வாயை பிளக்க வைத்தது. ‘நம்மாளுங்க முன்னேரிட்டாய்ங்க…’ என்று ஆச்சரியப்பட வைத்தது.

அந்த விளம்பரத்தில் ‘வெற்றிக்கு உழைத்தவர்கள்’ என்று இணை ஒளிப்பதிவாளர்கள் கங்காதர், ஜெய் சுரேஷ்,சரத் சுந்தர் அவர்களின் பெயர்கள் புகைபடத்துடன் இருந்தது. பெருமகிழ்ச்சி அடைந்தேன். It made me really happy. I felt happy for something which recognizes the work of unsung heroes. அதை பற்றிய சிந்தனையிலேயே இருந்ததன் விளைவு கண்ணாடியில் தெரிந்தது. என் ஹேர் ஸ்டைல் படு கேவலமாக இருந்தது!

வீட்டிற்கு வந்தவுடன் பாண்டிய நாடு திரைப்படத்தின் மற்ற விளம்பரங்களை கூகிள் (Google) செய்தேன். இன்னொரு பெரிய ஆச்சரியம். ஒரு விளம்பரத்தில் ‘வெற்றிக்கு உழைத்தவர்கள்’ என்று ஆடை வடிவமைப்பாளர்கள் லக்ஷ்மி பாஸ்கர், ஷாலினி, நிகிலா அவர்களின் பெயர்கள் புகைபடத்துடன் இருந்தது.

இதுவரை நினைவு திருந்தி ரிலீஸ் நாளில் படம் பார்க்க ஆரம்பித்ததிலிருந்து இது போன்ற விளம்பரங்களை நான் கண்டதாக ஞயாபகம் இல்லை.இது இயக்குனர் சுசீந்திரனின் முயற்சியாக இருக்கலாம், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (VFF) முயற்சியாக இருக்கலாம், அல்லது படக்குழுவின் முக்கியமான ஒருவர் ‘இப்படி செய்தால் நல்லாயிருக்கும் அவர்களை நாம் கௌரவிக்க வேண்டும்’ என்று யோசனை சொல்லியிருக்கலாம்.ஒரு நல்ல விஷயத்திற்கு பின்னால் இருக்கும் யோசனை யாருடையதாக இருந்தால் என்ன.

இத்தனை வருடங்கள் எந்த திரை விமர்சனமும் எந்த நாளிதழும் அவர்களுக்கு கொடுக்காத கௌரவத்தை சந்தோஷத்தை ஒரு சின்ன நியூஸ் பேப்பர் விளம்பரம் கொடுக்கும் என்றால் நல்லதுதானே.
கரை நல்லது-என்பது போல நிரம்பிவழியும் விளம்பரங்களும் நல்லதே.

வீரம்:
இந்த படத்தை பார்த்துவிட்டு ‘ஏய்! தல வெயிடு தல கெத்து’ என்றெல்லாம் கூறியவர்கள் படம் முடிந்தவுடன் கடைசியில்

“எ ஃபிலிம் பை
சிவா
& டீம்”

என்று போட்டதை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.  இது எவ்வளவு பெரிய பெருந்தன்மை என்று பலருக்கும் தெரியவில்லை.சினிமாவை வாழ்க்கையாக கொண்டு இல்லை இல்லை வாழ்க்கையே சினிமாதான் என்றளவுக்கு தங்களை அர்ப்பணித்த இணை இயக்குனர்களுக்கும் துணை இயக்குனர்களுக்கும் அந்த “டீம்” என்ற ஒரு வார்த்தை போதும்.அவர்களுக்கு அதை விட ஒரு பெரிய ஊக்கம் எதுவுமிருக்க முடியாது.
யாருமே இப்படி போடாமல் இருக்கும்போது இது போல அங்கீகரிப்பதற்கு ஒரு மனசு வேணும்.அதுக்காகவே அந்த ஒரு வார்த்தைக்காகவே பார்க்கவே முடியாத அளவுக்கு ஒரு மொக்கை படத்தை டைரக்டர் சிவா எடுத்தாலும் அவரது அடுத்த படத்திற்கு கண்டிப்பாக நான் அட்டெண்டன்ஸ் போடுவேன்.

பிரியாணி:
2013ல் கார்த்தியின் ஒரே ஒரு நம்பிக்கை.ஹன்ஸிகா ஹீரோயின்.டைரக்டர் வெங்கட் பிரபு. பிரேம்ஜி இருக்கிறார். வாலியின் மிஸிஸிப்பி ஒரு தனி கிக். என்ற எல்லாவற்றையும் தாண்டி யுவனின் நூறாவது படம். யுவனின் நூறாவது படம் என்று பலருக்கும் தெரிந்திருக்க கூடும். ஆனால் டைட்டிலில் ஸ்டண்ட் சில்வா(நூறாவது படம்) என்று அங்கீகரித்தது அட்டகாசம். ஆக்ச்சுவலி அவசியம்!

இது போல் திரைக்குப் பின்னால் உழைப்பவர்களை ஊக்குவித்தல், அவர்களது வேலையை மேம்படுத்தும் அவர்களை சுற்றி இருப்பவர்களை மகிழ்விக்கும் அதனால் அவர்களுக்கும் ஒரு மன நிறைவு கிடைக்கும்.கதாநாயக அர்ச்சனை பாடல்கள், பன்ச் டயலாக்குகள் என கதாநாயகனுக்கு மட்டுமே பாலாபிஷேகம் செய்யும் நம் தமிழ் நாட்டில் சினிமாவை ரசிக்க வைக்கும் இது போன்ற சில நல்ல முயற்சிகள் அவசியம் தேவை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இவர்கள் பெயர்கள் விளம்பரங்களில் இடம் பெற வேண்டும்,இவர்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும், கௌரவிக்கப்பட வேண்டும்  என்று முடிவு செய்து அவர்களை கௌரவித்திருக்கும் ராம.நாராயணன் குழுவினருக்கும், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி(VFF) குழுவினருக்கும்,சிவா அவர்களுக்கும்,வெங்கட் பிரபு அவர்களுக்கும் என் நன்றியும்  பாராட்டுகளும்

_/\_ _/\_ _/\_

Advertisements

புது புது அர்த்தங்கள்

‘புது புது அர்த்தங்கள்’ என்ற படத்தின் பெயரை கேட்டவுடன் கொஞ்ச நேரம் மூளையை கசக்கி பிழிந்தெடுத்த சில புது புது அர்த்தங்கள்.

  • வண்டியில் செல்லும்போது குறுக்கும் நெடுக்குமாய் பறக்கும் பட்டாம்பூச்சிகளுக்கு இறக்கப்படுபவர் நீங்கள் என்றால் – இந்த சமூகத்தில் ஒரு பெரிய மாற்றம் கொண்டு வரக்கூடிய ஆற்றல் உங்களிடம் இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
  • வெற்றுத்தாளையும் வெகுமதி பெரும் மதிப்பு மிக்க வார்த்தைகளால் அலங்கரிப்பவர் நீங்கள் என்றால் – உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது என்றுதான் அர்த்தம்.
  • இரவில் கண்ணுறங்கும் நேரத்தில் உங்களை தவிர வேறொரு உயிருக்காக (ஒரு நொடிப்பொழுது போதும்) இஷ்ட தெய்வத்திடம் வேண்டுபவர் நீங்கள் என்றால் – பிறர் வழக்கையையும் உயர்த்த பிறந்தவர் என்றுதான் அர்த்தம். 
  • மனப்பாட செய்யுள்களைத் தாண்டி ஒரு மொழியை நேசிப்பவர், படிப்பவர் நீங்கள் என்றால் – நீங்களும் கூட அந்த மொழியின் காவலர் என்றுதான் அர்த்தம். (இது தமிழுக்கு மட்டுமின்றி உலகின் எல்லா மொழிகளுக்கும் பொதுவானது.)
  • திருடர்களின் மாளிகை, களவாணிகளின் கோட்டை, நரிகளின் காடு, பணம் சம்பாதிக்க எளிதான வழி, சாக்கடை, போன்றவற்றை தாண்டி அரசியலை விவரிப்பவர், நம்புபவர் நீங்கள் என்றால் – மற்றவருக்கெல்லாம் நீங்கள் அதை உணர்த்த வேண்டும் என்றுதான் அர்த்தம். 
  • சிறு வயதில் கட்டி இடித்த மணல் வீடு,சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்டது,பள்ளிபருவத்தின் பிறந்த நாட்கள் என பழைய நினைவுகளை அரைத்து காலத்தை ஓட்டுபவர் நீங்கள் என்றால் – சீக்கிரம் வாழ்க்கையை நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டுமென்று தான் அர்த்தம்.
  • புத்தனை வெளியே தேடாமல் உங்களுக்குள்ளே தேடுபவர் நீங்கள் என்றால் – உங்கள் வழக்கையில் அர்த்தங்களை தேடத் தேவையில்லை என்றுதான் அர்த்தம்.(அது மொத்தமும் அர்த்தமுள்ளதாக ஆகிவிடுகிறது) 
  • காதலி உடன் இல்லாத போதும், காதலின் வலி அறியாத போதும் குடைகள் ஏதுமின்றி மழையை ரசிப்பவர் நீங்கள் என்றால் – நீங்கள் புண்ணியம் செய்தவர் என்றுதான் அர்த்தம். 
  • இப்போதுள்ள கார்ட்டூன் நெட்வொர்கின் நிலையை கண்டு வருந்துபவர் நீங்கள் என்றால் – அதன் பொற்காலமான தொண்ணூறுகளில் பிறந்தவர் என்றுதான் அர்த்தம். 
  • மாதங்கள் பல இருந்தாலும் பரீட்சையின் முதல் நாள் ராத்திரி விடிய விடிய படிப்புக் கூத்து நடத்துபவர் நீங்கள் என்றால் – நம்ம ஊரு(இந்தியா) இன்ஜினியரிங் ஸ்டூடண்ட் என்றுதான் அர்த்தம்.

இதற்காக மூளையை கசக்கி பிழிந்தெடுத்த போதுதான் தெரிந்தது சராசரி என்று நாம் நினைத்துக் கொண்டிருப்பவற்றில் புது புது அர்த்தங்கள் தேடினால் வாழ்க்கை இண்டரெஸ்ட்டிங்கா போகும்.
‘What’s up??’ என்ற கேள்விக்கு ‘Nothing much. Boring here.’ என்று சொல்லும் அவசியமே இருக்காது.

ஊசி மிளகாய் பேசுது!-அறிமுகம்

நண்பர்கள் சொல்லி இங்கு வந்திருக்கலாம் அல்லது தெரியாமல் வழி மாறி வந்திருக்கலாம்.எப்படி வந்தாலும் சரி.வந்திருக்கும் நீங்கள் என் விருந்தாளி.வந்த இடத்தில் இருக்கும் என் எண்ணச் சிதறல்களை தலை வாழையிலையில் பரிமாறிய உணவாக நினைத்து, பரிமாறப் பட்ட விதம்,உப்பு உறைப்பு இப்படி எல்லாவற்றையும் வைத்து ருசி பாருங்கள்.பிடித்திருந்தால் பரிமாறியதை ஒரு புடி புடிங்க.குறையிருந்தால் என்னை ஒரு புடி புடிங்க. மனம் சொல்லும் வார்த்தைகளை(Word) அழுத்தமாக(Press) சொல்வதற்கான ஒரு இடமாகவே இருக்கிறது வோர்ட்பிரஸ்(WordPress) உங்கள் விமர்சனங்களுக்காக வெத்தலை பாக்குடன் அம் வெயிட்டிங்! ஆனா, முதல்ல படிங்க அப்புறம் புடிங்க!

இங்கு, தினமும் நாம் பார்க்கும் நம்மை சுற்றி நடக்கும்,நேரடியாகவோ மறைமுகமாகவோ நம்மை பாதிக்கும் விஷயங்களும்/மனிதர்களும் பேசப் படும்/பேசப் படுவார்கள்.கவலையே படாதீங்க இந்த லிஸ்டில் சினிமாவும் காதலும் அடக்கம்.
இந்த சினிமாவும் காதலும் கொசுராக வாங்கும் கருவேப்பிலை கொத்தமல்லி போல.ஒண்ணும் பெருசா இருக்காது ஆனால் அதை பேசி வாங்குவதில் நமக்கு அவ்வளவு சந்தோஷம்.   
ஒவ்வொரு செவ்வாயும் ஒரு அப்டேட் கண்டிப்பாக இருக்கும்.அதுக்கு நடுவுல ஏதாவது வந்தால் நான் அந்த வாரம் செம ஃபார்ம்ல இருக்கேன் என்று அர்த்தம்.

என்ன ஊசி மிளகாய் நெடி வீசுதா..!