பேஸ்புக்கில் கடவுள்!

ஒரு நாள் கடவுளோட செகரட்ரி அவரிடம் வந்து, பூமியில எல்லாரும் வேலை தூக்கத்தையெல்லாம் விட்டுட்டு ஒரே இடத்துல கூடுறாங்கன்னு ஒரு செய்தி சொன்னார்.
‘அப்படியா! நல்லதுதான. அதுதான எல்லாருக்கும் நல்லது.’
‘அதுதான் இல்ல. அப்படித்தான் நானும் நெனச்சேன்.’
‘சரி விடு. அந்த இடம் எங்க இருக்கு?’
‘அது தெரியலைங்க.ஆனா அந்த இடத்துக்கு பேர் பேஸ்புக்.’
‘சரி நான் பார்க்குறேன்.’ என்று சொல்லி அன்றைய வேலைகளை முடித்துவிட்டு என்ன ஏதுன்னு பார்ப்போம்னு கொஞ்சம் ஆராய்ந்து பார்த்ததுல உலகத்துல எல்லா இடங்களிலிருந்தும் மக்கள் அங்கு இருக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறது.
நாமளும் கொஞ்சம் வேலையெல்லாம் ஈசியாக்கிடுவோம்.இங்கயே எல்லார்கூடவும் பேசிடலாம்னு ஒரு ஃபேஸ்புக்கில் சைன் அப் செய்து அற்புதமான ஒரு ப்ரோஃபைலை கிரியேட் செய்தார்.
என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியவில்லை ஒரே நாளில் எக்கச்செக்க ஃபிரண்ட் ரெக்வஸ்ட்டுகள் குவிந்தன.ஆனால் ஐந்தாயிரம் ஃபிரண்ட்ஸ் என்று பேஸ்புக் லிமிட் செய்திருந்தது. சரி, முதலில் இது போதும் அப்புறம் மத்தவங்கள பார்ப்போம் என்று தன் பேஸ்புக் பயணத்தை தொடங்கினார்.
வந்ததும் வாராததுமாய் பிங்க். பிங்க். என சேட் சவுண்டுகள் அலற டர்ன் ஆஃப் சேட் என்ற ஆப்ஷனை டிக் செய்தார்.

தன் ஃப்ரெண்ட் லிஸ்ட்டில் ஒவ்வொரு ப்ரோஃபைலுக்குள்ளும் நுழைந்தார்.
பல ஆல்பம்களையும் வீடியோக்களையும் ஸ்டேட்டஸ்களையும் பார்த்த அவர் உண்மையாவே இவ்ளோ சந்தோஷமா இருக்காய்ங்களே.ஆனா என்கிட்ட வரும்போது மட்டும் இது வேணும் அது வேணும்னு கொட்டு கொட்டுன்னு கொட்டி தீக்குறாங்களே என்று யோசித்தபடி சில நாட்கள் கழித்தார்.
நாட்கள் ஓட ஓட பேஸ்புக்கில் பலரும் நேரத்தை அழிப்பதையும் தேவையில்லாமல் அழிவதையும் கண்டறிந்தார்.இதை கண்டறிந்தவுடன் யாரிடமாவது சொல்லிவிடுவோம் என்று ஒருவரது டைம்லைனில்
‘வாழ்க்கையை வாழ்வதற்கு.இங்கு நீ காணும் லைக்ஸ், கமெண்ட்ஸ், ஷேர்ஸ்‌ எதுவும் நிஜமில்லை.என்னை பார்க்க வேண்டுமென்றால் லாக் அவுட் அண்ட் லிவ் லைஃப்.’ போஸ்ட் செய்தார்.
கொஞ்ச நேரம் கழித்து கடவுளுக்கு கமெண்ட்டெட் ஆன் யுவர் போஸ்ட் என்று ஒரு நோட்டிபிகேஷன் வந்தது.என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் கிளிக் செய்தால்
‘அவ்வளவு எதற்கு? ப்ரோஃபைல் பிக்சர் அப்லோட் பண்ணுங்க ஈசியா பார்த்திடுவேன்.’ என்று ஸ்மைலிக்களுடன் ஒரு கமெண்ட் இருந்தது.
உங்ககிட்ட சொன்னது என் தப்பு என்று ஃபேஸ் பாமுடன் பேஸ்புக் அக்கவுண்டை டெலீட் செய்து வெளியேறினார்.

Advertisements

ரியாலிட்டி நாடகங்கள்

நம்ம ஊர்ல ஒரு விசித்ராமான வழக்கம் உண்டு.பசங்க என்ன செஞ்சாலும் பெருசா எடுத்துக்க மாட்டோம் அதே பொண்ணுங்க ஏதாவது செஞ்சிட்டா அவ்வளவுதான். கலாச்சார சீர்கேடுன்னு ஆரம்பிச்சு அந்த விஷயத்தை எங்க கொண்டு போய் முடிப்போம்னு நமக்கே தெரியாது.
குடிபழக்கத்துல ஆரம்பிச்சு ஒழுங்கா டிரஸ் பண்ற வரைக்கும் இதே நிலமைதான். கேட்டா சூப்பர் பதில் ஒண்ணு சொல்லுவோம் ‘பசங்கன்னா அப்படித்தான்.பட் பொண்ணுங்க இப்படியெல்லாம் செய்யக்கூடாது.’ எந்த ஆங்கில்லேயிருந்து யோசிச்சு பார்த்தாலும் இத நியாப்படுத்தவே முடியாது.அப்படி ஒரு பதில் இது.ஆனா இன்னிக்கும் இந்த ஒரு பதில வச்சிக்கிட்டு என்னம்மா சமாளிக்குறோம்.
முக்கியமா சினிமா வட்டாரத்துல ஹீரோ ஸ்கிரீனுக்கு பின்னாடி என்ன பன்றார் ஏது பன்றார் போன்றவை பேசப்படுவதைவிட ஹீரோயின்கள் யார்கூட ஷாப்பிங் போனாங்க எந்த பீச் ஹவுஸ்ல சரக்கு பார்ட்டி வச்சாங்க என்பதெல்லாம் அதிகம் பேசப்படுகின்றன. இந்த செய்திகள்(இதெல்லாம் இப்போ செய்தி ஆயிடுச்சு!) இந்டெர்னெட்டில் ஷேர் செய்யப்படும் போது கிழிப்போம்.சும்மா இல்லை தகாத வார்த்தையெல்லாம் பயன்படுத்தி கிழி கிழின்னு கிழிப்போம்.
ஒரே ஒரு செய்தியை வைத்துக்கொண்டு கேரக்டர் சரியில்லை என்ற ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள் நம் ஷெர்லாக்குகள்.
இதை நான் எழுத காரணம் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியொன்றில் சிவகார்த்திகேயனுக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை, முக்கியமாக பெண் ரசிகைகள் கூட்டத்தை அதிகப் படுத்தவும் அந்த சேனலின் ரேட்டிங்கை உயர்த்தவும் ஒரு ஷோ ஒன்று அரங்கேறியது.
அதில் பெண்கள் அவர் கன்னத்தை பிடித்து கிள்ளுவதும், அவருக்கு பூ கொடுப்பதும், பொங்கல் ஸ்பெஷல் என்பதற்காக பொங்கல் ஊட்டுவதுமாய் இருந்தது.கொஞ்சம் அதிகப்படிதான் என்றாலும் அவருக்கு நல்ல ஃபேமிலி ஆடியன்ஸ் மார்க்கெட் இருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டவும், பயன்படுத்திக்கொள்ளவும் அந்த தனியார் சேனல் ரியாலிட்டி ஷோக்களுக்கே உரிய பாணியில் அந்த நிகழ்ச்சியை இயக்கியிருந்தது.குறிப்பிட வேண்டிய வார்த்தை ‘இயக்கியிருந்தது’ என்பதுதான்.வடிவேல் சொல்வது போல பிளான் பண்ணி செஞ்சிருந்தாங்க.
அதை கொஞ்சமும் யோசிக்காமல் ஒரு நடிகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் எதற்கு? நம் பெண்களுக்கு என்னவோ பித்துப் பிடித்துவிட்டது.டைரக்டர் கட் என்று சொன்னால் சிரிப்பதை நிறுத்திக் கொள்ளும் நடிகனை கொஞ்சுவதும், அவனுக்கு நம் பெண்கள் பூ கொடுப்பதும், பொங்கல் ஊட்டுவதும் கலாச்சார சீர்கேடு என்று ஏதோ கூரையில் தீ பிடித்துவிட்டது போல் அலறுவது அனாவசியம்.
அதுக்கு ரெண்டு நாள் முன்னாடி தல-தளபதியின் பிரமாண்ட பேனர்களுக்கு பால் அபிஷேகமும் பீர் அபிஷேகமுமாய் தியேட்டர்களில் ரகளை கட்டியடித்தார்கள் மீசை வைத்தவர்கள்.அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா இல்லை அதெல்லாம் தப்பே இல்லையா. அவங்க என்ன பண்ணா நமக்கென்னங்க? என்று எவன் கை காசு இப்படி அழியுது என்றெல்லாம் யோசிக்காமல் அவற்றை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடுகிறோமே.அங்க ஒரு கேள்வியும் நாம கேட்குறதில்லையே.யாரோ ஒரு பொண்ணு சிவகார்திகேயனுக்கு பொங்கல் ஊட்டி விட்டா மட்டும் இப்படி பொங்குறீங்க.படத்த பார்த்தோமா பாப்கார்ன் சாப்பிட்டோமா படத்தை பத்தி ஸ்டேட்டஸ் போட்டோமா என்று அதோடு முடித்துக்கொள்வதே நமக்கு நல்லது.
ரியாலிட்டி ஷோஸ் ஆர் நோ மோர் ரியல்.ஊடகங்கள் தங்கள் ரேட்டிங்கை உயர்த்திக் கொள்வதற்காக நடத்தப்படும் நாடகங்கள்.அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.சினிமாவ சினிமாவா பார்க்கும் பக்குவமில்லாத நமக்கு ஒரு ரியாலிட்டி ஷோவில் உண்மை எது பொய் என்று ஆராய்வது கடினம்தான் என்றாலும் அதனால் தேவையில்லாத முடிவுகளுக்கெல்லாம் வருவது தேவையில்லாத தலைவலிதானே.

ஃபேஸ்புக்கும் லைக்குகளும்

பேஸ்புக் என்ற சோசியல் நெட்வொர்‘கிங்’ சைட்டில் வலது கைவைத்து நுழைந்த ஆரம்பத்தில் ஒரு புது உலகத்தையே பார்த்தது போல் தைய தக்க என்று குதித்த நாம், அதன் விளைவுகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் வந்திருக்கிறது.  
பேஸ்புக்கிற்குள் லாகின் செய்தவுடன் பார்த்தால், எக்கச்செக்க போட்டோக்கள், கமெண்டுகள், செலிப்ரிட்டி பிக்ஸ் என நியூஸ் ஃபீட் நிறைந்திருக்கும்.இவற்றை தவிர மீம்ஸ், ட்ரோல்ஸ், ஃபேக்ட்ஸ், தலைவலி கொடுக்கும் கேம் ரெக்வஸ்டுகள் என எல்லாம் இருந்தாலும் நம்மை அதிகமாய் பாதிப்பது போட்டோக்களும் ஸ்டேட்டஸ்களும் தான்.     
உள்ளே சென்றவுடன் கலர்ஃபுல் ஆல்பங்கள் கண்ணை கவரும்.SLR மாயங்கள் ஃபோட்டோஷாப் ஜாலங்கள் என அசத்தலாய் இருக்கும்.எல்லோரும் தினம் தினம் வித்யாசமான ஆங்கில்களில் வினோதமான ரியாக்சன்களுடன் பல டூரிஸ்டு லொகேஷன்களிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் குதூகலமாய் போஸ் கொடுப்போம்.        
இதனால் உண்மையில் என்ன ஆகிறது என்றால் எல்லாரும் ஜாலியா இருக்காங்க நமக்கு மட்டும் தான் இவ்ளோ பிரச்சனை என்று ஒரு எண்ணம் வந்துவிடுகிறது நமக்கு.பேஸ்புக் ப்ரோஃபைலில் எல்லோருமே செலிப்ரிட்டிதான்.அதில் சந்தோஷங்கள் மட்டுமே பகிரப்படுகின்றன. இதனால் மற்றவர்களுக்கு கஷ்டமே இல்லை நமக்கு மட்டும்தான் எல்லா பிரச்சனையும் என்று வருந்துவது டைம் வேஸ்ட்.நம் ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது என்பதை உணர வேண்டும். இப்போதெல்லாம் பேஸ்புக் போனால் கொஞ்சம் ரிலீஃப்பா இருக்குப்பா என்று நினைத்தால் அது தவறு.அது பலரையும் டிப்ரெஸ் செய்கிறது என்று சமீபத்தில் தி ஏகனாமிஸ்ட்(The Economist) ஆர்டிகல் ஒன்றில் படித்தது வருத்தமளித்தது.  

அந்த ஆர்டிகலை படிக்க..

http://www.economist.com/news/science-and-technology/21583593-using-social-network-seems-make-people-more-miserable-get-life

சமீபத்தில் பேஸ்புக்கின் பத்தாண்டு நிறைவை கொண்டாட பேஸ்புக் மூவி என்று பேஸ்புக் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு நிமிடத்தை ஒதுக்கியது. அதிலும் கூட முதல் ப்ரோஃபைல் பிக்சரிலிருந்து ஆரம்பித்து அடுத்தடுத்து வந்த போஸ்டுகளை லைக் எண்ணிக்கையின் அடிப்படையில் வரிசை படுத்தியிருந்தார்கள் மார்க் அண்ட் டீம்.
நம்மையும் ஹீரோ வாக்கி ஒரு நிமிட படம் தந்தது ஜாலியான விஷயம் என்றாலும் அதன் ரிலீசுக்கு பின் நம்மிடையே லைக் மோகம் அதிகமானதுதான் மிச்சம்.        
ஒரு போட்டோவுக்கு இருநூறு லைக்குகள் வருவதால் அது நல்ல போட்டோவும் இல்லை லைக்குகள் கம்மியாக இருப்பதால் போட்டோ மோசமான போட்டோவும் இல்லை.   
என்ன ஏது என்று எதுவுமே பார்க்காமல் பேஜ் சரியாக லோட் ஆவதற்கு முன்பே வரிசையாக லைக் தட்டுபவர்களை நிறைய பார்த்திருப்போம்.இவ்வளவு பார்த்தும் பேஸ்புக்கால், அதில் கிடைக்கும் லைக்குகளால், அந்த பொண்ணு போட்டோவுக்கு இவ்ளோ லைக்ஸ் இந்த பையன் போட்டோவுக்கு அவ்ளோ லைக்ஸ்‌ என்று புலம்புவது எதற்கு? பேஸ்புக்கை நமக்கு சாதகமாக எவ்வளவு பயன்படுத்த முடியுமோ அவ்வளவு பயன்படுத்திவிட்டு அடுத்து இதை விட நல்ல நெட்வொர்கிங் சைட் வந்தவுடன் அதையும் நன்றாக பயன்படுத்த தயாராவோம்.    

மயிர் கூச்சம்-ஒரு ரீவைண்ட்

ஒன்ஸ் அபான் எ டைம் என்று ஆரம்பித்தால் மிகையாக இருக்கும்.அதனால் இப்படி ஆரம்பிக்கிறேன்.ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் நமக்கு ஹேர் கட் என்பது ஒரு பிடிக்காத வேலையாகவே இருந்திருக்கும்.
இதை பற்றி பேசி சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்த போது ஒருவன் சொந்த அனுபவத்தை சொன்னான்.அவனுக்கு சின்ன வயசிலேயிருந்தே ஹேர் ஸ்டைல் என்றால் ஒரு குஷி.ஏதாவது வித்யாசமாய் ஹேர் ஸ்டைல் செய்வான்.ஆனால் சலூனுக்கு போனால் ‘தம்பி இப்படி கேக்குறாப்ள..வெட்டலாமா வேண்டாமா’ என்று வீட்டுக்கு ஃபோன் போட்டு பேசிவிடுவாராம்.இந்த மாதிரி இருக்கும்போது,
அவனுக்கு மஷ்ரூம் கட் மீது ஒரு ஆசை வந்துவிட அது மாதிரி வெட்டிக்கொள்ள சலூனுக்கு போயிருக்கான்.வழக்கமாக போகும் சலூனிற்கு சென்று ‘மஷ்ரூம் கட் வேணும்’ என்று சொல்லியிருக்கான்.
அந்த கடையில இருந்தவரு சரியா அப்டேட் ஆகலைன்னு நினைக்கிறேன்.பாவம்.அவரு பொறுமையா ‘அப்படி ஏதும் தெரியாதேப்பா.’ என்று சொல்லியிருக்கிறார்.
‘இல்ல இருக்கு.’ என்று இவன் சொல்ல அவர் மறுபடி ‘இல்லையேப்பா..’ என்று சொல்லியிருக்கிறார்.நம்மாளு ரொம்ப உஷாரா காதல் தேசம் அப்பாஸ் ஃபோட்டோவ கையோட எடுத்துட்டு போயிருக்கான்.அதை சட்டுன்னு எடுத்து காட்டி ‘இது தான். இந்த மாதிரி வேணும்’ என்று இவன் காட்ட
‘சட்டி கிராப்பா தம்பி’ என்று அதெல்லாம் அல்வா சப்புட்ற மாதிரி நைசா பண்ணிடலாம் என்பது போல வேலையில் இறங்கியிருக்கிறார்.
பாவம் நம்ம பய..

முன்னெல்லாம், அரை டிக்கெட்டுகளாய் நாம் சுத்தி சுத்தி வந்த வரை ஹேர் கட் என்றால் அப்பா கூட சலூனுக்கு போகணும்.அங்க போனா நல்லா சிம்மாசனம் மாதிரி இருக்கும் ஒரு சுத்துற சேர்ல உட்கார வைப்பார் ஒருத்தர்.அதுவும் சும்மா இல்ல சேருக்கு மேல ஒரு பலகை போட்டு கலக்கலா உட்கார வைப்பார்.முன்னாடி பின்னாடி எங்க பார்த்தாலும் கண்ணாடி.அங்க தான் ட்விஸ்ட்.நமக்கு ஹேர் ஸ்டைல் ஒரு பெரிய விஷயமாவே இருக்காது.
அங்கே பேப்பர் படித்துக் கொண்டிருக்கும் அப்பாவிடம் பேசிக்கொண்டே மல்டிபில் ரிஃப்லெக்ஷனில் நம் முகத்தையும் பின்னந்தலையையும் ஆச்சரியத்துடன் பார்த்தபடி நேரம் போகும்.இதுக்கு நடுவுல அப்பப்போ முடி வெட்டுற அண்ணன் நம்ம சேர அவருக்கே உரிய ஸ்டைலில் அப்படி சுத்தி நிறுத்துவார்.நமக்கு அந்த ஒரு செகண்ட் ஹீரோ மாதிரி இருக்கும்.அவ்ளோதான் வீட்டுக்கு வந்து தலை குளிச்சுட்டு அடுத்த நாள் நல்ல புள்ளையா தலைய வழிச்சு சீவிட்டு சமத்தா ஸ்கூலுக்கு போவோம்.
பிராசஸ் எண்ட்ஸ்.
ஆனா கொஞ்சம் வருஷம் கழிச்சு பெரிய பசங்க ஆன பிறகு இந்த பிராசஸ்ல ஒரு சேஞ்ச் வந்திடும்.ஒண்ணும் பெருசா சேஞ்ச், இருக்காது
*அப்பா கூட வரமாட்டார்.
*சுத்துற சிம்மாசனத்திலிருந்து அது சேர் ஆகிவிடும்.
*சேர்ல பலகை போட மாட்டாங்க.
மத்த படி அதே நல்ல புள்ள கட்டிங் தான்.
அந்த வயசுல ‘காடு மாதிரி இருக்கு’ என்று அம்மாவும் ‘முடி நிறைய ஆகிடுச்சு பாரு’ என்று அப்பாவும் பேச்சை ஆரம்பிப்பார்கள். இன்னிக்கு வெட்டுறேன் நாளைக்கு வெட்டுறேன்னு ரெண்டு மூணு நாள் தள்ளி போடலாம்.தாக்கு புடிக்கலாம்.அதுக்கு மேல முடியாது.மறுப்பு போராட்டம் தொடர்ந்தால் முடி வெட்டிட்டு வந்தாத்தான் சாப்பாடு என்ற ஹை ஹீட் லெவலுக்கு கூட போகும் வாய்ப்புகள் உண்டு.அந்த பிரச்சனை அனாவசியம்.
அம்மாகிட்ட காசு வாங்கிட்டு சலூன் வரைக்கும் போன பிறகு கூட கண்டிப்பா வெட்டணுமான்னு தோனும்.முடி வெட்டிக்கொள்வது அவசியமான வேலையாகவே இருந்தாலும் அது பிடிக்காமல் போனதற்கு காரணம்?
அப்பா சொல்ற கடையிலதான் வெட்டிக்கணும்.அந்த கடையில, அப்பா ஏற்கனவே சொல்லி வச்சிருபாங்க. ‘பையன் வருவான்.அப்புடி வேணும் இப்புடி வேணும்னு சொல்லுவான்.நீ அதெல்லாம் காதுல வாங்கிக்காத’ இப்படி சொல்லிட்டா எந்த கடைக்காரன் நம்ம இஷ்டத்துக்கு முடி வெட்டுவான்?
எப்பவும் போல நல்ல புள்ள கட்டிங்தான். அப்படியே வீட்டுக்கு போனா, ‘இப்போதான் முகம் பாக்குற மாதிரி இருக்கு’ அம்மா சொல்ல,
அப்பா ‘இன்னும் கொஞ்சம் கூட குறைச்சிருக்கலாம்’ என்பார்.நல்லா இருக்கா இல்லையா, நல்லா இருக்கா இல்லையான்னு கண்ணாடியில போகும் போது வரும் போதெல்லாம் பார்த்து பார்த்து நமக்கு அது பழகி போயிடும். இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்ல.அடுத்த நாள் ஸ்கூலுக்கு போறதுலதான் எல்லாமே.
அந்த நல்ல புள்ள கட்டிங் எவ்ளோ நல்லா இருந்தாலும், அடுத்த நாள் ஸ்கூலுக்கு போனா எல்லாரும் நம்மளையே பாக்குற மாதிரி இருக்கும்.(காதல் அறிகுறின்னு சில பேர் சொல்லுவாய்ங்க.நம்பிடாதீங்க!)
‘எங்கடா முடிவெட்டுன?’ ஒருத்தன் சிரிப்பான். ‘என்னடா எலி கரந்துண மாதிரி இருக்கு?’ இன்னொருத்தன் ஆரம்பிப்பான். ‘எங்கடா போய் தலைய கொடுத்த?’ அடுத்து ஒருத்தன் கேட்பான். ‘எந்த புத்துகுள்ளடா தலைய விட்ட’ எங்கிருந்தோ குரல் மட்டும் கேட்கும், இது அப்படியே போய் அன்னைக்கு முழுக்க நம்மள பீஸ் போட்டுடுவாய்ங்க.மாசத்துல ஒரு நாள் எல்லாரும் இப்படி பீஸ்தான்.இந்த கேள்வியெல்லாம், எங்க போய், எவ்ளோ பெரிய பார்லர்ல, போய் முடிவெட்டிக்கிட்டாலும், அடுத்த நாள் கண்டிப்பா கேட்டுடணும்னு எழுதாத விதிகள் இருக்கு போல.
அந்த நாளே அமுங்கி போயிருக்கும் என்ன சொன்னாலும் இதையே பேசுவாங்க.அப்படியே ஃப்யூஸ் போன முகத்தோட வீட்டுக்கு வந்தவுடனே கண்ணாடி பார்த்தால் படு மோசமா இருக்கும்.
சலூன் கண்ணாடியில நல்லா தான இருந்துச்சு.வீட்டு கண்ணாடியிலதான் ஏதோ பிரச்சனை என்று மனசை தேத்தி அடுத்த முறை எப்படி முடி வெட்டலாம் என்று யோசிக்க ஆரம்பிப்போம்.இப்போது பெரிய பசங்களான பிறகு என்னதான் யுனிசெக்ஸ் சலூன்களிலும் பார்லர்களிலும் நம்மிஷ்டத்திற்கு ஸ்டைல் செய்து கொண்டாலும்,அடுத்த முறையும் அப்பா சொன்ன நல்ல புள்ள கட்டிங் தான் என்று தெரிந்தாலும் அந்த ஸ்டைல் இந்த ஸ்டைல் என்று கண்ணாடி முன்னாடி பிளான் போடுறது ஒரு சந்தோஷம்தானே.
குறிப்பு: இது மணி சலூன் வெம்புலி சலூன் என்று வீட்டுக்கு பக்கத்துல இருக்கும் அண்ணன்களிடம் முடி வெட்டி வளர்ந்தவர்களின் அனுபவங்கள்.மற்ற இடங்களில் எப்படி இருக்கும் என்ன செய்வார்கள் என்பது பற்றியெல்லாம் தெரியாததால் சொல்லவில்லை.

அவசியம்

அவசியம் பாருங்கள்… முடிந்தால் படியுங்கள்…

இப்போது இருக்கும் எஜுகேஷன் சிஸ்டம் எப்படி இருக்கிறது என்று பலரும் பேசி கேட்டிருப்போம், படித்திருப்போம் சிலர் எழுதியுமிருப்போம்.
3 இடியட்ஸ், நண்பன் போன்ற படங்கள் இந்த சிந்தனைகளை வெகுஜன மக்களுக்கும் கொண்டு சென்றன. ‘இப்போ நீ என்ன சொல்ல போற?’ என்று முகம் சுருக்காமல் மேலே படியுங்கள்.நான் இதில் எஜுகேஷன் சிஸ்டம் சம்பந்தமாக எதுவும் சொல்லப் போவதில்லை.     
மேலே குறிப்பிட்ட அனைத்திலும், எஜுகேஷன் சிஸ்டத்தின் இன்றைய நிலை சரியில்லை என்றும் இதில் மாற்றம் வேண்டும் என்றும்தான் சொல்லியிருப்பார்கள்.ஆனால்,அது எப்படி இருக்க வேண்டுமென்றும் சொல்லவில்லை.
உண்மையில் என்ன நடக்கிறது என்றும் நமக்கு இந்நிலையில் எது தேவையென்றும் சர் கென் ராபின்சன் அவர்கள் தன் TED Talkல் தெள்ளத் தெளிவாக கூறியிருக்கார்.இது 2006ல் பதிவு செய்யப்பட்டது என்றாலும் நான் இப்போது தான் அதை டவுண்லோட் செய்தேன்(தற்செயலாக). 
அதில் அவர் சொல்லியிருக்கும் அத்தனையும் நம்மிடமிருந்து மறைக்கப்பட்ட, மறைக்கப்படும், நம்மால் மறுக்கப்படும், நாம் மறந்துபோன,அப்பட்டமான உண்மைகள்.இதில் பெருங்கொடுமை என்னவென்றால் சிஸ்டத்தின்  குறைபாடுகளை நம்மிடமிருந்து மறைத்து விட்டார்கள் என்பதுதான்.அவற்றை நாம் கவனிக்க மறந்திருந்தாலும் பரவாயில்லை,ஆனால் நமக்கு மரத்து போனதுதான் உச்சகட்டம்.
அவர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் பாப்பவரை நிச்சயம் பாதிக்கும்.பிரசன்டேஷன் ஸ்லைட்(Presentation Slide) ஏதுமின்றி அவர் தன் பாணியில் மிகத் தெளிவாக, எளிமையாக மேலும் நகைச்சுவை கலந்து கூறிருப்பது அற்புதம்.பார்த்த பிறகு நம்முள் நிச்சயம் ஒரு மாற்றத்தை தரும் 
அவரது இந்த TED Talk அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.  

அந்த வீடியோவை காண…  http://www.ted.com/talks/ken_robinson_says_schools_kill_creativity.html

அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்ட Epiphany என்ற அவரது புத்தகம் அந்த தலைப்பில் வெளியாகவில்லை. அது The Element: How Finding Your Passion Changes Everything என்ற தலைப்பில் 2009ல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தின் Goodreads லிங்க்…   http://www.goodreads.com/book/show/4224060-the-element

இது பழைய கதை தான் என்றாலும், நான் கேட்ட வரை சுற்று வட்டாரத்தில் எவருக்கும் இது பற்றி தெரியாததால் பகிர்வது நல்லது என்று தோன்றியது. வீடியோவை பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும். 

இப்படியே இருந்திருக்கலாம்

பொங்கல்னு சொன்னவுடனே நாம சட்டென்று யோசிக்கிற விஷயம் – புது டிரஸ், சொந்த ஊருக்கு போறது, கரும்பு, சாமிக்கு படைக்கிறது, டி‌வில புது படம் தியேட்டர்ல புது படம், காணும் பொங்கல் அன்னைக்கு ஊர் சுத்தலாம். இதெல்லாத்துக்கும் மேல பொங்கல் காசு. இப்போ எவ்ளோ பேரு இதை பற்றி பேசுறாங்கன்னு எனக்கு தெரியல ஆனா ஸ்கூல் படிக்கும் போதெல்லாம் எனக்கு இவ்ளோ வந்துச்சு உனக்கு இவ்ளோ வந்துச்சு எனக்கு இவ்ளோ பேரு கொடுத்தாங்க அது இதுன்னு பெரிய பேச்சா இருக்கும்.எனக்கு இதுல சொந்த அனுபவங்கள் கம்மிதான் இருந்தாலும் நிறைய பார்த்திருக்கிறேன்.

இந்த வருஷம் பொங்கலுக்கு ஒரு நல்ல விஷயம் என்னன்னா, தல-தளபதி படம் ரிலீஸ். அதவிட நல்ல விஷயம் என்னன்னா, ரெண்டு படமும் பொங்கலுக்கு ஒரு நாள் முன்னாடியே ரிலீஸ் ஆயிடுச்சு.அதனால பண்டிகை நாள் அதுவுமா அப்பா கிட்ட திட்டு வாங்காம முன்னாடியே சினிமா சிலபஸ் முடிச்சாச்சு.ஆக, பொங்கல் கடமையில ஒரு கடமை முடிஞ்சுது.இந்த முறை இந்த டி‌வி நிகழ்ச்சியெல்லாம் ரொம்ப கொடுமையா இருந்ததால அதுலையும் நேரம் செலவு பண்ணலை.இனிமே இந்த சிறப்பு நிகழ்ச்சியெல்லாம் பண்டிகையப்போ பார்க்க வேண்டாம்னு முடிவு செஞ்சுட்டேன்-நல்ல நிகழ்ச்சியா இருந்தா அப்புறமா டவுண்லோட் பண்ணிட்டா போச்சு. என்ன சரிதான..??

அதனால பொங்கல் டைம் ஃபுல் ஃபேமிலி டைம்.மாட்டு பொங்கலுக்கு குடும்பத்தோட அக்காவோட ஊருக்கு போனோம்.அங்க பசு மாடு கன்னுகுட்டி அதெல்லாம் வச்சு படைப்பாங்களாம்.நாங்க போனதும் எப்போ சாமிக்கு படைப்பாங்க என்று கேட்க பூஜை பண்றதுக்கு நேரமாகும்னு சொன்னாங்க.அதுக்குள்ள வந்துடுறோம்னு வயலுக்கு போனோம். ஒரு ஏக்கர்னா எவ்ளோ, அரை ஏக்கர்னா எவ்ளோனெல்லாம் கேட்டு தெரிஞ்சுகிட்டு பூஜைக்கு நேரமாச்சுன்னு ஃபோன் வந்ததால, ஒன்பது மணி ஃபர்ஸ்ட் ஹவர் கிளாஸ் மாதிரி, அரக்க பறக்க வீட்டுக்கு போய் அட்டெண்டன்ஸ் போட்டோம்.

பூஜைக்கு சாணியில மாட்டுத் தொழுவம் மாதிரி செஞ்சு ஒரு பலகையில வச்சு ரெண்டு பக்கமும் கரும்பு வச்சு வாழை இலையில படையல் வச்சு வேப்பங்குச்சியால பித்தளை தட்டுல டங்..டங்..டங்னு அடிச்சு பொங்கலோ பொங்கல்னு பக்கத்து வீட்டுக்கு கேக்குற மாதிரி சொல்லி, பூஜை பண்ணி மாட்டுக்கெல்லாம் பொட்டு வச்சு கழுத்துல மாலை போட்டு சூடம் காமிச்சு ஆசீர்வாதம் வாங்கிட்டு வீட்டை சுத்தி வந்து கும்பிட்டு முடிச்சு, வீட்டு வாசலில வச்சு எங்களுக்கு சுத்தி போட்டாங்க.எல்லாம் செஞ்சு முடிக்க மணி ஏழாயிடுச்சு.அப்புறம் சாப்பாடு.அப்புறம் ஊருக்கு திரும்ப வந்தாச்சு.இதெல்லாம் எதுக்கு சொன்னேன்னா, இப்படித்தான் பொங்கல் கொண்டாடணும்னு இந்த வருஷம்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

இப்போ அதைவிட சூப்பரான ஒரு விஷயம் சொல்றேன்.மேல சொன்ன சமாச்சாரங்களோட சேர்த்து பொங்கல் காசும் கொடுத்தாங்க.பெரியவங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கினோம்.விபூதி குங்குமம்னு நெத்தி மறையும் அளவுக்கு வச்சு கையில கொஞ்சம் பணம் வச்சாங்க. எங்க வீட்டுல ரெண்டு குட்டி பொண்ணுங்க இருக்காங்க.அதுல ஒருத்தி UKG இன்னொருத்தி செகண்ட் ஸ்டாண்டர்ட்.எங்களுக்கு கொடுத்த மாதிரி அவங்க ரெண்டு பேருக்கும் பொங்கல் காசு கொடுத்தாங்க.

பொங்கல் காசெல்லாம் வாங்கிட்டு அந்த சின்ன பொண்ணு அவங்கம்மாகிட்ட வந்து ‘அம்மா எனக்குதான் அக்காவ விட அதிக காசு கொடுத்தாங்க.’ என்று கூறினாள்.சிரித்துக்கொண்டே.அவளுக்கு அதில் அளவுகடந்த ஆனந்தம்.
இது என்னடா புது பிரச்சனை.இந்த ரெண்டு பேருக்கும் பஞ்சாயத்து பண்ண முடியாதேன்னு அவங்கம்மா அவளிடம்
‘எவ்ளோ கொடுத்தாங்க?’ என்று கேட்க
‘அவளுக்கு ஒரே ஒரு ஃபிஃப்டி தான். எனக்குதான் த்ரீ நோட்ஸ்(Three notes).ரெண்டு டூ ஜீரோ(Two Zero) ஒரு டென்(Ten)’ என்று செம ஜாலியாக கூறினாள் அவள்.
‘கலகிட்ட பாப்பா. உன் அக்காகிட்டயே சொல்றேன் இரு.’ என்று அவளிடம் கொஞ்சம் போட்டி போட்டுகொண்டே அவள் சொன்ன வார்த்தைகளை மறுபடி மறுபடி சொல்லிப் பார்த்தேன்.எனக்குள்ளேயே.
பணம் என்பதை அந்தஸ்தாக, கௌரவமாக பார்க்காமல், வெறும் எண்ணிக்கையாக மட்டுமே பார்க்கும் இந்த குழந்தையை போலவே எல்லாரும் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. அவள் ஏதோ தெரியாமல், புரியாமல் சொல்லியிருந்தாலும் அது சொல்லாமல் சொல்லும் உண்மையை தெரிந்து, புரிந்துகொள்ளக் கூடிய பக்குவம் உங்களிடம் இருந்தால் நீங்களும் சொல்வீர்கள் ‘இப்படியே இருந்திருக்கலாம்’