பேஷ் பேஷ்!

பொதுவாகவே நம்ம ஊர் டி‌வி சேனல்களை திட்டியே பழகி போன நமக்கு,  சமீப காலமாக வெஸ்டர்ன் டி‌விக்களின் சீரியல்களை பார்க்க ஆரம்பித்தவுடன், இருந்த கோபம் இன்னும் அதிகமாகிவிட்டது. அந்த கோபம் நியாயமானதுதான் அங்கே என்னென்னமோ செய்து கொண்டிருக்கிறார்கள் இங்க நாம இன்னும் மாமியார் மருமகள் சண்டையை வைத்து சீரியல் எடுத்தால் கோபம் வரத்தான செய்யும். என்னதான் நீயா நானா என்று ஒரு ஷோ இருந்தாலும் அதை தவிர வேறு எந்த ஷோவுமே உருப்படியான ஷோ இல்லை என்று ஒப்புக்கொள்ளத்தான் வேணும்.

அதனால், ஸ்போர்ட்ஸ் தவிர டி‌வியில் எதுவும் பார்க்காமல் இருப்பதே நல்லது என்று டி‌வி பக்கம் திரும்பாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இந்டெர்னெட் இருப்பதால் நாம்தான், இளைஞர்கள்தான் இந்த முடிவெடுத்து விட்டோம். என்னெத்த போட்டாலும் சமையல் செய்து கொண்டே பேப்பர் படித்துக் கொண்டே வேறு வழியின்றி டி‌வி பார்ப்பவர்கள் நம்ம ஊர்ல இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
பாவம் அவர்களால் F.R.I.E.N.D.S,HIMYM இதெல்லாம் பார்க்க முடியாது,Quoraவில் கதைகள் படிக்க முடியாது,YouTubeல் டி‌ரெண்டிங் வீடியோக்கள் பார்க்க முடியாது. என்ன செய்வார்கள். என்ன பரிமாறப்படுகிறதோ அதைத்தானே சாப்பிட முடியும்! சினிமாவை பொறுத்தவரை நாமாக சென்று திரையரங்கில் தலையை கொடுக்கிறோம். சீரியல்கள்/டி‌வி ஷோக்கள்  அப்படியில்லை. அவை டோர் டெலிவெரி செய்யப்படுகின்றன.  

சில மாதங்களுக்கு முன்பு, என்னை சுற்றி இருந்த பலரும், புது யுகம் பற்றி பலரும் பேச ஆரம்பித்தார்கள்.
‘கொஞ்சம் டிஃபரெண்ட் இன்டர்வியூஸ்லாம் போடுறாங்க’ 
‘பேப்பர் தோசைன்னு ஒரு ஷோ இருக்கு…அது நல்லா இருக்கு பார்த்தியா..??’        
இந்த மாதிரி பரவலான பேச்சுகள்.

ஒரு முறை விடுமுறைக்காக வீட்டிற்கு சென்றிருந்தபோது புது யுகம் பார்த்தேன். நிறைய புதுமைகள் இருந்தன. இருந்தாலும் அதில் என்னை மிகவும் கவர்ந்தது பைசைக்கிள் டைரி (BicycleDiary) என்ற ஒரு டிராவல் ஷோ. நான்கு இளைஞர்கள் சேர்ந்து சைக்கிளில் பல ஊர்களுக்கும் சென்று அங்குள்ள சிறப்புகளையும் அவர்களது அனுபவங்களையும் பதிவு செய்யும் ஒரு நிகழ்ச்சி அது.
இதில் சிறப்பு என்ன அப்படின்னா… அந்த நான்கு பேரில் ஒரு பெண் போட்டோக்ராஃபியில் ஆர்வம் கொண்டவள் இன்னொரு பெண்ணுக்கு டிராவலிங் மிகப்பிடித்தமான ஒன்று, ஒரு பையனுக்கு ஆட்டமும் பாட்டமும் பிடிக்கும் இன்னொருத்தன் விளையாட்டுத் துறையை சேர்ந்தவன்.  

இந்த நான்கு பேரின் பயணம் சென்னை முதல் கன்யாகுமாரிவரை தொடரும். அழகான அவர்களது பயணம்தான் இந்த பைசைக்கிள் டைரி. ஏற்கனவே நேஷனல் ஜியாகிரஃபி சேனலில் இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நான் பார்த்த ஞாபகம் இருக்கிறது. இருந்தாலும் நம்ம ஊர் டி‌வில இளைஞர்களை வைத்து இப்படி ஒரு நிக்ழ்ச்சி எடுக்குறாங்கன்றத நினைக்கும்போது நல்லா இருக்கு.

அமெரிக்காவின் ஓட்ட ரியாலிட்டி ஷோக்களை காப்பி அடித்து நம்மை முட்டாள் ஆக்காமல், ஒரு ஃபிரெஷான டீம் ஃபிரெஷான ஐடியா இதெல்லாம் வச்சு வித்யாசமான முயற்சிகள் செய்ற, நம்மோட ரசிப்புத்தன்மையை, அதன் அளவை உயர்த்த முயற்சி செய்ற, புது யுகம் குழுவிற்கு வாழ்த்துகள். நேரம் கிடைத்தால் நீங்களும் அந்த நிகழ்ச்சியை பாருங்கள். நிஜமாவே நல்லா இருக்கு. 

பைசைக்கிள் டைரி…
http://www.youtube.com/watch?v=gAXl_iGMPFg

Advertisements

பிரச்சாரமா பிரச்சனை வாரமா!

சமீபத்தில் முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், குஜராத்தின் வளர்ச்சியையும் தமிழகத்தின் வளர்ச்சியையும் கம்பேர் செய்து மோடி இல்லை இந்த லேடி தான் என்று ஒரு இடத்தில் கூறியதை வைத்துக்கொண்டு திரு. ஸ்டாலின் அவர்கள் தி.மு.கவிற்கான தனது பிரச்சாரத்தின் போது தமிழகத்தின் வளர்ச்சிக்கு மோடியும் அல்ல லேடியும் அல்ல எனது DADDY தான் என்று சினிமா வசனம் போல பேசினார்.
தன் பேச்சை முடிக்கையில் மோடியாக இருந்தாலும் லேடியாக இருந்தாலும் அவர்கள் ஜோடியாக இருந்தாலும் கிடைக்கப்போவது சவுக்கடி என்று முடித்தார்.

இது ஒரு பக்கம் இருக்க, தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அவர்கள் ஊடகங்களின் செல்ல பிள்ளையாகி விட்டார். அவர் அப்படித்தான் என்று தெரிந்து கொண்டு அவரை நன்றாக கிளறி விட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். அவரும் மாட்டிக் கொள்கிறார். அவரது பிரஸ் மீட்டுகளும் சில பிரச்சார வீடியோக்களும் ஏதோ ஜோடி நம்பர் ஒன் புலூபர்ஸ்(Bloopers) பார்ப்பது போல இருக்கிறது! அவரது மனைவி திருமதி. பிரேமலதா விஜயகாந்த் தீவிரமாக அதே நேரத்தில் தெளிவாக பாயிண்ட் பேசுகிறார். சமீபத்தில் சென்னையின் ஒரு பகுதியில் தே.மு.தி.க வேட்பாளருக்காக பேசுகையில் தமிழகத்தை தி.மு.க, அ.தி.மு.க பிடியிலிருந்து விடுவிக்க ஒரே மாற்று, ஊழல் இல்லாத அரசியலுக்கான ஒரே வழி இப்போது சேர்ந்திருக்கும் இந்திய ஜனநாயக கூட்டணிதான்! (பி‌ஜெ‌பி, தேமுதிக, பாமக, ஐஜெகே…) ஆகவே.. அவர்கள் கொடுக்கும் நூறுக்கும், சோறுக்கும், பீருக்கும் ஓட்டு போடாதீர்கள்! என்று ஆவேசமாக கூறினார்.  

மத்தியில் காங்கிரஸ், பி‌ஜெ‌பி ஊடக விளம்பரங்களில் பத்தாயிரம் கோடி ரூபாய் செலவிடுவதாக குற்றம் சாற்றுகிறது. பி‌ஜெ‌பி, காங்கிரஸ், திமுக, அதிமுக, தேமுதிக என எல்லா கட்சியும்தான் ஊடக விளம்பரங்களில் செலவு செய்கிறார்கள். அதனால், எப்போது எல்லா கட்சியின் செலவு கணக்கும் பிற காட்சிகள் சொல்லிவிடுவார்கள் என்று காத்திருக்கிறேன்.    

இப்படி ஒவ்வொரு கட்சியும் தங்களின் கொள்கையையும், வாக்குறுதியையும் பற்றி பேசுவதை விட மற்றவர்களின் வாக்குறுதியையும் அதில் உள்ள குற்றங்களையும், கொள்ளையடித்ததை பற்றியும்தான் அதிகம் பேசுகிறார்கள். ஒரு கட்சி மற்றொரு கட்சியை குறை கூறினால் அடுத்த நாள் அந்த கட்சி இந்த கட்சியை குறை கூறுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் ‘நீ மட்டும் ஒழுங்கா!’ என்று கேட்கிறார்களே தவிர நான் ஒழுங்கு என்று எந்தக் கட்சியும் கூறுவதில்லை.

பிரச்சாரம் பண்றாங்களோ இல்லையோ நல்லா மாத்தி மாத்தி பிரச்சன பண்றாங்க. யார் நல்லவர்னு பேசிய காலம் போய் யார் ஓரளவுக்கு கெட்டவன் யார் ஊரளவுக்கு கெட்டவன் என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். 

குறிப்பு: இதில் ஏதாவது ஒரு இடத்தில் நான் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எனது அரசியல் விருப்பம் வெளிப்பட்டிருப்பதாக தெரிந்தாலோ நன்றாக முகம் கழுவி விட்டு மறுபடி படியுங்கள் 😀  

வருந்துகிறேன்

பள்ளியில் என்னுடன் படித்த பலர், ஒன்பதாம் வகுப்பின் இறுதியில், ஸ்கூல் மாறும் முடிவெடுத்ததால் ஸ்லாம் புக்குகள் குவிந்த வண்ணமாய் இருந்தன. நண்பர்கள் அதை நம்மிடம் கொடுத்து நிரப்ப சொல்வது சந்தோஷத்தை கொடுத்தது. பலரும், கையில் ஒரு ஸ்லாம் புக் இருப்பதை பெருமையாகவே கருதினார். அதிலேதும் தப்பில்லை. நம்மிடம் ஒருத்தர் வந்து நம்மை பற்றியும், அவர்களை பற்றிய நம் கருத்தையும் கேட்பது அதுவே முதல் முறை. அந்த வயதில் அது பெரிய விஷயம்தானே. நான் முதல் முதலில் ஸ்லாம் புக்கில் கிறுக்கியது ஒரு கோடு விடாமல் இன்றும் நினைவிருக்கிறது. நம்மோட விருப்பு வெறுப்புகள் பகிர்ந்து கொள்ளுதல் ஒரு சந்தோஷத்தை அளித்தது. அது ஒரு புதிய அனுபவம்.

இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது! சொல்கிறேன். பிடித்த படம், பிடித்த பாடல், பிடித்த நடிகர், பிடித்த நடிகை, ஃபர்ஸ்ட் கிரஷ், பிறந்த நாள், மொபைல் நம்பர்(அப்போது வீட்டு லாண்ட் லைன்தான்), எம்பரஸ்சிங்க் மொமெண்ட் என அது ஒரு பெரிய லிஸ்ட். மணிக்கணக்காய் உட்கார்ந்து ஸ்லாம் புக் எழுதியிருக்கிறோம். இந்த பெரிய லிஸ்டி‌ல் ரோல் மாடல் என்று சில ஸ்லாம் புக்கில் இருக்கும். அதில் நான் ஹிட்லர் என்று எழுதியது சமீபத்தில் ஞாபகம் வந்தது.

அப்போது எனக்கு தெரிந்ததை வைத்துக்கொண்டு.. தெரிந்ததாய் நினைத்துக் கொண்டு, ஹிட்லரை எனது ரோல் மாடல் என்று எழுதியதை நினைத்து வருந்துகிறேன்.

தி க்ரேட் டிக்டேட்டர்(TheGreatDictator), தி பாய் இன் தி ஸ்ட்ரைப்டு பைஜமாஸ் (The Boy in The Stripped Pajamas), ஷிண்ட்லர்’ஸ் லிஸ்ட்(Schindler’sList), லைஃப் இஸ் ப்யூடிஃபுல்(LifeIsBeautiful), போன்ற படங்களை பார்த்து நான் பல நாட்கள் அந்த நினைப்பிலேயே இருந்திருக்கிறேன். ஒவ்வொரு முறை ஷிண்ட்லர்’ஸ் லிஸ்ட் பார்க்கும் போதும் உடைந்திருக்கிறேன். கலங்கியிருக்கிறேன். உலக வரலாற்றின் பக்கங்களை சிகப்பில் கிறுக்கி வைத்த, மனித உயிர்களை கொன்று குவித்த அப்படி ஒரு அரக்கத்தனமான கொடுங்கோல் மன்னனை ரோல் மாடலாக எழுதியதை நினைத்து வருந்துகிறேன். வாய்ப்பிருந்தால்.. இப்போதும் நான் எழுதியதை அழிக்க முடிந்தால் அழித்துவிடத் தோன்றுகிறது.          
 

  மிச்சம்!

ஐ‌பி‌எல் ஆரம்பித்ததில் சூதாட்டத்திற்கு நாம் கை தட்ட கற்றுக்கொண்டது தான் மிச்சம்.

மான் கராத்தே பார்த்ததுல முருகதாஸ் மேல இருந்த நம்பிக்கை குறைந்ததுதான் மிச்சம்.
 
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் வைன் ஷாப் கல்லா கட்டுவதுதான் மிச்சம். 

ஒரு நாள் ஃபுல்லா ரேடியோ கேட்டதுல அட்வெர்டைஸ்மெண்டுகள் மனப்பாடம் ஆனது தான் மிச்சம்.

ஒவ்வொரு முறையும் கடவுளை காண திருப்பதி போய் வருவதில் கால்வலியும், தலைவலியும்தான் மிச்சம்.  

ரியல் எஸ்டேட்டின் அசுர வளர்ச்சியில் விளை நிலங்கள் வீணானதுதான் மிச்சம்.

எக்கச்செக்கமாய் கேட்ஜெட்டுகள் குவிந்ததில் ரயில் ஸ்னேகம் அழிந்ததுதான் மிச்சம்.  

காலேஜ் லைஃப்ல கமிட் ஆகும் பல பேருக்கு இன்பாக்ஸ் ஃபுல் ஆனது தான் மிச்சம்.

சென்னையில் பலர் செட்டில் ஆனதில் கௌரவத்தின் அடையாளமான கார், பைக், வீடு வரிசையில் டப்பர் வேர்(TupperWare) சேர்ந்தது தான் மிச்சம்.

நாலு வருஷ இன்ஜினியரிங்கில் லேப்டாப் ஃபுல்லா ஃபோட்டோக்கள் தான் மிச்சம்.

பேருந்து பயணம்

எப்போதும் பேருந்து பயணங்களில் டிக்கெட் எடுத்தவுடன், சில நேரங்களில் டிக்கெட் எடுக்காமலே கூட, எனக்கென்ன என்று கண்ணசந்து போகும் நான் ஒரு மாறுதலுக்காக விழித்திருந்தேன்(26-01-2014). அப்போது என்னை வெகுவாக பாதித்தவை இவை…

*பசிக்குது என்று அடம் பிடித்த தன் பையனுக்கு ஒரு பிஸ்கட் பாக்கெட்டும், ஒரு கப் பாலும் வாங்கிவந்து பக்கத்தில் அமர்ந்த அப்பாவிடம், அந்த பையன் பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி பிரித்துக்கொண்டே எனக்கும் பால் வேண்டுமென்று கேட்க,‘இதுவும் உனக்கு தான் டா தம்பி. சுடுது.உன்னால கையில வச்சிக்க முடியாதேன்னு நான் வச்சிருக்கேன்’ என்றார் அப்பா.
‘அப்போ உனக்கு..?’
‘எனக்கு பசி இல்ல டா’
‘அத நீ வச்சிக்கோப்பா. எனக்குத்தான் பிஸ்கட் இருக்கே.’ என்று அன்பு உலகின் மொத்தத்தையும் ஒரு கப் பாலில் பகிர்ந்தான்.    
     
*ஒரு மூணு பேர் சீட்டுல அம்மாவும் பொண்ணும் இருந்தாங்க.அந்த பொண்ணுக்கு எப்படியும் பதினெட்டு வயசு இருக்கும்.அம்மா மடியில தலை வச்சு ஒரு பக்கமா கால் நீட்டி படுத்திருந்தாள்.அந்த பொண்ணால சரியா படுக்க முடியல.கொஞ்ச நேரத்துல அந்தம்மா எழுந்து ரெண்டு சீட்டுக்கும் நடுவுல இருக்க இடத்துல-ரெண்டு பேர் சீட்டுக்கும் மூணு பேர் சீட்டுக்கும் நடுவுல இருக்க இடத்துல இல்லை, ரெண்டு சீட்டுக்கும் நடுவுல இருக்க இடத்துல படுத்துட்டு அந்த பொண்ண மேல படுக்க வச்சிட்டாங்க.
      
*ஒரு பொண்ணோட அம்மா ஏதோ வாங்குறதுக்காக பஸ் எடுக்கற நேரத்துல இறங்கி போயிட அந்த பொண்ணுக்கு பயம் வந்து டிரைவர் கிட்ட போய் அம்மா கடைக்கு பொய்யிருக்காங்கன்னு சொல்ல அதுக்கு அந்த டிரைவர் ‘கவலை படாத உங்கம்மா வந்த பிறகுதான் பஸ் எடுப்பேன்.’ என்று ரொம்ப பொறுமையா சொன்னார். இதுவரைக்கும் அந்த சிட்சுவேஷன்ல அவ்ளோ பொறுமையா எந்த டிரைவரும் பதில் சொல்லி நான் பார்த்ததில்ல.   நம்மோட வாழ்க்க முழுக்க இப்படிப் பட்ட சந்தோஷங்கள் நிறைஞ்சிருக்குன்னு இன்னிக்குதான் தெரிஞ்சுகிட்டேன்.இந்த மாதிரி சின்ன சின்ன நினைவுகள் நம்மை கைபிடித்து கூட்டிட்டு போகும்.எந்த நிலையிலும் ஒரு நம்பிக்கை தரும், உதட்டோரமா சிறு புன்னகை தரும்.       

இவ்வளவு சந்தோஷங்கள் நிறைந்த அந்த இடத்துல நம்மாளு ஒருத்தர் வந்தாரு. என்னடா சாயங்காலம் ஆச்சே இன்னும் ஒண்ணும் நடக்கலையேன்னு பார்த்தேன்ன்னு வடிவேல் சொல்லுவாரே அதுமாதிரி ஒரு காரியத்தை பண்ணிட்டார். 

*பொதுவா லாங் ரூட் எல்லாத்துலையும் சாப்பிட ஒரு இடத்துல நிறுத்துவான்கள்ல அந்த இடத்துல நம்மாளு விரு விருன்னு இறங்கி சுத்தி முத்தி பாத்துட்டு கையில இருந்த பிளாஸ்டிக் பையிலிருந்து சரக்க எடுத்து ஒரு மிக்ஸிங்க் போட்டு நச்சுன்னு ரெண்டு கட்டிங் போட்டுட்டாருப்பா! போட்டுட்டு சர சரன்னு கடைக்குள்ள போய் ஒரு சிப்ஸ் பாக்கெட் வாங்கி சைலன்டா சைட் டிஷ்ஷையும் முடிச்சுட்டார். ரெண்டே நிமிஷத்துல நூடுல்ஸ் மாதிரி ஒரு மினி வைன் ஷாப் எஃபக்ட் கிரியேட் பண்ணிட்டாருன்னா பாருங்களேன்!   இது எல்லாத்தையும் நம்மாளு பெண்கள் கழிவறைக்கு செல்லும் வழியில செஞ்சுட்டு வந்து பஸ்குள்ள கரை ஒதுங்கிட்டார்.

டாய்லெட் போகணும்னு போன ஒரு சின்ன பொண்ண, அந்த பக்கம் நம்மாளு செஞ்சத பார்த்துட்டு, கைய புடிச்சு ‘அப்புறமா போயிக்கலாம்!’ என்று சொல்லி இழுத்துட்டு வந்துட்டாங்க அந்தப் பொண்ணோட அம்மா. அந்த ப்ளடி இடியட்ட திட்ட வார்த்தையே கிடைக்கலை. அந்தளவுக்கு செம கோபம்! நல்லா ஒரு வெள்ள சட்ட கழுத்துல செயின் கையில வாட்ச் மோதிரம் எல்லாம் போட்டிருந்தும் கொஞ்சம் கூட யோசிக்காம கண்ட்ரோல் இல்லாம அப்படி என்னதான் குடிகாரனோ!! ஸ்ட்ரிக்டா டைமிங் மெயின்டய்ன் பன்றார்!     

   

என் காதல் கதை

எல்லா காதலுக்கும் ஒரு கதை இருக்கும். என் (இந்தக்) காதலுக்கு கதை மட்டுமில்ல காரணங்களும் இருக்கின்றன. காரணங்கள் இருந்தால் அது காதலாக இருக்க முடியாது என்று பலர் சொல்வதுண்டு. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. காரணங்கள் காதலுக்கு அழகு. படியுங்கள் புரியும்.
எனக்கு பல காதல்கள் பல பல கதைகள் இருந்தாலும் இந்தக் காதல் கொஞ்சம் அதிகமாகவே ஆட்டிப் படைக்கிறது. இது ‘ராஜாதி ராஜா’ ‘இசையின் ராஜா’ என்றெல்லாம் புகழப்படும் இளையராஜாவின் இசையின்மேல் வந்திருக்கும் தீராத காதல். சில நாட்களுக்கு முன்பு வரை இளையராஜாவின் இசையை இந்த அளவுக்கு ரசித்ததில்லை. இது என்ன திடீர் காதல் என்று கேட்கலாம். சொல்கிறேன் கேளுங்கள்..
இந்தக் காலத்து ஃபாஸ்ட் ஃபார்வார்டு காதல் இல்லை இந்தக் காதல். கொஞ்சம் நேரமெடுத்தது. வர மறுத்தது விளங்க மறுத்தது. மூன்று முறை சந்தித்த பிறகே உள்ளத்தில் குடியேறியது.

ஃபர்ஸ்ட் மீட்- தென்றலுடன் நான்:
போர்வை தேட வைக்கும் குளிர் பூவை திறந்து வைக்கும் காற்று அதோட சேர்ந்து நடு ராத்திரிய சாயங்காலம் போல ஆக்கிய நிலா வெளிச்சம். மொட்டை மாடியில் நான் குளிர் தாங்காமல் போர்வையை இறுக்கி சுற்றிக்கொண்டு இரவின் இலக்கணம் மாறி இருந்ததை கண்டேன். ரொம்ப அழகான ஒரு நேரம். என்னை சுற்றி எல்லாமே அழகா தெரிஞ்சுது. அந்த நேரத்துல ‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ..’ சாதாரணமாதான் போட்டேன். இட் டுக் மீ அவே அண்ட் ஷோட் மீ சம்திங் அமேஸிங்க்! ரிப்பீட்ல போட்டுட்டு நீலாவ பார்த்துகிட்டே என்னை தொல்லை செய்யாத தூக்கத்திற்கு நன்றி சொன்னேன்.ராத்திரி முழுக்க ஒரு செம்ம ஃபீல்.
ஆனா, இந்த பார்த்தவுடன் காதல் கான்செப்ட பெருசா நம்ப முடியாது. அதனால நான் ஒண்ணும் பெருசா எடுத்துக்கல.

செகண்ட் மீட்- அவளுடன் நான்:
ஒரு நாள் ஹே ராம் படம் பார்த்தேன். அதுல ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி..’ பாட்டு கேட்டேன். அந்த டைம்லதான் ஒரு பொண்ணோட பார்வையெல்லாம் ஃபர்ஸ்ட் டைம் மைண்ட்ல ரெஜிஸ்டர் பண்ணி வச்சிருந்தேன். அதனாலதானோ என்னவோ.. நன்றி ராஜா சார்னு ஃபர்ஸ்ட் டைம் மைண்ட் வாய்ஸ். அதுவரைக்கும் இளையராஜான்னு தான் சொல்லியிருக்கேன் அப்போதான் முதல் முதலில் ராஜா சார்னு சொன்னேன்.

தர்ட் மீட்-நிலவுடன் நான்:
நேஷனல் ஹைவேல ஒரு லாங் டிராவல். ராத்திரி நேரம். பஸ்ல லைட்டெல்லாம் ஆஃப் பண்ணிட்டாங்க. நான் விண்டோ சீட்லேர்ந்து வேடிக்கை பார்த்துட்டிருந்தேன். அப்போ பஸ்ல மெலடி பிளேலிஸ்ட்ல மௌன ராகம் படத்துலேர்ந்து ‘நிலாவே வா..’ பாட்டு. என் ஜன்னலுக்கு வெளிய நிலா. அல்மோஸ்ட் ஃபுல் மூன்னு சொல்லலாம். அந்த நாலு நிமிஷம் என் கூடவே. கார்ஜியஸ்(Gorgeous) இட் வாஸ்! தடஸ் தி மோமென்ட் ஐ ஃபெல்ட் தி லவ் இன் ஹிஸ் ம்யூசிக்.

இந்த மூணு மீட்டிங், அது கொடுத்த சந்தோஷம் இதுதாங்க என் இந்தக் காதலுக்கான காரணங்கள். நான் சொன்னனே.. காரணங்கள் காதலுக்கு அழகு. மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட சொல்லிப்பாருங்க அப்போ புரியும்.
இப்போ கூட இளையராஜா பிளேலிஸ்ட் தான் ஓடுது. பழைய பாட்டுதான் பழைய படம்தான்னு யோசிக்கும் போது ஒன்னே ஒன்னுதான் மனசுல தோணுது வாலிபங்கள் ஓடும் வயதாகக் கூடும் ஆனாலும் அன்பு மாறாதது. இது உண்மைங்க.