காக்கிச் சட்டைகள்

வழக்கமாக படம் பார்ப்பதற்கும், ஊர் சுற்றுவதற்கும் சென்னைக்கு வந்து போகும் நான் இப்போது முதல் முறையாக மூட்டை மூட்டையாய் வேலைகளுடன் வந்திருக்கிறேன். சென்னைக்கு கிளம்பும் முன் யார் யாரையெல்லாம் சந்திக்க வேண்டும் எங்கெல்லாம் செல்ல வேண்டுமென்று ஒரு பெரிய லிஸ்ட் போட்டேன்.
சென்னையில் பஸ் ரூட் என்றால் நமக்கு கைவசம் ஒரு நண்பன் இருக்கான். அவனிடம் கேட்டால் எந்த இடமாக இருந்தாலும் சரியாக சொல்லி விடுவான். துல்லியமாக தெரியாத நேரங்களிலும் அப்படி இப்படி ஒரு நல்ல யோசனை சொல்லி காப்பாற்றி விடுவான். அவனை நம்பியே நான் சென்னைக்கு வருவேன். ஆனால் இம்முறை நிறைய இடங்களுக்கு போக வேண்டியிருப்பதால் அவனை ஓவரா தொல்லை செய்ய கூடாது என்று நானே வழி கண்டு பிடிக்க முடிவு செய்தேன்.

இல்லாத ஸ்டாப்பில் நிறுத்தி இறக்கிவிட்டு ‘இங்கேயிருந்து ரொம்ப பக்கம்’ என்று சொன்ன கண்டக்டர்.
கையோட கூட்டிட்டு போய் தெரு முனையில நின்னு மேப் போட்டு காமிச்ச ஒரு செக்யூரிட்டி.
மேல் ஃபுளோர்ல இருக்கும் ஆஃபிஸ் பத்தி விசாரிச்சு சொன்ன பியூன்.
இடம் மாறி வந்தப்போ சரியான வழிகாட்டிய பெரிய போலீஸ் என நான் சந்தித்த கக்கிச் சட்டைகள் எல்லாருமே

கண்டக்டர்கள், அப்பார்ட்மெண்ட் செக்யூரிட்டிக்கள், வெயிலில் கர்ச்சீப்புகளை புழியும் போலீஸ்காரர்கள் இவங்க எல்லாரையும் விட முக்கியமா ஆட்டோக்கார அண்ணன்கள் என காக்கிச் சட்டைகளை நம்பியே என் நாட்கள் நகர்கின்றன.    

சென்னையில ஆட்டோகாரர்கள் மீட்டருக்கு மேல கேட்குறாங்க.. ஏறும் போது ஒரு ரேட் அப்புறம் ஒரு ரேட் பேசுறாங்கன்னு என்ன சொன்னாலும்.. அவங்க ரொம்ப பாவங்க. நான் கடந்த ஒரு வாரத்துல கவனிச்சது, அவங்ககிட்ட சவாரிக்காக வர்றவங்களைவிட வழி கேட்டு வர்றவங்கதான் அதிகம். நீங்களே யோசிங்க.. நல்ல வாட்ட சாட்டமா ஒரு ஆள் நேரா உங்க கிட்ட வர்றார் ‘எங்க சார்..?’ ஆர்வமா கேட்குறீங்க அதுக்கு அவர் ‘இந்த இடத்துக்கு பஸ் எங்க ஏறணுங்க?’ என்று கேட்டால் எப்படி இருக்கும்! அப்படி தினம் தினம் அவங்க ஒரு இருபது பேருக்காவது வழி சொல்லுவாங்க.       
இதுல என்ன ஹை லைட்டுன்னா, அவங்களுக்கு இடம் தெரியலன்னா ஸ்டாண்ட்டுல இருக்க மத்தவங்க கிட்ட கேட்டு வழி சொல்லுவாங்க.

அட்ரஸ் இல்லா தெருவும் இந்த ஆட்டோக்காரன் அறிவான்னு சும்மாவா எழுதினாரு வைரமுத்து.
அப்படி எனக்கு வழி சொல்லி, கொளுத்துற வெயிலில், என் அலைச்சலை வெகுவாக குறைத்த/குறைக்கப் போகும் ஆட்டோக்கார அண்ணன்கள் எல்லாருக்கும் ஒரு பெரிய நன்றி சொல்லிக்கிறேன். அவங்களுக்கு மட்டுமில்ல நான் மேல சொன்ன எல்லா காக்கிச் சட்டைகளுக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.

டேய்.. அவங்க கிட்ட சொல்லுடா. இங்க சொல்லி ஸீன் போடுறியான்னு கொந்தளிக்காதீங்க. இத நான் ஏன் சொல்றேன்னா இனிமே எங்கேயாவது போகணும்னா இந்த காக்கிச் சட்டைகளை நம்பி போங்க. கொஞ்சம் சிரிச்சிட்டு அண்ணன்.. சார்.. என்றெல்லாம் சொன்னீங்கன்னா அவங்களும் சந்தோஷமா வழி சொல்லுவாங்க.

இன்னொரு முக்கியமான விஷயம், இந்த மாதிரி உங்க கிட்ட யாராவது வந்து வழி கேட்டா.. நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பொறுமையா வழி சொல்லுங்க. ஆனா, வழி தெரியலைன்னா டீசன்டா ‘தெரியாது.. சாரி’ என்று ஒதுங்கிடணும். அதான் நல்ல புள்ளைக்கு அழகு. அவங்கள வச்சு டெஸ்ட் பண்ணி துன்புறுத்தப்படாது.  

Advertisements

ரயில்- கட்டமைத்த கவிதை

எத்தனை முறை சென்றாலும் ரயில் பயணங்கள் எப்போதுமே புதிதாய் இருக்கும். கிட்டத்திட்ட ஆறு மாதங்கள் கழித்து ரயில் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது. ரயில் வந்ததும் காத்திருந்தவர்களின் ‘ஹப்பாடா..’ துவங்கி அடித்து பிடித்து உள்ளே எரியும் இடம் கிடைக்காத ‘ஹைய்யோடா..’ வரை எல்லாம் ஓய்ந்ததும், எனது கம்பார்ட்மெண்டின் கதவருகே சாய்ந்து நின்றேன்.

கொஞ்ச நேரத்தில் தடக் தடக் என வேகமாய் விரைந்தது அந்த கட்டமைத்த கவிதை. ஓராயிரம் உயிர்களுடன் என்னையும் ஏந்திக்கொண்டு.  
காற்று தலை கோத என் பாதையில் வருமனைத்தையும் கண்களால் கட்டி அனைக்கத் தயாரானேன்.

எதிர்புறம் நகரும் நெட்டை பனைமரங்களை, வானம் பார்த்த எலக்ட்ரிக் கம்பிகளை, ஆளில்லா லெவல் கிராசிங்களை, பச்சை வயலின் வெள்ளை நாரைகளை, சின்னஞ்ச் சிறு கிராமங்களை, DTH மகுடம் அணியாத வீடுகளை, அறுப்பு முடிந்த வயல்களில் விளையாடும் நம்ம ஊர் ‘தோனி’க்களை, அருகிலிருக்கும் மனிதர்களை, அவர்களின் குணாதசியங்களை, ஜன்னலோரம் காற்றாடும் சிகப்பு சுடிதாரின் கருப்பு கூந்தலை… ஒவ்வொன்றாய் ரசித்தபடி ஞாபகங்களை ஆசை போடுதல் இதம் சேர்க்கிறது.

பார்த்தவுடன் நிம்மதியும்; புன்னகையும் சில நேரங்களில் அமைதியும்; ஆச்சரியத்தையும் தரும் பசுமையில்தான் எத்துணை இளமை. பசுமையின் மீது இருந்த காதல் அன்று வெகுவாக அதிகரித்தது. அடுத்த தலைமுறை கூகிள் எர்த்தில்(Google Earth) பசுமையை தேடும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சமும் கூடவே வந்தது.      

ரயில் பயணத்தில் ஒரே ஒரு குறைபாடுதான். எதையுமே வேகமாக ரசித்துவிட வேண்டும். நொடிக்கொரு புதுக் காட்சி, நொடிக்கொரு புது அழகு நம் கண்முன் தோன்றும். ‘அது..’ என்று ஆச்சரியப்பட்டு அருகில் இருப்பவரிடம் காட்டுவதற்குள் அந்த அழகு நம்மை விட்டு வெகு தூரம் சென்று விடும். ஒப்ஸெஸ்ஸிவ் கம்பல்ஸிவ் டிசார்டர் (Obsessive Compulsive Disorder) இருப்பவர்களுக்கு ரயில் பயணம் ஆயிரம் விளையாட்டுகளையும் பல ஆயிரம் வெற்றிகளையும் தரக்கூடும்.    

ரயில் பயணங்கள் அறிமுகம் செய்த மனிதர்களும், அவர்களது நட்பும் அவ்வப்போது மனதில் மின்னலடித்துவிட்டு போகும்.
முன்னொரு நாளில் ஒரு ஆட்டோ ஓட்டுனர் அளித்த இட்லியும் தக்காளித் தொக்கும் இன்னும் நினைவிலிருக்கிறது அவரது குடும்பத்தின் கதைகளோடு.
புன்னகையை அடையாளமாகக் கொண்ட ஒருவருடன் பேசியது பெருமூச்சுகளுடன் என் நினைவில் வாழ்கிறது. அழுக்கேறிய சட்டை, காக்கி பேன்ட், நரைத்த தாடி, கோபமான முகம்.. இவை என்னுள்ளே எழுப்பிய ஆச்சரியக் குறி இப்போதும் நிலை குத்தி நிற்கிறது.  

ஸ்மார்ட் ஃபோன்களும், ஐபேடுகளும் வெறும் காட்ஜெட்டுகளாக இல்லாமல், அருகில் இருப்பவர் பக்கம் திரும்ப விடாத கடிவாளங்களாக இருந்தது வருத்தமளித்தது. ரயில் ஸ்னேகம் என்ற ஒன்று அடுத்த தலைமுறைக்கு அறிமுகமே ஆகவில்லை என்றால் மனிதத்தின் மீது நம்பிக்கை வளர்வது எங்கே?

யோசித்துக் கொண்டே, தாயின் மடியில் உலகம் மறந்து உறங்கும் ஒரு குழந்தை போல லேசாக அசைந்து சுகம் தரும் ரயிலின் மடியில் கண்மூடி உறங்கலானேன். கண்கள் உறங்கினாலும் மனமுறங்க மறுக்கும் இந்த ஷேர் மார்க்கெட் உலகத்தில், இரவு நேரத்தில் ஒரு நெடுந்தூர ரயில் பயணத்தின் போது உறங்குவதை விட வேறெந்த எளிதான வழியும் இல்லை என்றே நினைக்கிறேன்.  

இப்போதும் எப்போதும் நெஞ்சோடு கையெழுத்திடும் ரயில் பயணங்கள் முடியாமல் தொடர்ந்திடவே மனம் விரும்புகிறது. ஆனால் ஆரம்பம் இருந்தால் முடிவிருக்கத்தானே செய்யும். இப்போது காத்திருக்கிறேன் என் அடுத்த ரயில் பயணத்திற்காக.. நல்ல பிளான் இருந்தா சொல்லுங்க போவோம்.. 🙂

கல்யாண கலாட்டா!

** முதலில்.. இத்தனை நாட்கள் இடைவெளி விட்டதற்கு மன்னிக்கவும். பரீட்சைகள் என்னை பலாத்காரம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் உங்களுடன் இணைந்திருக்க முடியவில்லை. இனி ஊசி மிளகாய் வழக்கம் போல ஒவ்வொரு செவ்வாயும் மனம் திறக்கும். நன்றி.  **

இந்த காலகட்டதில் கல்யாண வீடுகளில் கூட்டம் குறைந்துவிட்டது என்று சொல்ல முடியாது.. ஆனால் ஏதோ கடமைக்கு பத்திரிக்கை வாங்கிவிட்டோமே, அவர்கள் நம் வீட்டு விசேஷத்துக்கு செஞ்சாங்களே, இந்த மாதிரி காரணங்களுக்காக சும்மா பேருக்கு அட்டெண்டன்ஸ் போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. 

கட கடவென கியு கட்டி
கவருக்குள்ளே பணம் வைத்து
‘நீங்க செஞ்சத நாங்களும் செஞ்சுட்டோம்’
சிரிப்புல சொல்லாம சொல்லி
கைகுலுக்கி கண் சுருக்கி
ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்து
மேடையில் இடம் விட்டு
பந்தியில் இடம் பிடித்தவுடன்
முடிகிறது பத்திரிக்கை பெற்ற கடமை!

சமீபத்தில் நான் சென்ற எல்லா கல்யாணத்திலும் கண்டது.. கெட்டி மேளம்னு சொல்லி தாலி கட்டி முடிக்கும் முன்னாடி..மேடைக்கு முன்னாடி ஒரு பெரிய வரிசை நிற்கும்! ரிசப்ஷனா இருந்தா சரியா பொண்ணு மாப்பிள்ளை மேடையேறிய அஞ்சாவது நிமிஷம் கியு கட்டிடுறோம்.  

கோவிலுக்கு போனா மூலவரை வணங்கிய பின், மூணு சுத்து சுத்திட்டு, கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டு வர மாதிரி கல்யாண வீடுகளிலும் கவர் கொடுத்து முடிச்சதும், ஃபோட்டோ எடுத்து முடிச்சதும் கொஞ்ச நேரம் உட்கார்ந்து பாருங்கள்.

திடீர்னு ஒருவர் வந்து…

‘டேய் என்ன டா இப்படி ஆயிட்ட..?’

‘உங்க பையனா..நல்லா வளர்ந்துட்டான்!’

‘எப்படி ஆயிட்டான் பாருங்களேன்.. அடையாளமே தெரியல..’

‘சின்ன வயசுல எங்க வீட்டுக்கு வந்துட்டு போக மாட்டேன்னு அடம் பிடிப்ப..’

‘என்ன டா இப்படி எலச்சுட்ட…?’

‘நானு உங்கப்பா எல்லாம் ஒரே ஸ்கூல்ல படிச்சோம். என்ன ஒரு ஆறேழு  வருஷம் இருக்குமா.. நாம பார்த்து.’ 

இதெல்லாம் வழக்கமானவை. இது எல்லாமே நமக்கு சந்தோஷத்தையும், ஆச்சரியத்தையும் கொடுக்கும்(அவர்கள் படிப்பை/வேலையை பற்றி பேசும் வரை!). 

முன்னொரு நூற்றாண்டுல பார்த்த பசங்க பொண்ணுங்களையெல்லாம் பார்க்கலாம். எப்பவோ பார்த்த நம்ம வயசு பசங்களையும் பொண்ணுங்களையும் பார்க்கும் போது, அந்த உறவு ரீசார்ஜ் ஆகி வேலிடிட்டி கூடும்.
இது மட்டுமில்லாம.. நம்ம சுத்து வட்டாரத்துல இப்படி ஒரு பொண்ணா! அப்படின்னு யோசிக்கிற மாதிரி சில சம்பவங்கள் நடக்க நிறைய வாய்ப்புகள் இருக்கு. 😉  

அங்க என்னென்ன நடக்குதுன்னு நல்லா கவனிச்சு பார்த்தா சின்ன சின்ன பசங்க ஓடி புடிச்சு விளையாடுவாங்க, அப்போதான் முதல் முறை சந்திக்கிற மாதிரி எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருப்பாங்க, ஒரு பக்கம் மாப்பிள்ளையோட நண்பர்கள், இன்னொரு பக்கம் பொண்ணோட நண்பர்கள்
மேள சத்ததுக்கும் நாதஸ்வர சத்ததுக்கும் ஈடுகொடுத்து பேசி சிரிச்சிட்டிருப்பாங்க.   
வீட்ல எல்லாருக்கும் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும், ஒரு கல்யாணத்துக்கு வரும் போது பொய்யாவாது சிரிப்பாங்க. இப்போ எல்லாரும் பேசுறாங்களே பாசிட்டிவ் வைப் (PositiveVibe) அது ஒரு கல்யாணத்துல நிறையவே இருக்கும்.  அதுக்குதான் சொன்னேன்.. கவர் கொடுக்கும் வேலை முடிந்ததும் கொஞ்ச நேரம் அங்க இருங்கன்னு.

முக்கியமா ஒரு கல்யாண வீட்டுக்கு போய் வந்தா, அந்த சூழலை உண்மையாகவே நேசித்திருந்தால், மனம் திறந்து ரசித்திருந்தால், அந்த சந்தோஷமும் அங்கு கிடைத்த கதைகளும் நம் நாட்களை நகர்த்தும்.

//   நீங்கள் ஃபோட்டோ அபிமானியா!?
சொல்ல மறந்துட்டேன்..மிக முக்கியமாக கல்யாண வீடுகளுக்கு போய் வந்தால் பை நிறைய ஃபோட்டோக்கள் இருக்கும். 😀 இப்போலாம் கேண்டிட்(Candid) ஸ்டைல் அந்த ஸ்டைல் இந்த ஸ்டைல்னு மூனு நாலு கேமிராக்கள் சுற்றுகின்றன. நமக்கு வரவு அமோகம்!  //

இதுல கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் பொண்ணு மாப்பிள்ளை படுற அவஸ்தை. சொந்தக்காரங்க, ஃபோட்டோக்ராபர், மந்திரம் சொல்ற ஐய்யர்னு எல்லாரும் சேர்ந்து ஒரு வழி பண்ணிடுவாங்க! எஞ்சொல்ரேன்னா.. இப்போவே நிறைய பார்த்து பழகிட்டா, நமக்கு நடக்கும் போது பெருசா தெரியாது! 😛 

‘கட்டாயம் குடும்பத்தோட வந்துடணும்’ என்று சொல்லி யாராவது கல்யாண பத்திரிக்கை கொடுத்தா வாங்கி வச்சிட்டு நெருங்கின சொந்தமா, தூரத்து சொந்தமா, நாள பின்ன அவங்ககிட்ட ஏதாவது காரியம் இருக்கா இப்படியெல்லாம் யோசிக்காம என்ன கிஃப்ட் வாங்கலாம், என்ன டிரஸ் போடலாம்னு யோசிங்க.  

குறிப்பு: இந்த ஆச்சரியங்களும் சந்தோஷங்களும் நம்மை வந்து சேர்வதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்.. கல்யாணத்துக்கு போகும்போது மொபைல் எடுக்காம போகணும். அப்படியே எடுத்துட்டு போனாலும் பேஸ்புக், வாட்ஸாப் இதெல்லாம் ஆஃப்லைன்ல போடணும்.