வைரமுத்து 60

என் அப்பாவிற்கு தமிழ்
முண்டாசு அணிந்திருந்தது
எனக்கோ அது அணிந்திருப்பது
வெள்ளை குர்த்தா.

நன்றி..
காதலின் இன்பத்தை
மனைவியின் அன்பை
ஊடலின் அழகை
கூடலின் சுகத்தை
உலகத்தின் அன்பளிப்பை
வார்த்தைகளின் வர்ணஜாலத்தை
இயற்கையை நோக்கி நீளும் பாலத்தை
அடையாளம் காட்டியதற்கு.

என்னுடன் நீ
பேசிய வார்த்தைகளுக்கு
தேசிய விருதுகள்
போதாது!

உன் ஒரு துளி மையில்தான்
எத்தனை காதல்
எத்தனை அழுகை
எத்தனை வீரம்
எத்தனை துடிப்பு
எத்தனை ஆசை…

இத்தனையும் இருக்க
வேறு எத் துனை வேண்டுமெனக்கு!
மணி விழா காணும்
மண்ணின் நாயகனுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

******************************************

எத்தனையோ பாடல்கள் கேட்டிருந்தாலும் ரசித்திருந்தாலும், பாடல் வரிகளில் புதைந்து கிடக்கும் அர்த்தங்களை தேடி எடுக்கும் பழக்கம் வந்த பிறகுதான் அவர் தமிழ் எனக்கு அறிமுகம். என்னை கவனிக்க வைத்தவரும் அவர்தான். நான் பாடல் வரிகளை கவனித்தது நெஞ்சினிலே.. நெஞ்சினிலே.. என்ற பாடலில்தான். வயது அப்படி! 😉
எங்கு துவங்கினால் என்ன.. போகும் இடம் சரியாக இருந்தால் நல்லதுதானே. பின் அவரது பாடல் வரிகளை உன்னிப்பாய் கேட்கத் துவங்கினேன். இது அப்படியே வளர்ந்து, என் காதுகளில் இசையை விட வரிகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.
நிலா காய்கிறது, வெள்ளை பூக்கள் என்ற இரண்டு பாடல்களை காது கொடுத்து கேட்ட பிறகு வைரமுத்து என்ற மனிதருக்கு என்னுடைய உலகில் ஒரு சிம்மாசனம் அமைத்தேன். இவ்விரண்டு பாடல்களும் அவர் மீது ஒரு பெரிய மரியாதையை தந்தது.
கான்கிரீட் காட்டில் பிறந்து வளர்ந்த என்னை கிராமத்துக்கு அழைத்து சென்றவர் அவர்தான். நண்பர் ஒருவர் சொல்லி கருவாச்சி காவியத்திலிருந்து ஆரம்பித்தேன். பிறகு வைகறை மேகங்கள், வானம் தொட்டுவிடும் தூரம்தான், இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, என் ஜன்னலின் வழியே என பட்டியல் நீண்டுவிட்டது. இன்னும் கள்ளிக் காட்டு இதிகாசம் படிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது!

வைரமுத்து..
முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ..?
முகவரிகள் தொலைந்ததனால் அழுதிடுமோ அது மழையோ..??
என்றெழுதி அப்பாடலை ஆயிரம் முறை மறுபடி மறுபடி கேட்கச் செய்தவர்.

அன்பு நாதனே அணிந்த மோதிரம்
வளையலாகவே துரும்பேன இளைத்தேன்!
அந்த மோதிரம் ஒட்டியாணமாய்
ஆகுமுன்னமே அன்பே அழைத்தேன்!
என்று காத்திருக்கும் ஒரு பெண்ணின் காதலை, வலியை எடுத்துரைத்தவர்.

அய்யனாரு சாமி அழுது தீர்த்து பாத்தோம்!
சொரண கெட்ட சாமி சோத்ததான கேட்டோம்…!!
என்று கடவுளும் பல நேரங்களில் கைவிரித்துவிடும் ஏழைகளின் வாழ்வை எனக்கு விளக்கியவர்.

ஏழ இளஞ்சிறுக்கி ஏதும் சொல்ல முடியலையே
ரப்பர் வளவிக்கெல்லாம் சத்தமிட வாயில்லயே!
என்று பெண்மையின் அமைதியை அழகாய் கூறியவர்.

நேச்சர் அவர்நெஸின் முக்கியத்துவத்தை உணர்த்தியவர்.

எப்படி ஒருத்தரால இந்தளவுக்கு எழுத முடியும் என்றென்னை வியக்கச் செய்தவர்.

காதலை காதலிக்கக் கற்றுத் தந்தவர்.

நான் கவியெழுத எதையும் விட்டுவைக்காமல் இயற்கையை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்தவர்.

அவரிடமிருந்து,

சிறகிருந்தால் போதும்
வானம் சின்னதுதான்..

என்றெழுதி கையெழுத்திட்ட ஒரு புத்தகத்தை வாங்க காத்திருக்கிறேன்!

Advertisements

செல்ஃப்-ஹெல்ப் மார்க்கெட்

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு பணம், புகழ், அதிகாரம் இவை மூன்றும், ஒரு மனிதனின் வளர்ச்சியின் அடையாளங்களாக போற்றப் பெற்று, இன்று வரை உலகம் அதனை நம்பி வருகிறது.

முதலாளித்துவம் முத்திரை பதித்த அந்த காலகட்டத்தில், இந்த மூன்றையும்  அடையும் வழிகளாக சொல்லப்படும் தன்னம்பிக்கையும், தெளிவான குறிக்கோள்களும் மக்களிடையே குறைவாக இருக்கிறது என்றார்கள் வென்றவர்கள்-பணம் படைத்தவர்கள்.

உழைக்கும் வர்கத்தை ஊக்குவிக்க எவரும் முன்வராததால் ‘அடிமட்டத்தில் இருக்கும் உங்களது வழக்கையும் மாறக் கூடும்’ என்று நம்பிக்கை வார்த்தைகள் கூறிய புத்தகங்கள் அவர்களை ஈர்த்தது. பெரும் பணம் படைத்தவர்களை தூரத்தில் வைத்து பார்த்தே பழகிப் போன வெகு ஜன மக்கள் தங்களை ஊக்குவித்த செல்ஃப்-ஹெல்ப் புத்தகங்களை பெரிதும் நம்பத் துவங்கினார்கள்.

கடைசி ஐம்பது வருடங்களாக செல்ஃப்-ஹெல்ப் புத்தகங்கள் பாசிட்டிவ் தாட்ஸ் என்ற ஒன்றை மட்டுமே வலியுறுத்தி வருகின்றன என்றும் வெற்றி பெற அதை தாண்டி நிறைய படிகள் இருக்கின்றன என்றும் ஸ்டீபன் ஆர். கோவே (StephenR. Covey)TheSevenHabitsofHighlyEffectivePeople என்ற தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

அது உண்மையும் கூட. அது மட்டுமின்றி TheSecret என்ற புத்தகம் வரலாறு காணாத அளவிற்கு பிரபலம் அடைந்து மளமளவென விற்றுத் தள்ளியது. அதற்கு ஒரு காரணம் TheSecret குழுவின் வீடியோக்கள் என்றாலும் இன்னொரு முக்கியமான காரணம் அந்த புத்தகத்தில் ஒரு பகுதி பாசிட்டிவ் தாட்ஸை வைத்து அதிக பணம் சேர்ப்பது எப்படி என்று கூறியிருப்பதுதான். இது மறுக்க முடியாத உண்மை. அந்த புத்தகம் ஆரம்பத்தில் எனக்கு நம்பிக்கை அளித்தாலும் போகப் போக RhondaByrne அவர்கள் அளவிற்கு அதிகமாக பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது போல தோன்றியது.

சமீபத்தில் நெய்வேலி புத்தகக் கண்காட்சிக்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன் அங்கே ஏறத்தாழ அனைத்து கடைகளிலும் ‘செல்ஃப்-ஹெல்ப் அண்ட் மானேஜ்மென்ட்’ என்ற ஒரு பிரிவில் எக்கச்செக்கமான புத்தகங்கள் குவிந்து கிடந்தன.

தி சீக்ரட் புத்தகத்தின் பவர், மேஜிக், ஹீரோ என என்னென்னவோ இருந்தது. இதெல்லாம் பரவாயில்ல தி சீக்ரட்- டீன் பவர் என்று ஒரு புத்தகம் இருந்தது. என்னடா சிட்டுக் குருவி லேகியம் விக்கிற மாதிரி சொல்றாங்க. கிளு கிளுப்பான புத்தகம் போல.. என்று கிண்டல் அடித்து வெளியேறினோம்.

How to win friends and Influence people, How to talk to anyone போன்ற புத்தகங்களை பார்த்த என் நண்பன் ஒருவன் கேட்டான் ‘ஏன்டா.. அந்த அளவுக்கா நமக்கு நம்ம மேல இருக்க நம்பிக்கை போச்சு? நாம எப்படி வாழணும்னு யார் யாரோ சொல்றதெல்லாம் கேட்கிறோம். இந்த செல்ஃப்-ஹெல்ப் மார்க்கெட் ஹெல்தியானது இல்ல..’ என்றான். அவன் சொன்னது என் தலையில் ஆணி அடித்தது போல இருந்தது.

உண்மைதானே.. மக்கள் புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுவது நல்லதுதான் என்றாலும் வாழ்க்கைக்குத் தேவையான மோட்டிவேஷனை, நம்பிக்கையை இது போன்ற செல்ஃப்-ஹெல்ப் புத்தகங்களில் தேடுவது தவறான ஒன்று. செல்ஃப்-ஹெல்ப் புத்தகங்கள் பல்லாயிரம் பிரதிகள் விற்பதாலும் நல்ல விலை போவதாலும் அவற்றை வைத்து ஒரு நல்ல மார்க்கெட்டை தயார் செய்திருக்கிறார்கள்.
பார்க்கும் இடமெல்லாம் அவை கிடைப்பதாலும், நியூஸ் பேப்பர்களில் அவை போற்றப் படுவதாலும், நண்பர்கள் அதனை படித்துவிட்டு ஊக்கம் பெற்றதாய் சொன்னதாலும், நீங்களும் அவற்றை படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எந்தக் கதையும் எந்தப் புத்தகமும் ஒரு அனுபவம்தான். படிப்பவர் தயாராக இருந்தால் தவிர எதுவுமே ஒரு மாற்றத்தை தரப்போவதில்லை. புத்தகங்கள் உலக வாழ்க்கையில் நாம் காணாத சில பக்கங்களை காட்டுமே தவிர வாழ்க்கையை வாழக் கற்றுக் கொடுக்கும் என்று எண்ணுவது தவறு. எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று… பணம் சம்பாதிக்கும் வழிகளை புத்தகங்களில் தேடுவதை விட முட்டாள்தனமான காரியம் எதுவுமில்லை!

அந்த புத்தகத்தை எழுதியவருக்கு ஒரு விஷயம் சரியாக வொர்க் அவுட் ஆனதால் அது உலகில் உள்ள அனைவருக்கும் வொர்க் அவுட் ஆகும் என்று பொருளல்ல. நாடு, கலாச்சாரம், வளர்ந்த சூழல், பார்க்கும் வேலை, படித்த படிப்பு, வாய்ப்புகள் என எவ்வளவோ வித்தியாசங்கள் இருக்கின்றன. நான் செல்ஃப்-ஹெல்ப் புத்தகங்களை படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை.

எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

புத்தகங்கள் வத்திக் குச்சி போல. கொஞ்ச நேரம் நமக்குள் வெளிச்சம் தரும், ஒரு சின்ன ஸ்பார்க் தரும். அதற்கு பின் அதை வைத்து விளக்கை ஏற்றுவது நம்ம கையிலதான் இருக்கு. அவற்றை படிப்போம் படித்துவிட்டு நம் வாழ்க்கையின் மீது நமக்கு இருக்கும் பார்வையை மேலும் தெளிவு படுத்த முயற்சிப்போம். எது எப்படியானாலும் நமது உலக அனுபவங்களும் அவற்றின் புரிதலும்தான் நம்மை வழி நடத்தும்.

அதனால்.. நம் மீது நம்பிக்கை வைத்து வாழ்க்கையை வாழ்வோம் தேவையான அனைத்தும் அதில் கிடைக்கும். யு ட்யூபிலும், புத்தகங்களிலும் மோட்டிவேஷன் என்று தேடத் தேவையில்லை. அது அனாவசியம்!

புத்தகக் கண்காட்சி: எங்க ஊர் திருவிழா!

எங்க ஊர் திருவிழா என்று ஏன் சொல்கிறேன் என்பது நீங்கள் நெய்வேலிவாசியாக இருந்தால் புரியும். வேறு எந்த பெரிய பொழுது போக்கு அம்சமும் இல்லாத எங்கள் ஊரில் வருடா வருடம் புத்தகக் கண்காட்சி நடைபெறும் பத்து நாட்கள் மட்டும் கோலாகலம் தான். 

எப்போ போனாலும் அங்க இருக்கவன்ல பாதி பய நம்ம பாயலாத்தான் இருப்பான். பெரும்பாலும் டியூஷனை கட் அடித்துவிட்டு புத்தகக் கண்காட்சிக்கு செல்வதுண்டு. அந்த நேரத்தில்..
‘என்னடா நீயுமா…?’    
‘டேய்.. சொல்லவே இல்ல. வேற யாரெல்லாம் வந்திருக்கா..??’
என்று திரும்பும் இடமெல்லாம் தெரிஞ்சவானாத்தான் இருப்பான். ஒத்தையா உள்ள போனாலும் ஒரு கூட்டம் அதுவா சேர்ந்திடும். அதுவும் கூட படிக்கிற ஏதாவது ஒரு பொண்ண பாத்துட்டா அடுத்த நாள் ஸ்கூல்ல அது ஒரு பெரிய பேச்சா இருக்கும். நெய்வேலியில் ஒரு பெரிய பிரச்சன இருக்கு. வருஷத்துல ஒரு முறைதான் கண்காட்சி வருது அங்கயாவது ஒரு பொண்ண கூட்டிட்டு போலாம்னா அதுவும் முடியாது. எவ்வளவு வேணும்னாலும் பந்தயம் வச்சிக்குவோம்.. தெரிஞ்சவன், பக்கத்து வீட்டுக்காரன், அப்பா கூட ஆஃபிஸ்ல வேல பாக்குறவன்னு, யாராவது ஒருத்தர்கிட்ட கட்டாயமா மாட்டிக்குவோம். அவ்வளவு ஏன் ஒரு பொண்ண சாதாரணமா பார்த்து பேசினாலே அடுத்த நாள் ஸ்கூல்ல ‘எங்க கூடல்லாம் வர மாட்ட..’ என்று சம்பந்தமே இல்லாம ஆரம்பித்து செய் செய்ன்னு செஞ்சுடுவாய்ங்க. அது ஒரு ஜாலிதான்.

இதுல சீஸன் டிக்கெட் வேற ஸ்கூல்லையே கொடுப்பாங்க. அதை வாங்கும் போது ஒரு ஜாலி வரும் பாருங்க.. அத அனுபவிச்சு பார்த்தால்தான் தெரியும்!   சாக்லேட் ஃபேக்டரிக்கு டிக்கெட் கிடைத்தது போல இருக்கும். அந்த சீஸன் டிக்கெட்டை எப்போதும் வைத்துக் கொண்டு எப்போ எல்லாம் வாய்ப்பு கிடைக்குதோ அப்போல்லாம் புக் ஃபேர் போவோம்.

அந்த புக் வாங்கணும் இந்த புக் வாங்கணும் கைடு (Guide) வாங்கணும்னு ஏதாவது ஒரு கதைய சொல்லிட்டு பத்து நாளும் அட்டெண்டன்ஸ் போடுவோம். ஒரே நாளில் காலை மாலையென ரெண்டு முறை போய் அங்கேயே கெடையா கெடந்த கதைகளும் உண்டு.    

புக் ஃபேருக்கு புத்தகங்கள் பார்ப்பதற்கு சென்ற நாட்களைவிட நண்பர்களை பார்க்க சென்ற நாட்களே அதிகம். இதில் ஹை லைட்டே அங்கு நடந்த கதைகளை அடுத்த நாள் ஸ்கூலில் நாள் முழுக்க பேசுவதுதான். இப்போது போல பேஸ்புக் வாட்ஸ்ஸப் போன்ற விஷயங்கள் இல்லாததால் அடுத்த நாள் வரை காத்திருந்து சொல்வதில் இருக்கும் சந்தோஷம் கிடைத்தது.   

நெய்வேலியில்தான் சூப்பர் ஸ்டார் படத்தை விட புக் ஃபேர் அதிக அளவில்  கொண்டாடப்படும். இதெல்லாம் பள்ளி நாட்களில். இப்போது கல்லூரி முடிந்து நான்கு வருடங்கள் கழித்து புத்தகக் கண்காட்சிக்கு போனால் ஏதோ வயதான ஃபீலிங்க் வந்துடுச்சு. எந்த முகத்தையும் தெரியவில்லை எல்லாம் புது முகங்கள். ஒரு காலத்தில் நாங்கள் இருந்தது போல இப்போது காலரை தூக்கி விட்டு டிரெண்டிங்கில்(Trending) இருக்கும் லோக்கல் பாய்ஸ் அங்கும் இங்கும் தென்பட்டார்கள். நாங்கள் அனுபவித்த ‘எல்லாம் நம்ம பசங்கதான்’ சுகத்தை இப்போது அவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.      

புக் ஃபேர்..  
அன்று- தெரியாத புத்தகங்கள் தெரிந்த முகங்கள்
இன்று- தெரிந்த புத்தகங்கள் தெரியாத முகங்கள்.

அப்பாவின் கண்ணீர்

நம்ம ஊர்ல ஆண்கள் அழுதால் அசிங்கம் என்றும் அழுதல் பெண்ணின் குணம் என்றும் ஒரு பொய்யான முத்திரை குத்தி அழுவதை ஒரு வீக்நெஸ் ஆக்கிவிட்டோம். ஆனால் அழுகையில்தான் எத்தனை அன்பு எத்தனை பாசம் இருக்கிறது.

ரயில்வே ஸ்டேஷனில் தன்னுடைய மகளை வேலைக்காக டெல்லி அனுப்பிய ஒரு தந்தை, ஹேண்ட் பேக், மொபைல், லக்கேஜ்லாம் பத்திரமா பார்த்துக்கோ. அங்க போனவுடனே ஃபோன் பண்ணு. டெல்லி ஸ்டேஷன்லேர்ந்து நீங்க ஃபிரண்ட்ஸ் ஒரு நாலு பேர் சேர்ந்து டாக்ஸி எடுத்துக்கோங்க. பணத்த பத்தியெல்லாம் கவலை படாத. நல்லா சாப்பிடு.. ஃபர்ஸ்ட் ஹெல்த் நல்லா பார்த்துகோ. அதுதான் முக்கியம். இப்படியெல்லாம் பொண்ணுக்கு தைரியம் சொல்லி ரயிலேற்றி விட்டார். பாசம் பரிமாறிக் கொண்டிருந்த அவர்களை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசியதும், ஜன்னலோரத்தில் இருந்த அவரது பொண்ணுக்கு அவர் கையசைத்ததும் உறவின் இலக்கணத்தை எனக்கு கொஞ்சம் கொஞ்சமாய் விளக்கின.
ரயில் பெருமூச்சு விட்டு கொஞ்ச தூரம் போனதும் ‘அப்போ நான் வர்றேன்..உங்கள பார்த்ததுல சந்தோஷம்’ என்று வணக்கம் வைத்து கை கொடுக்க எனக்கு கைகொடுக்க வந்தவர் சட்டென்று கையை எடுத்து கண்ணிலிருந்து விழுந்த கண்ணீரை வேகமாக துடைத்தார்.
‘கொஞ்ச நாள்தான..ட்ரைனிங் முடிஞ்சதும் சென்னை வந்துட போறா.’ என்றேன்.      
‘முதல் முறையா ரொம்ப நாள் தனியா இருக்க போறா..’ என்றார். அவர் வார்த்தைகளில் ஒரு தவிப்பு இருந்தது.
‘என்ன இப்படி டிரைன் போன பிறகு அழுறீங்க.. அவள் பார்த்திருந்தா சந்தோஷப் பட்டிருப்பாயில்ல..?’ என்று கேட்டு அவருக்கு லைட்டா ஆறுதல் சொல்லி அந்த இடத்தை காலி செய்தேன்.

அப்புறம் என் தோழி ஒருத்தியின் கல்யாணத்தில் கல்யாணம் முடிந்து ஃபோட்டோ செஷன் முடிந்து சாப்பாடு முடிந்து பொண்ணும் மாப்பிள்ளையும் காரில் ஏறும் முன் அப்பாவும் பொண்ணும் கட்டியணைத்து பேச வேண்டியதை எல்லாம் அழுகையில் பேசினார்கள். அவள் என்னிடம் கூறியிருக்கிறாள் அவளது அப்பாவும் அவளும் எவ்வளவு நெருக்கம் என்று. ஆனால், அன்றுதான் தெரிந்துகொண்டேன் ஒரு அப்பா இந்த அளவுக்கு கண் கலங்குவார் என்று.

வெள்ளை பூக்கள் என்ற பாடலில்

கோடி கீர்த்தனையும்
கவி கோர்த்த வார்த்தைகளும்
துளி கண்ணீர் போல் இன்பம் தருமா
?

கவிப்பேரரசு வைரமுத்து எழுதியிருப்பார். அதுபடி பார்த்தால்.. இவர்கள் இருவருமே கொடுத்து வைத்தவர்கள்.