மெட்ராஸ் 375 கண்காட்சிகள்- நல்ல அனுபவம்

ஏற்கனவே சென்னை chancey இல்ல.. மெட்ராஸ் சாங்க்.. Massu Classu Madrasu.. ஏகப்பட்ட மேட்டர் பார்த்தாச்சுன்னு அலுத்துக்காதீங்க. இது டோட்டலா வேற…

இந்த ஆண்டு மெட்ராஸ் 375 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மெட்ராஸின் வரலாறை, அதன் சிறப்புகளை முன்னிறுத்தும் வகையில் சென்னையின் பல பகுதிகளில் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. அதில் இரண்டு  கண்காட்சிகளுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

*சித்ரா ராகுலன் அவர்களின் STUDIO PALAZZO…

பார்வைக்கு வைக்கப் பட்டிருந்த புகைப் படங்கள் குறைவுதான் ஆனாலும் சித்ராவுடன் பேசியதில் கிடைத்த சந்தோஷம் அதிகம். அவருக்கு மெட்ராஸின் மீதிருக்கும் பற்றும் அவரது குடும்பத்திற்கும் மெட்ராஸிற்கும் இருக்கும் வரலாற்று தொடர்பும் அவர் சொல்லி கேட்டதில் மகிழ்ச்சியடைந்தேன்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மெட்ராஸில் பணி அமர்த்தப்பட்ட டாக்டர்களில் சிலர், நம்ம ஊரின் மீது அதிக அக்கறை செலுத்தியது குறித்து அவர் சொன்னவை எனக்கு புதிதாய் இருந்தன. ஈடென்பெர்க்கில் பட்டம் பெற்ற அவர்கள் இங்கு வந்து பணி புரிந்த காலத்தில் நம் ஊரின் வளத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு, வருங்காலத்தை மனதில் கொண்டு பல நல்ல திட்டங்கள் வகுத்தத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.
‘ஆள வந்தவர்களுக்கு இருந்த எண்ணம் வாழும் நமக்கு இல்ல…’ என்று அவரது வருத்தத்தை தெரிவித்தார். அதுமட்டுமில்ல, இந்த கேலரி வைப்பதில் அவருக்கு எந்த லாபமும் இல்லை. இருந்தும், மெட்ராஸ் என்ற ஊரின் மீது அவருக்கு இருக்கும் மரியாதையின் காரணமாக அவர் இந்த கேலரியை அமைத்திருக்கிறார்.    

அங்கிருந்து கிளம்புவதற்கு முன் கொஞ்ச நேரம், மெட்ராஸ் தந்த எமோஷனல் கனெக்ஷன் பற்றி பேசியது நிறைவு தந்தது. அவரது கேலரியில் மெட்ராஸ் ஹார்ட்டிகல்சர் சொசைட்டியின் பென்சில் ஸ்கெட்ச் மனதில் இடம் பிடித்தது. 

முகவரி: 14, 2nd Avenue, Harrington Road, Chetpet, Chennai 600 031.
வெப்சைட்: www. Palazzoartgallery.com

*C.P. ராமஸ்வாமி ஐய்யர் ஃபவுண்டேஷனின் MADRAS THEN…

பல அரிய புகைப்படங்களும் ஓவியங்களும் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. மெட்ராஸின் முதல் தேர்தல்(அதனை தேசிய காங்கிரஸ் புறக்கணித்தது) சம்மந்தப் பட்ட புகைப்படங்களும், மெட்ராஸின் பனோரமா புகப்படமும் குறிப்பிடத்தக்கது. மெட்ராஸின் ஆர்க்கிடெக்சர் பிளான் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தது கவனிக்க வேண்டிய ஒன்று.    அவர்களின் Once Upon a Time….. In Madras என்ற 2015 காலண்டர் நல்ல பதிவாக இருந்தது. கேலரிக்கு சென்று அந்த காலண்டரை வாங்கலாம். விலை: ரூ.150.

இவையனைத்தையும் தாண்டி..

MADRAS THEN
          by Nanditha Krishna, Pramod Kapoor

புத்தகம் என்னை வெகுவாக கவர்ந்தது. பிளாக் அண்ட் ஒயிட் காலம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் வரை எல்லா நிகழ்வுகளின் பதிவாக இருக்கிறது அந்த புத்தகம். நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் it’ll make U feel proud. நீங்கள் சென்னை வாசியாக இல்லையென்றால் it’ll make U fall in love with Chennai.

நம்ம ஊரை பற்றிய இன்னும் நிறைய பல புத்தகங்கள் அங்கே விற்பனைக்கு வைக்கப் பட்டுள்ளன. பிரியர்கள் போனால் அள்ளலாம்!!  

முகவரி: Vennirul Art Gallery, C.P. Art Centre, 1, Eldams Road, Alwarpet, Chennai- 600018.

*************

இவ்விரண்டு கண்காட்சிகளுக்கு ஆகஸ்ட் 30,2014 வரை காலை 10:00 மணி முதல் மாலை 6 மணி வரை எப்போது வேண்டுமானாலும் போகலாம்.  

Advertisements

பார்த்ததும் ஃபோன் பண்ணுங்க

Spend two minutes to know about the CHOTU CEO and I assure you that this video will make you happy. Probably the best two minutes of the day.

இன்று இன்டெர்நெட்டில் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை முன்னிறுத்தி எவ்வளவோ வீடியோக்கள் ஷேர் செய்யப்படுகின்றன.

அந்த எவ்வளவோ வீடியோக்களில் சில நம்மை பாதிக்கின்றன. அந்த வகையில் நான் பார்த்த Chotu CEO என்ற வீடியோ பாதிக்கும் சில வீடியோக்களில் ஒன்றாக இருந்தது.

அந்த வீடியோவை பார்த்த மறுநாள் நான் நடந்து செல்லும் சாலைகளில், சாப்பிடும் கடைகளில் என பல இடங்களில் உள்ள குழந்தை தொழிலாளர்களை நான் கவனித்தேன். கவனித்தேன் என்று சொல்வதை விட அந்த வீடியோ என்னை கவனிக்கச் செய்தது என்றே சொல்ல வேண்டும்!  

SAVE THE CHILDREN INDIA என்ற அமைப்பின் இந்த வீடியோ ரொம்பவும் வித்தியாசமாக எடுக்கப் பட்டுள்ளது. இரண்டே நிமிடங்களில் சொல்ல வேண்டியதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள். வீடியோ மட்டுமல்ல குழந்தை தொழிலாளர்கள் பிரச்சனையை களைந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்திருக்கும் இந்த அமைப்பு, யாருமே எதிபாராத ஒரு செயலை செய்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.

அந்த வீடியோவை காண…

ஸ்டே அன்ஃபேர்!

இப்போலாம் டி‌வியில ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கு விளம்பரங்களையே பார்க்கலாம். சில நேரங்களில் விளம்பரங்கள் ஒரு சில நொடிகளில் நம்மை ஈர்த்து விடும். அதனால் எனக்கு எப்போதுமே விளம்பரங்களை பார்க்க பிடிக்கும்.

சமீப காலமாக விளம்பரங்கள் கூட படு மொக்கையாக இருக்கின்றன. மொக்கையாக இருந்தால் பரவாயில்லை துன்புறுத்தலாக இருக்கின்றன! அதிலும் இந்த டேபிள் மேட், நியூற்றி ஸ்லிம், ரியல் எஸ்டேட், சென்னை அம்ரிதா விளம்பரங்களை கண்டாலே எரிச்சலாய் வருகிறது!

சம்மந்தமே இல்லாமல் அரை நிர்வாண பெண்களை காட்டும் பெர்ஃப்யூம் விளம்பரங்கள், ஷேவிங் ஜெல் விளம்பரங்கள் (ப்ராடக்ட்டை விட அந்தப் பெண்களைத்தான் அதிக நேரம் காட்டுகிறார்கள்!) என நிறைய இருக்கிறது.

இதையெல்லாம் கூட போய் தொலையுதுன்னு விட்டுட்டேன். ஆனா, நேத்து ஒரு விளம்பரம் பார்த்து நொந்துட்டேன்.

அது “Fair and Lovely New Face Wash” விளம்பரம்.

‘இந்த உலகத்துலேயே மிகப் பெரிய பிரச்சனை.. பொல்லியுஷன் இல்ல. குலோபல் வார்மிங் இல்ல….’ என்று துவங்கி அழுத்தமான வாய்ஸ் ஓவருடன் வேகமாய் நகரும் கேமரா, கண்ணாடியின் முன் நிற்கும் ஒரு பெண்ணிடம் சென்று நிற்கிறது.. அவள் ‘இந்த பிம்பிள்!’ என்கிறாள்.

இந்த விளம்பரத்தை ஓகே செய்த விளம்பரக் கம்பெனியின் கிரியேட்டிவ் ஹெட்டும், ஃபேர் அண்ட் லவ்லியின் பி.ஆர்.ஓவையும் மிகப் பெரிய காரியம் சாதித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்!

குலோபல் வார்மிங்கை விடபிம்பிள் தான் பெரிய பிரச்சனையா!!?? எவ்வளவு கேவலமான ஒரு பார்வையை சித்தரிக்கிறது அந்த விளம்பரம்.  

உங்களிடம் ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன்.. நம்ம அப்பா அம்மா முகத்துலயெல்லாம் பிம்பிள் இருக்கா..?? 90 சதவீதம் இருக்காது. அவங்க எந்த ஃபேர்னெஸ் கிரீம் யூஸ் பன்னாங்க??

ஏன்னா பிம்பிள் ஒரு பருவதில் வரும் அதன் பின் காணாமல் போய்விடும்.

அழகா இருக்கிறதையே பெரிய வெற்றி மாதிரி ஒரு தவறான விஷயத்த ப்ரொஜக்ட் பண்ற இந்த ஃபேர்னெஸ் இண்டஸ்ட்ரிய தயவு செஞ்சு உரம் போட்டு வளர்த்து விடாதீங்க!!

முக்கிய குறிப்பு: பிம்பிள் இருபதாலோ பளீர் சர்மம் இருப்பதாலோ யாரும் வெற்றி பெற்று விட முடியாது!! 

ஸ்டே அன்ஃபேர்!!! ஸ்டே கான்ஃபிடெண்ட்!!

மாற்றத்தின் மறுபெயர்: சுதன்சு பிஸ்வாஸ்

விடுதலை நாளான இன்று சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பார்க்க பிளான் போட்டு; இந்த சேனல் பாக்குறதா அந்த சேனல் பாக்குறதான்னு முடிவு செய்ய நேரமில்லாம ரொம்ப பிஸியா இருந்தா கூட.. ஒரு அஞ்சு நிமிஷம் சுதன்சு பிஸ்வாஸ்காக ஒதுக்குங்கள்.

இந்த விடுதலை நாளில் இவரை பற்றி எழுதுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். படித்த பின்.. இவரை பற்றி தெரிந்த பின் நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சுதன்சு பிஸ்வாஸ் அவர்கள் விடுதலை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். பல போராட்டங்களில் பெரும் பங்கு வகித்த இவர், வட இந்தியாவின் பிரபல புரட்சி இயக்கமான அனுஷிலன் சமிதியின் உறுப்பினராக இருந்தவர். போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக ஆங்கிலேயர்களால் பல ஆண்டுகள் சிறையிலடைக்கப் பட்டார்.

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகும் நாட்டின் நன்மையில் இவரது பங்கு குறைய வில்லை. கொல்கட்டாவின் பரகன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரீ ராமக்ரிஷ்ணா சேவாஷ்ரம் என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கி அதன் மூலம் பல உதவிகள் செய்யத் துவங்கினார்.

இவரது தொண்டு நிறுவனத்தின் முதன்மை குறிக்கோளாக இவர் கூறுவது மனித நேயத்தை விதைக்கும் கல்வி. இவரது பள்ளிப் பருவத்தில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த இவரை எக்ஸாம் ஹாலிற்குள் வந்து ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். கல்வியின் அவசியத்தை அந்த சம்பவம் இவருக்கு உணர்த்தியது. அதனை மனதில் கொண்டு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக  ஆயிரக் கணக்கான ஆதரவற்ற மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்.    

தற்போது 67 ஆதரவற்ற மாணவர்கள் சேவாஷ்ரமத்தில் இருக்கிறார்கள். இதுமட்டுமின்றி இவரது சேவாஷ்ரம் 29 முதியோர்களுக்கு குடும்பமாக இருக்கிறது.

அந்த கிராமத்தில் சரியான மருத்துவ வசதி இல்லாததை கவனித்த இவர், தனது எழுபதுகளில் பொது மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கற்று கிராம மக்களுக்கு மருத்துவ உதவியும் செய்யத் துவங்கினார். அதுமுதல் சேவாஷ்ரதின் ஒரு பகுதியாக டிஸ்பென்சரியும் இயங்கிவருகிறது. 

இப்போது இந்த ஹீரோவுக்கு வயது 95. இந்த வயதிலும் மாணவர்களுக்கு தினமும் கணித வகுப்புகள் எடுக்கிறார்.

எஸ்‌.ஆர்.‌கே.‌எஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள/அவர்களுக்கு உதவ www.srks.org என்ற அவர்களது வெப்சைட்டை பார்க்கவும் அல்லது saunak123@gmail.com மின்னஞ்சல் மூலமாகவும் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.  

அன்று நாட்டின் விடுதலைக்காகவும் இன்றுவரை அதன் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் சுதன்சு பிஸ்வாஸ் அவர்களை மனதில் கொண்டு இந்த விடுதலை தினத்தில் விடுதலைக்கு மரியாதை செய்வோம்.

குறிப்பு: சௌனக் பட்டாச்சாரியா என்றவர் சுதன்சு பிஸ்வாஸை பற்றி இணையத்தில் எழுதியதை தொடர்ந்து SRKSவிற்கு ரூபாய் 4.9 லட்சம் நிதியுதவி கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமன்றி CNN-IBNன் ரிப்போர்ட்டர் ஒருவர் அதனை படித்து SRKS பற்றிய ஒரு நிகழ்ச்சியை தயாரித்துள்ளார்.  

மாற்றத்தின் மறுபெயர்: ஜே.எஸ்.பார்த்திபன்

சம்பள நாட்களை தவிர மற்ற நாட்களில் நமக்கு பேங்குக்கு(Bank) போவதில் இஷ்டமிருப்பதில்லை. காரணம்.. அங்கு போய் வரிசையில் நிற்பது மட்டுமில்லை. அங்கிருக்கும் அதிகாரிகளும்தான்(முக்கியமாக அரசு வங்கிகளில்). அவர்களின் பேச்சு, ஏற்றமான குரல், அவசரம், குறை கண்டுபிடிக்கும் பழக்கம் என எதுவும் நமக்கு பிடிப்பதில்லை. அதனால் நாம்  
‘பேங்க் வேலை கெடச்சதும் இப்படி ஆயிடுவாங்களோ..??’      
‘கேள்வி கேட்கவும் முடியாது.. சமூக அமைப்பு சரியில்ல!’ என்றெல்லாம்  விமர்சிக்கிறோம்.

கண்டக்டர் என்றாலே சில்லறை கேட்டு, அழுத்தமான குரலில் வேகமா எறங்கு என்று அதிகாரத்துவமாய் அதட்டுபவர் என்ற எண்ணம் ஒரு நல்ல கண்டக்டரை பார்த்ததும் மாறும்.

அது போல தான் இந்த பேங்க் சமாச்சாரத்திலும். ஏன் கல்லூரியில் இருந்த கனரா வங்கியில் பணிபுரியும் ஒருவர் எனது இந்த என்னத்தை முற்றிலுமாய் மாற்றினார். அவரது துடிப்பான குட் மார்னிங் முதல் குடுடா கண்ணா நான் செஞ்சு தர்றேன் வரை அனைத்தும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுவரை நான் சந்தித்த ஒரு பேங்க் அதிகாரி கூட என்னை இந்த்ய்ஹா அளவுக்கு பொறுமையாக நிதானமாக வழிநடத்தியதில்லை. கடைசியாக நான் அவரை சந்தித்த போது ‘நீங்கதான் நான் பார்த்தாதுலேயே பெஸ்ட் பேங்க் அஃபீசியல். பேங்க்ல வேலை செஞ்சாலே இப்படித்தான் இருப்பாங்க என்ற என்னோட பார்வைய நீங்க மாத்திட்டீங்க. நன்றி.’ என்று சொல்லி விடைபெற்றேன். அவர் அவருடைய கிளைக்கு வருபவர்களுக்கு இதை செய்யுங்க அதை செய்யுங்க இதுதான் அதைவிட சீக்கிரம் முடியும் என்று வழிகாட்டுவதை ரசிக்கிறார். In short he enjoys doing his job.

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான எழுத்தாளர்களின் வெப்சைட்டுகளை கிளறிய போது இவரை போலவே ஜே.எஸ்.பார்த்திபன் என்ற வங்கி ஊழியர் ஒருவர் ஏழை எளிய மக்களுக்கு அவரது வங்கியின் மூலம் ஒப்பில்லா உதவிகளை செய்துவருகிறார் என்பதை தெரிந்து கொண்டேன்.   

ஜே.எஸ்.பார்த்திபன்…

தேசிய வங்கி ஒன்றில் சீனியர் மேனேஜராக பணிபுரியும் இவர் டெல்லியில் பிச்சைகாரர்களிடம் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேங்க் அக்கௌன்ட் வசதியை பயன்படுத்த ஊக்குவித்து அவர்களது வாழ்வில் பெரும் மாற்றம் செய்துள்ளார்.    

பின் தமிழகத்திற்கு வந்த இவர், பெரும்பாலான எளிய குடும்பங்கள் தங்கள் பணத் தேவைகளுக்கு, முறையின்றி வட்டிக்கு விடுபவர்களை சார்ந்திருப்பதை கண்டார். அவர்கள் எவ்வளவு சம்பாத்தித்தாலும் கந்து வட்டிக் காரர்களிடம் தங்கள் பணத்தை பரிகொடுக்கும் அவலத்தையும் கண்டார்.     
வங்கிகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கிராமங்களிலும், ஏழை மக்கள் மத்தியிலும் தேவையான அளவு இல்லாததே இதற்கு காரணம் என்பதை கவனித்தார். 

அவரது சொந்த ஊரில் ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் பற்றியும் சேமிப்பின் அவசியம் பற்றியும் விளக்கி அவர்களை முறையாகச் சேமிக்கச் செய்து பேருதவி செய்திருக்கிறார்.

வங்கியில் லோன் வேண்டுமென்றால் குழப்பத்தை ஏற்படுத்தும், வெகுஜனத்திற்கு அந்நியமான ஆயிரத்தெட்டு ப்ரொசீஜர்கள் இருப்பதால் அவர்கள் வங்கிகளை நாடுவதில்லை என்று கூறும் இவர் தேவைவரும் நேரத்தில் அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி ஊகமளிக்கிறார். வங்கிகளுக்கு வர இயலாதவர்களின் வீட்டிற்கே சென்று அவர்கள் தேவைகள் அறிந்து உதவி செய்கிறார்.   

‘இப்போ நான் செய்றதெல்லாம் ஏன் வேலையில என்னால செய்ய முடிஞ்சது.  இதெல்லாம் நான் சேவையா நெனைக்கல.. கடமை. இது ஒரு அவசியமான விஷயம்’ என்று சுருக்கென்று கூறுகிறார்.

அவரது கட்டுரையின் துவக்கத்தில் From poor banking to banking for poor  என்ற ஒரே வரியில் அவரது கடமையை மொத்தமாக விளக்கி அசத்துகிறார்.

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள..

http://www.youtube.com/watch?v=jTF094ZBbXc

http://www.jspflying.wordpress.com என்ற அவருடைய  வலைப்பூவை காணலாம்.

மாற்றத்தின் மறுபெயர்

டிவி சேனல்களின் கேமராக்கள் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.  
மேடைகள் இவர்களை மரியாதை செய்ய வில்லை.
அடைமொழிகள் இவர்களை அலங்கரிக்கவில்லை.

இவை எதையுமே இவர்கள் எதிர்பார்க்க வில்லை. தங்கள் வாழ்க்கையில் பிறரது வாழ்க்கையையும் கணக்கில் கொண்டு வெகு சாதாரணமாக வாழ்பவர்கள். பத்து வருடங்கள் கழித்து இவர்களால் பல நல்ல மாற்றங்கள் இங்கு நிகழ்ந்திருக்கும்.

கிராஸ் ரூட் லெவல் டெவலப்மென்ட் என்று சொல்வார்களே அதனை உண்மையில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் பெரும் சாதனையாளர்களை இந்தப் பகுதியில் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஏற்கனவே பல சமூக வலைத்தளங்கள் இவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தாலும், இவர்களை இந்த ஊசி மிளகாய் பேச வேண்டும் என்ற ஒரு ஆசையின் வெளிப்பாடாக ‘மாற்றத்தின் மறுபெயர்’ என்ற தலைப்பில் பல நல்லுள்ளங்களைப் பற்றி பேசப் போகிறோம்…