இரு கனவுகள் ஒரு கதை – குறுந்தொடர்

ஒவ்வொரு வாரமும் உங்களிடம் பேசும் நான், இம்முறை ஒரு கதை சொல்ல போகிறேன். இது ஒரு காதல் கதை.

இந்தக் குறுந்தொடரின் நான்கு அத்தியாயங்களான

விழிசேர்ந்த கனவுகள்

பிறந்தநாள் வாழ்த்து

மனம் திறந்தாள்

தேவதையுடன் நான்

ஆகியவற்றை அடுத்தடுத்து வரிசை படுத்தியுள்ளேன்.

இரு உள்ளங்கள் பத்திரமாய் பாதுகாக்கும் மயிலிறகு…
உங்களுக்காக…

http://wp.me/a4g3yO-4Y

கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை ஃபேஸ்புக்கிலோ, வோர்ட்ப்ரெஸிலோ பகிரவும்.

Advertisements

நம்மாழ்வார்- நம்மை வாழவைக்க வந்தவர்

இதுவரை நான் படித்த புத்தகங்களில் என்னை அதிகம் பாதித்தது, கோ. நம்மாழ்வாரின் உழவுக்கும் உண்டு வரலாறுதான்.  பசுமை புரட்சி என்ற பெயரில் நம் உழவர்கள் ஏமாற்றப்பட்டதும், இறக்குமதி என்ற பெயரில் அமெரிக்காவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததும் பற்றி அவர் சொல்லும் போது நெஞ்சு கணக்கிறது!

புத்தகங்கள் படிக்கும் பழக்கம் இல்லவே இல்லை என்றாலும், இந்த ஒரு புத்தகத்தை மட்டுமாவது அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டும். நாம் ஏமாற்றப் பட்டதையும், ஏமாற்றப் படுவதையும் நம்மிடமிருந்து மொத்தமாய் மறைத்து விட்டது உரிமை மீரலின் உச்சம்.  அவரது கட்டுரைகளை படித்த பிறகு, எதையெதையோ பற்றி நமக்கு விளக்கமளித்த பள்ளிக் கூடத்து பாடப் பகுதிகள் இந்தியாவின் உன்னதமான உழவின் வரலாறையும், உழவர்களின் வரலாறையும் விளக்க மறுத்தது அநீதி என்று தோன்றுகிறது!

அதுமட்டுமின்றி கோ. நம்மாழ்வார் போன்ற ஒரு மனிதருக்கு நாம் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்க மறந்து விட்டோம் என்பதே உண்மை. பெற்றெடுத்த மண்ணை மலடாக்கிவிட்டு நாம் என்ன சாதித்து விட்டோம்!? அமெரிக்காவிடமிருந்து நாம் கோதுமை இறக்குமதி செய்வது நம்மில் எத்துனை பேருக்கு தெரியும்? அது எவ்வளவு பெரிய கொடுமை!

பெஸ்டிசைடுகள் பயன்பாடு கேடு விளைவிக்கும் என்று புலப் பட்டவுடன், தனது தேசத்தில் பயன்பாட்டை தடை செய்துவிட்ட அமெரிக்கா, தயாரிப்பை தடை செய்யாமல் மூன்றாம் உலக நாடுகளில் விற்று பிழைத்துக்கொள் என்று கம்பெனிகளிடம் சொல்லி இந்தியா போன்ற நாடுகளிடம் விற்று பணம் பார்த்தது மனிதத் திரோகம். இது போன்ற பல உண்மைகளை அவரது புத்தகம்/கட்டுரைகள் எந்தியிருக்கிறது.

கடைசி வரை நம் நன்மைக்காகவே வாழ்ந்து நமக்காகவே பாடுபட்ட கோ.நம்மாழ்வாருக்கு நம்மால் எந்த கைமாறும் செய்ய முடியாது. அவரது ஆசை படி பூச்சிக்கொல்லிகளை தவிர்த்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து அனைவரும் உழவில் ஈடுபடுவோம்.

விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்று அறிக்கைகளிலும் கூட்டங்களிலும் மட்டும் பேசி விட்டு அதன் முதுகில் குத்தும் கேவலம் இனியும் தொடர்ந்தால், அது நம் தவறு. உழவை பற்றி தெரிந்து கொள்வோம்.. உழவனை போற்ற கற்றுக் கொள்வோம்!

************

உழவன்

தன் கோவணத்தை இறுக்கி
அரைஞாண் கயிற்றில் கட்டி
வான் நோக்கி கண் சுருக்கி
ஒரு வேண்டுதல் வைப்பான்.
ரகசிய வேண்டுதல்-அது
அவசிய வேண்டுதல்.

வெள்ளை தாடியுடன்
முகத்தில் அமைதி
துடிக்கும் நாடியுடன்
அகத்தில் கேள்வி.

உழைத்து கருத்த அவன் தேகம் போல
அலைந்து திரியும் மேகம் ஆகாதா
அவன் கேள்விக்கு பதில் தாராதா?

தோளிலிருந்த துண்டை
சின்னதாய் சுருட்டி
மன்னர்களும் அணியாத
வியர்வை கிரீடத்தை
கம்பீரமாய் அணிந்து
மெல்லமாய் நிலத்தில் இறங்கி
கவனமாக வேலையை துவங்கினான்.

வானம் சிந்திய மழை விந்துக்களை
தன்னுள் வாங்கிய பூமித் தாய்க்கு
பிரசவம் பார்க்கும் மருத்துவனல்லவா அவன்.
அத்தனை கவனம் தேவைதான்.

ஏற்றமிரைத்த காலம் போய்
பம்ப் செட்டுகள் வந்தாலும்
எரிகளின் ஆறுகளின்
பெயர் மட்டுமே மிஞ்சினாலும்
அங்கங்கே பலர்
எலிப் பிடித்து தின்றாலும்
அவன் சேற்றில் கால் வைக்க
வருந்தியதில்லை.

அவன் வருந்தினால்
இங்கு எவருமே இல்லை.

தலைகுனிந்து அவன்
கதிரறுக்கும் ஒவ்வொரு முறையும்
உலகம் தலை நிமிர்கிறது.

அவன் உழுது வாழ
நாமும் நம் விழுதுகளும்
தொழுது வாழ்வதே
நியாயம்.

முப்போகத்தில்
எப்போதாவதுதான் விழுகிறது
அவனுக்கு தாயம்.

அவனை நாம் படிக்க வேண்டாம்.
தினசரிகள்
வார இதழ்கள்
மாத இதழ்கள் என
எதிலும் அவனை நாம்
படிக்க வேண்டாம்.

என்ன பெருசா செஞ்சுட்டான்
ஏரோபிளேனில் பறக்கவில்லையே
ஏரோட்டித்தானே பிழைக்கிறான்,
ஹார்லே-டேவிட்சனில் ஊர் சுற்றலையே
ஆற்றங்கரையில்தானே ஓய்வெடுக்கிறான்,
பில்லியன் டாலர் கம்பெனியா வைத்திருக்கிறான்
புல்லுக்கட்டுகள்தானே வைத்திருக்கிறான்.

மறுபடியும் சொல்கிறேன்
அவனை நாம் படிக்க வேண்டாம்!

ஸ்மார்ட் ஃபோன்களில்
நம் கிண்டில்களில்
ஆன்லைன் ஆஃப்லைன் என
எங்கும் அவனை நாம்
படிக்க வேண்டாம்.

ஆனால் நினைவிலிருக்கட்டும்
வீக்னஸ் என்றேதுமில்லை-அவன்
வீக்கெண்டுகள் பார்ப்பதில்லை
லாஸ் ஆஃப் பே கணக்கில்லை-அவனுக்கு
லாப நஷ்டம் கவலையில்லை
வருமானம் பார்த்தா விதைக்கிறான் அவன்?

அறுவடையின் முதல் நாளில்
செழிப்பான தன் நிலம்
அவனிடம் பேசும் வார்த்தைகளுக்காக
உழைக்கிறான்.
தனக்கு மட்டுமா உழைக்கிறான்
நமக்கும் சேர்த்தல்லவா உழைக்கிறான்.

இப்போதும் சொல்கிறேன்
அவனை படிக்க வேண்டாம்
மதிப்போம். அது போதும்.

**********

நான் படித்த பள்ளியில் ஒரு முறை கோ.நம்மாழ்வார் சிறப்புரை ஆற்றினார். அவரது பச்சை துண்டும், வெள்ளை தாடியும் மட்டும் நினைவிலிருக்கிறது. அவரோடு மரம் கந்தசாமி என்ற இயற்கை ஆர்வலரும் வந்திருந்தார். அப்போது கோ.நம்மாழ்வாரை பற்றி எனக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை. ஆனால், இப்போது அவரை ஒரு முறை பார்த்தேன் என்ற நினைப்பே சந்தோஷம் அளிக்கிறது.

மனிதனாய் பிறந்து, பல அடையாளங்கள் ஏற்று வாழ்ந்தாலும்  கடைசியில் உழவனாய் உழைப்போம்! உழுது உண்போம்!

மாற்றத்தின் மறுபெயர்- குருசாமி பாலசுப்பிரமணியன்

கும்பகோணத்தில் ஒருவர் ஏழை பிள்ளைகளுக்காக ஒரு பள்ளி நடத்தி வருகிறார். மூன்னூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியளித்து வருகிறார். அந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் வேலை செய்து கொண்டே படிப்பவர்கள். அவர்களுக்காகவே காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணிவரை இயங்குகிறது இவரது பள்ளி – காந்தியடிகள் நற்பணிக் கழகம்.

இங்கே ஆசிரியர்களும் வேலை செய்து கொண்டே பகுதி நேரத்தில் இந்தப் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆர்வமுள்ளவர்கள். இவரது உன்னதமான முயற்சியில், முப்பத்தியெட்டு ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள்.

இதையெல்லாம் விட நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு செய்தி என்னவென்றால்… இந்தப் பயணத்தை துவக்கி வெற்றிகரமாக செயல் படுத்தி வருபவர் ஒரு மளிகை கடைக்காரர்!
சேவையை பற்றி சொன்னதுமே ‘அதுக்கெல்லாம் பணம் வேணும்பா…’ என்று சொல்லும் அனைவரும் இவரது கதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த ஒருவர்.. அந்த மளிகை கடைக்காரர்..
குருசாமி பாலசுப்பிரமணியன்

இவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டவுடன் கூகுள் செய்து பார்த்ததில்.. விஜய் டிவயின் நீயா நானா இவருக்கு 2013ம் ஆண்டின் சிறந்த நம்பிக்கையாளர்’ விருது வழங்கி கௌரவ படுத்தியிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ‘தி ஹிந்து’ நாளிதழின் மாற்றத்தின் வித்தகர்கள் என்ற பகுதியில் இவரைப் பற்றிய தகவல்கள் வெளிவந்திருப்பதும் தெரியவந்தது. (குறிப்பு: நேற்றுவரை இப்படியொரு பகுதி தி ஹிந்துவில் வெளிவருவது எனக்கு தெரியாது. அதனால்.. ஊசிமிளகாயின் இந்தப் பகுதிக்கு மாற்றத்தின் மறுபெயர் என்று நான் பெயரிட்டது தற்செயலான ஒன்று என்பதை இந்த இடத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன் 😀 )

அதனால்.. அவருடைய வாரத்தைகளின் நேரடியான பதிவாக வெளிவந்த தி இந்து பதிவின் லிங்க்..

http://tamil.thehindu.com/opinion/columns/ மாற்றத்தின்-வித்தகர்கள்-1-கும்பகோணம்-குருசாமி-பாலசுப்பிரமணியன்/ article5192415.ece

தி ஹிந்துவின் இந்த ஆர்ட்டிகிலை படிப்பவர்கள் கீழே கமெண்ட்டுகளில் ஜம்புலிங்கம் பாலகுருசாமி என்பவரின் கமெண்ட்டை தவறாமல் படிக்கவும்.

காந்தியடிகள் நற்பணிக் கழகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள..

http://gnkkumbakonam.blogspot.in/

இப்போதைக்கு என்னால் முடிந்தது என் வட்டத்தில் இந்த மனிதரை அறிமுகம் செய்வதுதான். ஆனால் அடுத்த முறை கும்பகோணம் பக்கம் சென்றால் நிச்சயம் இவரை சந்தித்து வருவேன்.

பயணம் சொல்லித் தந்தது

பயணம் செய்வதில் அதிலும் மொழி தெரியாத ஊர்களில் பயணம் செய்வதில் ஏராளமான அனுபவங்கள், என்ன முடியாத அளவுக்கு நினைவுகள் என பல நன்மைகள் நமக்கு கிடைக்கும். என் சமீபத்திய பயணங்கள் இரு முக்கியமான பாடங்களை எனக்கு கற்றுத் தந்தன.

*சக மனிதர்களின் மீது நம்பிக்கை கொள்ளுதல்:

வேகமான நகர மயமாக்கலில் நாம் தொலைத்துவிட்ட பல விஷயங்களில் இது முதலாவது. இன்று நாம் வாழும் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் அண்ணன் தம்பி கூட செக்யூரிட்டியின் கேள்விகளுக்கு பதில் சொல்லி விசிட்டர் நோட்டில் கையெழுத்திட்ட பிறகுதான் நம்மை பார்க்க முடிகிறது. அசோசியேஷன் மீட்டிங் என்று நிர்வாகக் குழுவிலிருந்து அழைப்பு வரும் நேரங்களில் மட்டும் தான் நம் காம்பவுண்டிற்குள் வாழ்பவர்களையே நாம் பார்க்கிறோம்.

பேருந்து நிலையங்களில், ரயில் பயணங்களில் யாரை பார்த்தாலும் திருடன் போலவே சந்தேகிக்கும் இந்த காலகட்டத்தில், சக மனிதர்களை நம்புவது பெருமளவு குறைந்து விட்டது. ஆனால், அந்த நம்பிக்கை ஒன்றே வாழ்வில் பல மாற்றங்கள் செய்யும் வலிமை கொண்டது என்பதை நாம் உணர வேண்டும்.

அதற்கு நாம் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான். இரண்டு நாட்கள் ஒரு மொழி தெரியாத இடத்திற்கு பயணம் செய்து அங்கு தங்கி அங்குள்ள இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும். என்னதான் ஜி.பி.எஸ் கூகுள் என தொழில்நுட்பத்தின் துணை இருந்தாலும், அந்த இரண்டு நாட்களில் அந்த ஊர் மக்களிடம் போக வேண்டிய இடத்திற்கு வழி கேட்கவோ, அந்த ஏரியாவில் ஆட்டோ ஸ்டாண்ட் கண்டு பிடிக்கவோ பேச வேண்டியிருக்கும். அந்த நேரங்களில் அவர்களை நாம் நம்புவோம். அன்பான மொழி பேசி, சரியான உதவியின் செய்து சிலர் நம் மனதில் நீங்காத இடம் பெற்றுவிடுவார்கள். அவர்களை பற்றி நாம் நம் நண்பர்களிடம் பேசுவோம். பின் நம்மிடம் உதவி கேட்பவர்களுக்கு நாமும் அவர்களை போல உதவுவோம்.

இதன் மூலம் கிடைக்கும் சக மனிதர்களின் நம்பிக்கை, உலக வாழ்வின் மீதும், மனிதத்தின் மீதும் நம்பிக்கை அளிக்கும்.  நம் அன்றாட வாழ்வில் ஒளிந்திருக்கும் ஆனந்தத்தை நமக்கு அடையாளம் காட்டும்.

*பிறருக்காக நேரம் ஒதுக்குதல்:

உன்னால் பிறருக்கு
உதவி செய்ய முடியாது
சேவை செய்யதான் முடியும்.
– விவேகானந்தர்.

இதனை பல முறை படித்த போதும் இதன் சரியான அர்த்தம் எனக்கு விளங்கியதில்லை. ஆனால் ஒன்று புரிந்தது.. பிறருக்கு சேவை செய் என்று சொல்கிறார்.
சேவை செய்யதான் முடியும் என்றால் இந்த 3G காலத்தில் நாம் அனைவருக்கும் செய்யக் கூடிய பெரும் சேவை, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவதுதான்.

ட்ராஃபிக் சிக்னலில் சிகப்பு பச்சையாக மாறுவதற்கும், இன்டர்நெட்டில் ஒரு பேஜ் ரெஃப்ரெஷ் ஆவதற்கும் கூட காத்திருக்க நேரமில்லாத பரபரப்பான இந்த நூற்றாண்டின் மனிதர்களுக்கு, ஏதாவது செய்ய வேண்டுமென்றால்.. அவர்களுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். அவர்கள் சந்தோஷங்களை, கஷ்டங்களை, சோகங்களை, சாதனைகளை கொஞ்சம் காது கொடுத்து கேட்டால் போதும். அதை விட அவர்களுக்கு (அதாவது நமக்கு) பெரிய கிஃப்ட் எதுவுமில்லை!

யாருக்குமே இங்கு நேரமில்லை.. அவன் அவனுக்கு அவன் அவன் கவலை என்று பேசி காலத்தை ஓட்டும் நமக்கு யாராவது நமக்காக நேரம் ஒதுக்கினால் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தோன்றும். அது ஒன்றே மற்றவர்களின் அன்பை பெற போதுமானது!

தீதும் நன்றும்

‘இங்க ஆள் நடமாட்டம் கம்மிதான். தெரு முனையில ஒரு ஏ‌டி‌எம். வயசான செக்யூரிட்டி உட்கார்ந்துட்டே தூங்குறான். அப்புறம் ஒரு அயர்னிங் கடயில லைட் எரியுது. ஆனா ஆள் இல்ல… தெரு முனையில ஒரே ஒரு கார். அதுவும் நான் கொண்டுவந்தது…’ அவன் ஃபோனில் ரொம்பவும் ஜாக்கிரதையாக பேசிக் கொண்டிருந்தான். அவன் கண்கள் ஒரு இடத்தில் நிற்கவில்லை. ஒரு நாய் ஓடியது முதல் தெரு விளக்கு அணைந்து எரிந்தது வரை எதுவும் அவன் பார்வையில் இருந்து தப்பிக்கவில்லை. 

‘நான் பார்த்துக்குறேன்.’ என்று அழைப்பை துண்டித்தவன், ஒரு முறை தெருவின் கடைசி திருப்பம் வரை பார்வையில் படமெடுத்தான்.
மதில் சுவரை ஏறி குதித்து அந்த வீட்டிற்குள் நுழைந்தான். அவன் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் கவனம் இருந்தது. கூர்மையான அவன் பார்வையில் நடுக்கம் இல்லை, பயம் இல்லை.

அந்த புல் தரையில் நின்றபடி அவள் இருக்கும் அறையின் ஜன்னல் முழுவதுமாக தெரிந்தது. மஞ்சள் நிற நைட் லாம்ப் இருளில் லேசாக படர்ந்திருந்தது. மற்ற விளக்குகள் அணைக்கப் பட்டிருந்தன. நிழலின் நடமாட்டமில்லை. அவள் உறங்கியிருக்க வேண்டும். சரியான நேரம் என்று வேகமாக பைப்பை பிடித்து பால்கனிக்கு ஏறினான். பால்கனியில் இறங்கியவுடன் பாக்கெட்டில் இருந்து ஒரு கத்தியை எடுத்து தன் கட்டை விரல் நுனியில் கீறினான். ஒரு சின்ன சிகப்புக் கோடு மெதுவாக படர்ந்தது அது கத்தியின் கூர்மையை காட்டியது. அவன் ரத்தம் படிந்த கத்தியின் நுனியை தன் கை குட்டையால் துடைத்துவிட்டு, அவள் அறையின் ஜன்னலை திறக்க முயற்சி செய்தான். அவை தாளிடப் பட்டிருந்தன. கையிலிருந்த கத்தியை படைக்கும் ஜன்னல் கதவிற்கும் இடையே இருந்த சிறு இடைவெளியினுள்ளே நுழைத்து கொக்கியை தூக்கிவிட்டு கதவை திறந்தான்.

அவள்… அப்போதுதான் உறங்கியிருப்பாள் போல போர்வைக்குள் அவள் உடல் சரியான நிலைபாடின்றி அவ்வப்போது அசைந்து கொண்டிருந்தது. அது, ஆழ்ந்த உறக்கத்தில் அவள் இல்லை என்பதை அவனுக்கு விளக்கியது. 

அவள் அருகே சென்று கத்தியால் அவள் நெத்தியில் வேகமாய் தட்டி எழுப்பினான். சட்டென்று எழுந்த அவள் பயத்தில் அலறினாள். கத்தியை அவள் உதடுகளில் வைத்து ‘கத்து..’ என்றான்.
என்ன நடக்கிறது என்று தெரியாமல் அவள் கண்கள் கலங்கின. அவள் கைகளை அவன் இறுக்கிப் பிடிக்கவில்லை, அவளை அவன் மிரட்டவில்லை. ஏதோ அவளை நன்றாக அறிந்தவன் போல அவனது செயல்கள் ரொம்பவும் தெளிவாக இருந்தது.

கத்தியை அவள் உதட்டிலிருந்து எடுத்தான். அவள் மேலுதட்டில் இருந்த சிகப்பு கோடு, அந்தக் கத்தி அவள் உதட்டில் லேசாக முத்தமிட்டுருப்பதை காட்டியது. 
‘யார் நீ?’
‘ஷ்ஷ்…’ என்று மறுபடியும் கத்தியை வைத்தான் இம்முறை கழுத்தில்.
அவள் அணிந்திருந்த செயினில் இருந்த அழகான அந்த கண்ணன் டாலருக்கு அருகில் கத்தியை அழுத்திப் பிடித்தான்.  
‘என்ன ஏன் இப்படி பண்றீங்க!?’ சிறு சிறு இடைவெளிகளில் வேகமாக மூச்சை இழுத்து விம்மி அழத்துவங்கினாள்.   
‘ஏன்னா நீ கமிஷனர் பொண்ணு. உன் செல் ஃபோன எடு..’  என்றவன் சொன்னதும் அவள் தலையணைக்கு அடியிலிருந்து அவளது செல்ஃபோனை எடுத்து அவனிடம் நீட்டினாள். 
‘உங்கப்பாவுக்கு ஃபோன் போடு..’
பயத்தின் உச்சத்தில் இருந்த அவளின் இதயத் துடிப்பை அவனால் கழுத்தில் வைத்திருந்த கத்தி முனையில் உணர முடிந்தது.    
‘அப்பா..’ என்றவள் சொன்னதும் வெடுக்கென அவளிடமிருந்து ஃபோனை பிடுங்கி கழுத்தில் வைத்திருந்த கத்தியில் அழுத்தம் தந்தான்.
அவன் அனுமதியின்றி அங்கே அவளது மூச்சு சத்தம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது.

‘என்ன கமிஷனர்.. இது உன் பொண்ணுதான?’
மறுமுனையில் பதற்றத்துடன் அந்தக் குரல் தடுமாறியது.  
‘சரி.. என் வேலை முடிஞ்சதும் நான் கிளம்பிடுவேன். நான் யாரு என்னன்னு தேடி நேரத்த வீனடிக்காம.. ஒரு அப்பாவா பொறுப்பா உன் பொண்ணு செத்து கிடக்குறத வந்து பாரு!’ என்று ஒரு அரக்கன் போல மிரட்டி அழைப்பை துண்டித்தான். அதன் பின் அவள் அலறல் மட்டும் கேட்டது.

******************************
அவளது அலறல் சத்தம் அக்கம் பக்கத்தை சென்றடைவதற்குள் அவன் தெருமுனையில் நின்ற தனது காரில் தப்பித்தான். மூன்று மீட்டர் தாண்டுவதற்குள்ளேயே 40… 60.. 80… 100.. என்று நொடிகளில் வேறொரு இடத்தில் இருந்தான். ஹெட் லைட்டுகளை அணைத்து, சம்பவம் செய்யும் போது இருந்த கவனமும் ஜாக்கிரதையும் துளியும் குறையாமல் யாராவது வருகிறார்களா என்று கண்ணாடியில் பார்த்தவன் சற்று மூச்சு விட்ட போது, திடீரென ஒரு உருவம் காரை வழி மறித்தது. கட்டுக்குள் கொண்டுவந்து சக்கரங்கள் ரோட்டில் தேய்ந்து கிரீச்சிக்க    கஷ்டப்பட்டு காரை நிறுத்தினான். 

‘ஐயா.. நல்ல நேரத்துல வந்தீங்க. நாதன் சார்.. வாங்க சார்!! ஐயா நெஞ்ச புடிச்சுக்கிட்டு கெடக்காரு..!!’  என்றந்த உருவம் கத்தியது. என்ன இது புது தொல்லை என்று பார்த்து அங்கிருந்து கிளம்ப முயன்ற போது.. அவன் கட கடவென அருகில் வந்து ‘தம்பி.. ஐயா நெஞ்ச புடிச்சிட்டு உட்காந்துட்டாறு. உங்கப்பாவுக்கு நல்ல பழக்கம்தான். நல்ல சமயத்துல வந்தீங்க. பக்கத்துல ஆஸ்பத்திரிவரைக்கும் இறக்கி விட்டுறுங்க!’ என்று கூச்சலிட்டான்.  
‘யோவ்.. சத்தம் போடாத. போ.. போய் உங்க ஐயாவ தூக்கிட்டு வா!’ என்று சொல்லி அவனை அனுப்பிவிடு, ‘என்ன சொல்றான்.. ஒருவேள இந்த கார் ஒனர பத்தி சொல்றானோ. ச்ச.. நாதன்.. நாதன்.. புரியலையே!! ’ முனகினான்.   

மயங்கிக் கிடந்த அந்த பெரிய ஆளை காரின் பின் சீட்டில் போட்டுவிட்டு அந்த டிரைவர் வேகமாய் கதவை சாத்தினான். ‘போலாம் தம்பி.. உங்க ஆஸ்பத்திரிக்கே போயிடலாம். பக்கத்துலதான இருக்கு..’  
இதை கேட்டதும் அவனுக்கு தூக்கி வாரிப்போட்டது. என்னடா இது குழப்பத்துக்கு மேல குழப்பமா இருக்கே! என்று யோசித்தவன்
‘யோவ் வழி சொல்லுய்யா..நான் ஒனர் பையன் இல்ல. புது டிரைவர்!’ என்று கூறினான்.   
அவன் இடத்தை கூற.. 40.. 60… 80… 100. ஆம்புலன்ஸ் அணிவகுத்து நின்ற அந்த ஹாஸ்பிடல் வாசலில் மின்னல் வேகத்தில் கார் வந்து நின்றது.
‘யார்டா இவன்.. பயித்தியக்காரன். இவ்ளோ வேகமா வர்றான்’ என்று தலையில் அடித்துக் கொண்ட அட்டெண்டர்கள்  
‘சார்.. யாரவது வாங்க. சார்..’ என்று டிரைவரின் சத்ததை கேட்டதும் உதவி செய்ய விரைந்தனர்.  
சில பேரின் உதவியுடன் அந்த டிரைவர் அவரை ஹாஸ்பிடலுக்குள் கொண்டு சேர்த்தார். அதுவரை அமைதியாய் இருந்த ஹாஸ்பிடல் வராண்தா, இவர்களின் வருகைக்குப் பின் பரபரப்பானது.  
   
இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவன் அவசர அவசரமாக யார் பார்வையிலும் படாமல் நகர்ந்தான். அப்போது அங்கு வந்த அந்த டிரைவர்
‘சார்.. ஐயாவுக்கு ஹார்ட் அட்டாக்னு சொல்றாவோ!!’
‘சரிய்யா அதுக்கு என்ன..?’ என்று அவனிடமிருந்து விலகி நடந்தவனை போக விடாமல் ‘சார் உங்க போன் கொஞ்சம் குடுங்களேன்..போலீஸ்க்கு செய்தி சொல்லணும்’
‘எதுக்குயா போலீஸ்க்கு?’
‘ஐயா கமிஷனருங்க..’ இதைக் கேட்டதும் தான் சரியான இடத்திற்குதான் வந்திருக்கிறோம் என்பது போல சிரித்து. தப்பிக்கும் முயற்சிகளை கைவிட்ட அவன் ‘ஏன்யா உங்க சார் சைரன் வச்ச கார்ல வெளிய போக மாட்டாரா?’ என்று கேட்டான்.
‘சார்.. எப்போதும் வீட்டுக்கு போகும் போது மட்டும் இந்த கார்தாங்க. அவரோட வீட்ல ஏதோ நடந்திருக்கு. அதான் போலீஸ்க்கு சொல்லிட்டா அவங்க பாத்துக்குவாங்க’ 
‘என்ன ஆச்சு..?’
‘வீட்டுக்கு போய்கிட்டிருந்த வழியில கார் டயர் பன்க்சர் ஆயிடுச்சுங்க. நான் ஸ்டெப்னிய எடுக்க போன நேரத்துலதான் அந்த போன் வந்துச்சு. ஐயாவோட  பொண்ண கொலை செஞ்சுட்டதா யாரோ சொன்னாங்க.’
‘என்ன சொன்ன.. பொண்ண கொலை செஞ்சுட்டாங்களா?’
‘ஆமாம் சார். அப்போதான் அந்த ஆண்டவன் உங்கள அனுப்பி வச்சான்.’
‘உன் ஆண்டவன் சரியாதான் அனுப்பி வச்சிருக்கான்! விஷயத்த போலீஸ்க்கு சொல்லிடு..நான் உங்க ஐயாகிட்ட கொஞ்சம் பேச வேண்டியிருக்கு’ என்று தன் கைபேசியை டிரைவரிடம் கொடுத்துவிட்டு வேகமாய் உள்ளே சென்றான்.

இதயத்தின் செயல் பாடுகளை கண்காணிக்கும் எலெக்ட்ரோடுகள், இ‌சி‌ஜி மானிட்டர், ஆக்ஸிஜன் சிலிண்டர் என எல்லாம் அவரை சுற்றியிருந்தன.  
புயலடித்து ஓய்ந்தது போல அவர் முகம் வாடியிருந்தது. ஹார்ட் அட்டாக் கொடுத்த சோர்விலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.  
‘என்ன கமிஷனர் சார்.. ஃபர்ஸ்ட் அட்டாக்கா?’
‘தம்பி.. என் பொண்ணு.. என் பொண்ணுக்கு என்ன ஆச்சுன்னு..’ என்று வார்த்தைகள் தடுமாறின.
‘உங்க பொண்ணு சாகல. உயிரோடதான் இருக்காங்க’ அவனது வார்த்தைகள் பாதி மயக்கத்தில் இருந்த அவருக்கு adrenaline போல இருந்தன.
‘உனக்கெப்படி தெரியும்!?’
‘உங்களுக்கு போன் பண்ணது நான்தான்.’
‘அப்படின்னா..!!’
‘நான் அதிகம் பேசுறதில்ல. இந்நேரம் உங்களுக்கே புரிஞ்சிருக்கணும்.’   ‘இதெல்லாம் எதுக்காக..’
‘நீங்க ஏதோ ஒரு புது கேஸ் எடுத்திருக்கீங்களாமே.. அது வேண்டாம்.’
‘யார் சொல்லி…’ என்று தொடங்கியவரை பேசவிடாமல்
‘இதுக்கு மேல உங்க கிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல. நான் வர்றேன்.’
‘என் பொண்ண கொலை பண்ணல..என்ன காப்பாத்தியிருக்க..நல்லவனாத்தான் இருக்க. அப்புறம் ஏன் இந்த வேலை..? விட்டுடு…’ 
‘இந்த ஹாஸ்பிடல் சீன் என்னோட பிளான்லயே இல்ல. என்ன சொன்னீங்க நல்லவனா.. நானா… சார் அவங்களுக்கு தேவ உங்க பயம் எனக்கு தேவ அவங்க பணம். உங்க பயத்துக்கும் அவன் கொடுத்த பணத்துக்கும் இது போதும்னு நெனச்சேன். அதான் லேசா ரத்தம் பாத்துட்டு..விட்டுட்டேன். நான் கெட்டவன் இல்ல. ஆனா கண்டிப்பா நல்லவன் கிடையாது!’ என்று கதவை திறந்து வெளியேறினான். ஒரு பக்கம் மகள் பிழைத்துவிட்டாள் என்ற நிம்மதி மறு பக்கம் இவன் யாரென்ற குழப்பம் அவரை வதைத்தது. அதைப் பற்றி அவர் யோசித்துக் கொண்டிருக்க, வெளியே சென்றவன் மறுபடி உள்ளே வந்தான். இம்முறை அவன் நடையில் நேரமின்மை தெரிந்தது.

‘கமிஷனர்.. நாதன் யாரு? உங்களுக்கு வேண்டியவரா..?’
‘ஆமாம்.. என்னோட டாக்டர். அவர என்னடா செஞ்ச?’
‘ஏன் பதற்றீங்க.. அவர் பத்திரமா வெளியிலதான் இருக்காரு. உங்கள பார்க்கதான் வந்துட்டிருக்காருன்னு நெனைக்கிறேன். வந்ததும் இத அவர்கிட்ட குடுத்திருங்க.’ என்று அவன் எடுத்து வந்த கார் சாவியை மருந்து மாத்திரை வைக்கப் பட்டிருந்த மேஜையின் மீது வைத்தான்.    
‘மறக்காம நான் நன்றி சொன்னேன்னு சொல்லிடுங்க. அப்படியே நீங்களும் நன்றி சொல்லிடுங்க கமிஷனர். உங்கள அவரோட கார்லதான் கூட்டிட்டு வந்தேன்’ என்று சொல்லி அந்த அறையின் பின்புறம் இருந்த மற்றொரு கதவை திறந்தான்.
‘அடுத்த தடவ உன்ன பார்த்தா…!!’
‘இன்னொரு முறை நாம சந்திக்கிறது உங்க முடிவுலதான் இருக்கு. நல்ல முடிவு தான் எடுத்திருப்பீங்கன்னு நெனைக்கிறேன். குட் பை!’