தேவன் வேட்டை-1

17-09-2000

இடம்: பெங்களூர்.

அப்போது அவன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை கல்லூரி, அதன் பின் ஒரு ரெஸ்டாரண்ட்டில் டெலிவரி பாய் வேலை.  கல்லூரியிலும் சரி ரெஸ்டாரண்டிலும் சரி, தேவன் என்றால் எவருக்கும் தெரியாது. ஏனென்றால் அப்போது தேவன் என்ற ஒருவன் பிறக்கவில்லை. சுமாரான படிப்பு, வயதை மீறிய அமைதி, அளவான பேச்சு, சொன்னதை மட்டும் செய்வான், எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒருவன், கிட்ட திட்ட ஒரு ரோபோ! இப்படித்தான் பலரும் அவன் இல்லாத போது அவனை பற்றி பேசுவார்கள்.

பல நாட்கள் அவனுக்கு நள்ளிரவு வரை வேலை இருக்கும். அப்படி ஒரு நள்ளிரவில் அவன் வேலைக்குச் சென்று திரும்பிய போது, வழக்கமாய் கடந்து செல்லும் நால்ரோட்டில் ஏதோ ஒரு பரபரப்பு நிலவியதை உணர்ந்தான். அவன் சற்று சுதாரிப்பதற்குள், அங்கு ஒரு காரின் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. அது இவனை நடுங்கச் செய்தது. மூன்று பேர் வேகமாக அந்த கருப்பு காரில் ஏறிச் செல்வதை கண்டு பயந்து போனான். அவர்கள் கையில் துப்பாக்கி, கருப்பு முகமூடி கொண்டு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நின்ற இடத்திலேயே உறைந்து போனவனுக்கு புத்தி வேலை செய்யவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறியவனுக்கு இன்னுமொரு பேரதிர்ச்சி. அங்கே செங்குறுதியில் ஒரு உடல் லேசாக துடித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் உடல் வியர்த்த்துப் போனான். கையில் வைத்திருந்த பையை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு பதறிப் போய் அவரருகில் சென்றான்.

எதுவும் பேச முடியாமல் வலியில் அவரது உடல் நெளிந்து கொண்டிருக்க, கண்ணீரில் மிதந்து கொண்டிருந்த கடுஞ் சிவப்பு கண்கள் மட்டும் அவனையே பார்த்தது அவனது பயத்தை அதிகரித்தது.
இருந்தாலும் உயிருக்கு உதவும் எண்ணம் அச்சத்தை வென்றது. அந்த வெற்றி அவனை வாய் திறந்து பேச வைத்தது.

‘பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போலாம். நான் போய் வண்டி எதாவது வருதான்னு பாக்குறேன்’  என்று எழுந்தவன் சட்டையை பிடித்து நிறுத்தி

‘வேண்டாம். சொன்னா கேளு! இதுக்கு மேல என்ன வாழ விடமாட்டாங்க!’ வலியில் துடித்தார். அவர் பிடித்ததால் அவனது சட்டையில் ஏற்பட்ட ரத்தக் கரையை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ‘நான் இப்படி சாவேன்னு..’ தன் முதுகு பக்கத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ‘இந்தா.. நீயே என்ன கொன்னுடு!’ என்றார்.

அதுவரை சினிமாவில் மட்டுமே துப்பாக்கியை பார்த்தவன் கண்ணெதிரே அந்த இரும்பு எமனை கண்டதும் மிரண்டு.. தட்டுத் தடுமாறி அவரை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றான்.
‘பயம்.. உன்ன அழிச்சிடும்! இந்தா.. ’ என்று துப்பாக்கியை அவனிடம் நீட்ட அவன் அதை வாங்கி ஆராய்ந்தான்.

‘இதுக்கு மேல எனக்கு நேரம் தேவையில்ல.. உனக்கு நேரமில்ல!’ என்று அவர் கதற, துப்பாக்கியை இரு கைகளில் இறுக்கப் பிடித்து நெற்றியில் வைத்தான்.
அவன் கைகளை பிடித்து துப்பாக்கியை சரியாக வைத்து ‘நன்றி!’ என்று அவர் சொல்லி லேசாக கண்களை மூட, உயிரின் விடுதலைக்கு முன் சில கண்ணீர் துளிகள் விடுதலை பெற்றன.

துப்பாக்கி சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய் சட்டென்று எழுந்து தெருவிளக்குகளை பார்த்து குலைத்தது. இதுதான் அவன் முதல் கொலை. கருணை கொலை.

அங்கு நடந்த எதையும் அவனால் நம்ப முடியவில்லை. ஒரு முறை கடைசியாய் அவரது முகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து அவன் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு விரைந்தான்.

******

யாருக்கும் தெரியாமல் மெதுவாக ஒரு திருடன் போல உள்ளே சென்றான். வேகமாய் கதவடைத்தான். அதிவேகமாய் அவன் அணிந்திருந்த சட்டையை கழட்டி அதனை மொட்டை மாடியில் வைத்து எரித்து அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து, கீழே ஊற்றினான். எவரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்த பின் தன் அறைக்கு வந்து கதவடைத்துக் கொண்டான்.

‘அவர்தான் சொன்னார்.. உனக்கு எங்கடா போச்சு புத்தி!!’ என்று அவனை அவனே திட்டினான். எப்போதும் நம்மை சுற்றி இருக்கும் ஃபேன் ஓடும் சத்தம், தெருமுனையில் நாயின் ஓலம், செருப்பு தேயும் சத்தம் கூட அவனை உறங்க விடாமல் செய்தது. யாரோ  டாய்லெட்டில் தண்ணீர் திறக்கும் சத்தம் கூட இவன் மனதில் நடுக்கத்தை தந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் போர்வைக்குள்ளே பயத்தை எதிர்த்து ஒரு போர் நடத்திப் பார்த்தான். வெல்வது சாத்தியமா.. சத்தியத்தின் துணையின்றி பயத்தை வெல்வதா! இதெல்லாம் அவன் சிருமூளையை எட்ட வாய்ப்பில்லை. சூழ்நிலைகளின் ஆயுள் கைதிதானே அவன். போரில் தொற்ற அசதியில் உறங்கிப் போனான்.

காலை எழுந்ததும் செக்யூரிட்டியை அழைத்து
‘எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.. ரெண்டு தோச வாங்கிட்டு வாங்க.’ என்று காசு கொடுத்தான்.
‘சரெப்பா…’ என்று அவருடைய தமிழில் தெளிவாக கூறி நகர்ந்த அவரை நிறுத்தி ‘மீதி காசுல அப்படியே ஹிண்டு பேப்பரும் வாங்கிட்டு வாங்க! மறந்துடாதீங்க..’ என்று கூறினான்.

தோசை ஒரு கையில் நியூஸ் பேப்பர் ஒரு கையில் எடுத்துக் கொண்டு அவர் வருவதை ஜன்னல் வழியே கண்டு அவசர அவசரமாக கதவை திறந்தான்.
அவரிடமிருந்து அவற்றை வெடுக்கென வாங்கியவன் வேகமாய் கதவடைத்தான். அவன் எதிர்பார்த்தது போல அந்த செய்தி வெளிவரவில்லை. பன்னிரெண்டு மணிக்கு நடந்த ஒரு சம்பவம் மறு நாள் தான் வரும் என்று சிந்திக்கும் அளவிற்கு நிதானம் அவனிடம் இல்லை.

அடுத்த நாள் நியூஸ் பேப்பரில் இரண்டாம் பக்கத்தில், அந்த செய்தி இருந்தது. கொலை செய்யப் பட்டவர் சாந்தா ராம் என்றும் அவர் ஏற்கனவே காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.  கடைசியாய் கொலையாளி கண்டுபிடிக்கப் படவில்லை என்றும் இருந்தது.

அவன் இந்த செய்தியை படித்து முடிக்க…
‘சார்…’ என்று கதவை தட்டினார். இவன் பதிலளிக்காமல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மறுபடி ஒரு முறை கதவை தட்டி ‘உங்கள தேடி.. ரெண்டு ஆளு வந்திருக்கு. சீக்கிரம் வா சார்!’ என்றார் அவர்.
தொடரும்…

Advertisements