மீட் பண்ணலாமா?

‘அடியே! சன்டே அதுவுமா என்ன பண்ற..?’ என்று எழுந்ததும் அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் அவன்.

‘எம்‌.எஸ். அப்ளை பண்ண யூனிவர்சிட்டி லிஸ்ட் பார்த்துட்டு இருக்கேன்’ என்று ரிப்ளை வந்தது அவளிடமிருந்து.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. நாலு வருஷம் இன்ஜினியரிங்கில் முட்டி மோதியபோது, அவன் அம்மா நச்சரித்த போது… என எப்போதும் எம்‌.எஸ். என்ற இரண்டெழுத்து அவனை பாதித்ததில்லை அவள் சொல்லும் வரை.

எப்போதும் சட்டென பதிலனுப்பும் அவன், இம்முறை தயங்கிகினான் திணறினான். அவனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதோ நாளைக்கே அவள் மூட்டை முடிச்சை எடுத்துட்டு ஃப்ளைட் புடிக்கிற பயம் அவனக்கு.

‘மீட் பண்ணலாம்.’ என்றான்

‘என்ன திடீர்னு..?’ என்று கேள்வி எழுப்பினாள் நிஷா.

*ரெண்டு வருஷம்.. நடுவுல வருவேனான்னு தெரில. பார்க்கலாம்! அப்படினு நீ சொல்லிட்டு போனதும், நான் நெனச்சு பார்த்து சந்தோஷப் பட நிறைய கதை வேணும். நீ இங்க எம்பக்கத்துல இல்லாதப்போ உன்ன நான் மிஸ் பண்ணனும். லெட்ஸ் மீட்! இதைத்தான் அவன் சொல்ல விரும்பினான்  என்றாலும், சும்மா டிராமா பண்ணாத என்று பதில் வரக்கூடும் என்பதால்

‘சும்மா கேள்வி கேட்காத நிஷா. லெட்ஸ் மீட். அவ்ளோதான்.’ என்று அனுப்பினான்.
இப்படி பல நேரங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தம் அளவுக்கு யோசித்தாலும் நாலடியார் அளவுக்குத்தான் பதில்கள் எழுதுவோம். எல்லோரும் அப்படித்தான் என்ற நம்பிக்கையில் நான் சிரித்த முக்கத்துடன் எழுதுகிறேன். இல்லை என்றால் இப்போதே சொல்லிவிடுங்கள்!!

‘கண்டிப்பா. சென்னை வருவேன்…

அப்போ மீட் பண்ணலாம்’ என்று இன்ஸ்டால்மெண்ட்டில் பதில் வந்தது அவளிடமிருந்து.

காலண்டரை(Calendar) வேக வேகமாக பார்த்து அடுத்த லாங்க் வீக்கெண்ட் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தேடினான். அதற்கு இன்னும் ரெண்டு வாரம் இருந்தது!!

மெசேஜிங்ல ஒரு பெரிய பிரச்சனையே அவங்க இதுதான் சொல்ல வர்றாங்கன்னு நம்மளா ஒன்னு நெனச்சிப்போம். நாம தப்பு கணக்கு போட விசாலமான இடமிருக்கு மெசேஜிங்ல. இதெல்லாம் தெரிந்திருந்தாலும் வக்கணையாக பேசினாலும், அதைத்தான் நாம் பல நேரங்களில் விரும்புகிறோம்.

இதில் என்ன ரிப்ளை பண்றது என்று யோசித்தே நேரம் ஓடிவிடுகிறது.
*காலையில பெஸ்ஸி, அப்றம் திருச்சி-சென்னை ஹைவேல ஒன்லி காஃபி இந்தியால சுட சுட காஃபி. அப்டியே என்ன பத்தி கொஞ்சம், உன்ன பத்தி நிறைய… பேசணும். ஒரு சந்தோஷமான நாள். இது நடந்தா நல்லா இருக்கும்னு உனக்கே தோனலையா நிஷா? 
வழக்கம் போல ஏதோ வார்த்தைகளை வாடகைக்கு எடுத்தது போல.. சிக்கனப் பிடித்து

‘வரும்போது மறக்காம சொல்லு…’ என்பதை மட்டும் அனுப்பிவைத்தான்.
புளு டிக். ஆனால் பதிலேதும் இல்லை அவளிடமிருந்து.

இது ஒரு பெரிய விஷயமா என்று யோசிப்பவர்களுக்கு சொல்கிறேன், ரொம்ப பெரிய விஷயம்!! ஒரு சில நாட்கள் அவளிடமிருந்து ரிப்ளைக்கு காத்திருந்து ஆஃபிஸ்க்கு லேட்டாக சென்றிருக்கிறான்.

அதன் பின் எப்போது அவள் சிந்தனை உதித்தாலும், ஏர்போர்ட், கடைசி மெசேஜ், வெவ்வேறு டைம் ஸோன்(Time Zone), இவையெல்லாம் தான் அவனை அச்சுறுத்தின.

அதிலும் அவள் செல்வதற்கு முன் ஒரு பத்து நாள் ரொம்பவும் மோசமாகக் கூடும்.
‘என்ன பண்ற?’ என்று அனுப்பினால்
‘தேவையானதெல்லாம் வாங்கிட்டு இருக்கேன். வீட்டுக்கு போனதும் மெசேஜ் பண்றேன்.’ என்றொரு ரிப்ளை வரும்.
அதோடு மறுநாள் காலை எழுந்ததும் ஒரு மெசேஜ் வந்திருக்கும்.
‘சாரி டா. ரொம்ப லேட் ஆயிடுச்சு எல்லாம் முடிஞ்சு வர்ரதுக்கு. அதான் மெசேஜ் பண்ணல…’

‘நான் ஆன்லைன் வரும்போது அவள் இருக்க மாட்டாள். அவள் வரும் நேரங்களில் என்னால் ரிப்ளை செய்ய முடியாது.’ இப்படியே நாட்கள் போகும்.
இது போன்ற யோசனைகளுக்கு மத்தியில் அவனுக்கு ஒரு சிறு குழப்பம்.

‘ஏற்கனவே மூணு வாரம் முன்னாடி பெங்களூருவில் மீட் பண்ற பிளான் போட்டு கடைசி நேரத்துல தள்ளி போட்டாச்சு. அதுக்கு அப்புறம் அவள் ஒரு முறை சென்னை வந்திருந்தபோது ஆஃபிஸ் வேலையால் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. எனக்கு ஏதோ ஸ்ட்ரேஞ்ஜ் ஃபீலிங்க் இருக்கு. இப்படியே இந்த பிளான் போஸ்ட்போன் ஆயிட்டே இருக்குமோன்னு. கடைசி வரைக்கும் நாம சந்திக்கவே இல்லன்னா…’ என்று யோசித்தான். பயம் போன்ற ஏதோ ஒன்று அவனுள்ளே இருப்பிடம் தேடி அலைந்தது.
இப்படியே – என்ற வார்த்தை அவன் நம்பிக்கையின் அஸ்த்திவாரத்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்ததில் விழுந்தத வார்த்தைகள்…

இப்படியே… சந்திக்காத நம் கண்கள்
சந்திக்காமலேயே இருந்துவிட்டால்?
வந்து விழும் குறுஞ்செய்திகளிலேயே
குருநகைத்து காலம் கழித்துவிட்டால்…

திரும்பி வரும்போது பார்ப்போம்!
என்று நீ சொல்ல…
தேக்கி வைத்த ஏக்கங்களை
ஏற்றமிறைக்கும் அவசியம் இருக்காது.

புன்னகைத்து கையசைத்து
வழியனுப்பி வைத்த பின்…
Miss you சொல்லும் தேவை இருக்காது.

இப்படியே…
Last seen பார்த்து
Blue tick எதிர்பார்த்து
typing கண்டு பெருமூச்சு விட்டு
அலைபேசி சினுங்க முகம் மலர்ந்து
சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டு
சவுகரியமாய் நான் ஒரு புறம்
நீ ஒரு புறம்.

இப்படியே…
ஒரு லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்டை போல
எந்த தொடர்பும் இல்லாமல்
என் இருப்பை மட்டும் பதிவு செய்து
எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
என் உலகத்தில் நான் இருந்துவிடுவேன்!

***************
‘நாங்கள் சந்தித்தால்…
ரெண்டு வருஷம் நான் நெனச்சு பார்த்து சந்தோஷ பட நிறைய கதை இருக்கும். நீ நான் சென்னை பெங்களூர் இத தாண்டி நாம பேச நிறைய காரணங்கள் இருக்கும்.
என்ன சொல்றதுன்னு தெரியாம லேசா குழப்பத்துலையே நீ கிளம்புற அப்போ ‘டேக் கேர்’ கூடவே.. ‘அங்க போய் ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு. அங்கயே இருந்திடாம திரும்பி வர்ற வழியபாரு. கைக்காசு போட்டு டிக்கெட் புக் பண்ணமுடியாது. ஒழுங்கா நீயே வந்துசேரு. தேவையில்லாம என்ன குழப்பிடாத.’ இந்த மாதிரியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கும். கண்டிப்பா போகணும்னு தெரிஞ்சும் இங்கேயே இருந்திருக்கலாம்னு சொல்லத் தோணும்.’ இப்போதும் அவன் யோசனைகள் முடிந்தபாடில்லை.

‘வீக்கெண்டுக்கு ரெட் கார்பெட் போட்டு வெயிட் பண்ணிட்டு இருப்பேன். அங்கேயிருந்து நீ எப்போ பேசினாலும் கடைசி மெசேஜ் கடைசி மெசேஜா இருக்காது. அது உனக்கே நல்லா தெரியும். அங்க போனதும் புது ஊற பத்தி புது மனுஷங்க பத்தி பேசிட்டு, கொஞ்ச நாள்ல… பேச எதுவும் இல்லாம போய்டுமா என்ன! அப்றம்.. என்ற வார்த்தையும் என்ன பேசுறதுன்னு தெரியாத சில நொடி மௌனமும் இல்லாத பேச்சு எப்போதும் ஞாபகம் இருக்கும்.’ இப்படியே நீண்ட அவன் சிந்தனை, இரண்டு வருடங்களை கடந்து அவள் வருகை வரை சென்றடைந்தது.

‘கோர்ஸ் முடிஞ்சு நீ வரும்போது ஏர்போர்ட்ல வெயிட் பண்ணிட்டு இருப்பேன். வந்ததும்.. ‘எங்க என்னோட கிஃப்ட்?’ என்று கேட்பேன். அடுத்த நாள் ஈவ்னிங் பெஸ்ஸி. ரெண்டு வருஷ கதை மொத்தமும்… கொஞ்சம் கூட சளிக்காம பேசி தீர்ப்போம். அக்கம் பக்கம் இருக்கவங்க திரும்பி பார்க்குற அளவுக்கு சத்தமா சிரிப்போம். உன்னோட பேச்சுல வெஸ்டர்ன் இன்ஃப்ளூயென்ஸ் வரும்போது நான் கிண்டல் பண்ணுவேன். யாருக்கு தெரியும், தமிழ் சொல்லித் தர்ற நிலமை கூட வரலாம். என்ன நடந்தாலும் பேசுறது மட்டும் குறையாது.’

***************

எப்பவுமே இதுதான் அப்டின்னா எந்த பிரச்சனையும் இல்ல. இதுவா அதுவா அப்படின்னு வரும்போதுதான் நமக்கு பிரச்சனையே! நம்மள யோசிக்க வச்சிடும். அப்படித்தான் அவனும் இவ்விரண்டில் எது சரி எது தவறு, எது நடக்கும் எது நடக்காது என்று பதில் தேடி நேரத்தை வீனடிக்கிறான். .

இப்போ அவனும் நிஷாவும் மீட் பண்ணலாமா வேண்டாமா…?

Advertisements