தனி ஒருவன்

முன் குறிப்பு – இது விமர்சனம் இல்லை இருப்பினும் இதனை சொல்லாமல் இருப்பதில் எனக்கு விருப்பம் இல்லை – தனி ஒருவன் – தேவையில்லாத காட்சிகள் புகுத்தப் படாத, அவசியம் தியேட்டரில் பார்க்க வேண்டிய ரொம்ப நல்ல படம்.
********
இந்தப் பகிர்வு தனி ஒருவன் படம் பார்ப்பதற்கு முன்தினம் எழுதியது இது. இன்று தனி ஒருவன் பார்த்ததும் இதுவே கதையின் நாயகன் மித்ரனின் எண்ணமாய் இருந்தது கண்டு வியந்து மகிழ்ந்து வழக்கம் போல், என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

மனம் நிறைய ஆசை உண்டு
அடைய ஆயிரம் வழிகள் உண்டு
நாளும் பல கனவுகள் கண்டு
ஓர் அடையாளம் தேடி – அதிலும்
அரைகுறையாய் ஓய்ந்து
ஆயுள் அழிக்கிறோம்.

வந்து போனதை நினைத்து
வெறுத்து… அலுத்து
அடுத்து வரப்போவதை
கணித்து… கணித்தது
சரியென நினைத்து
தனித்து… நாமே
உலகென நினைத்து
நடை பயில்கிறோம்.

பட்டுத் திருந்தப் போகும்
பச்சை நெஞ்சத்தை
படாதே.. நான் பாடம் சொல்கிறேன்
என்று பழயன புகுத்தி
புதியவனை அழித்து
ஆபத்தில்லா அரியாசனத்தில்
அமர்த்தும் இவ்வுலகம்.
அமர்ந்ததும் அமரர் என்ற
அடைமொழி ஒட்டிக்கொள்ளும்
என்பதை மறைக்கும் பொய்யுலகம்!

ஆழம் கண்டு அஞ்சுகிறோம்
வேஷம் கொண்டு அலைகிறோம்
ஆள் யாரும் பார்த்திராமல்
அழவும் செய்கிறோம்!

விடமுண்டு நிற்கும் திடமுண்டு
என்று சொல்லி முன் நகர
முதல் வரும் அகரமாய்
அவன்- தனி ஒருவன் ஒளிர
இரவுகளில் மட்டும்
அவன் முகம் காண்பதேன்?

விடியல் காணட்டும்
நம்முள் இருக்கும்
அந்தத் தீயவனை…
பழசுக்கும் பழமைக்கும்
வேறுபாடு உணர்ந்தவனை…

நடுநிலை ஏற்கும்
நிர்பந்தம் அழித்து
தீப்பந்தம் ஏற்றி
பரிசளிப்போம் அவனை
அந்தத் தனி ஒருவனை
இந்தப் பாவப்பட்ட உலகிற்கு!

Advertisements

ஒன்றுமில்லை

அந்தக் கடற்கரையில்
மணல் வீடு கட்டும்
கருப்பு வெள்ளை
புகைப் படத்தில் தான்
எத்தனை ஆனந்தம்!

என் மனதின் ஓரம்
என்றோ கருவுற்ற
சந்தோஷ புன்னகை
இன்று பிறந்தது
அவள் முகம் கண்டு!

அலை எடுத்துச் செல்ல
மணல் கோபுரம்
கட்டியவளுக்கு

நான் எடுத்துச் செல்ல
தருணங்கள் தர
நேரமிருக்கிறதா?

இமை இரண்டிற்கும்
இடையே இடைவெளி
காட்டியவளுக்கு

அவள் நாட்களில்
என் நினைவேந்த
நேரமிருக்கிறதா?

நிலவல்ல அவள்
மேகமல்ல…
என்னோடு என்னருகில்
இருக்கும் அன்பானவள்.

கனவல்ல இது
கற்பனையல்ல…
என் நம்பிக்கை
அழித்தாள் அழகானவள்.

***********

அன்றொரு நாள்…
என்ன வேண்டும் உனக்கு
என்றொரு கேள்வி கேட்டாள்
என் திமிர் வென்றவள்.

உன் பகலோடு
என் நினைவுகள்
உன் இரவோடு
என் கனவுகள்

என்று உண்மை சொன்னால்
என்ன பதில் வரும்
என்று யோசித்து…

அவள் நினைவுகள் இல்லாத
நாட்களில் ஒன்று மில்லை
என்ற போதும்
ஒன்றுமில்லை என்றேன்.

நல்லவன் என்
வார்த்தை சட்டென
பலித்தது!