என் தொலைதூரக் காதல் – 575

நாள் 1: தோழி ஒருத்தி அறிமுகம் செய்து வைத்தாள். நயம் கண்டு வியந்தேன்.

நாள் 2: மனம் தொலைத்தேன். மறுமுறை எப்போதென்று காத்திருந்தேன்.

நாள் 3: எதிர் பார்த்த ‘மறுமுறை’ எளிதில் வந்தது. எளிமையும் தோற்றமும் என்னை அடிமை ஆக்கியது.

நாள் 4: பேரும் ஊரும் தெரிந்து கொண்டேன். நினைவுகளில் நிரந்தர இடம் கொடுத்தேன்.

நாள் 5: லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் வேலைக்காகாது என்று பலர் சொல்லி கேட்டதால் பயம் தொத்திக் கொண்டது.

நாள் 6: காதலில் பயம் வெல்வதுண்டா… இல்லையே! என் தொலைதூரத்துக் காதலின் பெயரை சொல்லிப் பார்த்து அழகை கொண்டாடினேன்.

நாள் 7:
லாங் டிஸ்டன்ஸ் வேண்டாமென்று பலர் சொல்லினுமது,
ராங்கா போகாமல் இருந்தால் போதுமென மனம் சொல்லக் கேட்டு
,  
ஸ்ட்ராங்காக அடி எடுத்தேன் – ஹைக்கூ வசப்பட்டது.

ஜப்பானில் பிறந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கிருக்கும் எனக்கு காதல் பரிசளித்திருக்கும் ஹைக்கூ என் புதிய காதல். எளிதில் என் வசப்படும் என்று நான் நினைத்தது தவறுதான். நினைத்தது நடந்த கதை என் வாழ்வில் இல்லை. அதிலும், நினைத்தது நடந்துவிட்டால் அது காதலில்லையே!  இருந்தும், முயல்கிறேன்.

காதல் என்னுடையது ஆனால், இதிலிருக்கும் ஹைக்கூ விவேகானந்தன் எனும் தமிழ் ஆர்வங்கொண்ட பெங்களூர் பையனுடையது!

Advertisements

முதல் முதலாய்

பார்வை. முத்தம். மெல்லிய மௌனம். தித்திக்கும் சொற்கள். கை சேர்த்த பொழுதுகள். நினைவுகள் தந்த கவிதைகள். இவை அனைத்தும் சுகம் தரும், கனவுகள் தரும். இன்பம் தரும் இன்னும் வேகம் தரும்.

பாடல்களில் கேட்காத வருணனைகளா, கதைகளில் பேசாத ஆச்சரியங்களா… எல்லாம் கேட்டு ரசித்தாகிவிட்டது. இதைத் தாண்டி எதுவும் இருக்குமா என்று கொஞ்சம் திமிராகத்தான் திரிந்தேன். நேற்றுவரை!

கண்டதும், கேட்டதும், படித்ததும், கவிதைகளில் வடித்ததும் – தூசி என்று தட்டி விட்டாள் அவள். மெய்யென்ற வார்த்தைக்கு மெய்யான விளக்கம் தந்தாள். இப்போதும் கூட வார்த்தைகள் சிதறுகின்றன. ஒரு கோர்வையில் அமைய மறுக்கின்றன. அவள் செய்த வேலை இது!

பெண்மை – எழுதும் எண்ணமும் தந்து, எண்ணிலடங்கா சொற்களும் தந்து எண்ணங்களை விழுங்கும் குழப்பமும் தந்துவிடும்!
வழக்கத்திற்கு மாறாக இம்முறை குழப்பத்தின் அளவு ரொம்பவும் அதிகம். காரணம் இது முதல் முறை.

ஆம்! முதல் முறை…

அந்த இரவினிலே தனை மறந்து அவளும்
அவள் அருகினிலே எனை தொலைத்து நானும்
…  

எதிர்பாரா இன்பம். எக்கச்செக்கமாய் எனை வந்து சேர நிஜமாய்… நிதானமாய் ரசித்தேன் அவளையும் அந்த நிமிடங்களையும்.
அழுது உறங்கியிருப்போம், அளவு கடந்த ஆனந்தத்தில்!? நேற்று நான் உறங்கிப்போனேன்.

******

இரவு பதினோரு மணி இருக்கும். அனைவரும் அனேகமாய் உறங்கியிருக்க வேண்டும். அந்தப் பேருந்தில் கண்ணாடி ஜன்னல்கள் காற்றை கிழிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருந்தது. அதுவரை பேசிக் கொண்டிருந்த அவள் நான் ஏதோ சொல்ல,

‘எனக்கு தூக்கம் வருது’ என்று எனக்கு மட்டும் கேட்கும் படி கூறினாள்.

‘தூங்காத!’ என்றேன். ஏன் என்று அவள் கேட்டிருந்தால், உறங்கியிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். இருந்தும் பெண் ஆயிற்றே… கேட்க மாட்டாள். தேவையானபோது மட்டும் அந்த ஆயுதத்தை உபயோகித்து தோற்கடிப்பாள் என்னை.

‘நான் தூங்க போறேன்’ என்றாள். இம்முறை அதில் கொஞ்சம் உண்மை இருந்தது. இருந்தாலும், இருமுறை பன்னிரெண்டில் முட்கள் சந்தித்தால், மறுநாள் கேலண்டரில் தேதி மாறினால் நான் ஒரு புறம் அவள் ஒரு புறம் என்ற நினைப்பு என்னை உறங்கவிடவில்லை.

‘அதுக்கு முன்னாடி ஒரு கதை சொல்றேன்.’ என்று நான் சொல்ல கண்களை மூடிக் கொண்டாள். பதில் எதுவும் இல்லை, இருந்தாலும் சொல்லத் துவங்கினேன். ‘பலரும் கூடியிருந்த ஒரு பெரிய மண்டபத்தில் அவர்கள் முதலில் சந்தித்தார்கள்…’ என்று துவங்கி அன்று நடந்த நிகழ்வுகளை நான் கதை வடிக்க, கேட்டோ கேட்கப் பிடிக்காமலோ உறங்கிப் போனாள் என் அன்பானவள்.

******

அவள் உறங்கியது தெரிந்தும் ஆரம்பித்த கதையை முடிக்க விருப்பமின்றி சொல்லி முடித்தேன். அதில் ஒரு சுதந்திரம் இருந்தது, நான் சொல்ல நினைத்த கதையின் கருமாறாமல், உருமாறாமல் சொல்லி முடித்து அவளை பார்த்தேன்.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தை, ஒரு நீண்ட நெடும் கடற்கரையை பார்ப்பது போல பார்த்தேன். இரண்டையுமே அள்ளி எடுத்து சொந்தம் கொண்டாட ஆசையுண்டு!

இமைகள் தடுக்கவில்லை, அவை அந்த பார்வையின் அவசியத்தை உணர்ந்திருக்க வேண்டும். உறக்கம் அழைக்கவில்லை, அது என் மனதின் எண்ணங்களை அறிந்திருக்க வேண்டும்.
இனி எப்போது பார்ப்பேன் என்று தெரியாது, அதனால் அவளை, என் அருகில் உறங்கிக் கொண்டிருந்த நெருக்கமானவளை, பார்வையால் இதயத்தின் அறைகளில் பத்திரப் படுத்த்தினேன்.

உறக்கம்தான் எத்தனை அழகானது. வஞ்சமில்லை அதில் கள்ளமில்லை. பொறாமை உணர்வு இல்லை. தீராத ஆசை இல்லை. நடிப்பு இல்லை பொய்யான நளினம் இல்லை. பசி தீர்ந்த குழந்தைபோல எவரை பற்றிய கவலையும் இல்லாமல், நம்மை நாமாக வைத்திருக்கும் அந்த உறக்கம்தான் எத்தனை அழகானது!

அவளுக்கு தெரியாமல் அவளை ரசிப்பது முதல் முறை இல்லை ஆனால் உறங்கும் அவள் முகத்தில் நிறைந்திருந்த அமைதியை ரசித்தது அதுவே முதல் முறை.

சந்தித்த முதல் நாளிலேயே கவியெழுத வைத்த அந்த முகத்தை, மூளையின் மடிப்புகளில் பதிவேற்றம் செய்து முடித்ததும் கனவுகளோடு கண்ணுறங்க முடிவு செய்தேன்.

ஒரு சில நிமிடங்கள் ஓடியிருக்கும் உறங்கிவிட்டேனா என்று எனக்கே தெரியவில்லை அப்படி ஒரு நிலை. ஒரு… ஒரு விதமான சந்தேகம். குழப்பம். விருப்பம். எல்லாம் சேர்ந்து என்னை வதைத்தன, கண் திறந்து பார்க்க கூட மனமில்லை. ஆனால் என்ன செய்வது, முடிவை தேடி ஓடுவதுதானே மனித மனம்.

மெதுவாக கண் திறந்து பார்த்தேன், அவள் என் தோள் மீது தலை சாய்த்திருந்தாள்.

சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள்! அதுவரை அப்படி ஒரு ஆனந்தம் என் வாழ்வில் என்னை ஆட்டிப் படைத்ததில்லை. எல்லையில்லா சந்தோஷம் என்னுள் பாய்வதை என்னால் உணர முடிந்தது. நான் கொஞ்சம் உயரமாக இருந்ததால், கஷ்டப்பட்டு தோள் மீது சாய்ந்திருந்தாள். அதனால், மெதுவாக நான் அமர்ந்திருந்த நிலையை அவளுக்கேற்ப மாற்றினேன். எழுந்திடுவாளோ என்று கூட பயந்தேன். நல்ல வேளை அன்று அதிர்ஷ்டம் என் வசம் இருந்தது.

கண்கள் மூடி அந்தப் பொழுதை நான் ரசிக்க, ஆனந்த ராகத்தில் மூளைக்குள்ளே பல அலைகள் எழுந்து விழுந்தன. அது அடங்கும் முன் என் வலது கையை அவள் வசம் எடுத்து இருக்கிப்பிடித்து தனை மறந்து அவள் தூங்க, ஒரு முடிவில்லா நெடுஞ்சாலையில், யான்னியின் தி மெர்மெய்ட் (The Mermaid) கேட்டு மெய்மறந்து பயணிக்கும் பேரானந்தம் கொண்டேன். அந்த வேளையில், கனவா நிஜமா கேள்விகள் எழுப்ப நான் ஒன்றும் முட்டாள் இல்லை!! அணு அணுவாய் நிகழ்காலத்தை ரசிக்கும் ரசிகன் ஆனேன்.

சத்தியமா சொல்றேன்! அப்படி ஒரு நம்பிக்கை அப்படி ஒரு வேகம் அப்படி ஒரு உணர்வு இதுவரை எனை ஆட்கொண்டதில்லை. கனவுகள் எல்லாம் கை கூடி வரும் சந்தோஷம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அது இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த நெருக்கத்தில் ஒரு பிரியம் இருந்தது.
அந்த பிடிப்பில் ஒரு நம்பிக்கை இருந்தது.

புலன்கள் பூரித்தன
புதிதாய் புதிர் போட்டன
எல்லாம் அளவோடு இருக்க
சந்தோஷம் மட்டும் தேவைக்கதிகமாய்!

எதுவும் நிலையில்லை என்ற உண்மையை ஆழமாய் நம்பும் ஒருவன் கூட அந்த ஆனந்தம் நிலைத்திட விரும்புவான். நானும் அப்படித்தானே விரும்பினேன்!

ஸ்வரோவ்ஸ்கி வாட்ச்… லூய் வெட்டன் லெதர் வாலெட்… இவை அனைத்தும் மதிப்பிழந்து போகும் நிஜ ஆனந்தம் அது.

சிரித்தேன். வேறு கண்கள் ஏதாவது விழித்திருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை… அவள் முகத்தை பார்த்துவிட்டு கண்களை மூடி இந்த உணர்வுக்கு பெயர் தேடி அலைந்தேன். முதல் முதலாய் அவள் பரிசளித்த இந்த உணர்வுக்கு பெயர் வைத்து விழா எடுப்பதெதற்கு. பெயரேதுமின்றி எனக்குள் நானே பொத்தி வைத்து ரசிக்கும் எண்ணம் கொண்டு அப்படியே உறங்கிப் போனேன்!