இருபது கிலோமீட்டர் – மூன்று சந்தேகங்கள்!

‘உனக்கு டைம் ஆச்சு… போலாமா?’
அவள் மெல்ல அவன் முகம் பார்த்தாள்… ‘என்ன பாக்குற… எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். எப்போ மழை பெய்யும்னு வேற தெரியல’
‘சரி வா…’ என்று எழுந்து மொபைல், பர்ஸ் எல்லாம் கையில் எடுத்து வீட்டுக்குப் போக தயாரானாள்.

அங்கிருந்து அவள் வீட்டிற்கு ஆட்டோ எடுக்க முடிவு செய்து, ஒரு ஆட்டோவை நிறுத்தினால் வழக்கம் போல மீட்டருக்கு மேல குடு என்று ஆரம்பித்தார். ட்ராஃபிக், மழை, தீபாவளி சீஸன் ரிட்டர்ன் சவாரி இருக்காதுப்பா என்று ஏதேதோ சொல்லி கடைசியாக ஒன்றரை மீட்டர்க்கு வந்து நின்றார். அவன் அவளை பார்த்து, பரவாயில்லையா என்று கேட்க பரவாயில்லை என்று தலையாட்டினாள்.

‘மீட்டர் பாத்துக்கப்பா…’ என்று அவர் சொல்லி முடிக்க, ஆரம்பித்தது இருபது கிலோமீட்டர் பயணம்.

‘ஒன்றரை மீட்டர்னா என்ன…?’ என்று கேட்டாள்.

‘அது தெரியாமலே ஓகே சொல்லிட்டியா நான் கேக்கும்போது…’ என்று அவன் சிரிக்க.
‘சரி.. சரி.. சிரிக்காத. சொல்லு! அப்புறம் அங்க போனதும் என்னால சமாளிக்க முடியாது அவர் எதாது சொன்னா’ என்றாள் அவள்.
‘கடைசியா மீட்டர் எவ்ளோ காமிக்குதோ அது கூட அதோட பாதி சேர்த்து குடுக்கணும். நூத்தம்பது ரூபா வருது அப்டின்னா எழுபத்தஞ்சு ரூபா சேர்த்து குடுக்கணும். நான்தான் வருவேன்ல அப்புறம் என்ன…’
‘நீ எதுக்கு வரணும்… உன் வீடு வந்ததும் நீ இறங்கிடு. நான் தைரியசாலி பொண்ணு’ என்றாள்.
‘தைரியசாலி கூட இன்னும் ஒரு மூணு கிலோமீட்டர் பேசலாம்னு நெனச்சேன்’ என்று அவன் சொல்ல லேசாக சிரித்து
‘அப்புறம் உன் இஷ்டம்’ என்றாள் அவள்.

எதிர் திசையில் வந்த கார்கள் நாணைந்திருப்பதை பார்த்ததும் அவன்
‘ஹே… அந்த கார் பாரு நனஞ்சிருக்கு!’ என்றான்.
‘அதுக்கென்ன…?’
‘அந்த பக்கம் மழை பெய்யுது…’
‘ஆனா அந்த கார் எந்த ஏரியாலேர்ந்து வருதுன்னு தெரியாதே’
‘அடுத்த கார் பக்கத்துல வரும்போது நிறுத்தி கேப்போம்’ என்று சொல்லி சிரித்தான்.
‘வேண்டாமே! நான் புத்திசாலி நானே சொல்றேன்.’ என்றாள்.
‘ஓகே புத்திசாலி! ஒன்றரை மீட்டர்னா என்ன சொல்லு…’ என்று அவன் கேட்க ‘இப்படியெல்லாம் பட்டுன்னு சொல்லிட கூடாதுடா.’ என்று குறும்பாக சிரித்தாள் அவள்.

அப்படியே பேச்சு கார்கள் பக்கம் சென்று அவனுக்கு பிடித்த கார்கள் அவளுக்கு பிடித்த கார்கள் என்று பெரிய வாக்குவாதம் நடந்தது.

அந்த வாக்குவாதத்தின் முடிவில் அதுவரை கேட்காத ஹாரன் சத்தங்களும், இல்லாத ட்ராஃபிக் கவலைகளும் ஆட்டோவிற்குள் நுழைந்தது. ஐந்து நிமிட அ  மை  தி. அமைதி நீள்வதை உணர்ந்த அவன்,
‘எதாவது கதை சொல்லு…’ என்றான் அமைதி உடைக்க.
‘எந்த கதையும் இல்லையே… உனக்கு கதை சொல்லி சொல்லி நான் தூங்கிடுவேன் போல.’ என்று சிரித்தாள். அவளுக்கு பதில் தேடிய நேரத்தில்

முதல் சந்தேகம் –

என்ன இவ்ளோ இடம் இருக்கு ஆட்டோ இவ்வளவு பெருசா! என்ற சந்தேகம் தலையில் ஏறியது. சிரித்தான்!

என்ன சிரிப்பு என்றவள் கேட்பதற்குள் சிரிப்பை அப்றம் வரச்சொல்லி அனுப்பி வைத்தான். சரி பாட்டு கேக்கலாமா என்று கேட்டு இயர்ஃபோன்ஸை எடுத்தாள்.

ஆறு மணி நேரத்திற்கு முன் ‘லேட் ஆகாது வண்டியில தான போறோம்’  என்று அவன் சொல்ல
‘வண்டி வேண்டாம்.’
‘ஏன்?’
‘ஆட்டோல போலாமே’ என்றாள் அவள்.
‘வண்டி இருக்கும் போது…’
‘வண்டில போனா பேசிட்டே போக முடியாது’ என்று சொன்னதை யோசித்து,
‘யாரோ ஆட்டோல போனா நிறைய பேசலாம்னு சொன்னாங்க…’ என்றான்.
‘நான் வண்டில போனா பேசிட்டே போக முடியாதுன்னுதான சொன்னேன்’ என்று சொல்லி சிரித்தாள்.
‘புத்திசாலி பொண்ணு…’ என்று அவன் சொல்லி தலையில் தட்ட
‘இயர்ஃபோனின் ஒரு முனையை அவனிடம் நீட்டினாள்

நொடிகளில்…
நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே.

ஆட்டோ சிறிதானது… நீத்தி மோகன், அனிருத், தாமரையுடன்.

அவ்வப்போது கண்கள் சந்தித்தன. பிடித்த வரிகளை பகிர்ந்தனர்.

பாடல் முடியும் நேரத்தில் ‘எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்… ரொம்ம்ம்‌ம்ப!!’ என்று அவள் சொல்லி முடிக்க…

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது…        

ஆங்கிலத்தில் தமிழெழுதி ரூப் குமார் ரதோட் அழகாக பாடினார். யுவன் ஷங்கர் ராஜா, நா. முத்துகுமார், ரூப் குமார் ரதோட்… ஆட்டோ சிறிதாகவே தொடர்ந்தது.

இரண்டு மூன்று நிமிடங்களில் ஆட்டோ மேலும் சிறிதானது. காரணம்… மழை!

மெதுவாக செல்லும் ஆட்டோ, இசை, மழை, அருகில் அவள் – ஒரு நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் நாவலின் சுவாரசியமான பக்கம் போல அந்த நொடிகள் அமைந்த அந்த நேரத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு சரியான அங்கீகாரங்கள் கொடுக்கப் படாததற்காக வருந்தினான் முட்டாள்!

அந்த நேரத்தில் அவள் பக்கம் பார்வை போக தலைக்கேறியது இரண்டாவது சந்தேகம் – இந்த பர்ஸ், மொபைல் இதெல்லாம் ஏன் பொண்ணுங்க கையிலையே வச்சிருக்காங்க. கண்டுபுடிச்சிருக்கவே கூடாதோ!

‘இன்னும் உன் வீட்டுக்கு போக எவ்ளோ நேரம் ஆகும்?’ என்று முட்டாள் கொஞ்சம் மூளையை பயன்படுத்திக் கேட்க.

‘ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகும்’ என்றாள் அவள்.

‘அதுவரைக்கும் மொபைலையே புடிச்சிட்டு இருக்க போறியா?’ என்று அவன் மெதுவாய் கேட்க, வேகமாய் கடந்து சென்ற கடைத்தெருவை பார்த்தபடி ‘ஆமாம்’ என்றாள்.
மெல்லமாய் அவள் அவன் பக்கம் திரும்ப, அவன் தலையாட்டிய படி சிரித்தான். புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டு சிரித்தாள் புத்திசாலி.
‘இப்போ நான் சொன்னது உனக்கு புரியல…’ என்று சிரித்துக் கொண்டே அவன் கேட்க இல்லையென்று வேகமாய் தலையாட்டினாள் இருபத்தியோரு வயது சிறுமி.
‘மழையில நனஞ்சுட போகுது… உள்ள வச்சிடு. காஸ்ட்லி மொபைல். எனக்கு பார்க்க வருத்தமா இருக்கு.’ என்று அவன் கூற, உதடு குவித்து கண்களில் கள்ளம் சேர்த்து சிரித்தாள் – அவள் மகாநடிகை!
‘இதுவும் உனக்கு புரிஞ்சிருக்காதே…’
‘இல்ல…’ என்று வேகமாய் தலையாட்டி என்னவென்று கேட்டாள் அவனை வென்றவள்.
‘இல்ல… உனக்கு புரியவே வேண்டாம்! மக்கு!’ என்று பல்லில் சொல் வைத்துக்  கடித்துத் துப்பினான்.

இறங்க வேண்டிய இடம் வந்தது…
‘அடியே! தைரியசாலி… ஒழுங்கா ரோடு க்ராஸ் பண்ணிடுவியா?’ என்று கிண்டலாக கேட்ட அவனிடம்
‘அதெல்லாம் க்ராஸ் பண்ணிடுவேன். என்னோட ஏரியா….அடுத்த முறை மீட் பண்ணும் போது எப்படி ரோடு க்ராஸ் பண்ணேன்னு சொல்றேன்’ என்று சொல்லிச் சென்றாள் அவள்.

சந்தோஷமாய் கையசைத்து வீடு திரும்ப ஆட்டோவிற்குள் ஏறி ஆட்டோக்காரரிடம் ‘வரும்போது ஒரு சூப்பர் மார்க்கெட் பார்த்தீங்களே சிக்னல் பக்கத்துல ஆனா போகணும்’ என்று சொல்லி முடிக்கையில் மூன்றாவது சந்தேகம் – அடுத்த முறை எப்போ?

சட்டென்று திரும்பிப் பார்த்தான் அந்த புத்திசாலி பத்திரமாக சாலையை கடந்திருந்தாள். அவன் மொபைல் ஃபோன் சினுங்கியது…

நாளைக்கு சாயங்காலம் டான்ஸ் க்ளாஸ் கேன்ஸல் பண்ணிட்டாங்க 🙂

Advertisements