தள்ளிப் போகாதே

உனக்காக பலரும்
கனவோடு இருக்க
அதிகாலை மலரும்
எதிர் பார்த்துக் கிடக்க
வந்தெனை சேர்வாயென
தினம் தினம் வாடினேன்
திருமுக தரிசன
வரம் தர வேண்டினேன்!
சுமக்காத சுமையாக
சுலபத் தோற்றமேற்று
நீ எனை சாய்த்ததில்
தோற்றுப் போனேனோ?
எனக்கான உறவென
எல்லைகள் தாண்டி
நான் உனை சார்ந்ததில்
வெறுத்துப் போனாயோ?
உன் வருகையில் –
சிதறிய என் உலகம் மாறுமென
யோசிக்காமல் வாயடிக்கிறேன்!
உருகிய உலோகமாய்,
நீயோ சிக்காமல் வாயடைக்கிறாய்!
சொல் பேச்சு
கேட்குமா மெர்குறி
அதை மறந்த – நானோ
தடுமாற்றத் தர்குறி!
கல் வீச்சு
தாங்குமா கண்ணாடி
அதை மறந்த – நானோ
முட்டாள்களின் முன்னோடி!
நீ பிறக்காத குழந்தை
பல பெயர் வைத்து
மனம் மகிழ்கிறேன்
நீ திறக்காத கதவு
சில துயர் இருந்தும்
தினம் பார்த்திருக்கிறேன்.
உன்னிடம் தான்
எத்தனை அழகு
எத்தனை வேகம்
எத்தனை பொலிவு;
இருந்தும் – நான்
வருந்தும் நிலையில்
விட்டுச் செல்கிறாய்!
ஒவ்வொரு முறையும்
ஏதேதோ காரணம் சொல்லி
கைவிட்டுச் செல்கிறாய்!
போதும்! இனியும் ஒடாதே
எந்தன் இளமை தாங்காதே
என்றும் என்னோடு இருந்திடு
என் நாளையே… தள்ளிப் போகாதே!

மலை மீதொரு குளம்

பிம்பங்கள் தாங்கும்
சிறு குளம் ஒன்று
பித்தனாகிப் போன
நான் கண்டேன் இன்று
ஒய்யாரமாய், மலை மீது
ஒரு ஓரமாய்
திவ்யமாய், கருத்துக்களின்
கருவூலமாய்
கலக்கங்கள் இருந்தும்
கண்ணியம் குறையாமல்
விளக்கங்கள் பொருந்தும்
வைராக்கியம் மறையாமல்
இலை முதல் மலை வரை
மலர் முதல் மேகம் வரை
மொத்தமும் அடக்கி
பிள்ளையுறங்கும் தொட்டிலாய்
எல்லையில்லா ஆசைகளை
என்னுள்ளே துவக்கி
ஏந்திய பிம்பங்கள் வழியே
வேண்டிய மெய்யான மெய்களை
உள்ளங்கையில் வைத்தனுப்பி
அது சொன்னது சித்தாந்தமா
வாழ்வின் பாதையில்
பின் அது தான் தோன்றுமா!

வானம் பார்த்து நான்

முதுகில் தேவைகள் சுமந்து
மனதில் நினைவுகள் சுமந்து
எந்தன் அவசியம் உணர்ந்து
வருகிறேன்…photo 1

மலைகளும் மணல் திட்டுகளும்
தலை சாய்க்கும் துணையாக
மலர்களும் மேகங்களும்
அழகிய நினைவாக
காடுகளின் பச்சை வாசனை
ஈடில்லா மருந்தாக
அருவிகளின் ஆத்மார்த்தம்
அமைதி தரும் ஆன்மீகமாக
நரம்புகளை நீவும் ஈரக் காற்று
வலிமை காணும் வழியாக
பறவைகளின் கீச்சொலிகள்
இன்பம் தரும் இசையாக
பாதம் போகும் பாதைகள்
இணையில்லா அனுபவமாக

நடைபயில்கிறேன்!

தினமொரு பயணத்தை திமிருடன் துவங்கிட உறுதியைப் பரிசளிப்பாய். தட்டுத் தடுமாறி தவறுகள் தடுக்கி தடம்மாறித் தவறி விழுவேன், விழட்டும்! என்று விட்டுவிடு. விழுந்ததும் எழுந்திட உன் முத்தங்கள் தந்துவிடு. வார்த்தைகள் இல்லா மொழியில் மெளனமாய் ஒரு பாடம் சொல்லி, பார்வையில் தீயும் பாதையில் தெளிவும் பரிசாய் தந்து பாவி எனை ஏற்றுக்கொள்!

பஸ் ஸ்டாப்புகள் – டியூஷன் செண்டர்கள் – சமூக வலைத்தளங்கள்

With age comes the wisdom. And with wisdom comes the maturity to handle a relationship.
என்பதை மனதில் கொண்டு படிக்கவும்.

காதல் கதைகள் பிறக்கும் இடங்களை பட்டியலிட்டால், முதல் இடம் கோடம்பாக்கத்தின் டீ கடைகளுக்கும் மேன்ஷன்களுக்கும்தான் என்றாலும் அவற்றின் அடிப்படையாகத் திகழும்

– பஸ் ஸ்டாப்புகள்
-டியூஷன் செண்டர்கள்
– சமூக வலைதளங்கள்

மூன்றும் முக்கியமான இடம் பிடிக்கும்.

(அடுத்த மூன்று வரிகள் வேண்டுமென்றால் படிக்கலாம்)

தற்பெருமை – டியூஷன் செண்டர் தவிர மற்ற இரண்டு முக்கியமான இடங்களிலும் எனக்கு கதை பிறந்த அனுபவங்கள் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன். அப்பா சொன்ன பேச்சை கேட்டு அப்பொவே டியூஷன் போயிருக்கலாம்!

கோபத்தை குறைக்க…
ஒன்று
இரண்டு
மூன்று!

பஸ் ஸ்டாப் –
முன்னொரு காலத்தில் பல காதல் கதைகள் இங்கு பிறந்து தவழ்ந்து சில வளர்ந்து படர்ந்தும் இருக்கின்றன.
ஒருவரை பார்த்து. பார்த்து. பார்க்க மட்டும் செய்து. கேலண்டர் மெலிந்து, ஏதேதோ சின்னத் தனமான சேட்டைகள் செய்து கவனமீர்த்து, கோடி முறை யோசித்து தைரியம் சேர்த்து, முதல் வார்த்தை பேசி ஏற்கனவே தெரிந்த பெயரை கேட்டுத் தெரிந்து துவங்கும் ஒரு க்ளீஷேவான பஸ் ஸ்டாப் காதல்.

ட்யூஷன் செண்டர் –
அப்பாக்களுக்காக காத்திருக்கும் நேரத்தில், ‘பொண்ணுங்க பேப்பர்
பசங்களும் பசங்க பேப்பர் பொண்ணுங்களும் திருத்துங்க’ என்று டியூஷன் டீச்சர் சொன்ன நேரத்தில், தேவையில்லாத கிண்டல் கேலிகள் மனதை ஏமாற்றும் நேரத்தில், ஹார்மோன்கள் ஹாரன் அடித்து நம் கவனமீர்த்த நேரத்தில் கொஞ்சமும் யோசிக்காமல் பிறக்கும் முட்டாள் தனம் இந்த டியூஷன் செண்டர் கதைகள்!

டியூஷன் செண்டர் கதைகளையும் கல்லூரி முதல் ஆண்டின் லபாரட்டரிக்களில் பிறக்கும் கதைகளையும் கம்பல்ஷனால் பிறந்தவை எனலாம். நாட்பட என்னவொரு காவியமாய் ஆனாலும் ஆரம்பத்தில் அவை அவசரத்தின் அடையாளங்கள் என்பதே உண்மை.

சமூக வலைத்தளங்கள் –
பலரும் சொல்லிக் கேட்டிருக்கிருப்போம் ‘வெறும் ஃபோட்டோ பார்த்து வெற்று எதிர்பார்ப்புகளுடன் எப்படி! ச்ச ச்சே!! டெக்னாலஜி கெடுத்து வச்சிருக்கு’ என்று.
என்னைக் கேட்டால் பஸ் ஸ்டாப், டியூஷன் செண்டர்களை விட தெளிவான கதைகள் பிறக்குமிடம் சமூக வலைத்தளங்கள்.
இங்கு ஒருவரைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு, ரிக்டர் ஸ்கேலில் ஒரு ஆபத்தில்லா அளவிலான அதிர்வுகளை ரசிக்கலாம்.

ஒன்று மட்டும் கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும் – எதிர்பார்ப்புகள் எல்லை மீறும் ஆபத்து இங்கு எக்கச்செக்கம். அதனால் ஏமாற்றத்திற்கான வாய்ப்புகளும் ஏகபோகம்!
முட்டாள்தனங்களும், குழப்பங்களும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் இருப்பதுதான் அதனால் இவற்றுள் புதுக்களமான இந்த சமூக வலைத்தளங்களை மொத்தமாய் வெறுத்து ஒதுக்குவது நியாமாகாது.

இந்த விஷயத்தை பொருத்தவரை சமூக வலைத்தளங்களை ஆர்வக்கோளாருகளின் கூடாரமாக பலரும் குற்றம் சாட்டினாலும்… ஒரு லைக், ஒரு ஷேர், ஒரு அப்வோட், ஒரு கமெண்ட், ஒரு மெஸ்ஸேஜ், ஒரு ஸ்டேடஸ், ஒரு DP இவையெதுவும் பாதிக்காத ஒரு மனம் இருந்தால் சமூக வலைத்தளங்களில் அழகான கதைகள் ஆயிரம்!

அரசியல் அறியாமை – முட்TALLதனம்

The worst illiterate is the political illiterate – Bertolt Brecht

‘யெப்பா! சொல்லிட்டாருப்பா!’

‘யாருடா அவன்!?’

‘பேனாவில மை இருக்குன்னு நெனச்சதெல்லாம் எழுதி பேசுறது!’

‘அவங்க ஊர் அரசியல வச்சு சொல்லிருக்கார். நம்ம ஊர் அரசியலே அறிவில்லாதவங்களுக்குத்தான்!’

போன்ற இவரை பற்றிய அவதூறுகள், ஆராய்ச்சிகள் அப்புறம், இப்போதைக்கு நாம் அரசியல் அறியாமை (Political Illiteracy) பற்றி பேசுவோம்.

கடந்த மாதம் ட்ரெண்ட் ஆன நாசா மீம்களால் ஒரே ஒரு நல்ல விஷயம்தான் என் கண்ணில் பட்டது.

நம்மில் பல இளைஞர்கள் பார்த்த ஒரே அரசியல் சார்ந்த நேர்காணல் திரு. நாஞ்சில் சம்பத் அவர்களுடைய கடந்த சில நேர்காணல்கள்தான். அதைத் தவிர வெறு எந்த நன்மையும் அந்த மீம்களில் இல்லை.

‘எப்படியானால் என்ன! இதுவொரு நல்ல துவக்கமாக இருக்கட்டும்’ என்று என் பக்கத்து வீட்டு அரசியல் அறிஞர் சொல்லி சந்தோஷப்பட்டார். ஆனால், அவை வெறும் பொழுதுபோக்காக, கேளிக்கை பகிர்வுகளாகவே அழிந்துவிட்டது தெரிந்தால் அவருடமிருந்து எனக்கு பதினைந்து நிமிட வருத்தவுரை நிச்சயம்.

ஒரு அரசியல்வாதியின் நேர்காணலை, பத்திரிகையாளர் சந்திப்பை கிண்டலடிக்கும் நோக்கத்திலும் இழிவு படுத்தும் நோக்கத்திலும் மட்டுமே பார்ப்பதற்கு நாம் பொறுப்பில்லா எதிர்கட்சிகளல்ல!

அப்படிச் செய்வதன் மூலம் நாம் எந்த விதத்திலும் பயனில்லாத சினிமா விமர்சகர்கள் போல ஆகிறோம்.

– விமர்சகர்கள் சினிமாவில் எந்த ஒரு நல்ல மாற்றமும் கொண்டு வரவில்லை, கொண்டு வரவும் முடியாது!

– அவர்களின் வேலை பணமாக்கப்படுகிறது, பேனா பயனிழக்கிறது. – அவர்களால் நேரமழிதல் தவிற எந்தப் புன்னியமும் இல்லை.
புன்னியமில்லாத பேனாக்கள் சினிமாவை போன்ற கலைத் துறையில் இருக்கலாம், தொழில்துறையில் இருக்கலாம். ஆனால் அரசியல், துறையல்ல நமை காக்கும் துனை.

கட்சியின் கொள்கையறியாமல் (பல கட்சிகள் கொள்கை பின்பற்றாமல் கொடிபறக்க விடுவது ஒரு புறம் இருக்கட்டும்), தற்போதைய அரசியல் சூழல் அறியாமல் வெறுமனே கலாய்ப்பதன் மூலம் நாம் உயர்வது வெறும் முட்TALLதனத்தில்தான்!

இதனை உணர்ந்து, அரசியல் அறியாமை நீக்கி நாலைந்து செய்தியறிந்து அரசியலை கொஞ்சம் உற்று நோக்குவோம். நீ என்னத்த பெருசா கிழிச்சுட்ட! என்று நீங்கள் கொந்தளிக்கும் முன்னால் சொல்லிவிடுகிறேன். இதுவரை என்னோடு இருந்த அரசியல் அறியாமையை நான் நீக்க முயல்கிறேன். நீங்களும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.

சிறந்த வழிகள் தெரிந்தால் பகிரவும்!

நன்றியுடன்

நான்