சமுத்திரக்கனி என்னும் இளையராஜா ரசிகருக்கு ஒரு கடிதம்!

வணக்கம்!

அப்பா – ஒரு இயக்குனராக உங்களது அடுத்த படம். ‘என்னடா ஒரு இயக்குனர முழு நேர நடிகனாக்கிட்டாங்களே’ என்று கொஞ்சம் வருந்திய பலருக்கும் ‘யெப்பா! நல்ல வேளை அவருக்குள்ள இன்னும் ஒரு இயக்குனர் இருக்கார்’ என்று நினைவூட்டியிருக்கும் படம்.

அப்பா படத்தின் ட்ரெய்லரின் பதிமூன்றாவது நொடியிலேயே வழக்கம் போல நீங்கள் சிறப்பான அட்வைஸ்களை வச்சு செஞ்சுட்டீங்க என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது.

இருபத்தி ஐந்தாவது நொடிவரை ரொம்ப ஸீரியஸாக நகரும் ட் ரெய்லரில் இருபத்தி ஆறாவது நொடியில் ஹியூமர்… தேவையில்லாத ஹியூமர் ஒன்று வைத்திருப்பதற்கான காரணம் என்ன? இதனை பார்த்த அந்த நொடியிலேயே நான் சிரித்துவிட்டதால் ஹியூமர் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் பெயரோடு ‘இசையின் அப்பா’ என்ற அடைமொழியை சேர்த்திருப்பது எந்த அளவு சரியானது என்று தெரியவில்லை.

எப்படி, காலப்போக்கில் ஒரு கலையை காத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் பொறுப்பை ஏற்ற மற்றுமொரு நல்ல இசைக் கலைஞரை இசையின் அப்பா என்று சொல்லிவிட முடியும்.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து விட்டார் என்பதாலா?

பல முறை தேசிய விருது வழங்கப்பட்டதாலா?

பலரது சந்தோஷத்தை இசையால் ஆட்கொண்டவர் என்பதாலா!?

இவரது பாடல்களுக்கு தனி நிகழ்ச்சி இல்லாத ரேடியோ ஸ்டேஷன்கள் இல்லை என்பதாலா?

என்னைக் கேட்டால், தன் ஹீரோவின் கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்வது போல நீங்கள் இப்படி ஒரு ஆடை மொழியை அவரது பெயரோடு சேர்த்திருக்கிறீர்கள். பாலாபிஷேகம் அளவிற்கு மோசமில்லை என்றாலும், இந்த அடைமொழி அன்பளிப்பும் கொஞ்சம் மோசம்தான்!

சூப்பர் ஸ்டார் முதல் சின்ன தளபதி வரை இங்குண்டு என்ற மேம்போக்கான வாதம் உங்களிடமிருந்து வராது என்ற நம்பிக்கையோடு சொல்கிறேன்.

உதாரணத்திற்கு…

ஃபாதர் ஆஃப் இந்தியன் சினிமா – தாதா சாஹேப் பால்கே – முதல் முழுநீளத் திரைப்படம் எடுத்தவர்.

ஃபாதர் ஆஃப் கம்ப்யூட்டிங் – சார்லஸ் பாபேஜ் – அனலிடிக்கல் எஞ்ஜினை கண்டுபிடித்தவர்.

எதனால்!? எதனால் இசையின் அப்பா என்று சொல்லியிருக்கிறீர்கள்? ஆங்கிலத்தில் சொன்னால் it doesn’t make any sense.

நீங்கள் சொல்லலாம் ‘உனக்கு புரியாது. சின்ன வயசுலேயிருந்து அவர் இசை என்ன நகர்த்தியிருக்கு. அதோட ஆழம் புரியல உனக்கு. நீ இன்னும் வளரணும்!’

ரொம்ப சரி. நான் இன்னும் வளரணும்.
ஆனால் எனக்குத் தெரிந்தவரை இளையராஜாவை இசையின் அப்பா என்று சொல்ல ஒரு நல்ல அல்லது நியாயமான காரணம் கூட இல்லை. எவ்வளவோ இசையமைப்பாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள், சாதித்திருக்கிறார்கள் அவர்களுள் ஒருவர்… ஒரு முக்கியமானவர் இளையராஜா அவர்கள்.

தென்றல் வந்து தீண்டும் போது கேட்டு கண் கலங்கி நின்றிருக்கிறேன். சங்கத்தில் பாடாத கவிதை கேட்டு என் ப்ளேலிஸ்டை இளையராஜாவால் நிரப்பியிருக்கிறேன்.
திருவாசகம் கேட்டு கண்ணா பிண்ணா என்று பாராட்டிப் பேசியிருக்கிறேன்.
அவரது இசையின் சின்ன சின்ன அழகையெல்லாம் கண்டெடுத்து ரசித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், எந்த வகையிலும் இசையின் அப்பா என்ற இடத்தை அவருக்கு தருவது எந்த வகையிலும் எற்புடையதல்ல.

இப்படிக்கு,

இசைக்கு இனிஷியல் போட்டது பிடிக்காத தமிழ் சினிமா ரசிகன்

பின் குறிப்பு –

‘என் படம் நான் என்ன வேணும்னாலும் பெயர் வைப்பேன் அவருக்கு’ என்பது உங்கள் பதிலாக இருந்தால் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்!

Advertisements

தெறி என்னும் சமூக நீதிப்படமும் ஷங்கரின் கோபமும்!

அட்லீ, ஷங்கரிடமிருந்து என்னென்ன கற்றுக் கொண்டார் என்பது தெறி படம் மூலம் தெள்ளத் தெளிவாக தெரிகிறது. ஜித்து ஜில்லாடி பாடல் படமாக்கப் பட்டிருக்கும் விதம், அதைத் தொடர்ந்து வந்த மனசில் நிக்காத அந்த மோசமான பாடலின் ஆரம்பத்தில் வரும் லில்லிபுட் விஜய் இதையெல்லாம் அனைவரும் சொல்கிறார்கள்.

அப்படியே இரண்டாம் பாதியில் திணிக்கப்பட்டிருந்த அனாவசியமான பிரஸ், மீடியா, மக்கள் கருத்துக் கோர்வை போன்றவை ஷங்கரின் தாக்கமாகவே எனக்குத் தோன்றியது. இதனை என்னுடைய prejudice என்று கூட எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு ஒன்று செய்திருக்கிறார் அட்லீ.

விஜய் மாஸ் ஹீரோதான், முதல் பாடலில் (முடிந்தால் பாடலுக்கு முன்னும் பின்னும் கூட) கருத்து சொல்வதோ, நண்மைகள் செய்து ஒரு வயசான பாட்டி ‘நீ மவ ராசனா இருப்ப!’ என்று விரல்களால் கணங்களை வருடும் பொழுது அவருக்கே உரித்தான பாணியில் சின்னதாய் சிரிப்பதோ வழக்கம். ஆனால், தெறி அந்த வகையில் கொஞ்சம் மாறுபட்ட படம். முக்கால் வாசி படத்தில் கருத்துதான்!

அனைவரும் இது ஒரு கமர்ஷியல் படம் என்கிறார்கள் ஆனால், நான் தெறியை ஒரு சமூக நீதித் திரைப்படமாகவே பார்க்கிறேன்.

முதல் பாதியில் –

  • சிறுவர்களின் படிப்பை பாதிக்கும் ஒரு தடாலடி கும்பலை அரசுப் பள்ளியிலிருந்து விரட்டுவது.
  • குழந்தைகளை சித்திரவதை செய்து பிச்சை எடுக்க வைத்து பணம் சம்பாதிக்கும் கும்பலை பிரித்தெடுப்பது. பின் அவர்களுக்கு நல்ல எதிர்காலம் தர முனைவது.
  • ஒரு இளம் பெண்ணை பாலியல் கொடுமை செய்து கொலை செய்தவரை கண்டுபிடித்து தண்டிப்பது.

மறு பாதியில் –

இரண்டாம் பாதியில் என்னதான் சொந்தப் பகை இருந்தாலும் வில்லன்களை கொல்லும் ஒவ்வொரு காட்சியிலும் ஒரு மக்கள் பிரச்சனை இருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

  • குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் நேர்ந்த விபத்தில் கற்பிணி ஒருவர் பாதிக்கப்பட்டதும், அதை லஞ்சம் வாங்கிக் கொண்டு இன்ஸ்பெக்டர் ஒருவர் மறைக்க முயல்வதும் காண்பித்த பிறகு ஒருவர் பழிவாங்கப் படுகிறார்.
  • கட்டிடத் தொழிலாளர்களின் உயிரிழப்பும், அதை பொருட்படுத்தாத அலட்சியமும் காட்சிப் படுத்தப் பட்ட பின் இன்னொருவர் பழிவாங்கப் படுகிறார்.
  • கடைசியாய், இப்படிப்பட்ட தவறுகள் நிகழ்வதற்கு அவர்களை ஒழுங்காக வளர்க்காத அப்பாக்கள்தான் காரணம் அதற்காகவே பழிவாங்குவதாகச் சொல்லி வேட்டையை முடிக்கிறார்.

இப்படி முக்கால்வாசிப் படம் கருத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது! இப்படத்தை ஷங்கர் பார்த்து விட்டாரா இல்லையா என்றெனக்குத் தெரியவில்லை ஆனால் பார்த்ததும்…

‘ஒரு படத்துல ஒரு கருத்து வச்சு படமெடுத்தா போதும். அதுதான் உசிதம். இப்படி அஞ்சு… ஆறு படத்துக்கான கதைய ஒரே படத்துல வச்சு வேஸ்ட் பண்ணிடியே!’ என்று அட்லீயிடம் சொல்லவோ, சொல்லாமல் சொல்லவோ வாய்ப்புகள் அதிகம்! 😀 😀

அடுத்த மாஸ் படத்துலையாவது Atlee, atleast கொஞ்சம் கருத்துக் குவியலை குறைப்பார் என்னும் எதிர்பார்ப்புடன்  ஒரு ‘கமர்ஷியல்’ ரசிகன்.

தோசை

காரைக்காலிலிருந்து சென்னைக்கு இரவு பத்து மணி பஸ்ஸுக்கு இரண்டு டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்ததும்

‘பஸ் ஏறுவதற்கு முன்னாடியே சாப்பிடணும். நடுவுல நிறுத்துற இடத்துலையெல்லாம் கால் வைக்கவே முடியாது. கேவலமா இருக்கும்!’ என்று நான் சொன்ன காரணத்தால்

‘கவல படாத கண்டிப்பா சாப்பிட வச்சுதான் கூட்டிடுப் போவேன். நடுவுல பாலா ஏதாவது குதர்க்கம் பண்ணா நான் பாத்துக்குறேன்!’ என்று சத்தியம் செய்யாத குறையாய் கூறினார் பாலாவையும் என்னையும் வழி அனுப்ப வந்த ராஜா.

கொடுத்த வாக்கை காப்பாற்றி பஸ் ஸ்டாண்டுக்குப் பக்கத்தில் இருந்த ஒரு உயர்தர சைவ உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். உள்ளே சென்று ஃபேனுக்கு நேர் அடியில் இருக்குன் டேபிளில் இடம் பிடித்ததும் ‘என்ன வேணும் சார்?’ என்று கேட்ட பரபரப்பான சர்வரிடம்

‘ரெண்டு நைஸ் தோசை, ஒரு காப்பி.’ என்றேன். முதலில் ராஜாவுக்கு காப்பி வந்துவிட நானும் பாலாவும் தோசைகாக இலையில் தண்ணீர் தெளித்து காத்திருந்தோம். தோசை எங்கள் இலைக்கு வந்து சேர்ந்ததும் ‘டேய்! இந்த தோசையிருக்கே என்ன எப்பவுமே அப்டியே ஆச்சரியப்படுத்தும். இத நான் வந்து ஒரு சாப்பாடா மட்டும் பாக்றதேயில்ல. இது ஒரு செமயான படைப்பு. படைப்பு கண்டுபிடிப்பு எப்படி வேணும்னாலும் சொல்லலாம்.’ என்றார் பாலா.

இதை கேட்ட நாங்கள் விழாத குறையாய் சிரிக்க, மொத்த ஹோட்டலின் பார்வையும் எங்கள் பக்கம் திரும்பியது. ரொம்பவும் முயன்று சிரிப்பை அடக்கி ‘தேங்கா சட்னி’ என்று நான் சர்வரிடம் கை காமிக்க சீனியர் தொடர்ந்தார்

‘என்னடா சிரிக்குறீங்க! நான் ரொம்ப சீரியஸா சொல்றேன்.’

‘ஆமாம். எனக்கு பொங்கல் ரொம்ப சிறப்பான ஒரு சாப்பாடா தெரியும் அந்த மாதிரி உங்களுக்கு தோசை’

‘இல்லடா அது மட்டுமில்ல. இப்போ இந்த தோசைய பாரேன் இதுல நீ என்னத்த சேர்த்தாலும், வெங்காயம், இட்லி பொடி, தக்காளி இப்டி எது சேர்த்தாலும் அது அப்டியே அந்த தோசையாவே மாறிடுது.’

‘So, you are trying to say that it accepts whatever that comes in its path. எல்லாத்தையும் தனக்குள்ள அடக்கிட்டு இருந்தாலும் ஐடண்டிட்டிய லூஸ் பண்றதில்ல.’

‘Exactly! அதுமட்டுமில்லாம பல பரிமானங்கள்ல அது நமக்கு நிறைய விஷயங்கள சொல்லித்தருது.’

 

‘இப்படியே பேசிட்டு இருந்தா நடந்துதான் போகணும் சென்னைக்கு. சீக்கிரம் சாப்பிட்டு முடிங்கடா!’ என்று ராஜா கோபித்ததால் அத்தோடு தோசைக்கான விளக்கவுரையை முடித்ததோடு இலையில் மீதமிருந்த தோசையையும் முடித்தோம்.

பின் இரண்டு மணி நேரம் கழித்து பேருந்தில் முதல் மூன்று வரிசைகளுக்கு மட்டும் கேட்கும் சத்ததில் ஏதோ ஒரு இளையராஜா பாடல் ஓடிக்கொண்டிருந்த நேரத்தில், பலரும் ஜன்னல் கண்ணாடிகளை இறக்கிவிட்டு உறங்க முயன்ற நேரத்தில் நான் ரொம்பவும் ஆர்வமாக

‘சீனியர்! இதுதான் சொன்னேன் பாருங்க. ரெண்டு வேற வேற எக்ஸ்ட்றீம்ல யோசிக்றேன். பணக்காரனா இருகணும் பணம் முக்கியம் இல்ல, சந்தோஷமா இருக்கணும் ஆனா இருக்குற சந்தோஷம்லாம் நிஜமான சந்தோஷமான்னு தெரியல. எவ்ளோ காம்ப்ளெக்ஸிடி பாருங்க!’ என்று சொல்லி அவரை பார்த்தபோது

‘எல்லாத்தையும் யோசிக்கிற மூளை… யெப்பா! எப்படிடா!! நெனச்சாலே பிரமிப்பா இருக்கு.’ சில நொடி அமைதிக்குப் பின் ‘இந்த மூளையும் தோசை மாதிரியே ஒரு அற்புதம்தான்ல!??’ அவர் இதை சொல்லி முடிக்க நாங்கள் பலரது சாபத்துக்கு ஆளானோம். சிரிக்கத் துவங்கினோம்.

‘பக்கத்துல இருக்க பையன் தூங்கிட்டானா?’
‘அப்படித்தான் நெனைக்குறேன்’ என்று சொல்லி பாலா சந்தேகப் பார்வை பார்க்க.
‘முழிச்சிருந்தா நாளைக்கு பாக்குறவங்க எல்லார்கிட்டயும் நம்ம பத்தி ரொம்ப பெருமையா பேசிருப்பான்!’ என்று சொல்லி நாங்கள் எங்கள் வழக்கமான ‘யார் எப்படிப் பார்த்தா என்ன’ சிரிப்பை பொழிய முன் சீட்டில் இருந்த ஒரு பாவப்பட்ட uncle திரும்பி முரைத்ததோடு முடிந்தது தோசைச் சித்தாந்தம்!