ஆரம்பம் – சிறுகதை

‘ஏன் எப்பவும் பத்து ரூபா டிக்கெட்ல படத்துக்கு கூட்டிட்டு போற… காசா இல்ல நம்மகிட்ட’

‘ஒரு உழைப்ப… ஒரு படைப்ப பக்கத்துல வச்சு ரசிக்குறேன்னு வச்சுக்கோ!’

‘நான் உழைப்பா படைப்பா?’

‘உழைப்புல … படைப்புல ப ‘

‘ஆரம்பமா! சரி… அப்போ முடிவு?’

‘நீ கேள்வி கேட்க கத்துகிட்ட அளவுக்கு காதலிக்க கத்துக்கல’

‘ஒரு எழுத்தாளன காதலிச்சா அப்படித்தான்’

‘இப்போ நான் புரியலன்னு சொன்னா விளக்கம் கிடைக்குமா சண்டை நடக்குமா?’

‘விளக்கம் என்னன்னு தெரிஞ்சே புரியலன்னு சொன்னா என்ன பண்றது?’

‘நான் எழுத்தாளந்தான… நடிகன் இல்லையே!?’

‘நீ எழுதுற கதையெல்லாம் ஒரு வாசகியா… ரசிகையா படிச்சா காதல் வரலாம். இல்லன்னா கேள்விதான் நிறைய வரும்.’

‘வாசகியா… ரசிகையாவே இருந்திருக்கலாமே?’

‘வாசகியா இருக்க தேவையில்ல. ரசிகையா இருக்க தோனல’

‘என்னோட எழுத்துக்கு அவ்வளவுதான்னு சொல்றியா?’

‘நான் அப்படி எதுவும் சொல்லலையே’

‘கொஞ்சம் நேரா பார்த்தே நடந்துவா. எல்லாரும் நம்மலையே பாக்குறாங்க’

‘என்ன எழுத்தாளன நடிகனாக்கும் முயற்சியா இது?’

‘அப்பப்போ நடிச்சா நல்லதுதான்’

‘நடிகன உனக்கு புடிச்சு போச்சுன்னா.. எழுத்தாளன் பாவமில்ல?’

‘ஓ! எழுத்துக்குதான் உண்டுன்னு நெனச்சேன். எழுத்தாளனுக்கும் உண்டா உணர்ச்சியெல்லாம்?’

‘இல்லாமலா…! இப்போ இது என்ன கேள்வி பதில் நேரமா?’

‘என்ன விட நீதான் நிறைய கேள்வி கேட்டிருக்க. உனக்கு தோத்துப் போறதுன்னா பிடிக்குமா என்ன?’

‘மறுபடி ஆரம்பமா?’

‘மறுபடி!? நான் எப்பவுமே ஆரம்பம்னு நெனச்சேன்!’

‘நீ எழுத ஆரம்பிக்கலாம் எனக்கு பதிலா. இப்போ படம் ஆரம்பமாக போகுது வாசகி!’

‘சிரிச்சுட்டே உன் கைய புடிச்சுட்டு வரணுமா?’

‘வாசிகியேன்னு கூப்பிடுப் போதெல்லாம் வா சகியேன்னு கேட்கும்னு நெனச்சேன்.’

‘கேட்டுச்சு.’

‘அப்புறமென்ன…!’

‘வேற புது வசனம் எதாவது எதிர்பார்த்தேன்.’

‘அடியே! டைட்டில் கார்ட்ல எம்பேரு வரும். பார்க்கணுமா வேண்டாமா?’

‘ஹப்பா! இத சொல்ல எவ்ளவு நேரம்! வாய திறந்து சொன்னா என்ன கொறஞ்சு போய்டுவீங்களா மை டியரஸ்ட் வசனகர்த்தா அவர்களே. முதல் படத்துக்கே இவ்ளோ அழுத்தம் கூடாது!
வாங்க… போவோம்’

என்று சொல்லி ஆரம்பம் அவனை பெருமிதமாய் புன்னகைத்துக் கைபிடித்து திரையரங்கிற்குள் அழைத்துச் சென்றது.

Advertisements