எதிர்த்து நின்ற எழுத்தாளன் 

Wrote this for the open mic session ‘Crazy Little Things’ organized by Mocking Birds and Spot Note Music. Thank you for a wonderful evening! 

நீளா பாதையென்று 

நீதானே சொன்னது…

பேனா எடுக்காதே என்று

நீதானே சொன்னது…
எத்திசையில் மீட்டெடுப்பேன்

என் மூளை மடிப்பேறி வந்தும்

நான் திருப்பியனுப்பிய

வார்த்தைகளை! 
எப்படி உயிர்த்தெடுப்பேன் 

என் சிந்தனை சிறையில்

தற்கொலை செய்து கொண்ட 

கதைகளை! 
எவ்வழி தாள் சேர்ப்பேன் 

என் கற்பனைக் காட்டில்

காணாமல் போய்விட்ட

கவிதைகளை! 
அவன் ஏசுவான்

இவன் பேசுவான்

என்று…

ஊமையாக்கினாய்! 
குறைகள் சுட்டுவான்

தலையில் குட்டுவான் 

என்று…

பாதை மாற்றினாய்!
மூளைக்குள் பல 

முட்டுக் கட்டைகளிட்டு

சூளைக்குள் ஒரு

செங்கல் போல் சுட்டு

என் பேனாவை பொசுக்கப் பார்த்தாய்!
இன்று நான்

ஒன்று எழுதுகிறேன்…
என்னுள் இருக்கும் 

கோழையே… 

உண்மை மேன்மை சேர்த்து

உதவும் எண்ணம் வைத்து

என் தன்மை உனக்குணர்த்தும்…

அடிமை சாசனம்

எழுதுகிறேன்! 
கேள்!! 

அடுத்தவன் வார்த்தை கேட்டு

பேனா எடுத்தவன் 

வைத்த கதை 

என்னோடு போகட்டும்.

வெறும் கதையாய்!
தடுத்தவன் எவனுமிங்கு 

படுத்தி எடுத்திடும் 

எண்ணம் கொண்டால்

என் பெயர் நிற்கட்டும்.

பெரும் பகையாய்! 

@@@@@@@

Dedicated to all those beautiful writers out there, who with the help of language, trying to bring about a change in many ways! 

எழுத்தே எண்ணம் 

வசிக்கும் ப்ரபஞ்சம்

அதை மதித்தே

இங்கு வசிக்கும் எதுவும்! 

If you can’t pen down something… Then pencil down 😀 

But Don’t let anything to stop you from writing! Happy writing! 

Advertisements

என் தாடியில் நரை முடி

சுவாசத்திற்கான அடையாளமாய்

முதல் அழுகை –

அதில் தொடங்கி

பென்ஸில் பாக்ஸ், புது சட்டை

வழியே  தொடர்ந்து,

டிவி ரிமோட், ஃபெயில் மார்க்

வழியே படர்ந்து,

காதல், கோபம்

வழியே பறந்து,

வேகம், காமம்

வழியே விரைந்து,

தயக்கம், தடைகள்

வழியே தடுமாறி,

தேடல், தெளிவின்மை,

வழியே உடைந்து,

கனவுகள், குழப்பங்கள்

வழியே ஊர்ந்து,

ஆசை, ஆனந்தம்

வழியே நடந்து,

வலிகள், வேதனைகள்

வழியே வளைந்து,

இன்று –

உண்மை, உன்னதம்

தேடி விழைவதின்,

ஊக்கமாய்…

காரணம், காரியம்

தேடி நுழைவதின்,

சான்றாய்…

என் கண்ணாடி வழியே

காலம் கையெழுத்திட்ட

எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிஃபிகேட்!

அதிவேகன் – சிறுகதை

**இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்!  கவனமாக படிக்கவும்.**

கொஞ்சமும் கவலைகளில்லாமல் அவ்வப்போது என்ன தோன்றுகிறதோ அதை செய்து நாட்களை நகர்த்தும் ஒருவன். நொடியில் எதற்கும் மனம் விடுவான், உடனுக்குடனே வெளிவருவான். குரங்கவன் மனமென்றும், கழன்றதவன் மறையென்றும், ஊர் சொன்னாலும்; தினமும் கனவுகளோடும், சுழலும் எண்ணங்களோடும் சுற்றிவரும் ஒருவன்.

அவன் எவர் கண்ணுக்கும் தென்படாத, எவருக்கும் புலப்படாத சின்ன சின்ன வெற்றிகளை உண்டியலில்சேர்த்து வைத்துக்கொள்வான்.

உண்டியலில் எவ்வளவிருக்கிறது என்று, கணக்கு வைத்துக் கொண்டால் கூட மறந்துவிடும். சிலநேரங்களில் உண்டியல் என்ற ஒன்று இருப்பதும் கூட மறந்துவிடும். அலமாரியில் இருக்கும் மற்றுமொரு மறக்கப்பட்ட பொம்மையாகவே பல நேரங்களில் அது ஆகிவிடும்.

அதிவேகன், பெயரிலேயே தன் குணம் ஏந்தி நடப்பவன். எல்லாம் வேகமாய் நடந்துவிட வேண்டும்.பொறுமையென்பது, அவன் அவ்வப்போது திறந்து பார்க்கும் டிக்‌ஷ்னரியில் மட்டுமேயிருக்கும்.

கண்ணில்படும், அழகழகான ஓவியங்களின் வசம் ஈர்க்கப்பட்டு, அவற்றை வாங்கி தன் சுவறெங்கும் மாட்டி வைக்கும் பழக்கம் கொண்டவன்.

பலரும் ஏன் எதற்கென்று கேட்டும், வெட்டி வேலை என்று சொல்லியும், தனக்கே உரிய பாணியில்  ஒவ்வொரு ஓவியத்திற்கும் விளக்கமளிப்பான். ஒரு சில ஓவியங்களுக்கான விளக்கத்தை அவனின்னும் வார்த்தைகளில்  வகுக்கவில்லை. அவற்றைப் பற்றி கேட்டால், ஒரு அதீத புரிதலை நோக்கிச் செல்வதாய் சொல்லிச்  சிரிப்பான். பலருக்கு அவன் புத்திசாலி, சிலருக்கு அடிமுட்டாள், சிலருக்கு அவன் அரிய வகை, எஞ்சியிருப்பவர்களுக்கு அவன் சரியான டைம் வேஸ்ட்!

நேற்று என்ன நடந்திருந்தாலும், காலையில் எழுந்து சிரித்த முகத்துடன் எல்லோரையும் சந்திக்கும்  அசகாய சூரத்தனத்தை, அழகாகச் செய்யப் பழகிய அதிவேகன், அன்றும் சிரித்த முகத்துடன் வெளியேசென்றான்.

வீடு திரும்புகையில் அவன் கையில் ஒரு புது ஓவியம். ஆசையாசையாய் வாங்கி வந்தவன், வீடு வந்ததும் முகம் வாடிப் போனான். தன் மெத்தையில் அமைதியாய் அமர்ந்து, சுவற்றில் மாட்டப் பட்டிருந்த ஏராளமான ஓவியங்களின் மீது தன் பார்வையை மெல்லமாய் படரச் செய்தான். அவன் உலகில்… அவன் அறையில் அதுவொரு அதிசய அமைதி!

எந்த நிகழ்வின் காரணமும், அவசியமும் அந்த நிகழ்விலேயே ஒய்யாரமாய் லயித்திருப்பதை உணர்ந்தவன்… அந்த நேரத்தின் அமைதியின் காரணத்தை, அமைதியிலேயே தேடத் துவங்கினான்.

எங்கு  உண்மை நம் நம்பிக்கைகளை, இதுவரை நாம் வாழ்ந்த வாழ்வை, நம் நடைமுறையை, நம் வழக்கங்களையெல்லாம் பொய்யாக்கிவிடுமோ என்று வியர்த்தான். பாவம்! உண்மை கண்டு பயப்படும் சாதாரண மனிதன் தானே!

கழுத்து இறுகியது, காதடைத்தது, இருந்தும் விடா பிடியாய் அமைதியில் பல தூரம் கடந்தான்.அமைதியின் பாதையில்தான் எத்தனை சத்தம்! பல மில்லியன்களில் கேள்வி மின்னல்கள் தாக்க, அவற்றின் நடுவே அவன் சிக்கித் தவிப்பது, திக்கித்தினறியது அவன் முகத்திலேயே தெரிந்தது.

சட்டென்று அமைதியின் ஆழம் தொட்டான்… அமைதிக் குழியின் அஸ்திவாரமாய் அக்கினிக் கேள்விகள். பதில்தேட… தோண்டினான். இன்னும் ஆழமாய்!

சட்டென்று நிமிர்ந்தான், முதல் முதலில் வாங்கி ஆசையாய் ரசித்த ஓவியத்தைப் பார்த்தான். ஆரம்பத்தில் அது அளித்த சந்தோஷம் காலப்போக்கில் இல்லாமல் போனதை உணர்ந்தான். மெது மெதுவாய் சுவரோடு சுவராகி கொஞ்ச காலத்தில், அந்த ஓவியம், சுவராகவே ஆகிவிட்டதை உணர்ந்தான்.

அப்படியே ஒவ்வொரு ஓவியமும் சுவராகியிருப்பதை…

அழுக்கேறியிருப்பதை…

ஈர்ப்பிழந்திருப்பதைக் கண்டு. கண் கலங்கினான்.

‘என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்!! எங்கே என்னை சிரிக்க வைத்த வண்ணக் கோலங்கள்… எங்கே என்னை மகிழ வைத்த ஓவியங்கள்! இங்கிருப்பவையெல்லாம் சுவராகிப் போனதெப்போது! காரணம் நானா! அதிலென்ன சந்தேகம் வேறு எவராக இருக்க முடியும் நான்தானே ஆசை வளர்த்தேன். நான்தானே அடுக்கி வைத்தேன்!’ என்று அலறினான்.

அத்தனை ஓவியங்களில் ஒன்று மட்டும் புதிது போல அவனை அழகாய் அருகில் அழைத்தது…சென்றான். அவன் கவனிக்காத சின்ன சின்ன கோடுகளும் சிந்திக்க வைத்தது. கண்மூடி விரல்களால்வருடினான், அதன் ஆன்மாவை நெருங்க முயன்றான், மாறாக அது அவன் ஆன்மாவை அள்ளியெடுத்தது.

ஒவ்வொரு ஓவியமாய் சுவற்றிலிருந்து கழற்றினான். முதல் பரிட்சயத்தின் அன்பை…அட்ரனலீனை கடைசிவரை அவற்றில் உணர முடியாமல் போனது நினைத்து உருகினான். இப்போது, அவனதுஆன்மாவை அள்ளியெடுத்த அந்த ஒரு ஓவியம் மட்டும்… நித்தியமாய் அவன் சுவற்றில்!

ஆடாமல் அசையாமல்,அவனை ஆளாமல் ஆக்கிரமிக்காமல், அப்படியே இருந்துவிட்டன பிற ஓவியங்கள். அதனால்தானே மதிப்பறியாமல் ஒதுக்கி வைத்துவிட்டான். அழகின், திறமையின், ஆசையின், அறிவின் இருப்பை… உணர்த்தும், எப்போதும் கவனமீர்க்கும் ஒன்று தனக்குப்  பிடித்தமான ஓவியத்தின் அருகே தேவையென்பதை கண்டு கொண்டு, அந்த ஒன்றைத் தேடிச் செல்ல முடிவுசெய்தான்.

சுவற்றிலிருந்து கழற்றிய அத்தனை ஓவியங்களையும், புதிதாய் வாங்கி வந்த ஓவியத்தையும் சேர்த்து ஒரு  மூட்டை கட்டிக் கொண்டு வேக வேகமாய்  வெளியே சென்றான். விடிந்ததும் வீடு வந்தவன், சுவற்றின் நடுவே இருந்த அந்த ஆன்ம ஓவியத்தின்  பக்கத்தில்… ரொம்பவும் பக்கத்தில், புதிதாய் ஒரு ஆணியடித்து தான் வாங்கி வந்த கடிகாரத்தை மாட்டினான்.

Test of Three a.k.a The Grave of Gossips

உணவு உண்ணும் இடம், வாட்ஸப், ஃபேஸ்புக், பேருந்துப் பயணம், ரேடியோ, தொலைக் காட்சி, விசேஷ வீடுகள், நண்பர்கள் மீட்-அப் என நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் இருப்பது… கிசு கிசு!

ஒருவரைப் பற்றிய அனாவசியமான செய்திகள் தன்னைச் சேர்வதை தவிர்க்க மூன்றடுக்கு ஃபில்டர் ஒன்றை வரையறுத்தாராம் சாக்ரடீஸ்.

அந்த மூன்றடுக்கு நாய்ஸ் ஃபில்டர் மூன்று கேள்விகளாலானது. அந்தக் கேள்விகளால், சாக்ரடீஸ் தன்னிடம் ஒரு செய்தியைப் பகிர வந்த வந்த ஒருவரிடம் கேட்டு வாயடைத்து அனுப்பியிருப்பதாகவும் படித்தேன்.

We are not Socrates, we are just a piece of Chalk at ease!
மற்றவர்களின் சிகரெட்டில் ஃபில்டர் இருப்பதை உறுதி செய்யும் முன், நம் சிகரெட்டில் ஃபில்டர் இருக்கிறதா என்று பார்ப்பதே முறை.

ஆதலால், இனி ஒவ்வொரு முறை ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் அல்லது ஒரு கும்பலைப் பற்றி இன்னொரு கும்பலிடம், ஏதோ ஒன்று பகிரும் முன், இந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலெழுதுவோம்…

முதல் கேள்வி – The Test of Truth
பகிர நினைக்கும் செய்தி, நூறு சதவீதம் உண்மையா?

இரண்டாவது கேள்வி – The Test of Goodness
பகிரப்போவது நற்செய்தியா… நற்குணமா

மூன்றாவது கேள்வி – The Test of Usefulness
பகிர்வது பயணளிக்குமா?

Truth, Good, Useful :

ஆம், ஆம், ஆம் – பகிரலாம்.

இல்லை, இல்லை, இல்லை – அப்படியே முழுங்கிவிடவும்!

ஆம், இல்லை, ஆம் – பகிரலாம்.

இல்லை, ஆம், இல்லை – பகிரலாம். நண்மைதானே என்று பகிரலாம். பயணில்லை என்றாலும், தெளிவு பிறக்க ஒருவரின் முகத்திலேயே கூட கேட்டு விடலாம். நண்மைதானே! பக்க விளைவுகள் எதுவுமிருக்காது.

இல்லை, இல்லை, ஆம் – வாய்ப்பில்லை. ஏனெனில், உண்மையல்லாதது, நண்மையில்லாதது பயணுள்ளதாய் இருக்க முடியாது.

ஆம், ஆம், இல்லை – உண்மையாக இருந்தாலும், நற்செய்தியாக இருந்தாலும், ஒருவரைப் பற்றிய அந்த செய்தி மற்றொருவருக்கு எந்த விதத்தி பயனுள்ளதாய் இருக்கப் போவதில்லை என்றால்… கப் சிப்!

இல்லை, ஆம், ஆம் – உண்மையென்று தெளிவாகத் தெரியாததில், பயனுள்ளதாய் இருக்க வாய்ப்புண்டு என்றால் பகிரலாம்… அது ஒருவரைப் பற்றிய நற்செய்தியாய் இருந்தால் மட்டும். நண்மைதானே! கேட்டுவிடலாம்… பக்க விளைவுகள் எதுவுமிருக்காது.

ஆம், இல்லை, இல்லை – அமைதியே உசிதம்!

 

 

நான் அனேக நேரங்களில் மெளன விரதம்… நீங்க எப்படி!?

Free Writing – வாங்க எழுதலாம்

சமீபத்தில் நண்பனொருவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, Free Writing என்றொரு யுக்தியைப் பற்றிக் கூறினான்.

அவன் கல்லூரி நாட்களில் அவனது ப்ரொஃபசர் ஒருவர் அவனுக்கு இதைப் பற்றி சொல்லியிருக்கிறார். கேட்டதும் எப்போதும் போல ஆர்வத்துடன், இன்ஸ்டண்டாய் பிறந்தது என்னுடைய ‘அப்படின்னா!?’
அதனைத் தொடர்ந்தது அவன் விளக்கம் அதனைத் தொடர்ந்தது இந்தப் பதிவு!

எழுத்தாளர்களின், எழுத வேண்டுமென்ற முனைப்போடு இருக்கும் எழுத்தார்வலர்களின், மிகப் பெரிய எதிரியாய் நான் கருதுவது, Writer’s Block என்று சொல்வார்களே அதைத்தான்!

அதனை அடித்து நொறுக்க பல வழிகளிருக்கலாம்…

உதாரணத்திற்கு ‘Happy Ending’ என்ற ஹிந்திப் படத்தில் வருவது போல மனதிற்கு பிடித்த ஒருவருடன் சொகுசு காரில் லாங் ட்றைவ் போகலாம்.

சொகுசு காரும் இல்லாத மனதிற்கு பிடித்தமான அந்த நபரின் சம்மதமோ அல்லது அப்படியொரு நபரே இல்லாத
என்னைப் போன்ற எழுத்துப் பிரியர்களுக்கு இந்த Free Writing என்னும் யுக்தி பேருதவியாயிருக்கும்!

Free Writing என்றால் –
என்ன எழுதப் போறோம், எப்படிக் கொண்டு போகப் போறோம், எப்படி முடிக்கப் போறோம் இப்படியெதுவுமே
யோசிக்காமல்… இதனை மறுபடி படித்துப் பார்த்தால் நன்றாகயிருக்குமா, நாலு பேர்கிட்ட இது நான் எழுதினதுன்னு காமிக்குற மாதிரி இருக்குமா, இதனை எழுதி என்ன பண்றது என்று எந்த வித யோசனையும் இல்லாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

சும்மா ஒரு பேப்பர் பேனா/லேப்டாப்பில் வோர்ட் டாக்குமெண்ட் எடுத்து என்ன வார்த்தைகள் வருதோ அதை எழுதினால் நமக்கிருக்கும், என்னவென்று சொல்லத் தெரியாத அந்த Writer’s Block லேசாய் ஆட்டம் காணும்.

அப்போ என்ன சிந்தனை ஓடுகிறதோ ஆதை அப்படியே எழுதிவிட வேண்டும். நான்ங்கைந்து வரிகள் கழித்து வேறொரு சிந்தனை தோன்றினால், அதைப் பற்றி எழுத வேண்டும். அதுவும் மோசமான சிந்தனை என்று தோன்றினால், ஏன் மோசமான சிந்தனையாகத் தோன்றுகிறது என்பதை எழுத முயல வேண்டும்.

விக்கிப்பீடியாவில் இதைப் பற்றி படித்த போது, இரண்டாம் வரியிலேயே, Free Writing, பெரும்பாலும் பயன்படுத்த முடியாத எழுத்துக் கோர்வைகளையே கொடுக்கும். ஆனால், எழுதுபவரை, ஆரம்பத்திலேயே ஏனென்று கேட்டு தடுத்து நிறுத்தும் பயங்களை முக்கியமாக self-criticism என்னும் கள்ளிப் பாலை திரித்து முறித்து விடும் என்றிருந்தது.

ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டு, அது முடியும் வரை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஏதாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்!

எழுதி முடித்தவுடன் ஒரு முறை படித்து பார்த்தால் ஒன்றிரண்டு நல்ல யோசனையாவது சிக்கும். சிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை கிழித்து விட்டு போய்கிட்டே இருக்கலாம். Free Writingதானே!

ஆனால், நிச்சயம் அடுத்த நல்லதொரு முயற்சிக்கான அடிப்படை ஐடியா கிடைக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

குறுக்குவழியில் Free Writing –
எல்லா நல்ல விஷயத்தையுமே எளிதில் செய்து முடிக்கும் சில வழிகளிருக்கும். அதே போல் இதற்கும் ஒரு வழியிருக்கிறது.
முதல் முறை நான் Free Writing பன்ன போறேன் என்று உட்கார்ந்தால், அதுவும் கூட அன்ரிஸர்வ்டு கம்பார்ட்மெண்ட் போல நெளிய வைக்கும்.

சில நிமிடங்கள் முயற்சி செய்யுங்கள்… பின்னர் உட்கார முடியவில்லையென்றால் இந்த மூன்று விதிகளை உபயோகித்து விடுங்கள்

– ஏன் அந்த நேரத்தில் எழுத முடியவில்லை, என்பதை எழுதலாம்.

– எது தடுக்கிறது என்று கண்டுபிடித்து அதனை திட்டலாம்.

– இதனை இவ்வளவு நாட்கள் செய்யாமல் விட்டதற்கு நம்மையே திட்டி எழுதலாம்.

இவை மூன்றும் நிச்சயம் உதவும் ஹேரி-பாட்டர் ஸ்பெல்! முதல் முறை மட்டுமே இவற்றை பயன்படுத்தவும்!!!

முயற்சி செய்துவிட்டு தங்கள் அனுபவத்தை பகிரவும்…

என் ஷவரில் கங்கை

கை கூப்பும் கடந்த காலம், கண் கட்டும் எதிர்காலம், குற்ற உணர்ச்சிகள், குத்திக் குடையும் குழப்பங்கள், தொலை தூர எதிர்பார்ப்புகள், தொலைந்து போன இன்பங்கள்… என்று எல்லாம் தலைக்குள் தாண்டவமாடி வாட்டி வதைக்கும்.

என்ன செய்வது ஏது செய்வது என்று முன்னிரவில் போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் பின்னிரவில் உடைந்து போய்விடும். அந்த நேரத்தில் மூளையின் ஒரு ஓரத்தில் சற்றே சூடேறும். அப்படியே கண் சுருங்கி உறங்கிப் போக, அடுத்த நாள் காலை கண் விழித்ததும் பயத்தின் ரேகைகள் மெத்தையில் என் மீது படர்ந்து ஒரு முதுகெலும்பு உணரா அடிமையாக்கியிருக்கும்.

வேறு வழியின்றி எழுந்து நடந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் கருமணிகளில் நம்பிக்கை நரம்புகளில் ரத்தம் சுண்டி, ஒளியிழந்திருக்கும்!
முகம் வாடிப் போயிருக்கும் அந்நேரத்தில், அடுத்ததாய் குளிக்கும் முடிவு.

இந்த மொத்த கனத்தையும் ஏந்திக் கதவைத்திறந்து குளியலறையில் கால் பதித்தவுடன் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். குளிக்கலாமா வேண்டாமா என்று சில நொடிகள் யோசித்த பின் ஷவரை திருவியதும்…

முதல் துளிகள் மேலே பட்டுச் சிதறி என் மீது சட சடவென விழ, சில்லென ஒரு மின்சாரம் பாய்ச்சும் நொடி. அந்த நொடியை நிமிடங்களாய் நீட்டித்தால் அதுவே திவ்ய தியானம்!
Mindfulness என்பதை தினசரி நாம் அனைவரும் எளிதாஉ உணரக் கூடியது அந்த ஒரு நொடியில்தான். அதன் உன்னதத்தை உணர்வதற்கு

வேறு நினைவுகளின்றி அந்நொடியை மட்டும் ஆட்சி செய்யும் ஆண்டவனாய்…
பாவ புண்ணியங்கள் ஏதும் தீண்டவும் முடியாத ஒருவனாய் நான் ஆவதை உணர்ந்து…
வெளிவந்தேன் புத்தம் புது பிறவியெடுத்து!

குறிப்பு – Dan Millman என்னும் ஜிம்னேஸ்ட்டைப் பற்றிய Peaceful Warrior படம் பார்த்துவிட்டு ஒரு முறை குளிக்கச் சென்றால், உங்கள் ஷவரிலும் கங்கை நீராடலாம்!

உலகமே அந்தாக்‌ஷரி, அவள் மட்டும் சைனீஸ் விஸ்பர்!

அந்தாக்‌ஷரி –
சுற்றி இருக்கும் ஒவ்வொருவராலும் மாறி மாறி எண்ணங்கள் பிறந்து அவற்றால் வெவ்வேறு முடிவுகள் வரும்.

பொதுவாய், பலரும் ‘ல’ வரிசையில் அதிகமாக முடிக்கப் பார்ப்பது போல பழக்கமில்லாத நிலைகளுக்கு ஆளாக்கி நம்மை கொஞ்சம் சோதித்துப் பார்ப்பார்கள். நாமும் ‘லவ் பேர்ட்ஸ்’, ‘லக்கி லக்கி’ ,’லேசா லேசா’ என்று அத்தனை அஸ்திரங்களையும் உபயோகிப்போம்.

அவர்களின் சோதனைகளில் தோல்வியை நெருங்கிவிட்டால் ஒன்று முதல் பத்துவரை எண்ணி ஏளனம் செய்து அடுத்த வெற்றிக்காவது உரம் போடுவார்கள்.

என்ன இருந்தாலும் கண்ணெதிரே அவர்கள் வைக்கும் போட்டியும், எங்கு துவங்க வேண்டும் எங்கு முடிக்க வேண்டும் என்ற தெளிவும் எப்படியோ நல்லதொரு நிகழ்வாய் அதை மாற்றிவிடும்.

சைனீஸ் விஸ்பர் –

ஆரம்பத்திலேயே தவறாக முடியும்! அதுதான் விளையாட்டு, என்ற எண்ணத்தோடுதான் ஆரம்பிப்போம்.

ஆனால், அதெப்படியோ நாம் தெளிவாக இருப்போம், நாம் மட்டுமாவது தெளிவாக இருப்போம், என்ற நம்பிக்கை வேறு நமக்கிருக்கும். எங்கிருந்து வருகிறதென்று பல முறை யோசித்தும் பிடிபடவில்லை.

நம் சுற்றுக்காக ஆவலோடு காத்திருந்து, சரி தவறு எதுவும் தெரியாமல் தொடர்வோம்.

ஒவ்வொரு முறையும் நாம் தெளிவாக விளையாடிவிட்டோம் என்ற ஒன்னுத்துக்கும் புண்ணியமில்லாத சந்தோஷம் வேறு பின்தொடரும்.

அத்தனைக்கும் மேல், முடிவென்னவாக இருக்குமென்று தெரியாமலேயே தொடர்வோம்.

முதலில் சொன்னது போலவே, தவறாகத்தான் முடியும். ஆனால் அந்த முடிவு, முற்றிலும் நூதனமான, சற்றும் எதிர்பாராத, அத்தனை யூகங்களையும் மீறிய ஒரு முடிவாக இருக்கும்.

தவறெங்கென்று கண்டுகொண்டு திருத்தமுடியாமல் போனால் பரவாயில்லை… தவறெங்கு நடந்ததென்றே தெரியாத நிலை!அப்போதும் தைரியமாய் அடுத்த முறையும் சிரித்துக் கொண்டே விளையாடுவோம்

ஆம்! உலகமே அந்தாக்‌ஷரியென்றால் அவள் மட்டும் எனக்கு சைனீஸ் விஸ்பர்!

ஏனோ எனக்கவளை ஆம்ஸ்டர்டாம் அழைத்துச்செல்ல வேண்டும்

உன்ன இப்போ பார்க்க எப்படித் தெரியுமா இருக்கு என்றவள் ஒவ்வொரு முறை கேட்கும் போதும், நான் ‘எப்படி இருக்கு?’ என்று கேட்பேன்.
ஒவ்வொரு முறையும் என் கேள்விக்குப் பிறகே உவமை யோசிப்பாள்.

‘ஜீனியை பார்த்த அலாவுதின் மாதிரி!’

‘அலாரத்துக்கு முன்னாடியே எழுந்து மணி பார்த்த ஒரு சோம்பேரி மாதிரி’

‘கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் இந்தியா ஜெய்த்ததை பார்த்தவன் மாதிரி’

‘தன்னையே அறியாமல் முதல் முத்தம் தந்துவிட்டவன் மாதிரி’ என்று என்னென்னவோ சொல்வாள். நானும் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரிப்பேன்.

எப்படி ‘இன்னைக்கு க்ளாஸ் முடிஞ்சுது’ என்று வாத்தியார் சொல்லிக் கேட்டால் மட்டும் எக்ஸ்ட்றா இனிக்குமோ அது மாதிரி, இதெல்லாம் அவள் சொல்லிக் கேட்டால் நீங்கள் கூட அசடு வழியலாம். வாய்ப்புகள் அதிகம்!

அவளது அத்தனை ‘அந்த மாதிரி இருக்கு’ வாக்கியங்களும் பொய். அந்த உவமைகள் விளக்கும் முகங்கள் எதுபோலவும், அவளை பார்க்கும் நேரத்தில் என் முகம் இருப்பதில்லை.

எனக்குத் தெரியும்… எனக்குத் தெரியும் அதெப்படி இருக்குமென்று. நான் பார்த்ததில்லை ஆனால் எனக்குத் தெரியும் அந்த முகம் எப்படி இருக்குமென்று.

ஆறு வயதில் அப்பா வாங்கி வந்த அந்த பெரிய ஆயில் ப்ரிண்ட்டட் கேலண்டரில், முதல் முதலில் நான் ஆம்ஸ்டர்டாம் பார்த்த போது என் முகம் எப்படி இருந்ததோ அப்படி இருக்கும் ஒவ்வொருமுறை அவளை பார்க்கும்பொழுதும்!

எனக்கவளை ஆம்ஸ்டர்டாம் அழைத்துச்செல்ல வேண்டும், ஒரு வேளை அவளது கேள்விக்கான சரியான பதிலை அங்கவள் கண்டுகொள்வாள்!