Double Decker பயணம்

மே மாதம் படத்தை முதல் முறை பார்த்தது எப்போது என்று சரியாக நினைவில்லை. 
அப்போது எக்ஸ்ட்ரா அப்பளமும், கேரம் போர்டும்தான் என் நாட்களின் மிக முக்கியமான அம்சங்களாக இருந்த காலம். 

கேபிள் டிவியின் வருகை கொஞ்சம் என் தூக்கத்தை தள்ளிப் போட ஆரம்பித்த காலம். 

எங்கிருந்தாலும் அவசர அவசரமாக வீடு வந்து, தவராமல் ஸ்வாட் கேட்ஸ் பார்த்த காலம். 

என் கால் முட்டிகளின் கருமை அதன் இருப்பை பதிவு செய்யத் துவங்கிய காலம். 

இன்னும் அப்படியெ நினைவிலிருக்கிறது அந்தப் படத்தை முதல் முதலில் பார்த்த அனுபவம். இன்று எனக்கு சோறு போடும் மெட்ராஸை அறிமுகப் படுத்தியது அந்தப் படம்தான். 

ஒரு காட்சியில்… சிவப்பு நிற டபுள் டெக்கர் (Double Decker) பேருந்து ஒன்று வந்து போகும். 

என் இப்போதைய நினைவாற்றலை வைத்துப் பார்த்தால், மெட்ராஸில் அந்த மொட்ட மாடி பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் முதல் ஆசை என்று தோன்றுகிறது. 

அதன் பின் ஒரு முறை சென்னை பக்கம் வந்தபோது… ‘பாட்டி! எனக்கு மொட்ட மாடி பஸ்ல போகணும்’ என்று பாட்டியிடம் கேட்டேன். ‘அந்த பஸ் இப்போ இல்லடா. நிறுத்திட்டாங்க.’ என்று அப்போது பாட்டி சொன்னது 

இன்று வரை அப்படியே நினைவிலிருக்கிறது! 

சிரிச்சுகிட்டே சொன்னாங்க. அவங்களுக்கு தெரியல… கண்ணுல இருந்த சந்தோஷம் கண்ணம் பூரா வழிஞ்சு ஓடப் பார்த்தப்போ, ஒரு பெரிய… ரொம்ப பெரிய சோகம் வந்து அனை போட்ட மாதிரி இருந்துச்சு. அன்று, மெரினாவும், ஐஸ் க்ரீமும் அந்த சோகத்துடன் சண்டையிட்டுத் தோற்றுப் போனது வரலாறு. 

இன்று… 


அதிகாலையில் நண்பன் ஒருவனுடன் மெரினா சென்றேன். அங்கே… மெட்ராஸ் வீக் கொண்டாட்டத்தையொட்டி, தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸின் டபுள் டெக்கர் பேருந்து எங்களை கடந்து சென்றது. 

நல்ல வேளை ஆண்டாண்டு காலங்கள் ஆகிவிட்ட போதும் ஆசை இன்னும் எக்ஸ்பைரியாகாமல் இருந்தது மகிழ்ச்சியளித்தது. அந்த சோக மேகம் இன்று கலைந்தது! 

அவ்வளவுதான். அந்த பயணத்தை… அந்த அனுபவத்தை… நான் எனக்கே எனக்கான ஒன்றாய் பத்திரப் படுத்தியுள்ளேன். நான் எழுதி நீங்கள் படிப்பதை விட, இந்த அனுபவத்தை நான் சொல்லி நீங்கள் கண்டால்… அங்கும் இங்கும் அலை பாயும் வார்த்தைகளும், ஆகாயத்தை மொத்தமாய் விழுங்க நினைக்கும் கண்களும் உங்களுக்கு முழுமையான ஒரு புரிதலை தரக்கூடும். 

இப்போதைக்கு… சென்னைக்கும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கும் நன்றிகள்! 🙏🏻

Advertisements

நெய்த உறவு

முதல் முதலில் பார்த்த

நாள் நினைவில்லை,

எனையீர்த்த விசை தவிர

வேறெதுவும் நிலையில்லை!
அம்மாதான் அறிமுக

படுத்தினாள்,

ஆசை ஆசையாய்! 
அருகிலிருன்து தன்மை 

விளக்கினாள்,

அன்பின் பாஷையாய்!
உடனிருந்து, மனமுவந்து

உருகி, உருக்கி 

சூடறிந்து எனையழைத்து

பார்க்கச் செய்தாள்.
பின்… 

பல இடஙளில் காண்பதுண்டு.

வெகு தூரத்தில்,

தொடும் தொலைவில்,

என எங்கிருந்தாலும்

தலை திரும்பும்,

என் எண்ணங்கள் யாவும்

அதனை விரும்பும்!
இதமாய், பதமாய்

சிறகடிக்கும்,

சுகமாய், பல விதமாய்,

பிடித்துப் போகும்

இளகிய குணம்!
ஆசை, பேராசை 

தோற்கடிக்கும்,

தடங்கல் சங்கடங்கள்

மறக்கடிக்கும்,

அழகிய மணம்!
அவ்வப்போது கண்டாலும்,

எப்போதும் நீங்கா

நினைவுண்டு,

இது போன்ற பந்தம்

எதுவுண்டு! 
என்னை,

தோற்கடித்து வென்றாலும்,

நெய்கொண்டு நெய்த

உறவுண்டு,

ஷுகர் கூட பரவாயில்லை

அதை உண்டு!
கோதுமை அழகை 

கண்படாமல் காக்க

இங்கு ஏது மை!

நானுமே மழலை

யாரென்னை கேட்க 

எக்ஸ்ட்ரா வை! 
கொள்வாய், மெல்வாய்,

செவ்வாய் செல்வாய்,

இன்னும் சொல்லவா,

வேண்டாமென்றால்
என் பக்கம் தள்ளுவாய்

அல்வா அல்லவா!

When I woke up to see a packet of delicious Halwa today… எச்சிலோடு  ஊரிய இதனை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி! 

And if anyone would love to have some Halwa, contact me. I’ll save some for you. Offer valid till Monday!! 😁