பியானோ

பியானோ! சந்தோஷம், சோகம்
வெற்றி, தோல்வி
குற்றம், கொண்டாட்டம்
என எல்லாம்
கருப்பு வெள்ளையில் அடக்கி
பாடம் சொல்கிறது!

அளவுக் கதிகமாய்
வண்ணங்கள் சேர்த்து,
பிரித்தறிய பல
பெயர்கள் வைத்து,
தேவையில்லாமல் குழம்பி
தேவைக்கதிகமாய் யோசித்து
நமக்கு நாமே சுமையாகிறோம்!

ஒவ்வொரு விடியலிலும்
எண்ணிலடங்கா எண்ணங்கள்
விண்வெளி தொடுகிறது
கண்ணில் படும் யாவும்
கண்ணொளி மறைக்கிறது!

எளிமையிலும் ஏராளமாய்
கேள்விகள் சேர்த்து,
புலி மயிலை பார்த்தது போல்
முகம் வியர்த்து,
போராட்டங்கள் பல நடத்தி
எதையும் கடினமாக்கி
அதையும் கவலையாக்கி
காரணமின்றி தொலைகிறோம்!

ஒரு பியானோவை போல்,
வேண்டியதை மட்டும் வைத்து
ராஜ வாழ்க்கை வாழும்
அந்த சொர்க்க சுகத்தை
அனுபவிக்கும் ஆசை
அழகானது.

அதிகத்தை அதிகமாய்
நேசித்து, யாசித்து,
அதன் ஆதிக்கத்தில்
அடங்கி, ஒடுங்கி,
அலட்சியமாய் அழிகிறோம்!

போதும்… கொஞ்சம்
என்ற வார்த்தையை
கொஞ்சம் மதிப்போம்.
கொஞ்சமாவது…

Leave a comment