அடிப்பாவி அழகியே!

அடியே!

அடிப்பாவி அழகியே!

என்ன முழுசா மறந்து,

தெளிந்த நெனப்பில் மெதந்து,

பல்லிளிச்சு இங்கொருத்தன்

கெடக்கானே..,

வருஷக்கணக்கா

வட்டமிட்டு,

சகுனிக்கணக்கா திட்டமிட்டு,

அவன் மூளை மலையேறி

கூடாரம் போட்டிருந்தேன்

நிம்மதியா!!
நீ வந்து

மருதாணி வண்ணங்காட்ட,

நிக்க வச்சு

அவன் மேல அன்பு காட்ட,

தொலஞ்சு நானும் தவிக்கிறேண்டி

நிர்கதியா!
வெற்றிடத்த நெரப்பிப்புட்ட

என் வேரறுத்து எறிஞ்சுப்புட்ட!

வேட்டையாடி வாழ்ந்து வந்தேன்!

வேற்றிடத்த

தேட வச்ச!
அடியே!

மிலிட்டரிக்கு பயந்த

ஒரு மலை வாசி

போல ஆனேன்,

தலைமுறையா வசிச்ச நானும்

தலைமறைவா

ஆகிப்போனேன்!
சொந்த நாட்ட தோத்த ஆத்திரத்தில்

கண்ண மூடி

அழவும் வச்ச!

மன்னனாட்டம் இருந்த எம்பொழப்பில்

மண்ண வாரி

அடிச்சுப்புட்ட!

அடிப்பாவி அழகியே!

பார்வையில செதச்சு

வார்த்தையில வதச்சு

புன்னகையில பொதைக்க பாக்குற!

எம்பொழப்ப கெடுத்த ஒம்முகத்துலதான்,

என் சவப்பெட்டி இருக்குதடி.

அடிப்பாவி அழகியே!

அவனே மறந்தாலும்,

நான் மறக்க மாட்டேன்

குழப்பம் என்ன கழுவிலேத்தும்

ஒம்முகத்த!

Advertisements