முடிந்தால் காத்திரு!

நீயில்லாத நேரங்களில்

நான் எங்கு செல்கிறேன்?

நாமிருந்த நேரங்களின்

பக்கம் செல்கிறேன்!

நீ பார்க்காத நேரங்களில்

நான் என்ன செய்கிறேன்?

நாம் பார்க்காத நேரங்களை

சுத்தம் செய்கிறேன்!

நீ வருவாய்,

நான் வருவேன்,

மறுபடி மறுபடி!

நீ எனைத்தேடி வருவாய்

நான் உனைத்தேடி வருவேன்…

ஆனால்,

வேண்டாம், விளைவுகள் பயங்கரம்

என்று அடம்பிடித்தாலும்

எச்சரித்தாலும்,

அண்டம் விழுங்கும் ஆசை கொண்டு,

நம்மை நாமாகவே நேசிக்கும்

இந்த நொடி மறுபடி வராது!

அதனால்தான் சொல்கிறேன்…

கொஞ்சம் நேரம் கொடு.

தலை தட்டும் திமிரை

தசை திங்கும் குழப்பத்தை

கொன்று கொளுத்திவிட்டு வருகிறேன்!

காத்திரு!

முடிந்தால் காத்திரு

மறுமுறை சொல்கிறேன்…

முடிந்தால் காத்திரு!

இந்த நொடியை

பத்திரப்படுத்தி வை!

கொள்ளை ஆசையை

மொத்தம் அடுக்கி வை!

உந்தன் காதலை

சற்றே அடக்கி வை!

நான் வரும் வரை

காத்திரு.

நான் வருவேன்

காத்திரு!

முடிந்தால் காத்திரு!!

Advertisements

என்னவென்று சொல்வது!

வெறுமை நிறைந்த வாழ்வில்

வெளிச்சம் எழுதியவளை

என்னவென்று சொல்வது?

அரைகுறை என்னை

வரைமுறையின்றி நம்பியவளை

என்னவென்று சொல்வது?

அழுது வடியும் என் முகத்தை

அழுத்தித் துடைப்பவளை

என்னவென்று சொல்வது?

கவலைகளை எல்லாம்

கடத்தி கைக்குட்டையில் மடித்தவளை

என்னவென்று சொல்வது?

கண் மை எடுத்து கழுத்திலிட்டு

திருஷ்டி கழித்தவளை

என்னவென்று சொல்வது?

நான் நேற்று செய்தவற்றைக் கூட

நான் ஏற்று நடக்கிறேன் என்றவளை

என்னவென்று சொல்வது?

நான் ஏற்று நடக்கும் கனவையெல்லாம்

நாணேற்றி வானேற்று என்றவளை

என்னவென்று சொல்வது?

முதல் கீற்றுக்கிரணையில்

கண் விழிக்கச் செய்தவளை

என்னவென்று சொல்வது?

இருளழித்து இருக அணைத்து

இதயம் வரைந்தவளை

என்னவென்று சொல்வது?

உறவென்னும் ஒளி நிலவின்

உன்னதம் உரைத்தவளை

என்னவென்று சொல்வது?

சோதனைகள் ஏதுமின்றி -நெஞ்சில்

சோதிவளர்த்தவளை

என்னவென்று சொல்வது?

என் பாவங்களை,

சாபங்களை,

பதைபதைப்புகளை…

வரிசையில் நிற்க வைத்து சுட்டெரித்தவளை

என்னவென்று சொல்வது?

ஆ! உதித்துவிட்டாள்…

வானின் நட்சத்திரங்களுக்குக் காலவரையற்ற விடுமுறை என்று சொல்லிவிடுங்கள்!

அவள் சூரியன்!

அவள் சூரியன்!

வேறொருத்திய பிடிக்கும்.  ஆனா, நீதான் முக்கியம்!

ரசனைத் தாவலில் சிக்கித் தவிக்கும்

அரை வேக்காடு நெஞ்சமடி!

அவசரமாய் உன் அறிவழைத்து,

அடி ஏனோ புலனாய்வு நடத்த;

அடியேனோ தடுமாறித் திணற

நோகுதடி… என் நெஞ்சம்,

நிலையறியாமல் நோகுதடி!

பாவம் விட்டு விடு

பிழைத்துப் போகட்டும்!

அவ்வப்போது இடி இடித்தாலும்

தவ்விச்சென்று பதை பதைத்தாலும்,

கவ்விக்கொண்டு உன்னையே அனைக்கும்!

முட்டாள் மூளை துடி துடித்தாலும்

வேதியல் வந்து விதை விதைத்தாலும்,

அஞ்சி நடுங்கி உன்னையே

அழைக்கும்!

நீட்டி மடக்காமல் நேரடியாய்

சொல்கிறேன்…

வெட்கமின்றி வீசியெறிகிறேன்

உண்மை ஊறிய வார்த்தைகளை!

வக்காலத்து வாங்கவில்லை

வக்கனையாய் பேசவில்லை

விதண்டாவாதம் செய்யவில்லை

.

.

.

உனை விரும்பா நேரம் ஏதுமில்லை!

அடியே!

நீயும் அவளும் ஒன்றில்லை

உனை மீறி எவளும் இன்றில்லை!

தேடல் இரவு! The Night Of Madness!

என் புறங்காது தேடும்

உன் நுனி நாக்கின் ஈரம்,

சாத்தியெடுக்குதடி.

உனில் அடங்காது ஆடும்

என் பாசாங்கு வீரம்,

போத்திப் படுக்குதடி!

பாய்மர உடலில்

பதித்திடும் பாதம்

பாடாய் படுத்த,

போதையின் கடலில்

குதித்திடும் தேகம்

தோதாய் கிடக்க!

பால்வெளியை குழைத்துக் குடிக்கும்

போர் வெறியில்

பாவை நீ பாய,

பாற்கடலை வளைத்து மடிக்கும்

உன் அருகில்

மாயைதான் மாய…

மெய்த் தேடல் உச்சத்தில்!

புதைந்த என் வெட்கத்தை

நடு முதுகில்

அகழ்வாராயும் இதழ்கள்,

தொலைந்த என் கூச்சத்தை

புது வழியில்

தோண்டியெடுக்கும் நகங்கள்,

சிதறிக் கிடக்கும் சிலிர்ப்பை

இரு தொடையில்

கிள்ளிக் குவிக்கும் விரல்கள்,

மச்சப் புதிர் புள்ளிகளை

குறுக்கும் நெடுக்கும்

கோர்த்துக் கொண்டாடும் சிறு மயிர்கள்,

கடத்தப்பட்ட களிப்பை

மடிக் கரையில்

கிடத்திக் கொஞ்சும் பற்கள்,

தாகம் ஈன்ற இசையை

மார் பரப்பில்

தாளம் போடும் இமைகள்!

அடியே! இப் படியே…

மயிர்க்கூச்ச நொடிகளில் நீ தொடங்கும்

புதுத் தேடல் ஒவ்வொன்றும்,

என் உயிர் காய்ச்சும் திரவத்தை

ஏலத்தில் எடுக்குதடி எகத்தாளச் சிரிப்போடு!

படபடத்து உடல் வியர்த்து

சதை பிடித்து படர்ந்த வேகத்தில்,

நீ கிசுகிசுத்த காமரூப நுட்பம்

ஏணியேறிப் பாயுதடி!

பயம் விடுத்து பயணம் முடித்து

பல்லிளித்துக் கிடந்த வேளையில்

நீ முணுமுணுத்த பாடலின் வெப்பம்

மேனியேறி மேயுதடி!

உன் தேடலிரவில்

பாடல் வரிகள் உருவக வலையில்,

உன் ஈர மொழியில்

வீழும் உயிரோ பரவச நிலையில்!

யாரவள் மாதவி! 

ராவணன் முதுகில்

ஏறி ஓர் கதை சொன்ன

மணிரத்னத்திடம்…

மாதவி மனதில்

ஊறி ஓர் கதை சொல்லச் சொல்லவா!

நல்லாயிருக்கலாம்!

கல்லா கட்டாதே!

சரி… யாரவள் மாதவி!

சிற்பி சிலைக்க மறந்த

கண்ணகியென்கிறான் ஒருவன்…

புத்தி நீ உடையவனா!?

கத்துவாய் இவள்

பத்தினியென்கிறான் ஒருவன்!

கற்பிற்கு கர்ஃபியூ வேலியிட்டவன்

வேசி என்கிறான்!

இஷ்டத்திற்கு பட்டிமன்றம் வைத்து

தாசி என்கிறான்!

அர்த்தமில்லா அபத்தங்களை

நித்தம் நீ சுமப்பவனா!?

பத்தினி என்னும் சொல்லுக்கு

அர்த்தம் நீ வகுத்தவனா!?

பெண்ணின் கற்பு கொண்டு

அவளை மதிப்பிடும் உரிமை

உனக்கு கொடுத்தவன் எவனடா!

கடுங் கோபச் சாலையில்

ஏக வேகத்தில் சீற

ஓட்டுனர் உரிமம்

எனக்கு கொடுத்தவன் அவனடா!

கெட்ட வார்த்தைகள்

வேகம் பிடிக்கின்றன!

சிவப்பு விளக்காய்

முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

அழு! 

உலகம் காணாதவோர் 

அழுகை அழு!

கவலை வீண்போகவோர் 

அழுகை அழு! 

தலையனை நனைக்கவோர்

அழுகை அழு!

அனுக்களை பினைக்கவோர்

அழுகை அழு! 

இரவினில் கரைந்துவோர்

அழுகை அழு! 

விடியலில் விரைந்துவோர்! 

கதிராய் எழு! 

கண்ணீர்…

பாவ மன்னிப்பு

சாப விமோக்‌ஷனம்

ஜென்ம சாபில்யம்! 

அழு. அழுது தீர்த்துவிடு! 

சுக போதைக்காரன் (Supermoon & I)

கெட்டியாய் அம்மாவின் கைப்பிடித்து

சுட்டியாய் அப்பாவின் தோள்மீதமர்ந்து,

சிறுவனாய் சைக்கிள் மிதித்தபடி

கவிதைகளை பைக்குள் ஒளித்தபடி,

ரசித்தவன்தானே நான்!

ஏதேதோ எதிர் பார்த்து

போடும் வேஷத்தை,

பிடுங்கியெறிந்து பிழைக்கச் செய்ய

என்னோடே இரவின் மதியிருக்கும்!

எனக்குள் ஒளிந்திருக்கும்

சந்தோஷத்தை,

பிழிந்தெடுத்து பிழைக்கச் செய்ய

என்றென்றும் அவன் ஒளியிருக்கும்!

என்றெழுதியவன்தானே நான்!

இன்று மட்டுமென்ன

புதியதாய் ஒரு அக்கறை

இந்த சுகபோதைக்காரனுக்கு!?

ஏன் நெருங்கி வந்திருக்கிறான்…

சிரித்த முகத்தவனை இன்று

பக்கத்தில் பார்க்கும் முயற்சியா!

என்ன கிறுக்குகிறான் என்று

எட்டிப் பார்க்கும் முயற்சியா!

பிள்ளை நடை தொலைத்தவனை

திட்டித் தீர்க்கும் முயற்சியா!

வெள்ளை ஒளியள்ளித் தெளித்து

தட்டிக் கேட்கும் முயற்சியா!

என்ன வேண்டி இந்த நெருக்கமாம்!?

ஊருக்கே சொல்ல வேண்டியிருக்குமா..?

வெண்ணிற வெளிச்சம் தெளிக்கும்

சுக போதைக்காரன் எனை நோக்கி வந்திருப்பதை!

இன்று விட்டுவிடு. மாதேவன் நாளை பேசுகிறேன்!

என்ன யோசித்துக் கொண்டிருக்கிறேன்

என்று யோசித்தே,

என் சிந்தனை என்னை

கொன்று தீர்க்கப் பார்க்கிறது!

பேசித் தீர்க்க ஏதுமில்லை

என்றே சூழ்ந்து சுழற்றி,

ஓயாமலே என்னை

வென்று வீழ்த்தப் பார்க்கிறது!

ஊர் உலகம் விழுங்கும்

என் வாயடைத்து,

கண்ணனல்ல நீ

கடவுளல்ல என்று சூளுறைத்து

அமைதியாக்கி அழகு பார்க்கிறது!

‘பேசிவிடு மாதேவா!’

என்றோர் குரல் ஒலித்து,

‘வழக்கமல்ல இது

உன் பழக்கமல்ல’ என்றணைத்து

நொடியில் உலுக்கியெடுக்க…

சொல்லிவிட்டேன் உண்மையை!

தலைப்பு நிஜமாகும் தருணத்தை

எதிர்பார்த்து நானும்

காத்திருப்பதாய்…

மேதை May Die But Not The மேடை!

மேடையில் கிரீடம் ஏறுதுன்னு

நாலடி ஒயரம் கூடுதுன்னு

மூளையில் முறுக்கு ஏறலாமா

நாடியில் நாட்டியம் ஆடலாமா! 

ரெக்க ஏது 

நெனப்பு கொடுத்தது

கூடு ஏது

பொறப்பு கொடுத்தது

பறக்க ரெக்க

நெனப்பு கொடுத்தது

இருக்க கூடு

பொறப்பு கொடுத்தது

அடையாத அடையாளமெல்லாம்

உடையாக அணிஞ்சாலும்

பகையாக முன்ன வந்து 

தலைகணம் நின்னுப்புட்டா,

அடியெடுத்து முன்ன வைக்க

எத எடுத்து எழுதி வைப்ப!!

கலைகளில்லையின்னா

ஏது இங்க நீயும் நானும்,

கவனமில்லையின்னா

கலையும் கருவில் கலஞ்சு போகும்! 

தெனமும் மேட ஏறினாலும்
சனமும் வாழ்த்தி பாடினாலும்

நெசத்த நெனச்சு பார்த்து நாளும்

நெலத்த மதிச்சு வாழ வேணும்! 

பியானோ

பியானோ! சந்தோஷம், சோகம்
வெற்றி, தோல்வி
குற்றம், கொண்டாட்டம்
என எல்லாம்
கருப்பு வெள்ளையில் அடக்கி
பாடம் சொல்கிறது!

அளவுக் கதிகமாய்
வண்ணங்கள் சேர்த்து,
பிரித்தறிய பல
பெயர்கள் வைத்து,
தேவையில்லாமல் குழம்பி
தேவைக்கதிகமாய் யோசித்து
நமக்கு நாமே சுமையாகிறோம்!

ஒவ்வொரு விடியலிலும்
எண்ணிலடங்கா எண்ணங்கள்
விண்வெளி தொடுகிறது
கண்ணில் படும் யாவும்
கண்ணொளி மறைக்கிறது!

எளிமையிலும் ஏராளமாய்
கேள்விகள் சேர்த்து,
புலி மயிலை பார்த்தது போல்
முகம் வியர்த்து,
போராட்டங்கள் பல நடத்தி
எதையும் கடினமாக்கி
அதையும் கவலையாக்கி
காரணமின்றி தொலைகிறோம்!

ஒரு பியானோவை போல்,
வேண்டியதை மட்டும் வைத்து
ராஜ வாழ்க்கை வாழும்
அந்த சொர்க்க சுகத்தை
அனுபவிக்கும் ஆசை
அழகானது.

அதிகத்தை அதிகமாய்
நேசித்து, யாசித்து,
அதன் ஆதிக்கத்தில்
அடங்கி, ஒடுங்கி,
அலட்சியமாய் அழிகிறோம்!

போதும்… கொஞ்சம்
என்ற வார்த்தையை
கொஞ்சம் மதிப்போம்.
கொஞ்சமாவது…