குளியலறை குமாஸ்தா

** Exclusively written for Whole-Artedly organized by Lets Talk Life (FB.com/@LETUSTALKLIFE) **

தினமும் காலை அவன் எழுந்ததும், முதல் திட்டு அலாரத்திற்கு, இரண்டாவது ஒரு கோணத்தில் மட்டுமே வேலை செய்யும் சார்ஜருக்கு, மூன்றாவது வேக வேகமாய் ஓடுவதைப் போல் தோன்றும் நாட்களுக்கு. வரிசை மாறாமல், ஒவ்வொரு நாளும் இப்படியே விடியும்.

அன்றும் அப்படியே விடிந்தது. பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த தன் நண்பனை எழுப்பிவிட்டு ‘நான் முதல்ல குளிக்க போறேன். இன்னைக்கு சீக்கிரம் வேலைக்குப் போகணும்.’ என்றான்.

அவசர அவசரமாக குளியலறையை நோக்கிச் சென்றவன், ‘ஷேம்பூ எடுக்க மறந்துட்டேன். இதே பொழப்பு எனக்கு!’ என்று புலம்பிக் கொண்டே வெளியே வந்து ஷேம்பூ எடுத்துச் சென்றான்.

முதல் சொட்டுத் தண்ணீர் உடல் மீது பட்டதும், உடனடி பெருமூச்சோடு, ரத்த ஒட்டத்தோடு, மூளைக்குள் முட்டித் தெறித்த டோப்பமைன் தன் வேலயை காட்ட ஆரம்பித்தது.

குளியலொரு பக்கம் அது பாட்டுக்கு நடக்க, மறு பக்கம் சிந்தனைகள் அங்கும் இங்கும் ஓட்டம் பிடித்தது.

தினமும் குளிக்கலாம் போலிருக்கே.

எப்படி கண்டுபுடிச்சிருப்பாங்க… குளிக்கணும்னு. யானைய பார்த்து கத்துகிட்ட விஷயமா இருக்கும். எல்லா மிருகமும்தான குளிக்கும். ஆனா, யானை குளிக்கிறதுதான பாக்குறதுக்கு ஜாலியா இருக்கும்!

இப்போ குளிச்சதெல்லாம் ட்ராஃபிக்ல போனா காலி!

மெட்ராஸ்ல ட்ராஃபிக்கு காரணம் இந்த ஷேர் ஆட்டோதான்! ஒரு நாள் முதல்வரானா முதல் நாள் முதல் கையெழுத்து இந்த சின்ன யானை ஷேர் ஆட்டோ எல்லாத்தையும் நிறுத்துறதுதான்.

ஷங்கர் படத்துல கதையிருந்தும், கருத்து இருந்தும் ஏன் தேவையில்லாத கிளாமர்!

சாரதாவையும், நந்திதாவையும் உட்கார வச்சு சில கேள்வியெல்லாம் கேட்கணும். இன்னைக்கே கேட்டுடணும்!

நாம படிக்கிறது, பாக்குறது, நமக்கு சொல்லித்தர்றது எல்லாமே யாரோ ஒருத்தவங்களுக்கு சாதகமா அமையுதோ! அந்த யாரோ ஒருத்தர கண்டு புடிக்கதான் நான் வந்திருக்கேனா…

அந்த யாரோ ஒருத்தர கண்டு புடிச்சதும், யுரேகான்னு கத்திக்கிட்டே நான் ரோட்ல ஓடினா…. என் கண்டுபிடிப்ப பத்தி கவலைபடாம, பப்ளிக் நுய்ஸன்ஸ்னு உள்ள போட்டுடுவாங்களே!

நான் வாங்கி மாட்டின கேலண்டர் மாதிரி, யோசிக்கிறதும், கேள்வி கேட்கிறதும் நாள்பட கொறஞ்சுடுச்சே.

இந்த தேதி, நாளு கெழம இதெல்லாம் தாண்டி எதுவுமில்லையா! நம்மள ஒரு கட்டுப்பாட்டுல வைக்கிறதுக்காக ஃபிரேம் பண்ண விஷயங்களோ!

ஒரு வேளை… The Truman’s Show படம் மாதிரியிருக்குமோ.

எல்லாத்த பத்தியும் படிக்கணும். லைப்ரரி போகணும்!

இன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் பாதியில நிக்குற அந்த ஓஷோ புக்க முதல்ல முடிக்கணும்.

செக்ஸ்… ஷவர் செக்ஸ்க்கு இந்த இடம் போதுமா! இப்போ ஏன்டா அத யோசிக்குற.

விஷுவல் மீடியம் அளவுக்கு அதிகமா இன்ஃப்ளூயென்ஸ் பண்ணிடுச்சுல்ல.

முக்கியமா அட்வெர்டைஸ்மென்‌ட்ஸ்… விஷம்!!

ஏன் ஷாம்பூ போடணும், எதுக்கு சோப்பு! எவனோ கண்டு புடிச்சுட்டான்… அத என்னமோ சொல்லி வித்துட்டான். இன்னமும் நாம குளிச்சு யார் யாரையோ வாழ வச்சுக்கிட்டு இருக்கோம். ஒரு வேளை வேற காரணம் ஏதாவது இருக்குமா!

கண்ணு எரியுதுடா… ஜான்ஸன் & ஜான்ஸன் மட்டும் கண்ணு எரியாதுன்னு சொல்லி விக்குறாங்களே. எனக்கெல்லாம் கண்ணு எரியாதா! எல்லாருக்கும்தானா கண்ணு இருக்கு. ஏன் எல்லா ஷேம்பூவும் அப்படியில்ல!

‘ஃபெமினிஸ்ம், அருந்ததி ராய், ஓஷோ… இதுதான இன்னைக்கு’ என்று தலையை துவட்டிக் கொண்டே வெளியே வந்தவனிடம்,

‘டேய்! ஆர்க்கிமெடிஸ்… ராத்திரி கே-டி.வியில செம்ம படம் போடுறான்!’

‘போடு. சீக்கிரம் வர்றோம். படம் பாக்குறோம்!’

குளியலறையில் அத்தனை கணக்குகள் போட்டவன், அத்தனை முடிவுகள் எடுத்தவன், சாயங்காலம் ஆஃபிஸிலிருந்து வந்து கையில் ரிமோட்டை மட்டுமே மட்டுமே எடுத்தான்.

Advertisements

இன்டர்வியூ

படிப்பிற்கும் வேலைக்கும் இடையே இருக்கும் இடைவெளி ஒரு தியானம். கேம்பஸ் இன்டர்வியூ கலாச்சாரம் சண்டிகேசுவரர் சன்னிதியில் சொடக்குகள் போல், என்னும் எண்ணம் கொண்டவன் அவன். நம்பிக்கை அளிக்கும் ஆற்றுத் தண்ணீராக அவனுக்கு அது எப்போதும் தெரிந்ததில்லை. அதனை ஒரு மினரல் வாட்டராகவே அவன் பார்த்தான்.

ஏதோ ஒரு நம்பிக்கையில சென்னைக்கு வந்தேன் என்று கதை சொல்லத் துவங்கும் எத்தனையோ பேர்… இன்னும் எத்தனையோ பேரை சென்னைக்கு வரச் செய்திருப்பது கண்டு, பஸ் ஏறினான். ஏதோ ஒரு நம்பிக்கையில்!

வேலை கிடைத்தது. அடுத்ததாய் அதைவிட ஒரு நல்ல வேலை கிடைத்தது.
அடுத்ததாய் ஒரு வித்தியாசமான வேலை கிடைத்தது. எல்லாம் செய்தான்.

இருந்தும், MTC பஸ் ஸ்டாப்புகளில், MRTS ஸ்டேஷன்களில், எப்போதுமே மேஜைகளில் இடம் கிடைக்காத பூங்காக்களில், வார நாட்களில் அழகு கூடியிருக்கும் கடற்கரைகளில், லைட் ஹவுஸின் ஒளி ஆட்பரிக்கும் வீட்டு மொட்டை மாடியில், நண்பர்கள் கொடுத்த புத்தகங்களின் முகப்புரைகளில், சட்டென்று நினைவுக்கு வந்த ஒரு கவிதையின் முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் இருக்கும் இடைவெளியில்… ஆழமாய் ஒரு யோசனை அவனை அவ்வப்போது கடத்திச் சென்றுவிடும்.

ஜானி டெப்பின் முதல் பட வாய்ப்பு,

முகம்மது அலியின் சைக்கிள் திருடு போன நாள்,

சில்வஸ்டர் ஸ்டாலின் தனது நாயை விற்றது.

ஜிம் கேரியின் ஆசிரியர் ஒருவர் அவருக்கு அளித்த 15 நிமிடங்கள்.

இயக்குனர் பாலா முதல் முதலில் பாலுமகேந்திராவை சந்தித்தது

என்று ஏதாவது ஒரு அற்புதம், ஒரு அதிசயம் நடந்தால் நன்றாக இருக்குமே என்பதுதான் அந்த யோசனை.

அற்புதங்களும், அதிசயங்களும்தானே ஆச்சரியங்கள் தரும். இவை எதுவும் நடக்காவிட்டாலும் கூட, மேலே சொல்லப்பட்ட அனைவரும் நிலைத்து நின்றிருக்கலாம். இருந்தாலும், நம் வாழ்கையில் இண்டரெஸ்ட்டிங்காக… நாமே எதிர் பாராமல், ஒரு அழகான கதை வந்து நம்மை காலிங் பெல் அடித்து எழுப்பினால்… நன்றாக இருக்குமே என்று விரும்பினான்.

எங்கோ தூர தேசத்தில், மேகஸின்களின் அட்டை படத்தில், நாளிதழ்களின் நடுப்பக்கத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமே இதெல்லாம் நடக்கும் என்ற பெரும்பான்மை கருத்தை அவன் அறவே மறுத்தான்.

முக்கியமாக… ஒரு sudden surprise நம் வீட்டு காலிங் பெல் அடிக்க வேண்டுமென்றால், அதனிடம் அட்ரஸ் கொடுக்க வேண்டிய வேலை நம்முடையது என்று நம்பினான். அந்த ஒரு sudden surprise நோக்கிச் செல்ல முடிவு செய்து, இரண்டு மாதங்கள் திரைப்படங்களிலும், புத்தகங்களிலும் மட்டுமே முழு நேரம் கிடந்தான். முதல் மாதம் திரைபடங்கள், அதற்கடுத்த மாதம் புத்தகங்கள் என்று முடிவெடுத்து துவங்கினான். திரைப்பட மாதம் அவனை திகைக்கச் செய்தது, நாம் திரைப்படங்களை வேறு மாதிரியும், திரைப்படம் பார்ப்பவனை வேறு பார்வையுடனும் பார்ப்பது புரிந்தது. என்னடா எப்போ பார்த்தாலும் சும்மா படம் பார்த்துட்டே இருக்க என்று கேட்டவர்கள் அடுத்த மாதமான புத்தக மாதத்தில் அவனை பாராட்டுகளுடனும், வியப்புகளுடனும் அணுகினர்.

அந்த இரண்டு மாதம், கேள்விகள் இல்லாத எத்தனையோ உறவுகளால், சந்தேகங்கள் இல்லாத எத்தனையோ பார்வைகளால், நம்பிக்கையிழக்காத எத்தனையோ குரல்களால், பாராட்டி மகிழும் எத்தனையோ அறிமுகங்களால் நிரம்பியிருந்தது. அந்த இரண்டு மாதம்… அறுபத்தி ஓரு நாட்கள்… இறுதியில் அவனை கொண்டு சேர்க்கும் இடத்தில், அந்த sudden surprise இருக்க வேண்டுமென்று விரும்பினான்.

நடந்து செல்லும் பாதையின் அழகு, எவ்வளவு ஆனந்தம் தந்தாலும், சாய்ந்தமரும் இடம், நினைவுகளை அசைபோடும் அனுபவம் தரக் கூடியதாக இருந்தால்தானே பயணம் நிறைவுபெறும்!

இரண்டு நாட்கள் முன்பு, நண்பர் ஒருவர் அவன் எழுதியிருந்த கதையொன்றை படித்து விட்டு, அதிகாலையிலேயே மெசேஜ் மூலம் தன் கருத்துக்களை கூறினார்.

நேற்று ஒரு நாளிதழிலிருந்து அவனுக்கு ஃபோன் செய்து அவன் துவங்கியிருந்த வாசகர் வட்டம் பற்றி விசாரித்தார்கள். அவனும் சந்தோஷமாய் அது பற்றியும், அதில் கிடைத்த அனுபவங்கள் பற்றியும் பகிர்ந்துகொண்டான். ஃபோன் செய்தவர், கடைசியில், ‘உங்க பேர் ஸ்பெலிங் சொல்றேன் சரியான்னு சொல்லுங்க’ என்று கேட்டு குறித்துக் கொண்டதும் நன்றிகளுடன் ஃபோன் கால் முடிந்தது.

நேற்று நள்ளிரவில், முதல் முதலாய், கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஆங்கிலத்தில் கவிதை போலொன்று எழுதினான்.

இது போன்ற விஷயங்களால்தானோ என்னவோ, இரண்டு மாதம் உடனே முடிந்து விட்டதுபோல் உணர்ந்தான்.

இன்று… இன்டர்வியூதினம். காலையில் எழுந்து, ஆர்வாமாய் கிளம்பி வீட்டை விட்டு வெளியே சென்றவன் ஆட்டோ எடுத்தான். அரை மணி நேரம் முன்னதாகவே அலுவலகத்திற்கு சென்று வரிசையாய் வைக்கப் பட்டிருந்த இருக்கைகளில், முதல் இருக்கையை தேர்ந்தெடுத்து அமர்ந்தான்,

கதவு திறக்கும் சத்தம் கேட்ட போதெல்லாம், தோள்களை நிமிர்த்திக் கொண்டு, முதுகை நேராக்கிக் கொண்டான். தான் பெயரை சத்தமாக அழைத்துவிட்டால், அந்த இரண்டு மாதத்தில் தன்னை விட அதிகமாக தெரிந்தோ, தெரியாமலோ தன்னை நம்பியவர்களுக்கு ஒரு ஆனந்தத்தை, ஒரு sudden surprise அனுபவத்தை பரிசளிக்க விரும்பினான்.

கொஞ்ச நேரத்தில் ஒருவர் மெதுவாய் வந்து, ‘இன்டர்வியூக்கு வந்திருக்கீங்களா?’ என்று கேட்டுவிட்டு ஒரு சேரின் மீது நியூஸ் பேப்பர்களை வைத்து விட்டுச் சென்றார். இன்டர்வியூ கலை முகத்திலேயே தெரியுது போல என்று நினைத்துக் கொண்டான்.

கொஞ்ச நேரத்தில், ‘உங்கள சார் கூப்பிடறார்…’ என்று அவனை உள்ளே அழைத்தார் அந்த நியூஸ் பேப்பர் வைத்தவர். உள்ளே, சிரித்த முகத்துடன் ஃபார்மல்ஸ் அணிந்த ஒருவர் good மார்னிங்குடன் அவனை வரவேற்றார்.
‘காஃபி குடிப்பீங்களா?’ என்று கேட்டவர், அவன் வேண்டாமென்றதும் அவருக்கு வந்த காஃபியை குடித்துக் கொண்டே, ‘ரெண்டு நிமிஷம்’ என்று சொல்லி, மேஜையில் இருந்த நியூஸ்பேப்பரை புரட்டினார்.

வேக வேகமாய் பக்கங்களில் படர்ந்த அவர் பார்வை, ஒரு பக்கத்தின், சிறு கட்டத்தில் நின்றது. சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்து…

‘உங்க பேரு…’ என்று அவர் கேட்க அவன் தன் பெயரை சொன்ன நேரத்தில், அவன் நோக்கிச் சென்ற sudden surprise எதிர் நின்றது.

ஒரு இன்டர்வியூ தினத்தின் போது… தனது இன்டர்வியூ ஒன்று பேப்பரில் வந்திருப்பதே… இரண்டு மாதத்தின் பயனாக அவன் கருதிய நொடியில் அந்த sudden surprise கை குலுக்கியது.

******
சுஜாதாவின் பேப்பரில் பேர் என்ற சிறுகதை எழுதப் படாமல் இருந்திருந்தால், இந்தக் கதைக்கு பேப்பரில் பேர் என்றே தலைப்பு வைத்திருப்பான் அவன்!! சுஜாதா விட்டு வைக்காத எத்தனையோ விஷயங்களில் இதுவும் ஒன்று என்று நினைத்து மகிழ்ந்தான்.

அதிவேகன் – சிறுகதை

**இது உங்கள் கதையாகவும் இருக்கலாம்!  கவனமாக படிக்கவும்.**

கொஞ்சமும் கவலைகளில்லாமல் அவ்வப்போது என்ன தோன்றுகிறதோ அதை செய்து நாட்களை நகர்த்தும் ஒருவன். நொடியில் எதற்கும் மனம் விடுவான், உடனுக்குடனே வெளிவருவான். குரங்கவன் மனமென்றும், கழன்றதவன் மறையென்றும், ஊர் சொன்னாலும்; தினமும் கனவுகளோடும், சுழலும் எண்ணங்களோடும் சுற்றிவரும் ஒருவன்.

அவன் எவர் கண்ணுக்கும் தென்படாத, எவருக்கும் புலப்படாத சின்ன சின்ன வெற்றிகளை உண்டியலில்சேர்த்து வைத்துக்கொள்வான்.

உண்டியலில் எவ்வளவிருக்கிறது என்று, கணக்கு வைத்துக் கொண்டால் கூட மறந்துவிடும். சிலநேரங்களில் உண்டியல் என்ற ஒன்று இருப்பதும் கூட மறந்துவிடும். அலமாரியில் இருக்கும் மற்றுமொரு மறக்கப்பட்ட பொம்மையாகவே பல நேரங்களில் அது ஆகிவிடும்.

அதிவேகன், பெயரிலேயே தன் குணம் ஏந்தி நடப்பவன். எல்லாம் வேகமாய் நடந்துவிட வேண்டும்.பொறுமையென்பது, அவன் அவ்வப்போது திறந்து பார்க்கும் டிக்‌ஷ்னரியில் மட்டுமேயிருக்கும்.

கண்ணில்படும், அழகழகான ஓவியங்களின் வசம் ஈர்க்கப்பட்டு, அவற்றை வாங்கி தன் சுவறெங்கும் மாட்டி வைக்கும் பழக்கம் கொண்டவன்.

பலரும் ஏன் எதற்கென்று கேட்டும், வெட்டி வேலை என்று சொல்லியும், தனக்கே உரிய பாணியில்  ஒவ்வொரு ஓவியத்திற்கும் விளக்கமளிப்பான். ஒரு சில ஓவியங்களுக்கான விளக்கத்தை அவனின்னும் வார்த்தைகளில்  வகுக்கவில்லை. அவற்றைப் பற்றி கேட்டால், ஒரு அதீத புரிதலை நோக்கிச் செல்வதாய் சொல்லிச்  சிரிப்பான். பலருக்கு அவன் புத்திசாலி, சிலருக்கு அடிமுட்டாள், சிலருக்கு அவன் அரிய வகை, எஞ்சியிருப்பவர்களுக்கு அவன் சரியான டைம் வேஸ்ட்!

நேற்று என்ன நடந்திருந்தாலும், காலையில் எழுந்து சிரித்த முகத்துடன் எல்லோரையும் சந்திக்கும்  அசகாய சூரத்தனத்தை, அழகாகச் செய்யப் பழகிய அதிவேகன், அன்றும் சிரித்த முகத்துடன் வெளியேசென்றான்.

வீடு திரும்புகையில் அவன் கையில் ஒரு புது ஓவியம். ஆசையாசையாய் வாங்கி வந்தவன், வீடு வந்ததும் முகம் வாடிப் போனான். தன் மெத்தையில் அமைதியாய் அமர்ந்து, சுவற்றில் மாட்டப் பட்டிருந்த ஏராளமான ஓவியங்களின் மீது தன் பார்வையை மெல்லமாய் படரச் செய்தான். அவன் உலகில்… அவன் அறையில் அதுவொரு அதிசய அமைதி!

எந்த நிகழ்வின் காரணமும், அவசியமும் அந்த நிகழ்விலேயே ஒய்யாரமாய் லயித்திருப்பதை உணர்ந்தவன்… அந்த நேரத்தின் அமைதியின் காரணத்தை, அமைதியிலேயே தேடத் துவங்கினான்.

எங்கு  உண்மை நம் நம்பிக்கைகளை, இதுவரை நாம் வாழ்ந்த வாழ்வை, நம் நடைமுறையை, நம் வழக்கங்களையெல்லாம் பொய்யாக்கிவிடுமோ என்று வியர்த்தான். பாவம்! உண்மை கண்டு பயப்படும் சாதாரண மனிதன் தானே!

கழுத்து இறுகியது, காதடைத்தது, இருந்தும் விடா பிடியாய் அமைதியில் பல தூரம் கடந்தான்.அமைதியின் பாதையில்தான் எத்தனை சத்தம்! பல மில்லியன்களில் கேள்வி மின்னல்கள் தாக்க, அவற்றின் நடுவே அவன் சிக்கித் தவிப்பது, திக்கித்தினறியது அவன் முகத்திலேயே தெரிந்தது.

சட்டென்று அமைதியின் ஆழம் தொட்டான்… அமைதிக் குழியின் அஸ்திவாரமாய் அக்கினிக் கேள்விகள். பதில்தேட… தோண்டினான். இன்னும் ஆழமாய்!

சட்டென்று நிமிர்ந்தான், முதல் முதலில் வாங்கி ஆசையாய் ரசித்த ஓவியத்தைப் பார்த்தான். ஆரம்பத்தில் அது அளித்த சந்தோஷம் காலப்போக்கில் இல்லாமல் போனதை உணர்ந்தான். மெது மெதுவாய் சுவரோடு சுவராகி கொஞ்ச காலத்தில், அந்த ஓவியம், சுவராகவே ஆகிவிட்டதை உணர்ந்தான்.

அப்படியே ஒவ்வொரு ஓவியமும் சுவராகியிருப்பதை…

அழுக்கேறியிருப்பதை…

ஈர்ப்பிழந்திருப்பதைக் கண்டு. கண் கலங்கினான்.

‘என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்!! எங்கே என்னை சிரிக்க வைத்த வண்ணக் கோலங்கள்… எங்கே என்னை மகிழ வைத்த ஓவியங்கள்! இங்கிருப்பவையெல்லாம் சுவராகிப் போனதெப்போது! காரணம் நானா! அதிலென்ன சந்தேகம் வேறு எவராக இருக்க முடியும் நான்தானே ஆசை வளர்த்தேன். நான்தானே அடுக்கி வைத்தேன்!’ என்று அலறினான்.

அத்தனை ஓவியங்களில் ஒன்று மட்டும் புதிது போல அவனை அழகாய் அருகில் அழைத்தது…சென்றான். அவன் கவனிக்காத சின்ன சின்ன கோடுகளும் சிந்திக்க வைத்தது. கண்மூடி விரல்களால்வருடினான், அதன் ஆன்மாவை நெருங்க முயன்றான், மாறாக அது அவன் ஆன்மாவை அள்ளியெடுத்தது.

ஒவ்வொரு ஓவியமாய் சுவற்றிலிருந்து கழற்றினான். முதல் பரிட்சயத்தின் அன்பை…அட்ரனலீனை கடைசிவரை அவற்றில் உணர முடியாமல் போனது நினைத்து உருகினான். இப்போது, அவனதுஆன்மாவை அள்ளியெடுத்த அந்த ஒரு ஓவியம் மட்டும்… நித்தியமாய் அவன் சுவற்றில்!

ஆடாமல் அசையாமல்,அவனை ஆளாமல் ஆக்கிரமிக்காமல், அப்படியே இருந்துவிட்டன பிற ஓவியங்கள். அதனால்தானே மதிப்பறியாமல் ஒதுக்கி வைத்துவிட்டான். அழகின், திறமையின், ஆசையின், அறிவின் இருப்பை… உணர்த்தும், எப்போதும் கவனமீர்க்கும் ஒன்று தனக்குப்  பிடித்தமான ஓவியத்தின் அருகே தேவையென்பதை கண்டு கொண்டு, அந்த ஒன்றைத் தேடிச் செல்ல முடிவுசெய்தான்.

சுவற்றிலிருந்து கழற்றிய அத்தனை ஓவியங்களையும், புதிதாய் வாங்கி வந்த ஓவியத்தையும் சேர்த்து ஒரு  மூட்டை கட்டிக் கொண்டு வேக வேகமாய்  வெளியே சென்றான். விடிந்ததும் வீடு வந்தவன், சுவற்றின் நடுவே இருந்த அந்த ஆன்ம ஓவியத்தின்  பக்கத்தில்… ரொம்பவும் பக்கத்தில், புதிதாய் ஒரு ஆணியடித்து தான் வாங்கி வந்த கடிகாரத்தை மாட்டினான்.

ஏனோ எனக்கவளை ஆம்ஸ்டர்டாம் அழைத்துச்செல்ல வேண்டும்

உன்ன இப்போ பார்க்க எப்படித் தெரியுமா இருக்கு என்றவள் ஒவ்வொரு முறை கேட்கும் போதும், நான் ‘எப்படி இருக்கு?’ என்று கேட்பேன்.
ஒவ்வொரு முறையும் என் கேள்விக்குப் பிறகே உவமை யோசிப்பாள்.

‘ஜீனியை பார்த்த அலாவுதின் மாதிரி!’

‘அலாரத்துக்கு முன்னாடியே எழுந்து மணி பார்த்த ஒரு சோம்பேரி மாதிரி’

‘கிரிக்கெட்டில் கடைசி நேரத்தில் இந்தியா ஜெய்த்ததை பார்த்தவன் மாதிரி’

‘தன்னையே அறியாமல் முதல் முத்தம் தந்துவிட்டவன் மாதிரி’ என்று என்னென்னவோ சொல்வாள். நானும் அசட்டுச் சிரிப்பு ஒன்று சிரிப்பேன்.

எப்படி ‘இன்னைக்கு க்ளாஸ் முடிஞ்சுது’ என்று வாத்தியார் சொல்லிக் கேட்டால் மட்டும் எக்ஸ்ட்றா இனிக்குமோ அது மாதிரி, இதெல்லாம் அவள் சொல்லிக் கேட்டால் நீங்கள் கூட அசடு வழியலாம். வாய்ப்புகள் அதிகம்!

அவளது அத்தனை ‘அந்த மாதிரி இருக்கு’ வாக்கியங்களும் பொய். அந்த உவமைகள் விளக்கும் முகங்கள் எதுபோலவும், அவளை பார்க்கும் நேரத்தில் என் முகம் இருப்பதில்லை.

எனக்குத் தெரியும்… எனக்குத் தெரியும் அதெப்படி இருக்குமென்று. நான் பார்த்ததில்லை ஆனால் எனக்குத் தெரியும் அந்த முகம் எப்படி இருக்குமென்று.

ஆறு வயதில் அப்பா வாங்கி வந்த அந்த பெரிய ஆயில் ப்ரிண்ட்டட் கேலண்டரில், முதல் முதலில் நான் ஆம்ஸ்டர்டாம் பார்த்த போது என் முகம் எப்படி இருந்ததோ அப்படி இருக்கும் ஒவ்வொருமுறை அவளை பார்க்கும்பொழுதும்!

எனக்கவளை ஆம்ஸ்டர்டாம் அழைத்துச்செல்ல வேண்டும், ஒரு வேளை அவளது கேள்விக்கான சரியான பதிலை அங்கவள் கண்டுகொள்வாள்!

ஆரம்பம் – சிறுகதை

‘ஏன் எப்பவும் பத்து ரூபா டிக்கெட்ல படத்துக்கு கூட்டிட்டு போற… காசா இல்ல நம்மகிட்ட’

‘ஒரு உழைப்ப… ஒரு படைப்ப பக்கத்துல வச்சு ரசிக்குறேன்னு வச்சுக்கோ!’

‘நான் உழைப்பா படைப்பா?’

‘உழைப்புல … படைப்புல ப ‘

‘ஆரம்பமா! சரி… அப்போ முடிவு?’

‘நீ கேள்வி கேட்க கத்துகிட்ட அளவுக்கு காதலிக்க கத்துக்கல’

‘ஒரு எழுத்தாளன காதலிச்சா அப்படித்தான்’

‘இப்போ நான் புரியலன்னு சொன்னா விளக்கம் கிடைக்குமா சண்டை நடக்குமா?’

‘விளக்கம் என்னன்னு தெரிஞ்சே புரியலன்னு சொன்னா என்ன பண்றது?’

‘நான் எழுத்தாளந்தான… நடிகன் இல்லையே!?’

‘நீ எழுதுற கதையெல்லாம் ஒரு வாசகியா… ரசிகையா படிச்சா காதல் வரலாம். இல்லன்னா கேள்விதான் நிறைய வரும்.’

‘வாசகியா… ரசிகையாவே இருந்திருக்கலாமே?’

‘வாசகியா இருக்க தேவையில்ல. ரசிகையா இருக்க தோனல’

‘என்னோட எழுத்துக்கு அவ்வளவுதான்னு சொல்றியா?’

‘நான் அப்படி எதுவும் சொல்லலையே’

‘கொஞ்சம் நேரா பார்த்தே நடந்துவா. எல்லாரும் நம்மலையே பாக்குறாங்க’

‘என்ன எழுத்தாளன நடிகனாக்கும் முயற்சியா இது?’

‘அப்பப்போ நடிச்சா நல்லதுதான்’

‘நடிகன உனக்கு புடிச்சு போச்சுன்னா.. எழுத்தாளன் பாவமில்ல?’

‘ஓ! எழுத்துக்குதான் உண்டுன்னு நெனச்சேன். எழுத்தாளனுக்கும் உண்டா உணர்ச்சியெல்லாம்?’

‘இல்லாமலா…! இப்போ இது என்ன கேள்வி பதில் நேரமா?’

‘என்ன விட நீதான் நிறைய கேள்வி கேட்டிருக்க. உனக்கு தோத்துப் போறதுன்னா பிடிக்குமா என்ன?’

‘மறுபடி ஆரம்பமா?’

‘மறுபடி!? நான் எப்பவுமே ஆரம்பம்னு நெனச்சேன்!’

‘நீ எழுத ஆரம்பிக்கலாம் எனக்கு பதிலா. இப்போ படம் ஆரம்பமாக போகுது வாசகி!’

‘சிரிச்சுட்டே உன் கைய புடிச்சுட்டு வரணுமா?’

‘வாசிகியேன்னு கூப்பிடுப் போதெல்லாம் வா சகியேன்னு கேட்கும்னு நெனச்சேன்.’

‘கேட்டுச்சு.’

‘அப்புறமென்ன…!’

‘வேற புது வசனம் எதாவது எதிர்பார்த்தேன்.’

‘அடியே! டைட்டில் கார்ட்ல எம்பேரு வரும். பார்க்கணுமா வேண்டாமா?’

‘ஹப்பா! இத சொல்ல எவ்ளவு நேரம்! வாய திறந்து சொன்னா என்ன கொறஞ்சு போய்டுவீங்களா மை டியரஸ்ட் வசனகர்த்தா அவர்களே. முதல் படத்துக்கே இவ்ளோ அழுத்தம் கூடாது!
வாங்க… போவோம்’

என்று சொல்லி ஆரம்பம் அவனை பெருமிதமாய் புன்னகைத்துக் கைபிடித்து திரையரங்கிற்குள் அழைத்துச் சென்றது.

எண்ணி எண்ணி – ரொம்ப சின்ன கதை

நாங்கள் இரண்டு நாட்கள் தொலைபேசியில் பேசி, மூன்றாம் நாள் சந்தித்து, சந்தித்த நாள் முதல், 3 நாட்களில் 2 முறை சந்தித்து கிட்டத்திட்ட 14 மணி நேரம் ஒன்றாக இருந்து 15வது மணி நேரத்தில் 1 குறுஞ்செய்தியில் பிரிந்தோம்.

சென்னையில் கடைசியாக பட்டாம்பூச்சி பார்த்தது, 2 வாரங்களுக்கு முன் மட்றாஸ் க்ரிஸ்டியன் காலேஜில்.

நான் உறங்கும் படுக்கையறை சுவிட்ச் போர்டில் மொத்தம் 6 சுவிட்சுகள்.

1 வருடத்தில் என் மொபைலில் மொத்தம் 2,677 ஃபோட்டோக்கள்.

டிவி ரிமோட்டில் மொத்தம் 41 பட்டன்கள். அதில் இரண்டு மட்டும் சிவப்பு.

என் நெற்றிச் சுருக்கத்தில் ஐந்தரை கோடுகள்.

‘உன் முகம் ஹைலி சிமெட்றிக்’ என்று ஒருத்தி சொன்ன பின் கண்டறிந்தேன் என் முகத்தில் இரண்டு கண்களில் 1 சிறிது.

பள்ளி நாட்களில் ஒரு பெயர் நினைவில்லாத ஸைன்ஸ் ஒலிம்பியாட்டில் மாநில அளவில் 10வது இடம் பெற்றேன்.

இதுவரை சந்தித்த 5 இண்டர்வ்யூக்களிலும் அந்த செர்டிஃபிகேட்டை காண்பிக்கவில்லை. காரணம், இன்றும் என்னால் நம்பமுடியவில்லை.

22 வருடங்களில் வீட்டிலிருந்து 4 முறை காசு திருடியிருக்கிறேன்.

கடந்த இரண்டு மாதங்களில் நான் பாதியில் படிப்பதை நிறுத்திய புத்தகங்களின் எண்ணிக்கை 3.

கடந்த 10 நாட்களில் 4 முறை ஆந்திரா மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறேன்.

உறங்க விடாத அவள் எண்ணங்களை இப்படி எதையெதையோ எண்ணி எண்ணி வெளியேற்ற முயல்கிறேன்.

இந்தக் கதையில் இதுவரை 14 முற்றுப்புள்ளிகள்.

இதோடு 15 முற்றுப்புள்ளிகள்.

இதனையும் சேர்த்தால் 16.

இதோடு 17.
.
.
.
.
.
.

இருபது கிலோமீட்டர் – மூன்று சந்தேகங்கள்!

‘உனக்கு டைம் ஆச்சு… போலாமா?’
அவள் மெல்ல அவன் முகம் பார்த்தாள்… ‘என்ன பாக்குற… எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். எப்போ மழை பெய்யும்னு வேற தெரியல’
‘சரி வா…’ என்று எழுந்து மொபைல், பர்ஸ் எல்லாம் கையில் எடுத்து வீட்டுக்குப் போக தயாரானாள்.

அங்கிருந்து அவள் வீட்டிற்கு ஆட்டோ எடுக்க முடிவு செய்து, ஒரு ஆட்டோவை நிறுத்தினால் வழக்கம் போல மீட்டருக்கு மேல குடு என்று ஆரம்பித்தார். ட்ராஃபிக், மழை, தீபாவளி சீஸன் ரிட்டர்ன் சவாரி இருக்காதுப்பா என்று ஏதேதோ சொல்லி கடைசியாக ஒன்றரை மீட்டர்க்கு வந்து நின்றார். அவன் அவளை பார்த்து, பரவாயில்லையா என்று கேட்க பரவாயில்லை என்று தலையாட்டினாள்.

‘மீட்டர் பாத்துக்கப்பா…’ என்று அவர் சொல்லி முடிக்க, ஆரம்பித்தது இருபது கிலோமீட்டர் பயணம்.

‘ஒன்றரை மீட்டர்னா என்ன…?’ என்று கேட்டாள்.

‘அது தெரியாமலே ஓகே சொல்லிட்டியா நான் கேக்கும்போது…’ என்று அவன் சிரிக்க.
‘சரி.. சரி.. சிரிக்காத. சொல்லு! அப்புறம் அங்க போனதும் என்னால சமாளிக்க முடியாது அவர் எதாது சொன்னா’ என்றாள் அவள்.
‘கடைசியா மீட்டர் எவ்ளோ காமிக்குதோ அது கூட அதோட பாதி சேர்த்து குடுக்கணும். நூத்தம்பது ரூபா வருது அப்டின்னா எழுபத்தஞ்சு ரூபா சேர்த்து குடுக்கணும். நான்தான் வருவேன்ல அப்புறம் என்ன…’
‘நீ எதுக்கு வரணும்… உன் வீடு வந்ததும் நீ இறங்கிடு. நான் தைரியசாலி பொண்ணு’ என்றாள்.
‘தைரியசாலி கூட இன்னும் ஒரு மூணு கிலோமீட்டர் பேசலாம்னு நெனச்சேன்’ என்று அவன் சொல்ல லேசாக சிரித்து
‘அப்புறம் உன் இஷ்டம்’ என்றாள் அவள்.

எதிர் திசையில் வந்த கார்கள் நாணைந்திருப்பதை பார்த்ததும் அவன்
‘ஹே… அந்த கார் பாரு நனஞ்சிருக்கு!’ என்றான்.
‘அதுக்கென்ன…?’
‘அந்த பக்கம் மழை பெய்யுது…’
‘ஆனா அந்த கார் எந்த ஏரியாலேர்ந்து வருதுன்னு தெரியாதே’
‘அடுத்த கார் பக்கத்துல வரும்போது நிறுத்தி கேப்போம்’ என்று சொல்லி சிரித்தான்.
‘வேண்டாமே! நான் புத்திசாலி நானே சொல்றேன்.’ என்றாள்.
‘ஓகே புத்திசாலி! ஒன்றரை மீட்டர்னா என்ன சொல்லு…’ என்று அவன் கேட்க ‘இப்படியெல்லாம் பட்டுன்னு சொல்லிட கூடாதுடா.’ என்று குறும்பாக சிரித்தாள் அவள்.

அப்படியே பேச்சு கார்கள் பக்கம் சென்று அவனுக்கு பிடித்த கார்கள் அவளுக்கு பிடித்த கார்கள் என்று பெரிய வாக்குவாதம் நடந்தது.

அந்த வாக்குவாதத்தின் முடிவில் அதுவரை கேட்காத ஹாரன் சத்தங்களும், இல்லாத ட்ராஃபிக் கவலைகளும் ஆட்டோவிற்குள் நுழைந்தது. ஐந்து நிமிட அ  மை  தி. அமைதி நீள்வதை உணர்ந்த அவன்,
‘எதாவது கதை சொல்லு…’ என்றான் அமைதி உடைக்க.
‘எந்த கதையும் இல்லையே… உனக்கு கதை சொல்லி சொல்லி நான் தூங்கிடுவேன் போல.’ என்று சிரித்தாள். அவளுக்கு பதில் தேடிய நேரத்தில்

முதல் சந்தேகம் –

என்ன இவ்ளோ இடம் இருக்கு ஆட்டோ இவ்வளவு பெருசா! என்ற சந்தேகம் தலையில் ஏறியது. சிரித்தான்!

என்ன சிரிப்பு என்றவள் கேட்பதற்குள் சிரிப்பை அப்றம் வரச்சொல்லி அனுப்பி வைத்தான். சரி பாட்டு கேக்கலாமா என்று கேட்டு இயர்ஃபோன்ஸை எடுத்தாள்.

ஆறு மணி நேரத்திற்கு முன் ‘லேட் ஆகாது வண்டியில தான போறோம்’  என்று அவன் சொல்ல
‘வண்டி வேண்டாம்.’
‘ஏன்?’
‘ஆட்டோல போலாமே’ என்றாள் அவள்.
‘வண்டி இருக்கும் போது…’
‘வண்டில போனா பேசிட்டே போக முடியாது’ என்று சொன்னதை யோசித்து,
‘யாரோ ஆட்டோல போனா நிறைய பேசலாம்னு சொன்னாங்க…’ என்றான்.
‘நான் வண்டில போனா பேசிட்டே போக முடியாதுன்னுதான சொன்னேன்’ என்று சொல்லி சிரித்தாள்.
‘புத்திசாலி பொண்ணு…’ என்று அவன் சொல்லி தலையில் தட்ட
‘இயர்ஃபோனின் ஒரு முனையை அவனிடம் நீட்டினாள்

நொடிகளில்…
நீயும் நானும் சேர்ந்தே போகும் நேரமே
நீலம் கூட வானில் இல்லை
எங்கும் வெள்ளை மேகமே.

ஆட்டோ சிறிதானது… நீத்தி மோகன், அனிருத், தாமரையுடன்.

அவ்வப்போது கண்கள் சந்தித்தன. பிடித்த வரிகளை பகிர்ந்தனர்.

பாடல் முடியும் நேரத்தில் ‘எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்… ரொம்ம்ம்‌ம்ப!!’ என்று அவள் சொல்லி முடிக்க…

ஒரு தேவதை பார்க்கும் நேரமிது…        

ஆங்கிலத்தில் தமிழெழுதி ரூப் குமார் ரதோட் அழகாக பாடினார். யுவன் ஷங்கர் ராஜா, நா. முத்துகுமார், ரூப் குமார் ரதோட்… ஆட்டோ சிறிதாகவே தொடர்ந்தது.

இரண்டு மூன்று நிமிடங்களில் ஆட்டோ மேலும் சிறிதானது. காரணம்… மழை!

மெதுவாக செல்லும் ஆட்டோ, இசை, மழை, அருகில் அவள் – ஒரு நிக்கோலஸ் ஸ்பார்க்ஸ் நாவலின் சுவாரசியமான பக்கம் போல அந்த நொடிகள் அமைந்த அந்த நேரத்தில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு சரியான அங்கீகாரங்கள் கொடுக்கப் படாததற்காக வருந்தினான் முட்டாள்!

அந்த நேரத்தில் அவள் பக்கம் பார்வை போக தலைக்கேறியது இரண்டாவது சந்தேகம் – இந்த பர்ஸ், மொபைல் இதெல்லாம் ஏன் பொண்ணுங்க கையிலையே வச்சிருக்காங்க. கண்டுபுடிச்சிருக்கவே கூடாதோ!

‘இன்னும் உன் வீட்டுக்கு போக எவ்ளோ நேரம் ஆகும்?’ என்று முட்டாள் கொஞ்சம் மூளையை பயன்படுத்திக் கேட்க.

‘ஒரு பதினஞ்சு நிமிஷம் ஆகும்’ என்றாள் அவள்.

‘அதுவரைக்கும் மொபைலையே புடிச்சிட்டு இருக்க போறியா?’ என்று அவன் மெதுவாய் கேட்க, வேகமாய் கடந்து சென்ற கடைத்தெருவை பார்த்தபடி ‘ஆமாம்’ என்றாள்.
மெல்லமாய் அவள் அவன் பக்கம் திரும்ப, அவன் தலையாட்டிய படி சிரித்தான். புருவம் உயர்த்தி என்னவென்று கேட்டு சிரித்தாள் புத்திசாலி.
‘இப்போ நான் சொன்னது உனக்கு புரியல…’ என்று சிரித்துக் கொண்டே அவன் கேட்க இல்லையென்று வேகமாய் தலையாட்டினாள் இருபத்தியோரு வயது சிறுமி.
‘மழையில நனஞ்சுட போகுது… உள்ள வச்சிடு. காஸ்ட்லி மொபைல். எனக்கு பார்க்க வருத்தமா இருக்கு.’ என்று அவன் கூற, உதடு குவித்து கண்களில் கள்ளம் சேர்த்து சிரித்தாள் – அவள் மகாநடிகை!
‘இதுவும் உனக்கு புரிஞ்சிருக்காதே…’
‘இல்ல…’ என்று வேகமாய் தலையாட்டி என்னவென்று கேட்டாள் அவனை வென்றவள்.
‘இல்ல… உனக்கு புரியவே வேண்டாம்! மக்கு!’ என்று பல்லில் சொல் வைத்துக்  கடித்துத் துப்பினான்.

இறங்க வேண்டிய இடம் வந்தது…
‘அடியே! தைரியசாலி… ஒழுங்கா ரோடு க்ராஸ் பண்ணிடுவியா?’ என்று கிண்டலாக கேட்ட அவனிடம்
‘அதெல்லாம் க்ராஸ் பண்ணிடுவேன். என்னோட ஏரியா….அடுத்த முறை மீட் பண்ணும் போது எப்படி ரோடு க்ராஸ் பண்ணேன்னு சொல்றேன்’ என்று சொல்லிச் சென்றாள் அவள்.

சந்தோஷமாய் கையசைத்து வீடு திரும்ப ஆட்டோவிற்குள் ஏறி ஆட்டோக்காரரிடம் ‘வரும்போது ஒரு சூப்பர் மார்க்கெட் பார்த்தீங்களே சிக்னல் பக்கத்துல ஆனா போகணும்’ என்று சொல்லி முடிக்கையில் மூன்றாவது சந்தேகம் – அடுத்த முறை எப்போ?

சட்டென்று திரும்பிப் பார்த்தான் அந்த புத்திசாலி பத்திரமாக சாலையை கடந்திருந்தாள். அவன் மொபைல் ஃபோன் சினுங்கியது…

நாளைக்கு சாயங்காலம் டான்ஸ் க்ளாஸ் கேன்ஸல் பண்ணிட்டாங்க 🙂

முதல் முதலாய்

பார்வை. முத்தம். மெல்லிய மௌனம். தித்திக்கும் சொற்கள். கை சேர்த்த பொழுதுகள். நினைவுகள் தந்த கவிதைகள். இவை அனைத்தும் சுகம் தரும், கனவுகள் தரும். இன்பம் தரும் இன்னும் வேகம் தரும்.

பாடல்களில் கேட்காத வருணனைகளா, கதைகளில் பேசாத ஆச்சரியங்களா… எல்லாம் கேட்டு ரசித்தாகிவிட்டது. இதைத் தாண்டி எதுவும் இருக்குமா என்று கொஞ்சம் திமிராகத்தான் திரிந்தேன். நேற்றுவரை!

கண்டதும், கேட்டதும், படித்ததும், கவிதைகளில் வடித்ததும் – தூசி என்று தட்டி விட்டாள் அவள். மெய்யென்ற வார்த்தைக்கு மெய்யான விளக்கம் தந்தாள். இப்போதும் கூட வார்த்தைகள் சிதறுகின்றன. ஒரு கோர்வையில் அமைய மறுக்கின்றன. அவள் செய்த வேலை இது!

பெண்மை – எழுதும் எண்ணமும் தந்து, எண்ணிலடங்கா சொற்களும் தந்து எண்ணங்களை விழுங்கும் குழப்பமும் தந்துவிடும்!
வழக்கத்திற்கு மாறாக இம்முறை குழப்பத்தின் அளவு ரொம்பவும் அதிகம். காரணம் இது முதல் முறை.

ஆம்! முதல் முறை…

அந்த இரவினிலே தனை மறந்து அவளும்
அவள் அருகினிலே எனை தொலைத்து நானும்
…  

எதிர்பாரா இன்பம். எக்கச்செக்கமாய் எனை வந்து சேர நிஜமாய்… நிதானமாய் ரசித்தேன் அவளையும் அந்த நிமிடங்களையும்.
அழுது உறங்கியிருப்போம், அளவு கடந்த ஆனந்தத்தில்!? நேற்று நான் உறங்கிப்போனேன்.

******

இரவு பதினோரு மணி இருக்கும். அனைவரும் அனேகமாய் உறங்கியிருக்க வேண்டும். அந்தப் பேருந்தில் கண்ணாடி ஜன்னல்கள் காற்றை கிழிக்கும் சத்தம் மட்டுமே நிறைந்திருந்தது. அதுவரை பேசிக் கொண்டிருந்த அவள் நான் ஏதோ சொல்ல,

‘எனக்கு தூக்கம் வருது’ என்று எனக்கு மட்டும் கேட்கும் படி கூறினாள்.

‘தூங்காத!’ என்றேன். ஏன் என்று அவள் கேட்டிருந்தால், உறங்கியிருக்க மாட்டாள் என்று நினைக்கிறேன். இருந்தும் பெண் ஆயிற்றே… கேட்க மாட்டாள். தேவையானபோது மட்டும் அந்த ஆயுதத்தை உபயோகித்து தோற்கடிப்பாள் என்னை.

‘நான் தூங்க போறேன்’ என்றாள். இம்முறை அதில் கொஞ்சம் உண்மை இருந்தது. இருந்தாலும், இருமுறை பன்னிரெண்டில் முட்கள் சந்தித்தால், மறுநாள் கேலண்டரில் தேதி மாறினால் நான் ஒரு புறம் அவள் ஒரு புறம் என்ற நினைப்பு என்னை உறங்கவிடவில்லை.

‘அதுக்கு முன்னாடி ஒரு கதை சொல்றேன்.’ என்று நான் சொல்ல கண்களை மூடிக் கொண்டாள். பதில் எதுவும் இல்லை, இருந்தாலும் சொல்லத் துவங்கினேன். ‘பலரும் கூடியிருந்த ஒரு பெரிய மண்டபத்தில் அவர்கள் முதலில் சந்தித்தார்கள்…’ என்று துவங்கி அன்று நடந்த நிகழ்வுகளை நான் கதை வடிக்க, கேட்டோ கேட்கப் பிடிக்காமலோ உறங்கிப் போனாள் என் அன்பானவள்.

******

அவள் உறங்கியது தெரிந்தும் ஆரம்பித்த கதையை முடிக்க விருப்பமின்றி சொல்லி முடித்தேன். அதில் ஒரு சுதந்திரம் இருந்தது, நான் சொல்ல நினைத்த கதையின் கருமாறாமல், உருமாறாமல் சொல்லி முடித்து அவளை பார்த்தேன்.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தை, ஒரு நீண்ட நெடும் கடற்கரையை பார்ப்பது போல பார்த்தேன். இரண்டையுமே அள்ளி எடுத்து சொந்தம் கொண்டாட ஆசையுண்டு!

இமைகள் தடுக்கவில்லை, அவை அந்த பார்வையின் அவசியத்தை உணர்ந்திருக்க வேண்டும். உறக்கம் அழைக்கவில்லை, அது என் மனதின் எண்ணங்களை அறிந்திருக்க வேண்டும்.
இனி எப்போது பார்ப்பேன் என்று தெரியாது, அதனால் அவளை, என் அருகில் உறங்கிக் கொண்டிருந்த நெருக்கமானவளை, பார்வையால் இதயத்தின் அறைகளில் பத்திரப் படுத்த்தினேன்.

உறக்கம்தான் எத்தனை அழகானது. வஞ்சமில்லை அதில் கள்ளமில்லை. பொறாமை உணர்வு இல்லை. தீராத ஆசை இல்லை. நடிப்பு இல்லை பொய்யான நளினம் இல்லை. பசி தீர்ந்த குழந்தைபோல எவரை பற்றிய கவலையும் இல்லாமல், நம்மை நாமாக வைத்திருக்கும் அந்த உறக்கம்தான் எத்தனை அழகானது!

அவளுக்கு தெரியாமல் அவளை ரசிப்பது முதல் முறை இல்லை ஆனால் உறங்கும் அவள் முகத்தில் நிறைந்திருந்த அமைதியை ரசித்தது அதுவே முதல் முறை.

சந்தித்த முதல் நாளிலேயே கவியெழுத வைத்த அந்த முகத்தை, மூளையின் மடிப்புகளில் பதிவேற்றம் செய்து முடித்ததும் கனவுகளோடு கண்ணுறங்க முடிவு செய்தேன்.

ஒரு சில நிமிடங்கள் ஓடியிருக்கும் உறங்கிவிட்டேனா என்று எனக்கே தெரியவில்லை அப்படி ஒரு நிலை. ஒரு… ஒரு விதமான சந்தேகம். குழப்பம். விருப்பம். எல்லாம் சேர்ந்து என்னை வதைத்தன, கண் திறந்து பார்க்க கூட மனமில்லை. ஆனால் என்ன செய்வது, முடிவை தேடி ஓடுவதுதானே மனித மனம்.

மெதுவாக கண் திறந்து பார்த்தேன், அவள் என் தோள் மீது தலை சாய்த்திருந்தாள்.

சொன்னால் பலரும் நம்ப மாட்டார்கள்! அதுவரை அப்படி ஒரு ஆனந்தம் என் வாழ்வில் என்னை ஆட்டிப் படைத்ததில்லை. எல்லையில்லா சந்தோஷம் என்னுள் பாய்வதை என்னால் உணர முடிந்தது. நான் கொஞ்சம் உயரமாக இருந்ததால், கஷ்டப்பட்டு தோள் மீது சாய்ந்திருந்தாள். அதனால், மெதுவாக நான் அமர்ந்திருந்த நிலையை அவளுக்கேற்ப மாற்றினேன். எழுந்திடுவாளோ என்று கூட பயந்தேன். நல்ல வேளை அன்று அதிர்ஷ்டம் என் வசம் இருந்தது.

கண்கள் மூடி அந்தப் பொழுதை நான் ரசிக்க, ஆனந்த ராகத்தில் மூளைக்குள்ளே பல அலைகள் எழுந்து விழுந்தன. அது அடங்கும் முன் என் வலது கையை அவள் வசம் எடுத்து இருக்கிப்பிடித்து தனை மறந்து அவள் தூங்க, ஒரு முடிவில்லா நெடுஞ்சாலையில், யான்னியின் தி மெர்மெய்ட் (The Mermaid) கேட்டு மெய்மறந்து பயணிக்கும் பேரானந்தம் கொண்டேன். அந்த வேளையில், கனவா நிஜமா கேள்விகள் எழுப்ப நான் ஒன்றும் முட்டாள் இல்லை!! அணு அணுவாய் நிகழ்காலத்தை ரசிக்கும் ரசிகன் ஆனேன்.

சத்தியமா சொல்றேன்! அப்படி ஒரு நம்பிக்கை அப்படி ஒரு வேகம் அப்படி ஒரு உணர்வு இதுவரை எனை ஆட்கொண்டதில்லை. கனவுகள் எல்லாம் கை கூடி வரும் சந்தோஷம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை, ஆனால் அது இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த நெருக்கத்தில் ஒரு பிரியம் இருந்தது.
அந்த பிடிப்பில் ஒரு நம்பிக்கை இருந்தது.

புலன்கள் பூரித்தன
புதிதாய் புதிர் போட்டன
எல்லாம் அளவோடு இருக்க
சந்தோஷம் மட்டும் தேவைக்கதிகமாய்!

எதுவும் நிலையில்லை என்ற உண்மையை ஆழமாய் நம்பும் ஒருவன் கூட அந்த ஆனந்தம் நிலைத்திட விரும்புவான். நானும் அப்படித்தானே விரும்பினேன்!

ஸ்வரோவ்ஸ்கி வாட்ச்… லூய் வெட்டன் லெதர் வாலெட்… இவை அனைத்தும் மதிப்பிழந்து போகும் நிஜ ஆனந்தம் அது.

சிரித்தேன். வேறு கண்கள் ஏதாவது விழித்திருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை… அவள் முகத்தை பார்த்துவிட்டு கண்களை மூடி இந்த உணர்வுக்கு பெயர் தேடி அலைந்தேன். முதல் முதலாய் அவள் பரிசளித்த இந்த உணர்வுக்கு பெயர் வைத்து விழா எடுப்பதெதற்கு. பெயரேதுமின்றி எனக்குள் நானே பொத்தி வைத்து ரசிக்கும் எண்ணம் கொண்டு அப்படியே உறங்கிப் போனேன்!

மீட் பண்ணலாமா?

‘அடியே! சன்டே அதுவுமா என்ன பண்ற..?’ என்று எழுந்ததும் அவளுக்கு ஒரு மெசேஜ் அனுப்பினான் அவன்.

‘எம்‌.எஸ். அப்ளை பண்ண யூனிவர்சிட்டி லிஸ்ட் பார்த்துட்டு இருக்கேன்’ என்று ரிப்ளை வந்தது அவளிடமிருந்து.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை. நாலு வருஷம் இன்ஜினியரிங்கில் முட்டி மோதியபோது, அவன் அம்மா நச்சரித்த போது… என எப்போதும் எம்‌.எஸ். என்ற இரண்டெழுத்து அவனை பாதித்ததில்லை அவள் சொல்லும் வரை.

எப்போதும் சட்டென பதிலனுப்பும் அவன், இம்முறை தயங்கிகினான் திணறினான். அவனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஏதோ நாளைக்கே அவள் மூட்டை முடிச்சை எடுத்துட்டு ஃப்ளைட் புடிக்கிற பயம் அவனக்கு.

‘மீட் பண்ணலாம்.’ என்றான்

‘என்ன திடீர்னு..?’ என்று கேள்வி எழுப்பினாள் நிஷா.

*ரெண்டு வருஷம்.. நடுவுல வருவேனான்னு தெரில. பார்க்கலாம்! அப்படினு நீ சொல்லிட்டு போனதும், நான் நெனச்சு பார்த்து சந்தோஷப் பட நிறைய கதை வேணும். நீ இங்க எம்பக்கத்துல இல்லாதப்போ உன்ன நான் மிஸ் பண்ணனும். லெட்ஸ் மீட்! இதைத்தான் அவன் சொல்ல விரும்பினான்  என்றாலும், சும்மா டிராமா பண்ணாத என்று பதில் வரக்கூடும் என்பதால்

‘சும்மா கேள்வி கேட்காத நிஷா. லெட்ஸ் மீட். அவ்ளோதான்.’ என்று அனுப்பினான்.
இப்படி பல நேரங்களில் நாலாயிர திவ்ய பிரபந்தம் அளவுக்கு யோசித்தாலும் நாலடியார் அளவுக்குத்தான் பதில்கள் எழுதுவோம். எல்லோரும் அப்படித்தான் என்ற நம்பிக்கையில் நான் சிரித்த முக்கத்துடன் எழுதுகிறேன். இல்லை என்றால் இப்போதே சொல்லிவிடுங்கள்!!

‘கண்டிப்பா. சென்னை வருவேன்…

அப்போ மீட் பண்ணலாம்’ என்று இன்ஸ்டால்மெண்ட்டில் பதில் வந்தது அவளிடமிருந்து.

காலண்டரை(Calendar) வேக வேகமாக பார்த்து அடுத்த லாங்க் வீக்கெண்ட் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தேடினான். அதற்கு இன்னும் ரெண்டு வாரம் இருந்தது!!

மெசேஜிங்ல ஒரு பெரிய பிரச்சனையே அவங்க இதுதான் சொல்ல வர்றாங்கன்னு நம்மளா ஒன்னு நெனச்சிப்போம். நாம தப்பு கணக்கு போட விசாலமான இடமிருக்கு மெசேஜிங்ல. இதெல்லாம் தெரிந்திருந்தாலும் வக்கணையாக பேசினாலும், அதைத்தான் நாம் பல நேரங்களில் விரும்புகிறோம்.

இதில் என்ன ரிப்ளை பண்றது என்று யோசித்தே நேரம் ஓடிவிடுகிறது.
*காலையில பெஸ்ஸி, அப்றம் திருச்சி-சென்னை ஹைவேல ஒன்லி காஃபி இந்தியால சுட சுட காஃபி. அப்டியே என்ன பத்தி கொஞ்சம், உன்ன பத்தி நிறைய… பேசணும். ஒரு சந்தோஷமான நாள். இது நடந்தா நல்லா இருக்கும்னு உனக்கே தோனலையா நிஷா? 
வழக்கம் போல ஏதோ வார்த்தைகளை வாடகைக்கு எடுத்தது போல.. சிக்கனப் பிடித்து

‘வரும்போது மறக்காம சொல்லு…’ என்பதை மட்டும் அனுப்பிவைத்தான்.
புளு டிக். ஆனால் பதிலேதும் இல்லை அவளிடமிருந்து.

இது ஒரு பெரிய விஷயமா என்று யோசிப்பவர்களுக்கு சொல்கிறேன், ரொம்ப பெரிய விஷயம்!! ஒரு சில நாட்கள் அவளிடமிருந்து ரிப்ளைக்கு காத்திருந்து ஆஃபிஸ்க்கு லேட்டாக சென்றிருக்கிறான்.

அதன் பின் எப்போது அவள் சிந்தனை உதித்தாலும், ஏர்போர்ட், கடைசி மெசேஜ், வெவ்வேறு டைம் ஸோன்(Time Zone), இவையெல்லாம் தான் அவனை அச்சுறுத்தின.

அதிலும் அவள் செல்வதற்கு முன் ஒரு பத்து நாள் ரொம்பவும் மோசமாகக் கூடும்.
‘என்ன பண்ற?’ என்று அனுப்பினால்
‘தேவையானதெல்லாம் வாங்கிட்டு இருக்கேன். வீட்டுக்கு போனதும் மெசேஜ் பண்றேன்.’ என்றொரு ரிப்ளை வரும்.
அதோடு மறுநாள் காலை எழுந்ததும் ஒரு மெசேஜ் வந்திருக்கும்.
‘சாரி டா. ரொம்ப லேட் ஆயிடுச்சு எல்லாம் முடிஞ்சு வர்ரதுக்கு. அதான் மெசேஜ் பண்ணல…’

‘நான் ஆன்லைன் வரும்போது அவள் இருக்க மாட்டாள். அவள் வரும் நேரங்களில் என்னால் ரிப்ளை செய்ய முடியாது.’ இப்படியே நாட்கள் போகும்.
இது போன்ற யோசனைகளுக்கு மத்தியில் அவனுக்கு ஒரு சிறு குழப்பம்.

‘ஏற்கனவே மூணு வாரம் முன்னாடி பெங்களூருவில் மீட் பண்ற பிளான் போட்டு கடைசி நேரத்துல தள்ளி போட்டாச்சு. அதுக்கு அப்புறம் அவள் ஒரு முறை சென்னை வந்திருந்தபோது ஆஃபிஸ் வேலையால் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. எனக்கு ஏதோ ஸ்ட்ரேஞ்ஜ் ஃபீலிங்க் இருக்கு. இப்படியே இந்த பிளான் போஸ்ட்போன் ஆயிட்டே இருக்குமோன்னு. கடைசி வரைக்கும் நாம சந்திக்கவே இல்லன்னா…’ என்று யோசித்தான். பயம் போன்ற ஏதோ ஒன்று அவனுள்ளே இருப்பிடம் தேடி அலைந்தது.
இப்படியே – என்ற வார்த்தை அவன் நம்பிக்கையின் அஸ்த்திவாரத்தை கொஞ்சம் அசைத்துப் பார்த்ததில் விழுந்தத வார்த்தைகள்…

இப்படியே… சந்திக்காத நம் கண்கள்
சந்திக்காமலேயே இருந்துவிட்டால்?
வந்து விழும் குறுஞ்செய்திகளிலேயே
குருநகைத்து காலம் கழித்துவிட்டால்…

திரும்பி வரும்போது பார்ப்போம்!
என்று நீ சொல்ல…
தேக்கி வைத்த ஏக்கங்களை
ஏற்றமிறைக்கும் அவசியம் இருக்காது.

புன்னகைத்து கையசைத்து
வழியனுப்பி வைத்த பின்…
Miss you சொல்லும் தேவை இருக்காது.

இப்படியே…
Last seen பார்த்து
Blue tick எதிர்பார்த்து
typing கண்டு பெருமூச்சு விட்டு
அலைபேசி சினுங்க முகம் மலர்ந்து
சந்தோஷத்தை பகிர்ந்துகொண்டு
சவுகரியமாய் நான் ஒரு புறம்
நீ ஒரு புறம்.

இப்படியே…
ஒரு லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்டை போல
எந்த தொடர்பும் இல்லாமல்
என் இருப்பை மட்டும் பதிவு செய்து
எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி
என் உலகத்தில் நான் இருந்துவிடுவேன்!

***************
‘நாங்கள் சந்தித்தால்…
ரெண்டு வருஷம் நான் நெனச்சு பார்த்து சந்தோஷ பட நிறைய கதை இருக்கும். நீ நான் சென்னை பெங்களூர் இத தாண்டி நாம பேச நிறைய காரணங்கள் இருக்கும்.
என்ன சொல்றதுன்னு தெரியாம லேசா குழப்பத்துலையே நீ கிளம்புற அப்போ ‘டேக் கேர்’ கூடவே.. ‘அங்க போய் ரீச் ஆனதும் மெசேஜ் பண்ணு. அங்கயே இருந்திடாம திரும்பி வர்ற வழியபாரு. கைக்காசு போட்டு டிக்கெட் புக் பண்ணமுடியாது. ஒழுங்கா நீயே வந்துசேரு. தேவையில்லாம என்ன குழப்பிடாத.’ இந்த மாதிரியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கும். கண்டிப்பா போகணும்னு தெரிஞ்சும் இங்கேயே இருந்திருக்கலாம்னு சொல்லத் தோணும்.’ இப்போதும் அவன் யோசனைகள் முடிந்தபாடில்லை.

‘வீக்கெண்டுக்கு ரெட் கார்பெட் போட்டு வெயிட் பண்ணிட்டு இருப்பேன். அங்கேயிருந்து நீ எப்போ பேசினாலும் கடைசி மெசேஜ் கடைசி மெசேஜா இருக்காது. அது உனக்கே நல்லா தெரியும். அங்க போனதும் புது ஊற பத்தி புது மனுஷங்க பத்தி பேசிட்டு, கொஞ்ச நாள்ல… பேச எதுவும் இல்லாம போய்டுமா என்ன! அப்றம்.. என்ற வார்த்தையும் என்ன பேசுறதுன்னு தெரியாத சில நொடி மௌனமும் இல்லாத பேச்சு எப்போதும் ஞாபகம் இருக்கும்.’ இப்படியே நீண்ட அவன் சிந்தனை, இரண்டு வருடங்களை கடந்து அவள் வருகை வரை சென்றடைந்தது.

‘கோர்ஸ் முடிஞ்சு நீ வரும்போது ஏர்போர்ட்ல வெயிட் பண்ணிட்டு இருப்பேன். வந்ததும்.. ‘எங்க என்னோட கிஃப்ட்?’ என்று கேட்பேன். அடுத்த நாள் ஈவ்னிங் பெஸ்ஸி. ரெண்டு வருஷ கதை மொத்தமும்… கொஞ்சம் கூட சளிக்காம பேசி தீர்ப்போம். அக்கம் பக்கம் இருக்கவங்க திரும்பி பார்க்குற அளவுக்கு சத்தமா சிரிப்போம். உன்னோட பேச்சுல வெஸ்டர்ன் இன்ஃப்ளூயென்ஸ் வரும்போது நான் கிண்டல் பண்ணுவேன். யாருக்கு தெரியும், தமிழ் சொல்லித் தர்ற நிலமை கூட வரலாம். என்ன நடந்தாலும் பேசுறது மட்டும் குறையாது.’

***************

எப்பவுமே இதுதான் அப்டின்னா எந்த பிரச்சனையும் இல்ல. இதுவா அதுவா அப்படின்னு வரும்போதுதான் நமக்கு பிரச்சனையே! நம்மள யோசிக்க வச்சிடும். அப்படித்தான் அவனும் இவ்விரண்டில் எது சரி எது தவறு, எது நடக்கும் எது நடக்காது என்று பதில் தேடி நேரத்தை வீனடிக்கிறான். .

இப்போ அவனும் நிஷாவும் மீட் பண்ணலாமா வேண்டாமா…?

தேவன் வேட்டை – 2

மறுபடி ஒரு முறை கதவை தட்டி ‘உங்கள தேடி.. ரெண்டு ஆளு வந்திருக்கு. சீக்கிரம் வா சார்!’ என்றார் அவர்.

இவனுடம்பின் ஒவ்வொரு நரம்பிலும் நடுக்கம் ஊடுருவியது. யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே மெதுவாக எழுந்து கதவை திறந்து பார்த்தான். எவரும் இல்லை. பயம்! கண்ணுக்கெட்டும் தூரம் வரை பயம்தான் இருந்தது. பயத்தின் உலகத்தில் நிம்மதியின் கூடாரம் சந்தோஷம் தருமா என்ன! அதன் பிறகு அவன் ஒரு வாரம் கல்லூரிக்கும் போகாமல், ரெஸ்டாரண்ட்டிற்கும் போகாமல் தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். நியூஸ் பேப்பர் வாங்கி பார்க்கும் தைரியம் கூட இல்லாதவன் ஆனான்.

இவ்வளவு நாட்கள் ஆகியும் எவரும் தன்னை தேடி வராததனால், இதற்கு மேல் எதுவும் நடக்காது என்ற முடிவுக்கு வந்தான். இருந்தாலும் அவனுக்கு ஒரு வித நிலைப்பாடு ஏற்படவில்லை. விடுதி அலுவலகத்திலிருந்து ராஜனை தொடர்பு கொண்டு,
‘சார், எனக்கு இங்க இருக்க பிடிக்கல. நான் சென்னைக்கே வந்துடறேன்.’ என்று கூறினான். ‘இங்க எல்லாரும் என்ன அந்நியமா பாக்குறாங்க. என்கிட்ட வசதி இல்லாததால என்ன ஒதுக்குறாங்க.’ என்று ஏதேதோ கூறினான். அவன் சொன்ன பொய்கள் அவரை
‘நீ இப்போவே கிளம்பி இங்கவா. எல்லாம் சரியாயிடும்.’ என்று சொல்ல வைத்தது. சென்னைக்கு சென்றான். எல்லாம் முடிந்தது என்றே நினைத்தான். வருங்காலம் அறிந்துகொள்ளும் வசதி இருந்தால் இங்கே பல முடிவுகள் எடுக்கப் படாமலேயே இருந்திருக்கும்! இந்த நிகழ்காலத்தின் நிழலிருளில் இவனும் மறைந்து போனான்.

ராஜன் சார்- ‘நாம்’ என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர். அவர் மூலம் கல்வி கற்ற பல நூறு பேர்களில் தேவனும் ஒருவன். தேவனின் பெற்றோர்கள் அவனை அந்த காப்பகத்தில் விட்டுச்சென்ற போது அவன் ஆறு மாத குழந்தை. பேச்சு வந்த நாள் முதல் இன்று வரை அவன் அப்பா என்றழைத்தது ராஜன் சாரை மட்டும்தான். யாருமில்லாத நேரங்களில் அவருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் அப்போதெல்லாம் ஒரு முறையாவது அப்பா என்றழைத்து ஆசையை தீர்த்துக் கொள்வான். அவனுக்கு யாருமில்ல பாவம் என்ற பரிதாப பேச்சுகள் அவனுக்கு அறவே பிடிக்காது. ‘ஐ அம் நாட் வீக்! என்னால தனியா வாழ முடியும்!’ என்ற அவன் கதறல் நடுநிசிகளில் நித்தம் நிறைந்திருக்கும். ஆரம்பத்திலிருந்தே அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு.

அன்றிரவே பெங்களூரிலிருந்து புறப்பட்டவன், சென்னை வந்ததும் ராஜன் சாரிடம் பேசி சமாளித்து பெங்களூரில் படித்துக் கொண்டிருந்த கல்லூரியை விட்டு சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தான்.
சில வாரங்களில் அந்த கருணை கொலையின் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. அச்சத்தின் பிடியிலிருந்து விடுபட்டு சராசரியானான்.

                                                                               *******

12-11-2004
இடம்: சென்னை.

படிப்பு முடித்தவன் அடுத்து என்ன என்று யோசித்து ‘நான் உங்க கூடவே இருந்து வீட்ட(நாம்-தொண்டு நிறுவனத்தை) பாத்துக்குறேன்.’ என்று ராஜன் சாரிடம் கூறினான்.
இதை கேட்ட அவர் ‘அதுக்கெல்லாம் இன்னும் நேரமிருக்கு. போய் ஏதாவது வேலை தேடிக்கோ.. அப்போதான் உனக்கு வாழ்க்கை புரியும்’ என்றார்.

அவனுக்கு விருப்பமில்லை என்றாலும், சென்னையின் பல இடங்களில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அப்போது தான் ஒரு நாள் ராஜன் சார் அவனை அழைத்தார்.

‘சொல்லுங்க சார்..’ என்று அருகில் சென்ற அவனை நிறுத்தி.

‘இது என்ன..!?’ என்று கேட்டார். அவர் கையில் இருந்த அவனது டைரியை பார்த்து மிரண்டு போனான் தேவன். எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றான். ஆத்திரமடைந்த ராஜன் ‘என்னதிது…!!!’ என்று அவன் கன்னத்தில் அறைந்தார்.

‘நான் அந்த ஆள கொல செஞ்சத்துக்கு அப்புறம் பயந்தேன். ஆனா, அப்புறம் தான் யோசிச்சு பார்த்தேன். எப்படியும் யாரோ செய்ய வேண்டியது. நான் செஞ்சேன். பயம் இருந்ததே தவிர அதுக்காக எந்த வருத்தமுமில்ல. சாவும் போது கடைசியா அவர் சொன்னது.. நன்றி! அதனால.. நான் செஞ்சதுல தப்பு ஒண்ணும் இருக்க மாதிரி எனக்கு தெரில. அந்த சம்பவம் எனக்கு என்னை அடையாளம் காட்டியிருக்கு! என்ன செய்றோம்னு தெரியாம, எந்த கேள்வியும் கேட்காம கோழையா வாழ்ந்து சாவுறதுக்கு கொலைகாரனா இருக்கிறது மேல்! சாவ கண்ணு முன்னாடி காமிக்கிற ஒருத்தனா, இந்த வாழ்க்கை இவ்வளவுதான்னு புரிய வைக்குற ஒருத்தனா, பாவ வாழ்க்கைய முடிச்சு வைக்குற ஒருத்தனா…’

என்று நீண்டது அந்தக் குறிப்பு. அதை ராஜன் சார் படித்துவிட்டார் என்று தெரிந்ததும் அவன் நிலை குலைந்து போனான். எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்.

‘பேசு டா.. ஏதோ பெருசா வசனம் எழுதுதியிருக்கியே!! நீ யாருன்னே தெரியாம உன்ன படிக்க வச்சு.. உனக்காக செலவு செய்றாரே, அந்த மனுஷனுக்கு இது தெரிஞ்சா.. ஒரு கொலகாரனுக்கு சோறு போட்டு வளர்த்திருக்குமேன்னு வருந்தியே செத்துடமாட்டாரு!!?’ என்று ஆத்திரமடைந்தார்.

இது வரை ராஜன் சார் தான் தன்னை வளர்த்து ஆளாக்கினார் என்று நினைத்துக் கொண்டிருந்த இவனுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

‘ஏன் சார் சொல்லல… உங்களத்தான அப்பாவா நெனச்சேன். அந்த மனுஷன பத்தி ஏன் முன்னாடியே சொல்லல..! அப்போ நீங்களும் என்கிட்ட உண்மையா இல்ல. யாருமே.. என்ன சுத்தி இருக்க யாருமே என்கிட்ட உண்மையா இல்லாத போது நான் மட்டும் ஏன் உண்மையா இருக்கணும்னு நெனைக்றீங்க..!!’ என்று கோபமாய் அவர் கையிலிருந்த டைரியை வாங்கி, அவனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

சில நிமிடங்களில் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாய் வீட்டை விட்டு வெளியேறினான். கடுங்கோபத்துடன் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் ராஜன். எப்படியும் சாயங்காலம் திரும்பி வந்திடுவான்.. என்ற நம்பிக்கையில்.
ஆனால், அவர் அவனை முழுதாக அறிந்திருக்கவில்லை.

*******

வீட்டை விட்டு வெளியேறிவன் கண்ணில் பட்ட முதல் பஸ்ஸை பிடித்து கடைசி ஸ்டாப்புக்கு டிக்கெட் எடுத்தான். நிறைய யோசித்தான். கோபம் நிறைந்த ஒருவனாக காட்சியளித்தான். கடைசி ஸ்டாப்பில் இறங்கியவன் நடக்கத் துவங்கினான். நான் என்ன செய்கிறேன்.. இப்படி செய்திருக்கக் கூடாதோ, ராஜன் சாருக்கு அந்த டைரி எப்படி கிடைச்சிருக்கும், என்று பல கேள்விகளை சுமந்து கொண்டு நள்ளிரவுவரை நடந்தான்.

நடுநிசியின் இருளும் அமைதியும் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தன் முடிவை மாற்றிக் கொண்டான். பக்கத்தில் இருந்த ஒரு ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றான். அங்கே ஆட்டோவிற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினான்.
‘இந்த நேரத்துலயெல்லாம் அவ்ளோ தூரம் வார முடியாது!!’ என்று முரண்டு பிடித்தவரை எப்படியோ சமாதானம் செய்து வீட்டிற்கு போக ஆட்டோவில் ஏறினான்.

கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு திருப்பத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ் வண்டியை பார்த்த ஆட்டோக்காரன் ‘இதுக்குத்தான் சொன்னேன்.. இப்படி வந்து மாட்டி விட்டுட்டியே தம்பி!’ என்று ஆட்டோவின் வேகத்தை குறைத்து, ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்து ஓடினான்.

இவன் மிரண்டு போனான். எதுவும் புரியாமல் தவித்தான். கொஞ்ச தூரத்தில் இருந்த மதில் சுவர் ஒன்றில் இடித்து ஆட்டோ நின்றதும் இறங்கி ஓட முயன்ற போது, அந்த கான்ஸ்டபிள் இவனை பிடித்தார்.

இவன் காலரின் பின் பக்கத்தை அவரது கைகள் இறுக்கிப் பிடித்திருந்தன.
‘நீ யாருடா புதுசா இருக்க.அவன் கூட்டத்துல உன்ன பார்த்ததில்லையே!’ என்று ஒரு கையால் அவன் தலைமுடியை பிடித்து உலுக்கினார்.
ஒரு நொடி யோசித்தான். மாற்றிய முடிவை மறுபடி ஒரு முறை மாற்றினான்.
‘எங்கடா தப்பிக்க பாக்குற! முதல்ல அந்த பைய கீழ போடு டா!’ என்று அவர் கூற, கையில் இருந்த பையை கீழே வைத்தான்.

நிதானமாக கவனித்து பின்னால் நின்று கொண்டிருந்த அவர் காலை உதைத்து கீழே தள்ளிவிட்டான். இதனை சற்றும் எதிர்பாராத அவர் தடுமாறிப் போனார். அந்த சமயத்தில் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து
‘துரு பிடிச்சு போயிருக்க உங்க போலீஸ் மூளைய தொந்தரவு பண்ணாம எழுந்து பக்கத்துல வாங்க’ என்று அதட்டினான்.
அவன் கையில் துப்பாக்கியை பார்த்த அவர் வெட வெடத்துப் போய்
‘இதெப்படா ஆரம்பிச்சீங்க. இந்த ஊசி பவுடரெல்லாம் விட்டுட்டு இப்போ இதுக்கு வந்துட்டீங்களா!’ என்றார்.
‘பேசாம அமைதியா நான் சொல்றத மட்டும் கேளுங்க…’
‘வழக்கமா எனக்கு வந்து சேர வேண்டிய பங்கு வந்து சேரல. ஞாபகம் இருக்கட்டும்… நான் இல்லாம உங்களால தொழில் பண்ண முடியாது.’
‘சார்… நீங்க புடிச்சிருக்குறது.. சாரி உங்கள புடிச்சிருக்குறது பவுடர் கேஸ் இல்ல சார். இது புதுசு. நான் புதுசு. வாங்க வந்து வண்டி எடுங்க!’
*******
‘என்ன சார் நீங்க தப்பிக்கவாது முயற்சி பண்ணுவீங்கன்னு நெனச்சேன். எதுவுமே பண்ணாம சொன்னதெல்லாம் கேட்குறீங்க?’ என்று ஏளனமாக கேட்டான்.
வண்டி ஓட்டிக் கொண்டிருந்த அவர் ‘ஏன்டா பேச மாட்ட… கையில துப்பாக்கி இருக்க தைரியத்துல ஆடுற. நான் யாருன்னு விடிஞ்சதும் தெரியும்!’
அவர் பேசி முடிக்க, பக்கத்தில் ஒரு பெட்டிக் கடையை பார்த்ததும்
‘அப்படி அந்த கடைக்கு பக்கத்துல நிறுத்துங்க..’ என்றான்.
வண்டியை நிறுத்தியதும்,
‘போய் ஒரு கத்தி வாங்கிட்டு வாங்க…’ என்றான்.
அவனையே முறைத்துப் பார்த்தார். ‘அஞ்சு ரூபாய்க்கு சின்னதா பேனா கத்தி கிடைக்கும். போங்க..நேரமாகுது!’

வண்டியை விட்டு இறங்கி அவர் கடையை நோக்கி நடக்க ‘சார்! என் கையில என்ன இருக்குன்னு மறந்துடாதீங்க’ என்று சொல்லி சிரித்தான்.
அவர் பேனா கத்தியோடு இவனை நெருங்கிய போது, ‘கடைக்காரன் கிட்ட கண்ஜாடை காமிச்சீங்களா?’ அவர் எதுவும் பேசாமல் கத்தியை நீட்டியபடி நின்றுகொண்டிருந்தார் ‘இல்லையா.. சரி அது எதுக்கு எனக்கு. காட்டிய பெட்ரோல் டேங்க் மேல வைங்க’ என்றான்.
கத்தியை அவர் வைத்ததும், அவர் சட்டையை பிடித்து இழுத்து அவர் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான்.
பயத்தில் கத்தத் துவங்கியவர் தாடையில் துப்பாக்கியால் ஓங்கி அடித்தான்.
‘சத்தம் வர கூடாது. கொல்ல வேண்டாம்னுதான் நெனச்சேன். ஆனா, பவுடர் கடத்துறவன் கூட வியாபாரம் பேசுறீங்கனு தெரிஞ்சதும்… சரி அத விடுங்க. தோட்டா, துப்பாக்கி இந்த ரெண்டுல எது ரொம்ப முக்கியம்னு நெனைக்றீங்க..?’ என்று கேட்டான்.

கத்தி முனை கழுத்தை பதம் பார்க்க தயாராக உள்ள இந்நேரத்தில் கேள்விக்கு பதில் சொல்லுமளவு தெளிவாக சிந்திக்க முடியுமா. அவர் பயத்தில் கைகளை பலவாறு அசைத்து எப்படியாவது தப்பிக்க முயற்சி செய்தார்.

‘சொல்ல மாட்டீங்க… நானே சொல்றேன். துப்பாக்கிதான். ஏன் தெரியுமா? வெறும் தோட்டாவ வச்சி பரமபதம் ஆடலாம் அவ்வளவுதான். ஆனா, வெறும் துப்பாக்கிய வச்சு ஒரு போலீஸ்காரரகூட சொன்னதையெல்லாம் செய்ய வைக்கலாம்.’ என்று சொல்லி சிரித்தான்.

தோட்டா இல்லாத துப்பாக்கிய காட்டி இப்படி பண்ணிட்டானே என்று உள்ளே புழுங்கினார். கத்தவும் முடியவில்லை அவரால். அவர் கழுத்துலிருந்த தங்க செயினை அவிழ்த்து சட்டை பாக்கெட்டில் வைத்தான்.
‘இத அங்கேயே கேட்டிருந்தா கொடுத்திருக்க போறேன்!’ என்று அவர் கூற,
‘என்ன சார்… வெறும் செயினுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுப்பேனா…நீங்க யாருன்னு விடிஞ்சதும் தெரியும்னு சொன்னீங்களே, கவலையே படாதீங்க நீங்க யாருன்னு விடிஞ்சதும் ஊருக்கே தெரியப் போகுது!’ என்று சொல்லி கத்தியில் அழுத்தத்தை அதிகரித்தான்.
‘விட்டுடு..என்ன விட்டுடு…!!’ என்று அவர் அலற கழுத்திலிருந்து ரத்தம் கோடாக பளிச்சிட்டது.

தேவன் பிறந்தான்!!!