தேவன் வேட்டை – 2

மறுபடி ஒரு முறை கதவை தட்டி ‘உங்கள தேடி.. ரெண்டு ஆளு வந்திருக்கு. சீக்கிரம் வா சார்!’ என்றார் அவர்.

இவனுடம்பின் ஒவ்வொரு நரம்பிலும் நடுக்கம் ஊடுருவியது. யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே மெதுவாக எழுந்து கதவை திறந்து பார்த்தான். எவரும் இல்லை. பயம்! கண்ணுக்கெட்டும் தூரம் வரை பயம்தான் இருந்தது. பயத்தின் உலகத்தில் நிம்மதியின் கூடாரம் சந்தோஷம் தருமா என்ன! அதன் பிறகு அவன் ஒரு வாரம் கல்லூரிக்கும் போகாமல், ரெஸ்டாரண்ட்டிற்கும் போகாமல் தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். நியூஸ் பேப்பர் வாங்கி பார்க்கும் தைரியம் கூட இல்லாதவன் ஆனான்.

இவ்வளவு நாட்கள் ஆகியும் எவரும் தன்னை தேடி வராததனால், இதற்கு மேல் எதுவும் நடக்காது என்ற முடிவுக்கு வந்தான். இருந்தாலும் அவனுக்கு ஒரு வித நிலைப்பாடு ஏற்படவில்லை. விடுதி அலுவலகத்திலிருந்து ராஜனை தொடர்பு கொண்டு,
‘சார், எனக்கு இங்க இருக்க பிடிக்கல. நான் சென்னைக்கே வந்துடறேன்.’ என்று கூறினான். ‘இங்க எல்லாரும் என்ன அந்நியமா பாக்குறாங்க. என்கிட்ட வசதி இல்லாததால என்ன ஒதுக்குறாங்க.’ என்று ஏதேதோ கூறினான். அவன் சொன்ன பொய்கள் அவரை
‘நீ இப்போவே கிளம்பி இங்கவா. எல்லாம் சரியாயிடும்.’ என்று சொல்ல வைத்தது. சென்னைக்கு சென்றான். எல்லாம் முடிந்தது என்றே நினைத்தான். வருங்காலம் அறிந்துகொள்ளும் வசதி இருந்தால் இங்கே பல முடிவுகள் எடுக்கப் படாமலேயே இருந்திருக்கும்! இந்த நிகழ்காலத்தின் நிழலிருளில் இவனும் மறைந்து போனான்.

ராஜன் சார்- ‘நாம்’ என்ற தொண்டு நிறுவனத்தின் நிறுவனர். அவர் மூலம் கல்வி கற்ற பல நூறு பேர்களில் தேவனும் ஒருவன். தேவனின் பெற்றோர்கள் அவனை அந்த காப்பகத்தில் விட்டுச்சென்ற போது அவன் ஆறு மாத குழந்தை. பேச்சு வந்த நாள் முதல் இன்று வரை அவன் அப்பா என்றழைத்தது ராஜன் சாரை மட்டும்தான். யாருமில்லாத நேரங்களில் அவருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் அப்போதெல்லாம் ஒரு முறையாவது அப்பா என்றழைத்து ஆசையை தீர்த்துக் கொள்வான். அவனுக்கு யாருமில்ல பாவம் என்ற பரிதாப பேச்சுகள் அவனுக்கு அறவே பிடிக்காது. ‘ஐ அம் நாட் வீக்! என்னால தனியா வாழ முடியும்!’ என்ற அவன் கதறல் நடுநிசிகளில் நித்தம் நிறைந்திருக்கும். ஆரம்பத்திலிருந்தே அப்படி ஒரு எண்ணம் அவனுக்கு.

அன்றிரவே பெங்களூரிலிருந்து புறப்பட்டவன், சென்னை வந்ததும் ராஜன் சாரிடம் பேசி சமாளித்து பெங்களூரில் படித்துக் கொண்டிருந்த கல்லூரியை விட்டு சென்னையில் ஒரு கல்லூரியில் சேர்ந்தான்.
சில வாரங்களில் அந்த கருணை கொலையின் தாக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. அச்சத்தின் பிடியிலிருந்து விடுபட்டு சராசரியானான்.

                                                                               *******

12-11-2004
இடம்: சென்னை.

படிப்பு முடித்தவன் அடுத்து என்ன என்று யோசித்து ‘நான் உங்க கூடவே இருந்து வீட்ட(நாம்-தொண்டு நிறுவனத்தை) பாத்துக்குறேன்.’ என்று ராஜன் சாரிடம் கூறினான்.
இதை கேட்ட அவர் ‘அதுக்கெல்லாம் இன்னும் நேரமிருக்கு. போய் ஏதாவது வேலை தேடிக்கோ.. அப்போதான் உனக்கு வாழ்க்கை புரியும்’ என்றார்.

அவனுக்கு விருப்பமில்லை என்றாலும், சென்னையின் பல இடங்களில் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தான். அப்போது தான் ஒரு நாள் ராஜன் சார் அவனை அழைத்தார்.

‘சொல்லுங்க சார்..’ என்று அருகில் சென்ற அவனை நிறுத்தி.

‘இது என்ன..!?’ என்று கேட்டார். அவர் கையில் இருந்த அவனது டைரியை பார்த்து மிரண்டு போனான் தேவன். எதுவும் பேசாமல் தலை குனிந்து நின்றான். ஆத்திரமடைந்த ராஜன் ‘என்னதிது…!!!’ என்று அவன் கன்னத்தில் அறைந்தார்.

‘நான் அந்த ஆள கொல செஞ்சத்துக்கு அப்புறம் பயந்தேன். ஆனா, அப்புறம் தான் யோசிச்சு பார்த்தேன். எப்படியும் யாரோ செய்ய வேண்டியது. நான் செஞ்சேன். பயம் இருந்ததே தவிர அதுக்காக எந்த வருத்தமுமில்ல. சாவும் போது கடைசியா அவர் சொன்னது.. நன்றி! அதனால.. நான் செஞ்சதுல தப்பு ஒண்ணும் இருக்க மாதிரி எனக்கு தெரில. அந்த சம்பவம் எனக்கு என்னை அடையாளம் காட்டியிருக்கு! என்ன செய்றோம்னு தெரியாம, எந்த கேள்வியும் கேட்காம கோழையா வாழ்ந்து சாவுறதுக்கு கொலைகாரனா இருக்கிறது மேல்! சாவ கண்ணு முன்னாடி காமிக்கிற ஒருத்தனா, இந்த வாழ்க்கை இவ்வளவுதான்னு புரிய வைக்குற ஒருத்தனா, பாவ வாழ்க்கைய முடிச்சு வைக்குற ஒருத்தனா…’

என்று நீண்டது அந்தக் குறிப்பு. அதை ராஜன் சார் படித்துவிட்டார் என்று தெரிந்ததும் அவன் நிலை குலைந்து போனான். எதுவும் பேசாமல் அமைதியாய் நின்று கொண்டிருந்தான்.

‘பேசு டா.. ஏதோ பெருசா வசனம் எழுதுதியிருக்கியே!! நீ யாருன்னே தெரியாம உன்ன படிக்க வச்சு.. உனக்காக செலவு செய்றாரே, அந்த மனுஷனுக்கு இது தெரிஞ்சா.. ஒரு கொலகாரனுக்கு சோறு போட்டு வளர்த்திருக்குமேன்னு வருந்தியே செத்துடமாட்டாரு!!?’ என்று ஆத்திரமடைந்தார்.

இது வரை ராஜன் சார் தான் தன்னை வளர்த்து ஆளாக்கினார் என்று நினைத்துக் கொண்டிருந்த இவனுக்கு இந்த செய்தி அதிர்ச்சியாக இருந்தது.

‘ஏன் சார் சொல்லல… உங்களத்தான அப்பாவா நெனச்சேன். அந்த மனுஷன பத்தி ஏன் முன்னாடியே சொல்லல..! அப்போ நீங்களும் என்கிட்ட உண்மையா இல்ல. யாருமே.. என்ன சுத்தி இருக்க யாருமே என்கிட்ட உண்மையா இல்லாத போது நான் மட்டும் ஏன் உண்மையா இருக்கணும்னு நெனைக்றீங்க..!!’ என்று கோபமாய் அவர் கையிலிருந்த டைரியை வாங்கி, அவனது அறைக்குள் சென்று கதவடைத்துக் கொண்டான்.

சில நிமிடங்களில் ஒரு பையை எடுத்துக் கொண்டு வேகமாய் வீட்டை விட்டு வெளியேறினான். கடுங்கோபத்துடன் அவனையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் ராஜன். எப்படியும் சாயங்காலம் திரும்பி வந்திடுவான்.. என்ற நம்பிக்கையில்.
ஆனால், அவர் அவனை முழுதாக அறிந்திருக்கவில்லை.

*******

வீட்டை விட்டு வெளியேறிவன் கண்ணில் பட்ட முதல் பஸ்ஸை பிடித்து கடைசி ஸ்டாப்புக்கு டிக்கெட் எடுத்தான். நிறைய யோசித்தான். கோபம் நிறைந்த ஒருவனாக காட்சியளித்தான். கடைசி ஸ்டாப்பில் இறங்கியவன் நடக்கத் துவங்கினான். நான் என்ன செய்கிறேன்.. இப்படி செய்திருக்கக் கூடாதோ, ராஜன் சாருக்கு அந்த டைரி எப்படி கிடைச்சிருக்கும், என்று பல கேள்விகளை சுமந்து கொண்டு நள்ளிரவுவரை நடந்தான்.

நடுநிசியின் இருளும் அமைதியும் அவனுக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். தன் முடிவை மாற்றிக் கொண்டான். பக்கத்தில் இருந்த ஒரு ஆட்டோ ஸ்டாண்டிற்கு சென்றான். அங்கே ஆட்டோவிற்குள் உறங்கிக் கொண்டிருந்த ஒருவரை எழுப்பினான்.
‘இந்த நேரத்துலயெல்லாம் அவ்ளோ தூரம் வார முடியாது!!’ என்று முரண்டு பிடித்தவரை எப்படியோ சமாதானம் செய்து வீட்டிற்கு போக ஆட்டோவில் ஏறினான்.

கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு திருப்பத்தில் நின்று கொண்டிருந்த போலீஸ் வண்டியை பார்த்த ஆட்டோக்காரன் ‘இதுக்குத்தான் சொன்னேன்.. இப்படி வந்து மாட்டி விட்டுட்டியே தம்பி!’ என்று ஆட்டோவின் வேகத்தை குறைத்து, ஓடும் ஆட்டோவிலிருந்து குதித்து ஓடினான்.

இவன் மிரண்டு போனான். எதுவும் புரியாமல் தவித்தான். கொஞ்ச தூரத்தில் இருந்த மதில் சுவர் ஒன்றில் இடித்து ஆட்டோ நின்றதும் இறங்கி ஓட முயன்ற போது, அந்த கான்ஸ்டபிள் இவனை பிடித்தார்.

இவன் காலரின் பின் பக்கத்தை அவரது கைகள் இறுக்கிப் பிடித்திருந்தன.
‘நீ யாருடா புதுசா இருக்க.அவன் கூட்டத்துல உன்ன பார்த்ததில்லையே!’ என்று ஒரு கையால் அவன் தலைமுடியை பிடித்து உலுக்கினார்.
ஒரு நொடி யோசித்தான். மாற்றிய முடிவை மறுபடி ஒரு முறை மாற்றினான்.
‘எங்கடா தப்பிக்க பாக்குற! முதல்ல அந்த பைய கீழ போடு டா!’ என்று அவர் கூற, கையில் இருந்த பையை கீழே வைத்தான்.

நிதானமாக கவனித்து பின்னால் நின்று கொண்டிருந்த அவர் காலை உதைத்து கீழே தள்ளிவிட்டான். இதனை சற்றும் எதிர்பாராத அவர் தடுமாறிப் போனார். அந்த சமயத்தில் இடுப்பில் இருந்த துப்பாக்கியை எடுத்து
‘துரு பிடிச்சு போயிருக்க உங்க போலீஸ் மூளைய தொந்தரவு பண்ணாம எழுந்து பக்கத்துல வாங்க’ என்று அதட்டினான்.
அவன் கையில் துப்பாக்கியை பார்த்த அவர் வெட வெடத்துப் போய்
‘இதெப்படா ஆரம்பிச்சீங்க. இந்த ஊசி பவுடரெல்லாம் விட்டுட்டு இப்போ இதுக்கு வந்துட்டீங்களா!’ என்றார்.
‘பேசாம அமைதியா நான் சொல்றத மட்டும் கேளுங்க…’
‘வழக்கமா எனக்கு வந்து சேர வேண்டிய பங்கு வந்து சேரல. ஞாபகம் இருக்கட்டும்… நான் இல்லாம உங்களால தொழில் பண்ண முடியாது.’
‘சார்… நீங்க புடிச்சிருக்குறது.. சாரி உங்கள புடிச்சிருக்குறது பவுடர் கேஸ் இல்ல சார். இது புதுசு. நான் புதுசு. வாங்க வந்து வண்டி எடுங்க!’
*******
‘என்ன சார் நீங்க தப்பிக்கவாது முயற்சி பண்ணுவீங்கன்னு நெனச்சேன். எதுவுமே பண்ணாம சொன்னதெல்லாம் கேட்குறீங்க?’ என்று ஏளனமாக கேட்டான்.
வண்டி ஓட்டிக் கொண்டிருந்த அவர் ‘ஏன்டா பேச மாட்ட… கையில துப்பாக்கி இருக்க தைரியத்துல ஆடுற. நான் யாருன்னு விடிஞ்சதும் தெரியும்!’
அவர் பேசி முடிக்க, பக்கத்தில் ஒரு பெட்டிக் கடையை பார்த்ததும்
‘அப்படி அந்த கடைக்கு பக்கத்துல நிறுத்துங்க..’ என்றான்.
வண்டியை நிறுத்தியதும்,
‘போய் ஒரு கத்தி வாங்கிட்டு வாங்க…’ என்றான்.
அவனையே முறைத்துப் பார்த்தார். ‘அஞ்சு ரூபாய்க்கு சின்னதா பேனா கத்தி கிடைக்கும். போங்க..நேரமாகுது!’

வண்டியை விட்டு இறங்கி அவர் கடையை நோக்கி நடக்க ‘சார்! என் கையில என்ன இருக்குன்னு மறந்துடாதீங்க’ என்று சொல்லி சிரித்தான்.
அவர் பேனா கத்தியோடு இவனை நெருங்கிய போது, ‘கடைக்காரன் கிட்ட கண்ஜாடை காமிச்சீங்களா?’ அவர் எதுவும் பேசாமல் கத்தியை நீட்டியபடி நின்றுகொண்டிருந்தார் ‘இல்லையா.. சரி அது எதுக்கு எனக்கு. காட்டிய பெட்ரோல் டேங்க் மேல வைங்க’ என்றான்.
கத்தியை அவர் வைத்ததும், அவர் சட்டையை பிடித்து இழுத்து அவர் கழுத்தில் கத்தியை வைத்து அழுத்தினான்.
பயத்தில் கத்தத் துவங்கியவர் தாடையில் துப்பாக்கியால் ஓங்கி அடித்தான்.
‘சத்தம் வர கூடாது. கொல்ல வேண்டாம்னுதான் நெனச்சேன். ஆனா, பவுடர் கடத்துறவன் கூட வியாபாரம் பேசுறீங்கனு தெரிஞ்சதும்… சரி அத விடுங்க. தோட்டா, துப்பாக்கி இந்த ரெண்டுல எது ரொம்ப முக்கியம்னு நெனைக்றீங்க..?’ என்று கேட்டான்.

கத்தி முனை கழுத்தை பதம் பார்க்க தயாராக உள்ள இந்நேரத்தில் கேள்விக்கு பதில் சொல்லுமளவு தெளிவாக சிந்திக்க முடியுமா. அவர் பயத்தில் கைகளை பலவாறு அசைத்து எப்படியாவது தப்பிக்க முயற்சி செய்தார்.

‘சொல்ல மாட்டீங்க… நானே சொல்றேன். துப்பாக்கிதான். ஏன் தெரியுமா? வெறும் தோட்டாவ வச்சி பரமபதம் ஆடலாம் அவ்வளவுதான். ஆனா, வெறும் துப்பாக்கிய வச்சு ஒரு போலீஸ்காரரகூட சொன்னதையெல்லாம் செய்ய வைக்கலாம்.’ என்று சொல்லி சிரித்தான்.

தோட்டா இல்லாத துப்பாக்கிய காட்டி இப்படி பண்ணிட்டானே என்று உள்ளே புழுங்கினார். கத்தவும் முடியவில்லை அவரால். அவர் கழுத்துலிருந்த தங்க செயினை அவிழ்த்து சட்டை பாக்கெட்டில் வைத்தான்.
‘இத அங்கேயே கேட்டிருந்தா கொடுத்திருக்க போறேன்!’ என்று அவர் கூற,
‘என்ன சார்… வெறும் செயினுக்கு இவ்ளோ ரிஸ்க் எடுப்பேனா…நீங்க யாருன்னு விடிஞ்சதும் தெரியும்னு சொன்னீங்களே, கவலையே படாதீங்க நீங்க யாருன்னு விடிஞ்சதும் ஊருக்கே தெரியப் போகுது!’ என்று சொல்லி கத்தியில் அழுத்தத்தை அதிகரித்தான்.
‘விட்டுடு..என்ன விட்டுடு…!!’ என்று அவர் அலற கழுத்திலிருந்து ரத்தம் கோடாக பளிச்சிட்டது.

தேவன் பிறந்தான்!!!

Advertisements

தேவன் வேட்டை-1

17-09-2000

இடம்: பெங்களூர்.

அப்போது அவன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். காலை ஒன்பது மணி முதல் மதியம் ஒரு மணி வரை கல்லூரி, அதன் பின் ஒரு ரெஸ்டாரண்ட்டில் டெலிவரி பாய் வேலை.  கல்லூரியிலும் சரி ரெஸ்டாரண்டிலும் சரி, தேவன் என்றால் எவருக்கும் தெரியாது. ஏனென்றால் அப்போது தேவன் என்ற ஒருவன் பிறக்கவில்லை. சுமாரான படிப்பு, வயதை மீறிய அமைதி, அளவான பேச்சு, சொன்னதை மட்டும் செய்வான், எளிதில் புரிந்து கொள்ள முடியாத ஒருவன், கிட்ட திட்ட ஒரு ரோபோ! இப்படித்தான் பலரும் அவன் இல்லாத போது அவனை பற்றி பேசுவார்கள்.

பல நாட்கள் அவனுக்கு நள்ளிரவு வரை வேலை இருக்கும். அப்படி ஒரு நள்ளிரவில் அவன் வேலைக்குச் சென்று திரும்பிய போது, வழக்கமாய் கடந்து செல்லும் நால்ரோட்டில் ஏதோ ஒரு பரபரப்பு நிலவியதை உணர்ந்தான். அவன் சற்று சுதாரிப்பதற்குள், அங்கு ஒரு காரின் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. அது இவனை நடுங்கச் செய்தது. மூன்று பேர் வேகமாக அந்த கருப்பு காரில் ஏறிச் செல்வதை கண்டு பயந்து போனான். அவர்கள் கையில் துப்பாக்கி, கருப்பு முகமூடி கொண்டு முகத்தை மூடியிருந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நின்ற இடத்திலேயே உறைந்து போனவனுக்கு புத்தி வேலை செய்யவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறியவனுக்கு இன்னுமொரு பேரதிர்ச்சி. அங்கே செங்குறுதியில் ஒரு உடல் லேசாக துடித்துக் கொண்டிருந்ததை பார்த்ததும் உடல் வியர்த்த்துப் போனான். கையில் வைத்திருந்த பையை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு பதறிப் போய் அவரருகில் சென்றான்.

எதுவும் பேச முடியாமல் வலியில் அவரது உடல் நெளிந்து கொண்டிருக்க, கண்ணீரில் மிதந்து கொண்டிருந்த கடுஞ் சிவப்பு கண்கள் மட்டும் அவனையே பார்த்தது அவனது பயத்தை அதிகரித்தது.
இருந்தாலும் உயிருக்கு உதவும் எண்ணம் அச்சத்தை வென்றது. அந்த வெற்றி அவனை வாய் திறந்து பேச வைத்தது.

‘பக்கத்துல ஏதாவது ஹாஸ்பிடலுக்கு போலாம். நான் போய் வண்டி எதாவது வருதான்னு பாக்குறேன்’  என்று எழுந்தவன் சட்டையை பிடித்து நிறுத்தி

‘வேண்டாம். சொன்னா கேளு! இதுக்கு மேல என்ன வாழ விடமாட்டாங்க!’ வலியில் துடித்தார். அவர் பிடித்ததால் அவனது சட்டையில் ஏற்பட்ட ரத்தக் கரையை பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ‘நான் இப்படி சாவேன்னு..’ தன் முதுகு பக்கத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ‘இந்தா.. நீயே என்ன கொன்னுடு!’ என்றார்.

அதுவரை சினிமாவில் மட்டுமே துப்பாக்கியை பார்த்தவன் கண்ணெதிரே அந்த இரும்பு எமனை கண்டதும் மிரண்டு.. தட்டுத் தடுமாறி அவரை விட்டு கொஞ்சம் தள்ளி நின்றான்.
‘பயம்.. உன்ன அழிச்சிடும்! இந்தா.. ’ என்று துப்பாக்கியை அவனிடம் நீட்ட அவன் அதை வாங்கி ஆராய்ந்தான்.

‘இதுக்கு மேல எனக்கு நேரம் தேவையில்ல.. உனக்கு நேரமில்ல!’ என்று அவர் கதற, துப்பாக்கியை இரு கைகளில் இறுக்கப் பிடித்து நெற்றியில் வைத்தான்.
அவன் கைகளை பிடித்து துப்பாக்கியை சரியாக வைத்து ‘நன்றி!’ என்று அவர் சொல்லி லேசாக கண்களை மூட, உயிரின் விடுதலைக்கு முன் சில கண்ணீர் துளிகள் விடுதலை பெற்றன.

துப்பாக்கி சத்தம் கேட்டு உறங்கிக் கொண்டிருந்த ஒரு தெரு நாய் சட்டென்று எழுந்து தெருவிளக்குகளை பார்த்து குலைத்தது. இதுதான் அவன் முதல் கொலை. கருணை கொலை.

அங்கு நடந்த எதையும் அவனால் நம்ப முடியவில்லை. ஒரு முறை கடைசியாய் அவரது முகத்தை பார்த்துவிட்டு அங்கிருந்து அவன் தங்கியிருந்த ஹாஸ்டலுக்கு விரைந்தான்.

******

யாருக்கும் தெரியாமல் மெதுவாக ஒரு திருடன் போல உள்ளே சென்றான். வேகமாய் கதவடைத்தான். அதிவேகமாய் அவன் அணிந்திருந்த சட்டையை கழட்டி அதனை மொட்டை மாடியில் வைத்து எரித்து அந்த சாம்பலை தண்ணீரில் கரைத்து, கீழே ஊற்றினான். எவரும் பார்க்கவில்லை என்று உறுதி செய்த பின் தன் அறைக்கு வந்து கதவடைத்துக் கொண்டான்.

‘அவர்தான் சொன்னார்.. உனக்கு எங்கடா போச்சு புத்தி!!’ என்று அவனை அவனே திட்டினான். எப்போதும் நம்மை சுற்றி இருக்கும் ஃபேன் ஓடும் சத்தம், தெருமுனையில் நாயின் ஓலம், செருப்பு தேயும் சத்தம் கூட அவனை உறங்க விடாமல் செய்தது. யாரோ  டாய்லெட்டில் தண்ணீர் திறக்கும் சத்தம் கூட இவன் மனதில் நடுக்கத்தை தந்தது.

என்ன செய்வதென்று தெரியாமல் போர்வைக்குள்ளே பயத்தை எதிர்த்து ஒரு போர் நடத்திப் பார்த்தான். வெல்வது சாத்தியமா.. சத்தியத்தின் துணையின்றி பயத்தை வெல்வதா! இதெல்லாம் அவன் சிருமூளையை எட்ட வாய்ப்பில்லை. சூழ்நிலைகளின் ஆயுள் கைதிதானே அவன். போரில் தொற்ற அசதியில் உறங்கிப் போனான்.

காலை எழுந்ததும் செக்யூரிட்டியை அழைத்து
‘எனக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.. ரெண்டு தோச வாங்கிட்டு வாங்க.’ என்று காசு கொடுத்தான்.
‘சரெப்பா…’ என்று அவருடைய தமிழில் தெளிவாக கூறி நகர்ந்த அவரை நிறுத்தி ‘மீதி காசுல அப்படியே ஹிண்டு பேப்பரும் வாங்கிட்டு வாங்க! மறந்துடாதீங்க..’ என்று கூறினான்.

தோசை ஒரு கையில் நியூஸ் பேப்பர் ஒரு கையில் எடுத்துக் கொண்டு அவர் வருவதை ஜன்னல் வழியே கண்டு அவசர அவசரமாக கதவை திறந்தான்.
அவரிடமிருந்து அவற்றை வெடுக்கென வாங்கியவன் வேகமாய் கதவடைத்தான். அவன் எதிர்பார்த்தது போல அந்த செய்தி வெளிவரவில்லை. பன்னிரெண்டு மணிக்கு நடந்த ஒரு சம்பவம் மறு நாள் தான் வரும் என்று சிந்திக்கும் அளவிற்கு நிதானம் அவனிடம் இல்லை.

அடுத்த நாள் நியூஸ் பேப்பரில் இரண்டாம் பக்கத்தில், அந்த செய்தி இருந்தது. கொலை செய்யப் பட்டவர் சாந்தா ராம் என்றும் அவர் ஏற்கனவே காவல் துறையினரால் தேடப்பட்டு வந்தவர் என்றும் அதில் குறிப்பிடப் பட்டிருந்தது.  கடைசியாய் கொலையாளி கண்டுபிடிக்கப் படவில்லை என்றும் இருந்தது.

அவன் இந்த செய்தியை படித்து முடிக்க…
‘சார்…’ என்று கதவை தட்டினார். இவன் பதிலளிக்காமல் கதவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
மறுபடி ஒரு முறை கதவை தட்டி ‘உங்கள தேடி.. ரெண்டு ஆளு வந்திருக்கு. சீக்கிரம் வா சார்!’ என்றார் அவர்.
தொடரும்…