பெட்ரோலா… மனசா!?

‘இருநூறு ரூபாய்க்கு… சாதா பெட்ரோல்!’

‘சரிப்பா..’

‘என்ன முகத்துல கண்ணையே காணோம்? சரியா தூங்கலையா…’

‘மூனு நாளா பாக்குறேன்!’

‘என்னது… புரியல’

‘மூனு நாளா ராத்திரி ட்யூட்டி’

‘ஹ்ம்ம்ம்… கார்டு.’

‘நம்பர்…’

‘கஸ்டமர் காப்பி வேண்டாம்’

‘இந்தா…’

‘ஒரு மாசத்துல.. இப்போ இருக்கிறத விட ரெண்டு மடங்கு சந்தோஷமா இருப்பீங்க!’

ஹெல்மெட் உள்ளேர்ந்து அடையாளம் இல்லாத, அறிமுகம் இல்லாத குரலில் இந்தக் கடைசி வாக்கியத்தை கொஞ்சமும் எதிர்பார்க்காத அவர்…

ஒரு நொடி ஆச்சரியத்திற்குப் பின்,

முக்கால்வாசி உதடு சிரிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்க;

மீதிஉதடு சிரிச்சுதான் வப்போமே என்ன இப்போ என்று குஷி ஆகிவிட,

லேசாய்… ரொம்பவும் லேசாய்… உதடுகளின் வலது ஓரத்தில் மட்டும் சிரித்தார்.

அப்போ, நெறஞ்சது பெட்ரோலா மனசா…?

நேர்ல பார்த்தால்தான் தெரியும்.

பார்க்க முயற்சி பண்ணுங்க!

Advertisements

The Madras Story! | Madras Day Special

மஞ்சப்பை மச்சு வீடா

ஆகும் ஊருதான்,

வித்-அவுட்டும் வின்னிங் ஷாட்டு 

ஆடும் ஊருதான்!

வேகத்துக்கு வேகங்கூட்டி

வேர்க்கச் செய்யும் ஊருதான்,

தம்மாத்தூண்டு வூட்டக் காட்டி

சொத்தக் கேக்கும் ஊருதான்!

சிங்கிள் டீயில வயித்த கட்டும்

சிக்னல மதிச்சா கூடி திட்டும்,

ஊரு எல்ல போர்டில் மட்டும்

ப்ளாட்டு போட இங்க இல்ல சட்டம்!

எம்.டீ.சியோ சில்லற கேக்கும்

மெட்ரோ ரயிலோ பர்ஸையே கேக்கும்,

மிச்சமிருக்கும் சத்தையெல்லாம்

மினெரல் வாட்டர் சொத்தா கேக்கும்!

ஆர வார மெட்ரோ வாட்டர்

வாரா வாரம் வந்து போகும்,

ஷேர் ஆட்டடோக்கள் சண்ட போடும்

ஹாரனுக்கோ தொண்ட போகும்!

ஓ.எம்.ஆர் நீளும் தூரம்

டோல் பூத்துக்கோ தீராத் தாகம்,

ஓடுங்காரு நூறாயிரம்

போலிங் பூத்தோ ஈயாடிடும்!

மத்திய கைலாஷ் மத்தியில

கத்திப்பாரா சுத்தயில,

கழுத்த நெறிக்கும் கொழப்பத்துல

மனசு போகும் முக்தியில!

மேல சொன்ன எல்லாம் உண்டு

எங்க ஊரு சென்னையில,

ஆன போதும் எங்களுக்கு

இத்த வுட்டா மண்ணேயில்ல!

தெறம மட்டும் போதுமிங்க

புரிஞ்சுக்க,

தெனமும் நூறு வழியுமுண்டு

பொழச்சுக்க!

***********

இதுதான் மெட்ராஸ் சென்னை ஆன கதை . And the moral of the story is

கூட்டம், நெரிசல், வேகம், வியர்வை, புழுதி, பொல்யூஷன்…

இன்னும் லிஸ்ட் பெருசு!

ஆனா, இப்பவும் சொல்றேன்…

மேல சொன்ன எல்லாம் உண்டு

எங்க ஊரு சென்னையில,

ஆன போதும் எங்களுக்கு

இத்த வுட்டா மண்ணேயில்ல!

பா. ரஞ்சித் – மணிரத்னம் – வருந்தும் நான்! 

‘காற்று வெளியிடை எனக்குப் பிடித்திருந்தது’ என்று நான் சொன்னபோது…

ஏன் பிடித்தது எதற்காகப் பிடித்தது என்ற கேள்விகளையெல்லாம் எதிர்பார்த்திருந்தவனுக்கு ஓர் அதிர்ச்சி!

‘ஐயரா!?’ என்று கேட்டாள் ஒருத்தி!

‘அவன் ஒரு அவா…’ கேட்காமலேயே முடிவெடுத்துவிட்டான் ஒருவன்!!

‘Elitist!’ என்று முத்திரை குத்தினான் இன்னொருவன்!

ஏன் இந்தக் கேள்விகளை கேட்டார்கள்?
அவர்களை இது போன்ற முடிவுகள் எடுக்கத் தூண்டியது எது? – இன்னும் குழப்பத்தின் குடுமியிலிருக்கும் முடிச்சவிழ்க்க முடியாமல் நான்!

சில மாதங்களுக்குப் பின்… 

அதே போன்ற  ஒருத்தியும், ஒருவனும், இன்னொருவனும்தான்…
இன்று பா. ரஞ்சித்தின் திரைப்படங்களில் பேசப்படும் கொள்கைகளை, கருத்துக்களை குறை சொல்கிறார்கள்… இகழ்கிறார்கள்!
ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அந்த கருப்பு ஜீப்பின் நம்பர் ப்ளேட்டில் இருந்த BR 1956…

பலருக்கும் அளித்திருக்கும் சிந்தனைகள் – 
‘வேறெதுவும் பேசத் தெரியாதவர் சாதியை வைத்து படமெடுத்து பிழைக்கிறார்’

‘சாதி வெறியை பரப்புகிறார்!’

‘சாதி சார்ந்த தனது கொள்கைகளை திணிக்கிறார்’

இவர்களை, திருந்தாத ஜென்மங்கள் என்று சொன்னால் என்ன சாதியென்பார்கள் என்னை?
இவ்வாறான கருத்துக்களில்தான் நான் சாதி வெறியை, மடமையை காண்கிறேன் என்று சொன்னால் என்ன சாதியென்பார்கள் என்னை?
முட்டாள்தனமான கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதென்று நகர்ந்தால்… என்ன சாதியென்பார்கள் என்னை?
நல்ல வேளை இது போன்ற கேள்விகள் என்னை வதைப்பதில்லை! அதனால் அவ்வாறே சொல்கிறேன்! – திருந்தாத ஜென்மங்கள்!!!

BR 1956 அளித்திருக்க வேண்டிய சிந்தனைகள் – 
‘பரவாயில்லையே… ஒரு போஸ்டரில் இப்படி ஒரு குறியீடா!’

‘சாதி, சமூகத்தில் அதன் பங்கு, அது தரும் அடையாளம், அதன் ஆதிக்கம் இவற்றையெல்லாம் பேசுவது நல்லது… ஆனால், சரியாக… மிகச் சரியாகப் பேசினால் மகிழ்ச்சி!’

‘கதையோடு ஒட்டியே இது போன்றவை இருந்தால் நல்லாயிருக்கும்’

‘ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணங்களின் வெளிப்பாடாக காட்டப்படுபவை… நியாயமாக படமாக்கப் பட்டிருத்தல் வேண்டும்’

‘சொல்ல வந்ததை தெளிவாக… அழுத்தமாக சொல்ல வேண்டும். அவை எளிதில் தவராக புரிந்து கொள்ளப்படலாம்’

மணிரத்னம் என்னும் படைப்பாளியை நேரில் காணும் பொழுது கேட்டே ஆக வேண்டும் என்று என் மனதிலிருந்த கேள்வியை அவரிடமே ஓர் உரையாடலின் பொழுது கேட்டேன், ‘Film makers or artists in general, are being judged based on the way they narrate a story or the way they portray a character or the plot they choose to explore… What’s your opinion about this?’

பலரும் அந்தக் கேள்வி அவசியமற்றது, விலையற்றது என்று சொல்லி கேட்காதே என்றனர்… இன்று நான் வருந்துகிறேன்! அந்தக் கேள்வி அவசியமற்றதல்ல. அந்தக் கேள்வி விலையற்றதல்ல. நாம் திருந்தவில்லை. நம்மிடம் தெளிவில்லை…

தான் நம்பும் கொள்கைகளை நியாயமாக வெளிப்படுத்தாவிட்டால்
பா. ரஞ்சித்தை கேள்வி கேட்கலாம்! சம்மந்தமே இல்லாத இடத்தில் சம்மந்தமே இல்லாத கருத்தை பதிவு செய்தால் பா. ரஞ்சித்தை கேள்வி கேட்கலாம்!

ஒழுங்கா எடுத்தா நல்லாயிருக்கும்.

தடுமாறாம சொல்லிட்டா நல்லாயிருக்கும்.

தடம் மாறாம கதை நகர்ந்தா நல்லாயிருக்கும் என்றெல்லாம் பேசலாம்… எதிர் பார்ப்புகள் வீசலாம்.

ஆனால், ஏன் பேசுற?

ஏன் படமெடுக்குற?

ரஜினி படத்துல சாதி பேசணுமா?

என்ற கேள்விகள் கேட்க நமக்கு உரிமை இல்லை!

நான் மணிரத்னம் அவர்களிடம் கேட்ட அந்தக் கேள்வி ரொம்பவும் அவசியமான கேள்வியாகவே இதுவரை தொடர்வதை எண்ணி, இப்படியே ரொம்ப காலம் தொடர்ந்துவிடுமோ என்பதை எண்ணி வருந்துகிறேன்!

இப்பதிவினை நான் எழுதி முடித்த நேரத்தில்… இதோ இது கண்ணில் பட்டது!

Capture

இம்மாதிரியான மூடத்தனங்கள் ஒழிவது
அறிவுச் சிறகாலா?
புரிதலின் அழகாலா?
தெளிவுக் கழுகாலா?
தண்டனை குரங்காலா?

பிக்காச்சு காதல்!

கார்ட்டூனில் 

Pichu – Pichu evolves into a Pikachu after establishing closeness with its trainer.

Pikachu – Needs no introduction. We all remember it with every single detail.

Raichu – A Pikachu can evolve into a Raichu when exposed to a Thunderstone!

‘Oh! Is that so? But Raichu!? What Raichu?’

There ends the history!

காதலில் 

Pichu State – நல்லதொரு அறிமுகம். தூரத்து தரிசனம். பார்வை பரிமாற்றம். நெருக்கம்.

Pikachu State – அடங்காத அன்பு. அளவறியாத ஆர்ப்பரிப்பு. கூடல். ஆக மொத்தத்தில்… அதிகாலை உறக்கம். எழுந்துதான் ஆகவேண்டும்!

Raichu State – இங்கே அடுத்த கட்டத்திற்கு செல்ல, இரு முனைகளிலிருந்தும் தாக்குதல்கள் நிறைவேறுதல் அவசியம். (கார்ட்டூனில் Thunderstone போல இங்கே ஒரு Thunderstorm தேவைப்படுகிறது) இதுவும் கூட எளிதில் நடந்துவிடும்… ஆனால், இடியுடன் கூடிய புயலொன்று கொண்டு தாக்குவது என்பது எளிது. அதனை தாக்குப்பிடிப்பதே கஷ்டம்!

ஏனோ நாம் இதனை மதிப்பதேயில்லை. ஏனோ நம் மனது இதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. சில நேரத்தில் மறந்தே போகிறது! பயத்தால், பதற்றத்தால், படபடப்பால், பதைபதைப்பால்… வலுவிழந்து பின் மதிப்பிழந்து போகிறது.

                                                             ****** 

பிச்சு, பிக்காச்சு ஆவதை தடுப்பது அனாவசியம். அது பல நேரங்களில் நம்மால் இயலாத ஒன்றும் கூட.

ஆனால்…

பிக்காச்சு, ராய்ச்சு ஆவதற்கு இடியுடன் கூடிய புயலொன்று தேவை.

இடியுடன் கூடிய புயலொன்று தேவை என்று சொல்வதைவிட… அதனை தாக்குப் பிடிக்கும் சத்து வேண்டும். பிக்காச்சுவிற்கும்… நமக்கும்!

பிக்காச்சுவின் மீதிருக்கும் பற்றினால் மட்டுமெ ராய்ச்சுவை வெறுத்தொதுக்குவது முட்டாள்தனம். அதே நேரத்தில், ராய்ச்சு வந்த பிறகு அதனை மதிக்காமல் பிக்காச்சுவின் பெருமை பேசித் திரிவது வடிகட்டிய முட்டாள்தனம். ஆதலால், அதுதான் நிலையென்றால்… சும்மா இருக்கும் பிக்காச்சுவை இடியுடன் கூடிய புயல் கொண்டு தாக்கி, ராய்ச்சு ஆக்குவதை தவிர்ப்பதே நன்று!

எங்க வீட்டு மருமகள் ரொம்ப பாவம்!

தீபாவளிக்கு வீட்டுக்குப் போயிருந்தேன். எப்போதும் போல எங்கள் வீட்டில் தடால் புடாலென பல பலகாரங்கள் எவர் சில்வர் டப்பாக்களில் அடுக்கப் பட்டிருந்தன. பலகாரப் புதையல்!!

குலாப் ஜாமூன்
முள்ளு முறுக்கு
கோதுமை அல்வா
பால்கோவா
மைசூர் பாக்கு
ரவா உருண்டை
முறுக்கு
பக்கோடா
மிக்‌ஷர்
லட்டு

எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் இவ்வளவுதான். இதைத் தவிர அந்த கட்டிலில் அடுக்கப் பட்டிருந்த டப்பாக்களில் என்னவெல்லாம் இருந்தது என்று எனக்குத் தெரியாது. எல்லாவற்றையும் திறந்து பார்க்கும் பொறுமை எனக்கில்லை!

கண்டிப்பாக… எங்க அம்மா கடைசி வரை எப்படியாவது ஒவ்வொரு விசேஷ நாளுக்கும் இப்படி பட்டியலிட்டு பல டப்பாக்களை அடுக்கிடுவாங்க.

ரொம்ப கஷ்டம்!
உதாரணத்துக்கு – இந்த முறை, பால்கோவா செய்ய காலை 8 மணிக்கு அடுப்பு வச்சாங்களாம். பால் சுண்டணும். நல்லா சுண்டணும். பதமா சுண்டணும். அதுவும் சரியான பதத்துல!

பால்கோவாவுக்கு தேவையான அளவு பாலை ஒரே நேரத்துல முதல்ல காய்ச்சும் போது… அந்த பால் வாசனை ரொம்ப நல்லாயிருக்கும்.
அற்புதமா பால்கோவா சாப்பிடலாம்னு தோணும். ஆனா, நேரம் போக போக…
‘இவ்ளோ நேரம் அடுப்பு முன்னாடி நின்னிருக்கோம். நல்லா வந்துடணும்!’

‘இதத்தான் ஒரு நாள் பூரா செஞ்சியான்னு யாரும் கேட்டுட கூடாது! ஒழுங்கா வரணும்!’

இதெல்லாத்துக்கும் மேல, எதாவது சொதப்பலாயிடுச்சுன்னா சமாளிக்கணும். அதையும் நெளிவு சுளிவோட நேரம் பார்த்து நேக்கா செய்யணும்.

சரி ஆரம்பிச்ச கதைய முடிக்கிறேன். பால்கோவா செய்ய காலை 8 மணிக்கு அடுப்பு வச்சாங்களாம். ராத்திரி 7 மணிக்குதான் ஒருவழியா முடிச்சாங்களாம்!

கிட்டத்திட்ட ஒரு மோசமான வீக்டே மாதிரி கூட இருக்கலாம். இதுல இரு குறிப்பிட வேண்டிய விஷயம் என்னன்னா, எங்கம்மா ஒரு டீச்சர். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் நல்ல டீச்சர்.
அதனால பொறுமையா சொல்லி வேற குடுப்பாங்க. தப்பிக்க வழியிருக்கான்னு தெரியல…

அதனாலதான் சொல்றேன், எங்க வீட்டு மருமகள் ரொம்ப பாவம்!

குறிப்பு – சின்ன வயசுல, எங்கம்மாகிட்ட நான் சொல்லிருக்கேன்… ‘அம்மா! குலாப் ஜாமூன், கோதுமை அல்வா, பால் கொழகட்டை இதெல்லாம் செய்ய தெரிஞ்ச பொண்ணா பாரும்மா எனக்கு! 😛

பியானோ

பியானோ! சந்தோஷம், சோகம்
வெற்றி, தோல்வி
குற்றம், கொண்டாட்டம்
என எல்லாம்
கருப்பு வெள்ளையில் அடக்கி
பாடம் சொல்கிறது!

அளவுக் கதிகமாய்
வண்ணங்கள் சேர்த்து,
பிரித்தறிய பல
பெயர்கள் வைத்து,
தேவையில்லாமல் குழம்பி
தேவைக்கதிகமாய் யோசித்து
நமக்கு நாமே சுமையாகிறோம்!

ஒவ்வொரு விடியலிலும்
எண்ணிலடங்கா எண்ணங்கள்
விண்வெளி தொடுகிறது
கண்ணில் படும் யாவும்
கண்ணொளி மறைக்கிறது!

எளிமையிலும் ஏராளமாய்
கேள்விகள் சேர்த்து,
புலி மயிலை பார்த்தது போல்
முகம் வியர்த்து,
போராட்டங்கள் பல நடத்தி
எதையும் கடினமாக்கி
அதையும் கவலையாக்கி
காரணமின்றி தொலைகிறோம்!

ஒரு பியானோவை போல்,
வேண்டியதை மட்டும் வைத்து
ராஜ வாழ்க்கை வாழும்
அந்த சொர்க்க சுகத்தை
அனுபவிக்கும் ஆசை
அழகானது.

அதிகத்தை அதிகமாய்
நேசித்து, யாசித்து,
அதன் ஆதிக்கத்தில்
அடங்கி, ஒடுங்கி,
அலட்சியமாய் அழிகிறோம்!

போதும்… கொஞ்சம்
என்ற வார்த்தையை
கொஞ்சம் மதிப்போம்.
கொஞ்சமாவது…

என் தாடியில் நரை முடி

சுவாசத்திற்கான அடையாளமாய்

முதல் அழுகை –

அதில் தொடங்கி

பென்ஸில் பாக்ஸ், புது சட்டை

வழியே  தொடர்ந்து,

டிவி ரிமோட், ஃபெயில் மார்க்

வழியே படர்ந்து,

காதல், கோபம்

வழியே பறந்து,

வேகம், காமம்

வழியே விரைந்து,

தயக்கம், தடைகள்

வழியே தடுமாறி,

தேடல், தெளிவின்மை,

வழியே உடைந்து,

கனவுகள், குழப்பங்கள்

வழியே ஊர்ந்து,

ஆசை, ஆனந்தம்

வழியே நடந்து,

வலிகள், வேதனைகள்

வழியே வளைந்து,

இன்று –

உண்மை, உன்னதம்

தேடி விழைவதின்,

ஊக்கமாய்…

காரணம், காரியம்

தேடி நுழைவதின்,

சான்றாய்…

என் கண்ணாடி வழியே

காலம் கையெழுத்திட்ட

எக்ஸ்பீரியன்ஸ் சர்ட்டிஃபிகேட்!

Test of Three a.k.a The Grave of Gossips

உணவு உண்ணும் இடம், வாட்ஸப், ஃபேஸ்புக், பேருந்துப் பயணம், ரேடியோ, தொலைக் காட்சி, விசேஷ வீடுகள், நண்பர்கள் மீட்-அப் என நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாவற்றிலும் இருப்பது… கிசு கிசு!

ஒருவரைப் பற்றிய அனாவசியமான செய்திகள் தன்னைச் சேர்வதை தவிர்க்க மூன்றடுக்கு ஃபில்டர் ஒன்றை வரையறுத்தாராம் சாக்ரடீஸ்.

அந்த மூன்றடுக்கு நாய்ஸ் ஃபில்டர் மூன்று கேள்விகளாலானது. அந்தக் கேள்விகளால், சாக்ரடீஸ் தன்னிடம் ஒரு செய்தியைப் பகிர வந்த வந்த ஒருவரிடம் கேட்டு வாயடைத்து அனுப்பியிருப்பதாகவும் படித்தேன்.

We are not Socrates, we are just a piece of Chalk at ease!
மற்றவர்களின் சிகரெட்டில் ஃபில்டர் இருப்பதை உறுதி செய்யும் முன், நம் சிகரெட்டில் ஃபில்டர் இருக்கிறதா என்று பார்ப்பதே முறை.

ஆதலால், இனி ஒவ்வொரு முறை ஒருவரைப் பற்றி இன்னொருவரிடம் அல்லது ஒரு கும்பலைப் பற்றி இன்னொரு கும்பலிடம், ஏதோ ஒன்று பகிரும் முன், இந்த மூன்று கேள்விகளுக்கும் பதிலெழுதுவோம்…

முதல் கேள்வி – The Test of Truth
பகிர நினைக்கும் செய்தி, நூறு சதவீதம் உண்மையா?

இரண்டாவது கேள்வி – The Test of Goodness
பகிரப்போவது நற்செய்தியா… நற்குணமா

மூன்றாவது கேள்வி – The Test of Usefulness
பகிர்வது பயணளிக்குமா?

Truth, Good, Useful :

ஆம், ஆம், ஆம் – பகிரலாம்.

இல்லை, இல்லை, இல்லை – அப்படியே முழுங்கிவிடவும்!

ஆம், இல்லை, ஆம் – பகிரலாம்.

இல்லை, ஆம், இல்லை – பகிரலாம். நண்மைதானே என்று பகிரலாம். பயணில்லை என்றாலும், தெளிவு பிறக்க ஒருவரின் முகத்திலேயே கூட கேட்டு விடலாம். நண்மைதானே! பக்க விளைவுகள் எதுவுமிருக்காது.

இல்லை, இல்லை, ஆம் – வாய்ப்பில்லை. ஏனெனில், உண்மையல்லாதது, நண்மையில்லாதது பயணுள்ளதாய் இருக்க முடியாது.

ஆம், ஆம், இல்லை – உண்மையாக இருந்தாலும், நற்செய்தியாக இருந்தாலும், ஒருவரைப் பற்றிய அந்த செய்தி மற்றொருவருக்கு எந்த விதத்தி பயனுள்ளதாய் இருக்கப் போவதில்லை என்றால்… கப் சிப்!

இல்லை, ஆம், ஆம் – உண்மையென்று தெளிவாகத் தெரியாததில், பயனுள்ளதாய் இருக்க வாய்ப்புண்டு என்றால் பகிரலாம்… அது ஒருவரைப் பற்றிய நற்செய்தியாய் இருந்தால் மட்டும். நண்மைதானே! கேட்டுவிடலாம்… பக்க விளைவுகள் எதுவுமிருக்காது.

ஆம், இல்லை, இல்லை – அமைதியே உசிதம்!

 

 

நான் அனேக நேரங்களில் மெளன விரதம்… நீங்க எப்படி!?

Free Writing – வாங்க எழுதலாம்

சமீபத்தில் நண்பனொருவனிடம் பேசிக் கொண்டிருந்த போது, Free Writing என்றொரு யுக்தியைப் பற்றிக் கூறினான்.

அவன் கல்லூரி நாட்களில் அவனது ப்ரொஃபசர் ஒருவர் அவனுக்கு இதைப் பற்றி சொல்லியிருக்கிறார். கேட்டதும் எப்போதும் போல ஆர்வத்துடன், இன்ஸ்டண்டாய் பிறந்தது என்னுடைய ‘அப்படின்னா!?’
அதனைத் தொடர்ந்தது அவன் விளக்கம் அதனைத் தொடர்ந்தது இந்தப் பதிவு!

எழுத்தாளர்களின், எழுத வேண்டுமென்ற முனைப்போடு இருக்கும் எழுத்தார்வலர்களின், மிகப் பெரிய எதிரியாய் நான் கருதுவது, Writer’s Block என்று சொல்வார்களே அதைத்தான்!

அதனை அடித்து நொறுக்க பல வழிகளிருக்கலாம்…

உதாரணத்திற்கு ‘Happy Ending’ என்ற ஹிந்திப் படத்தில் வருவது போல மனதிற்கு பிடித்த ஒருவருடன் சொகுசு காரில் லாங் ட்றைவ் போகலாம்.

சொகுசு காரும் இல்லாத மனதிற்கு பிடித்தமான அந்த நபரின் சம்மதமோ அல்லது அப்படியொரு நபரே இல்லாத
என்னைப் போன்ற எழுத்துப் பிரியர்களுக்கு இந்த Free Writing என்னும் யுக்தி பேருதவியாயிருக்கும்!

Free Writing என்றால் –
என்ன எழுதப் போறோம், எப்படிக் கொண்டு போகப் போறோம், எப்படி முடிக்கப் போறோம் இப்படியெதுவுமே
யோசிக்காமல்… இதனை மறுபடி படித்துப் பார்த்தால் நன்றாகயிருக்குமா, நாலு பேர்கிட்ட இது நான் எழுதினதுன்னு காமிக்குற மாதிரி இருக்குமா, இதனை எழுதி என்ன பண்றது என்று எந்த வித யோசனையும் இல்லாமல் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.

சும்மா ஒரு பேப்பர் பேனா/லேப்டாப்பில் வோர்ட் டாக்குமெண்ட் எடுத்து என்ன வார்த்தைகள் வருதோ அதை எழுதினால் நமக்கிருக்கும், என்னவென்று சொல்லத் தெரியாத அந்த Writer’s Block லேசாய் ஆட்டம் காணும்.

அப்போ என்ன சிந்தனை ஓடுகிறதோ ஆதை அப்படியே எழுதிவிட வேண்டும். நான்ங்கைந்து வரிகள் கழித்து வேறொரு சிந்தனை தோன்றினால், அதைப் பற்றி எழுத வேண்டும். அதுவும் மோசமான சிந்தனை என்று தோன்றினால், ஏன் மோசமான சிந்தனையாகத் தோன்றுகிறது என்பதை எழுத முயல வேண்டும்.

விக்கிப்பீடியாவில் இதைப் பற்றி படித்த போது, இரண்டாம் வரியிலேயே, Free Writing, பெரும்பாலும் பயன்படுத்த முடியாத எழுத்துக் கோர்வைகளையே கொடுக்கும். ஆனால், எழுதுபவரை, ஆரம்பத்திலேயே ஏனென்று கேட்டு தடுத்து நிறுத்தும் பயங்களை முக்கியமாக self-criticism என்னும் கள்ளிப் பாலை திரித்து முறித்து விடும் என்றிருந்தது.

ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் எடுத்துக் கொண்டு, அது முடியும் வரை எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஏதாவது எழுதிக் கொண்டே இருக்க வேண்டும்!

எழுதி முடித்தவுடன் ஒரு முறை படித்து பார்த்தால் ஒன்றிரண்டு நல்ல யோசனையாவது சிக்கும். சிக்கவில்லையென்றாலும் பரவாயில்லை கிழித்து விட்டு போய்கிட்டே இருக்கலாம். Free Writingதானே!

ஆனால், நிச்சயம் அடுத்த நல்லதொரு முயற்சிக்கான அடிப்படை ஐடியா கிடைக்கும் வாய்ப்புகள் ஏராளம்.

குறுக்குவழியில் Free Writing –
எல்லா நல்ல விஷயத்தையுமே எளிதில் செய்து முடிக்கும் சில வழிகளிருக்கும். அதே போல் இதற்கும் ஒரு வழியிருக்கிறது.
முதல் முறை நான் Free Writing பன்ன போறேன் என்று உட்கார்ந்தால், அதுவும் கூட அன்ரிஸர்வ்டு கம்பார்ட்மெண்ட் போல நெளிய வைக்கும்.

சில நிமிடங்கள் முயற்சி செய்யுங்கள்… பின்னர் உட்கார முடியவில்லையென்றால் இந்த மூன்று விதிகளை உபயோகித்து விடுங்கள்

– ஏன் அந்த நேரத்தில் எழுத முடியவில்லை, என்பதை எழுதலாம்.

– எது தடுக்கிறது என்று கண்டுபிடித்து அதனை திட்டலாம்.

– இதனை இவ்வளவு நாட்கள் செய்யாமல் விட்டதற்கு நம்மையே திட்டி எழுதலாம்.

இவை மூன்றும் நிச்சயம் உதவும் ஹேரி-பாட்டர் ஸ்பெல்! முதல் முறை மட்டுமே இவற்றை பயன்படுத்தவும்!!!

முயற்சி செய்துவிட்டு தங்கள் அனுபவத்தை பகிரவும்…

என் ஷவரில் கங்கை

கை கூப்பும் கடந்த காலம், கண் கட்டும் எதிர்காலம், குற்ற உணர்ச்சிகள், குத்திக் குடையும் குழப்பங்கள், தொலை தூர எதிர்பார்ப்புகள், தொலைந்து போன இன்பங்கள்… என்று எல்லாம் தலைக்குள் தாண்டவமாடி வாட்டி வதைக்கும்.

என்ன செய்வது ஏது செய்வது என்று முன்னிரவில் போட்டு வைத்த திட்டங்கள் எல்லாம் பின்னிரவில் உடைந்து போய்விடும். அந்த நேரத்தில் மூளையின் ஒரு ஓரத்தில் சற்றே சூடேறும். அப்படியே கண் சுருங்கி உறங்கிப் போக, அடுத்த நாள் காலை கண் விழித்ததும் பயத்தின் ரேகைகள் மெத்தையில் என் மீது படர்ந்து ஒரு முதுகெலும்பு உணரா அடிமையாக்கியிருக்கும்.

வேறு வழியின்றி எழுந்து நடந்து கண்ணாடியில் முகம் பார்த்தால் கருமணிகளில் நம்பிக்கை நரம்புகளில் ரத்தம் சுண்டி, ஒளியிழந்திருக்கும்!
முகம் வாடிப் போயிருக்கும் அந்நேரத்தில், அடுத்ததாய் குளிக்கும் முடிவு.

இந்த மொத்த கனத்தையும் ஏந்திக் கதவைத்திறந்து குளியலறையில் கால் பதித்தவுடன் ஒரு புத்துணர்ச்சி பிறக்கும். குளிக்கலாமா வேண்டாமா என்று சில நொடிகள் யோசித்த பின் ஷவரை திருவியதும்…

முதல் துளிகள் மேலே பட்டுச் சிதறி என் மீது சட சடவென விழ, சில்லென ஒரு மின்சாரம் பாய்ச்சும் நொடி. அந்த நொடியை நிமிடங்களாய் நீட்டித்தால் அதுவே திவ்ய தியானம்!
Mindfulness என்பதை தினசரி நாம் அனைவரும் எளிதாஉ உணரக் கூடியது அந்த ஒரு நொடியில்தான். அதன் உன்னதத்தை உணர்வதற்கு

வேறு நினைவுகளின்றி அந்நொடியை மட்டும் ஆட்சி செய்யும் ஆண்டவனாய்…
பாவ புண்ணியங்கள் ஏதும் தீண்டவும் முடியாத ஒருவனாய் நான் ஆவதை உணர்ந்து…
வெளிவந்தேன் புத்தம் புது பிறவியெடுத்து!

குறிப்பு – Dan Millman என்னும் ஜிம்னேஸ்ட்டைப் பற்றிய Peaceful Warrior படம் பார்த்துவிட்டு ஒரு முறை குளிக்கச் சென்றால், உங்கள் ஷவரிலும் கங்கை நீராடலாம்!