மாற்றத்தின் மறுபெயர்- குருசாமி பாலசுப்பிரமணியன்

கும்பகோணத்தில் ஒருவர் ஏழை பிள்ளைகளுக்காக ஒரு பள்ளி நடத்தி வருகிறார். மூன்னூறுக்கும் மேற்பட்ட பிள்ளைகளுக்கு இலவசக் கல்வியளித்து வருகிறார். அந்த பள்ளியில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் வேலை செய்து கொண்டே படிப்பவர்கள். அவர்களுக்காகவே காலை ஆறு மணி முதல் எட்டு மணி வரை மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணிவரை இயங்குகிறது இவரது பள்ளி – காந்தியடிகள் நற்பணிக் கழகம்.

இங்கே ஆசிரியர்களும் வேலை செய்து கொண்டே பகுதி நேரத்தில் இந்தப் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆர்வமுள்ளவர்கள். இவரது உன்னதமான முயற்சியில், முப்பத்தியெட்டு ஆண்டுகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பயனடைந்துள்ளார்கள்.

இதையெல்லாம் விட நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஒரு செய்தி என்னவென்றால்… இந்தப் பயணத்தை துவக்கி வெற்றிகரமாக செயல் படுத்தி வருபவர் ஒரு மளிகை கடைக்காரர்!
சேவையை பற்றி சொன்னதுமே ‘அதுக்கெல்லாம் பணம் வேணும்பா…’ என்று சொல்லும் அனைவரும் இவரது கதையை தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த ஒருவர்.. அந்த மளிகை கடைக்காரர்..
குருசாமி பாலசுப்பிரமணியன்

இவரைப் பற்றி நான் தெரிந்து கொண்டவுடன் கூகுள் செய்து பார்த்ததில்.. விஜய் டிவயின் நீயா நானா இவருக்கு 2013ம் ஆண்டின் சிறந்த நம்பிக்கையாளர்’ விருது வழங்கி கௌரவ படுத்தியிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி ஏற்கனவே ‘தி ஹிந்து’ நாளிதழின் மாற்றத்தின் வித்தகர்கள் என்ற பகுதியில் இவரைப் பற்றிய தகவல்கள் வெளிவந்திருப்பதும் தெரியவந்தது. (குறிப்பு: நேற்றுவரை இப்படியொரு பகுதி தி ஹிந்துவில் வெளிவருவது எனக்கு தெரியாது. அதனால்.. ஊசிமிளகாயின் இந்தப் பகுதிக்கு மாற்றத்தின் மறுபெயர் என்று நான் பெயரிட்டது தற்செயலான ஒன்று என்பதை இந்த இடத்தில் நான் பதிவு செய்ய விரும்புகிறேன் 😀 )

அதனால்.. அவருடைய வாரத்தைகளின் நேரடியான பதிவாக வெளிவந்த தி இந்து பதிவின் லிங்க்..

http://tamil.thehindu.com/opinion/columns/ மாற்றத்தின்-வித்தகர்கள்-1-கும்பகோணம்-குருசாமி-பாலசுப்பிரமணியன்/ article5192415.ece

தி ஹிந்துவின் இந்த ஆர்ட்டிகிலை படிப்பவர்கள் கீழே கமெண்ட்டுகளில் ஜம்புலிங்கம் பாலகுருசாமி என்பவரின் கமெண்ட்டை தவறாமல் படிக்கவும்.

காந்தியடிகள் நற்பணிக் கழகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள..

http://gnkkumbakonam.blogspot.in/

இப்போதைக்கு என்னால் முடிந்தது என் வட்டத்தில் இந்த மனிதரை அறிமுகம் செய்வதுதான். ஆனால் அடுத்த முறை கும்பகோணம் பக்கம் சென்றால் நிச்சயம் இவரை சந்தித்து வருவேன்.

Advertisements

மாற்றத்தின் மறுபெயர்: சுதன்சு பிஸ்வாஸ்

விடுதலை நாளான இன்று சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகளை ஒன்று விடாமல் பார்க்க பிளான் போட்டு; இந்த சேனல் பாக்குறதா அந்த சேனல் பாக்குறதான்னு முடிவு செய்ய நேரமில்லாம ரொம்ப பிஸியா இருந்தா கூட.. ஒரு அஞ்சு நிமிஷம் சுதன்சு பிஸ்வாஸ்காக ஒதுக்குங்கள்.

இந்த விடுதலை நாளில் இவரை பற்றி எழுதுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். படித்த பின்.. இவரை பற்றி தெரிந்த பின் நீங்களும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சுதன்சு பிஸ்வாஸ் அவர்கள் விடுதலை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினார். பல போராட்டங்களில் பெரும் பங்கு வகித்த இவர், வட இந்தியாவின் பிரபல புரட்சி இயக்கமான அனுஷிலன் சமிதியின் உறுப்பினராக இருந்தவர். போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக ஆங்கிலேயர்களால் பல ஆண்டுகள் சிறையிலடைக்கப் பட்டார்.

இந்தியாவின் விடுதலைக்குப் பிறகும் நாட்டின் நன்மையில் இவரது பங்கு குறைய வில்லை. கொல்கட்டாவின் பரகன் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஸ்ரீ ராமக்ரிஷ்ணா சேவாஷ்ரம் என்ற தொண்டு நிறுவனத்தை துவக்கி அதன் மூலம் பல உதவிகள் செய்யத் துவங்கினார்.

இவரது தொண்டு நிறுவனத்தின் முதன்மை குறிக்கோளாக இவர் கூறுவது மனித நேயத்தை விதைக்கும் கல்வி. இவரது பள்ளிப் பருவத்தில் பரீட்சை எழுதிக் கொண்டிருந்த இவரை எக்ஸாம் ஹாலிற்குள் வந்து ஆங்கிலேயர்கள் கைது செய்தனர். கல்வியின் அவசியத்தை அந்த சம்பவம் இவருக்கு உணர்த்தியது. அதனை மனதில் கொண்டு ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக  ஆயிரக் கணக்கான ஆதரவற்ற மாணவர்களின் கல்விக்கு உதவியிருக்கிறார்.    

தற்போது 67 ஆதரவற்ற மாணவர்கள் சேவாஷ்ரமத்தில் இருக்கிறார்கள். இதுமட்டுமின்றி இவரது சேவாஷ்ரம் 29 முதியோர்களுக்கு குடும்பமாக இருக்கிறது.

அந்த கிராமத்தில் சரியான மருத்துவ வசதி இல்லாததை கவனித்த இவர், தனது எழுபதுகளில் பொது மருத்துவம் மற்றும் ஹோமியோபதி கற்று கிராம மக்களுக்கு மருத்துவ உதவியும் செய்யத் துவங்கினார். அதுமுதல் சேவாஷ்ரதின் ஒரு பகுதியாக டிஸ்பென்சரியும் இயங்கிவருகிறது. 

இப்போது இந்த ஹீரோவுக்கு வயது 95. இந்த வயதிலும் மாணவர்களுக்கு தினமும் கணித வகுப்புகள் எடுக்கிறார்.

எஸ்‌.ஆர்.‌கே.‌எஸ் பற்றி மேலும் தெரிந்து கொள்ள/அவர்களுக்கு உதவ www.srks.org என்ற அவர்களது வெப்சைட்டை பார்க்கவும் அல்லது saunak123@gmail.com மின்னஞ்சல் மூலமாகவும் அவர்களை தொடர்பு கொள்ளலாம்.  

அன்று நாட்டின் விடுதலைக்காகவும் இன்றுவரை அதன் முன்னேற்றத்திற்காகவும் உழைக்கும் சுதன்சு பிஸ்வாஸ் அவர்களை மனதில் கொண்டு இந்த விடுதலை தினத்தில் விடுதலைக்கு மரியாதை செய்வோம்.

குறிப்பு: சௌனக் பட்டாச்சாரியா என்றவர் சுதன்சு பிஸ்வாஸை பற்றி இணையத்தில் எழுதியதை தொடர்ந்து SRKSவிற்கு ரூபாய் 4.9 லட்சம் நிதியுதவி கிடைத்திருக்கிறது.
அதுமட்டுமன்றி CNN-IBNன் ரிப்போர்ட்டர் ஒருவர் அதனை படித்து SRKS பற்றிய ஒரு நிகழ்ச்சியை தயாரித்துள்ளார்.  

மாற்றத்தின் மறுபெயர்: ஜே.எஸ்.பார்த்திபன்

சம்பள நாட்களை தவிர மற்ற நாட்களில் நமக்கு பேங்குக்கு(Bank) போவதில் இஷ்டமிருப்பதில்லை. காரணம்.. அங்கு போய் வரிசையில் நிற்பது மட்டுமில்லை. அங்கிருக்கும் அதிகாரிகளும்தான்(முக்கியமாக அரசு வங்கிகளில்). அவர்களின் பேச்சு, ஏற்றமான குரல், அவசரம், குறை கண்டுபிடிக்கும் பழக்கம் என எதுவும் நமக்கு பிடிப்பதில்லை. அதனால் நாம்  
‘பேங்க் வேலை கெடச்சதும் இப்படி ஆயிடுவாங்களோ..??’      
‘கேள்வி கேட்கவும் முடியாது.. சமூக அமைப்பு சரியில்ல!’ என்றெல்லாம்  விமர்சிக்கிறோம்.

கண்டக்டர் என்றாலே சில்லறை கேட்டு, அழுத்தமான குரலில் வேகமா எறங்கு என்று அதிகாரத்துவமாய் அதட்டுபவர் என்ற எண்ணம் ஒரு நல்ல கண்டக்டரை பார்த்ததும் மாறும்.

அது போல தான் இந்த பேங்க் சமாச்சாரத்திலும். ஏன் கல்லூரியில் இருந்த கனரா வங்கியில் பணிபுரியும் ஒருவர் எனது இந்த என்னத்தை முற்றிலுமாய் மாற்றினார். அவரது துடிப்பான குட் மார்னிங் முதல் குடுடா கண்ணா நான் செஞ்சு தர்றேன் வரை அனைத்தும் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதுவரை நான் சந்தித்த ஒரு பேங்க் அதிகாரி கூட என்னை இந்த்ய்ஹா அளவுக்கு பொறுமையாக நிதானமாக வழிநடத்தியதில்லை. கடைசியாக நான் அவரை சந்தித்த போது ‘நீங்கதான் நான் பார்த்தாதுலேயே பெஸ்ட் பேங்க் அஃபீசியல். பேங்க்ல வேலை செஞ்சாலே இப்படித்தான் இருப்பாங்க என்ற என்னோட பார்வைய நீங்க மாத்திட்டீங்க. நன்றி.’ என்று சொல்லி விடைபெற்றேன். அவர் அவருடைய கிளைக்கு வருபவர்களுக்கு இதை செய்யுங்க அதை செய்யுங்க இதுதான் அதைவிட சீக்கிரம் முடியும் என்று வழிகாட்டுவதை ரசிக்கிறார். In short he enjoys doing his job.

இணையத்தில் கொட்டிக் கிடக்கும் ஏராளமான எழுத்தாளர்களின் வெப்சைட்டுகளை கிளறிய போது இவரை போலவே ஜே.எஸ்.பார்த்திபன் என்ற வங்கி ஊழியர் ஒருவர் ஏழை எளிய மக்களுக்கு அவரது வங்கியின் மூலம் ஒப்பில்லா உதவிகளை செய்துவருகிறார் என்பதை தெரிந்து கொண்டேன்.   

ஜே.எஸ்.பார்த்திபன்…

தேசிய வங்கி ஒன்றில் சீனியர் மேனேஜராக பணிபுரியும் இவர் டெல்லியில் பிச்சைகாரர்களிடம் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி பேங்க் அக்கௌன்ட் வசதியை பயன்படுத்த ஊக்குவித்து அவர்களது வாழ்வில் பெரும் மாற்றம் செய்துள்ளார்.    

பின் தமிழகத்திற்கு வந்த இவர், பெரும்பாலான எளிய குடும்பங்கள் தங்கள் பணத் தேவைகளுக்கு, முறையின்றி வட்டிக்கு விடுபவர்களை சார்ந்திருப்பதை கண்டார். அவர்கள் எவ்வளவு சம்பாத்தித்தாலும் கந்து வட்டிக் காரர்களிடம் தங்கள் பணத்தை பரிகொடுக்கும் அவலத்தையும் கண்டார்.     
வங்கிகளின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு கிராமங்களிலும், ஏழை மக்கள் மத்தியிலும் தேவையான அளவு இல்லாததே இதற்கு காரணம் என்பதை கவனித்தார். 

அவரது சொந்த ஊரில் ஏழை எளிய மக்களிடம் வங்கிகள் பற்றியும் சேமிப்பின் அவசியம் பற்றியும் விளக்கி அவர்களை முறையாகச் சேமிக்கச் செய்து பேருதவி செய்திருக்கிறார்.

வங்கியில் லோன் வேண்டுமென்றால் குழப்பத்தை ஏற்படுத்தும், வெகுஜனத்திற்கு அந்நியமான ஆயிரத்தெட்டு ப்ரொசீஜர்கள் இருப்பதால் அவர்கள் வங்கிகளை நாடுவதில்லை என்று கூறும் இவர் தேவைவரும் நேரத்தில் அவர்களுக்கு வங்கிக் கடன் வழங்கி ஊகமளிக்கிறார். வங்கிகளுக்கு வர இயலாதவர்களின் வீட்டிற்கே சென்று அவர்கள் தேவைகள் அறிந்து உதவி செய்கிறார்.   

‘இப்போ நான் செய்றதெல்லாம் ஏன் வேலையில என்னால செய்ய முடிஞ்சது.  இதெல்லாம் நான் சேவையா நெனைக்கல.. கடமை. இது ஒரு அவசியமான விஷயம்’ என்று சுருக்கென்று கூறுகிறார்.

அவரது கட்டுரையின் துவக்கத்தில் From poor banking to banking for poor  என்ற ஒரே வரியில் அவரது கடமையை மொத்தமாக விளக்கி அசத்துகிறார்.

இவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள..

http://www.youtube.com/watch?v=jTF094ZBbXc

http://www.jspflying.wordpress.com என்ற அவருடைய  வலைப்பூவை காணலாம்.

மாற்றத்தின் மறுபெயர்

டிவி சேனல்களின் கேமராக்கள் இவர்கள் பக்கம் திரும்பவில்லை.  
மேடைகள் இவர்களை மரியாதை செய்ய வில்லை.
அடைமொழிகள் இவர்களை அலங்கரிக்கவில்லை.

இவை எதையுமே இவர்கள் எதிர்பார்க்க வில்லை. தங்கள் வாழ்க்கையில் பிறரது வாழ்க்கையையும் கணக்கில் கொண்டு வெகு சாதாரணமாக வாழ்பவர்கள். பத்து வருடங்கள் கழித்து இவர்களால் பல நல்ல மாற்றங்கள் இங்கு நிகழ்ந்திருக்கும்.

கிராஸ் ரூட் லெவல் டெவலப்மென்ட் என்று சொல்வார்களே அதனை உண்மையில் செயல்படுத்திக் கொண்டிருக்கும் பெரும் சாதனையாளர்களை இந்தப் பகுதியில் உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

ஏற்கனவே பல சமூக வலைத்தளங்கள் இவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தாலும், இவர்களை இந்த ஊசி மிளகாய் பேச வேண்டும் என்ற ஒரு ஆசையின் வெளிப்பாடாக ‘மாற்றத்தின் மறுபெயர்’ என்ற தலைப்பில் பல நல்லுள்ளங்களைப் பற்றி பேசப் போகிறோம்…