கண்ணம்மா என்றழைத்து..

காற்று வெளியிடை

கண்ணம்மா

என்னை ஆசை நசுக்குதடி!

காத்துக் கிடக்கிறேன்

கண்ணம்மா

இங்கு காற்றும் கசக்குதடி!

நேற்று நினைவினிலே

கண்ணம்மா

உந்தன் பாடல் கரையுதடி!

மாற்று வழியினிலே

கண்ணம்மா

எந்தன் காவல் உடையுதடி!

தோற்று தொலைந்திடவே

கண்ணம்மா

எந்தன் நெஞ்சம் அலையுதடி!

கீற்றுக் கதிரதுவும்

கண்ணம்மா

உந்தன் முன்னே வளையுதடி!

Advertisements

வெயில்காலம்

குடை இருந்துமே 

அதை வெறுக்கிறேன்! 

நிழல் இருந்துமே 

வெயில் ரசிக்கிறேன்! 
ஜன்னல் வழி எட்டிப் 

பார்த்து…

உந்தன் ஒளி தட்டித் 

தாக்கி…
கவனமாய் ஒரு திட்டம் 

போட்டு…

கதிர்களால் எனை கட்டிப் 

போட்டு…
நிலம் தீண்டும் பாதத்தில் 

சூடேற்றி…

என் நிழலையும் கொஞ்சம் 

மெருகேற்றி… 
கண்முன் எங்கும் பொலிவு 

சேர்த்து…

என்னுள் பொங்கும் தாகம் 

சேர்த்து…
உடல் வியர்க்கச் செய்யும் 

நீயே என் வாழ்வின் 

வெயில்காலமடி! 

என்னைப் போல் ஒருத்தி இருந்தால்… அவளுக்கு! 

அவள் பார்வையிலிருந்து… அவள் வார்த்தைகள்!

ஓரிரு வார்த்தை

பேசும் முன்னே

ஓயும் காதல் என்னுள்ளே!

காரிருள் மேகம்

காற்றின் வேகம்

சேரும் நேரம் போலே…

ஓரிரு பார்வை

வீசும் முன்னே

தீரும் காதல் என்னுள்ளே!

சாலையில் தூரம்

தள்ளிப் போகும்

காணல் நீரைப் போலே…

யாரவன் இன்று

என்னுள் நின்று

எட்டிப் பார்க்கின்றானே!

கேள்விகளென்னும்

அச்சமின்றி

என்னைக் கொல்கின்றானே!

காதலன் இல்லை,

இவன் யாரோ?

என் காதலின் எல்லை

இவனோ…!!

ஏனோ இந்த

கலவரம் ஏனோ!?

நினைவுகள் கட்டித்

தழுவும்!

நிமிடம் நிலைத்தே…

ஏனோ இந்த

கலவரம் ஏனோ!?

ஏனோ இந்த

கலவரம் ஏனோ!?

ஏனோ இந்த

கலவரம் ஏனோ!?

அடிப்பாவி அழகியே!

அடியே!

அடிப்பாவி அழகியே!

என்ன முழுசா மறந்து,

தெளிந்த நெனப்பில் மெதந்து,

பல்லிளிச்சு இங்கொருத்தன்

கெடக்கானே..,

வருஷக்கணக்கா

வட்டமிட்டு,

சகுனிக்கணக்கா திட்டமிட்டு,

அவன் மூளை மலையேறி

கூடாரம் போட்டிருந்தேன்

நிம்மதியா!!
நீ வந்து

மருதாணி வண்ணங்காட்ட,

நிக்க வச்சு

அவன் மேல அன்பு காட்ட,

தொலஞ்சு நானும் தவிக்கிறேண்டி

நிர்கதியா!
வெற்றிடத்த நெரப்பிப்புட்ட

என் வேரறுத்து எறிஞ்சுப்புட்ட!

வேட்டையாடி வாழ்ந்து வந்தேன்!

வேற்றிடத்த

தேட வச்ச!
அடியே!

மிலிட்டரிக்கு பயந்த

ஒரு மலை வாசி

போல ஆனேன்,

தலைமுறையா வசிச்ச நானும்

தலைமறைவா

ஆகிப்போனேன்!
சொந்த நாட்ட தோத்த ஆத்திரத்தில்

கண்ண மூடி

அழவும் வச்ச!

மன்னனாட்டம் இருந்த எம்பொழப்பில்

மண்ண வாரி

அடிச்சுப்புட்ட!

அடிப்பாவி அழகியே!

பார்வையில செதச்சு

வார்த்தையில வதச்சு

புன்னகையில பொதைக்க பாக்குற!

எம்பொழப்ப கெடுத்த ஒம்முகத்துலதான்,

என் சவப்பெட்டி இருக்குதடி.

அடிப்பாவி அழகியே!

அவனே மறந்தாலும்,

நான் மறக்க மாட்டேன்

குழப்பம் என்ன கழுவிலேத்தும்

ஒம்முகத்த!

Double Decker பயணம்

மே மாதம் படத்தை முதல் முறை பார்த்தது எப்போது என்று சரியாக நினைவில்லை. 
அப்போது எக்ஸ்ட்ரா அப்பளமும், கேரம் போர்டும்தான் என் நாட்களின் மிக முக்கியமான அம்சங்களாக இருந்த காலம். 

கேபிள் டிவியின் வருகை கொஞ்சம் என் தூக்கத்தை தள்ளிப் போட ஆரம்பித்த காலம். 

எங்கிருந்தாலும் அவசர அவசரமாக வீடு வந்து, தவராமல் ஸ்வாட் கேட்ஸ் பார்த்த காலம். 

என் கால் முட்டிகளின் கருமை அதன் இருப்பை பதிவு செய்யத் துவங்கிய காலம். 

இன்னும் அப்படியெ நினைவிலிருக்கிறது அந்தப் படத்தை முதல் முதலில் பார்த்த அனுபவம். இன்று எனக்கு சோறு போடும் மெட்ராஸை அறிமுகப் படுத்தியது அந்தப் படம்தான். 

ஒரு காட்சியில்… சிவப்பு நிற டபுள் டெக்கர் (Double Decker) பேருந்து ஒன்று வந்து போகும். 

என் இப்போதைய நினைவாற்றலை வைத்துப் பார்த்தால், மெட்ராஸில் அந்த மொட்ட மாடி பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும் என்பதே என் முதல் ஆசை என்று தோன்றுகிறது. 

அதன் பின் ஒரு முறை சென்னை பக்கம் வந்தபோது… ‘பாட்டி! எனக்கு மொட்ட மாடி பஸ்ல போகணும்’ என்று பாட்டியிடம் கேட்டேன். ‘அந்த பஸ் இப்போ இல்லடா. நிறுத்திட்டாங்க.’ என்று அப்போது பாட்டி சொன்னது 

இன்று வரை அப்படியே நினைவிலிருக்கிறது! 

சிரிச்சுகிட்டே சொன்னாங்க. அவங்களுக்கு தெரியல… கண்ணுல இருந்த சந்தோஷம் கண்ணம் பூரா வழிஞ்சு ஓடப் பார்த்தப்போ, ஒரு பெரிய… ரொம்ப பெரிய சோகம் வந்து அனை போட்ட மாதிரி இருந்துச்சு. அன்று, மெரினாவும், ஐஸ் க்ரீமும் அந்த சோகத்துடன் சண்டையிட்டுத் தோற்றுப் போனது வரலாறு. 

இன்று… 


அதிகாலையில் நண்பன் ஒருவனுடன் மெரினா சென்றேன். அங்கே… மெட்ராஸ் வீக் கொண்டாட்டத்தையொட்டி, தி நியூ இந்தியன் எக்ஸ்ப்ரெஸின் டபுள் டெக்கர் பேருந்து எங்களை கடந்து சென்றது. 

நல்ல வேளை ஆண்டாண்டு காலங்கள் ஆகிவிட்ட போதும் ஆசை இன்னும் எக்ஸ்பைரியாகாமல் இருந்தது மகிழ்ச்சியளித்தது. அந்த சோக மேகம் இன்று கலைந்தது! 

அவ்வளவுதான். அந்த பயணத்தை… அந்த அனுபவத்தை… நான் எனக்கே எனக்கான ஒன்றாய் பத்திரப் படுத்தியுள்ளேன். நான் எழுதி நீங்கள் படிப்பதை விட, இந்த அனுபவத்தை நான் சொல்லி நீங்கள் கண்டால்… அங்கும் இங்கும் அலை பாயும் வார்த்தைகளும், ஆகாயத்தை மொத்தமாய் விழுங்க நினைக்கும் கண்களும் உங்களுக்கு முழுமையான ஒரு புரிதலை தரக்கூடும். 

இப்போதைக்கு… சென்னைக்கும், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸிற்கும் நன்றிகள்! 🙏🏻

நெய்த உறவு

முதல் முதலில் பார்த்த

நாள் நினைவில்லை,

எனையீர்த்த விசை தவிர

வேறெதுவும் நிலையில்லை!
அம்மாதான் அறிமுக

படுத்தினாள்,

ஆசை ஆசையாய்! 
அருகிலிருன்து தன்மை 

விளக்கினாள்,

அன்பின் பாஷையாய்!
உடனிருந்து, மனமுவந்து

உருகி, உருக்கி 

சூடறிந்து எனையழைத்து

பார்க்கச் செய்தாள்.
பின்… 

பல இடஙளில் காண்பதுண்டு.

வெகு தூரத்தில்,

தொடும் தொலைவில்,

என எங்கிருந்தாலும்

தலை திரும்பும்,

என் எண்ணங்கள் யாவும்

அதனை விரும்பும்!
இதமாய், பதமாய்

சிறகடிக்கும்,

சுகமாய், பல விதமாய்,

பிடித்துப் போகும்

இளகிய குணம்!
ஆசை, பேராசை 

தோற்கடிக்கும்,

தடங்கல் சங்கடங்கள்

மறக்கடிக்கும்,

அழகிய மணம்!
அவ்வப்போது கண்டாலும்,

எப்போதும் நீங்கா

நினைவுண்டு,

இது போன்ற பந்தம்

எதுவுண்டு! 
என்னை,

தோற்கடித்து வென்றாலும்,

நெய்கொண்டு நெய்த

உறவுண்டு,

ஷுகர் கூட பரவாயில்லை

அதை உண்டு!
கோதுமை அழகை 

கண்படாமல் காக்க

இங்கு ஏது மை!

நானுமே மழலை

யாரென்னை கேட்க 

எக்ஸ்ட்ரா வை! 
கொள்வாய், மெல்வாய்,

செவ்வாய் செல்வாய்,

இன்னும் சொல்லவா,

வேண்டாமென்றால்
என் பக்கம் தள்ளுவாய்

அல்வா அல்லவா!

When I woke up to see a packet of delicious Halwa today… எச்சிலோடு  ஊரிய இதனை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி! 

And if anyone would love to have some Halwa, contact me. I’ll save some for you. Offer valid till Monday!! 😁

எதிர்த்து நின்ற எழுத்தாளன் 

Wrote this for the open mic session ‘Crazy Little Things’ organized by Mocking Birds and Spot Note Music. Thank you for a wonderful evening! 

நீளா பாதையென்று 

நீதானே சொன்னது…

பேனா எடுக்காதே என்று

நீதானே சொன்னது…
எத்திசையில் மீட்டெடுப்பேன்

என் மூளை மடிப்பேறி வந்தும்

நான் திருப்பியனுப்பிய

வார்த்தைகளை! 
எப்படி உயிர்த்தெடுப்பேன் 

என் சிந்தனை சிறையில்

தற்கொலை செய்து கொண்ட 

கதைகளை! 
எவ்வழி தாள் சேர்ப்பேன் 

என் கற்பனைக் காட்டில்

காணாமல் போய்விட்ட

கவிதைகளை! 
அவன் ஏசுவான்

இவன் பேசுவான்

என்று…

ஊமையாக்கினாய்! 
குறைகள் சுட்டுவான்

தலையில் குட்டுவான் 

என்று…

பாதை மாற்றினாய்!
மூளைக்குள் பல 

முட்டுக் கட்டைகளிட்டு

சூளைக்குள் ஒரு

செங்கல் போல் சுட்டு

என் பேனாவை பொசுக்கப் பார்த்தாய்!
இன்று நான்

ஒன்று எழுதுகிறேன்…
என்னுள் இருக்கும் 

கோழையே… 

உண்மை மேன்மை சேர்த்து

உதவும் எண்ணம் வைத்து

என் தன்மை உனக்குணர்த்தும்…

அடிமை சாசனம்

எழுதுகிறேன்! 
கேள்!! 

அடுத்தவன் வார்த்தை கேட்டு

பேனா எடுத்தவன் 

வைத்த கதை 

என்னோடு போகட்டும்.

வெறும் கதையாய்!
தடுத்தவன் எவனுமிங்கு 

படுத்தி எடுத்திடும் 

எண்ணம் கொண்டால்

என் பெயர் நிற்கட்டும்.

பெரும் பகையாய்! 

@@@@@@@

Dedicated to all those beautiful writers out there, who with the help of language, trying to bring about a change in many ways! 

எழுத்தே எண்ணம் 

வசிக்கும் ப்ரபஞ்சம்

அதை மதித்தே

இங்கு வசிக்கும் எதுவும்! 

If you can’t pen down something… Then pencil down 😀 

But Don’t let anything to stop you from writing! Happy writing! 

அரை டிக்கெட்

முக்கால் முகத்திற்கு
சிரிப்பு
முழங்கால் முழுக்க
வேகம்
ரயில் பெட்டி
வார்த்தைகள்
கையில் கெட்டி
ஆசைகள்!
பக்கத்து இலையின்
முந்திரி அல்வா முதல்
சண்டையிட்டு ஈன்ற
First batting வரை
தைரியத்தின் சாட்சிகள்!
அடம் பிடித்து வாங்கும்
ஜன்னல் சீட்டு முதல்
படம் பிடிக்க முயன்ற
மனல் கோபுரம் வரை
ஆசையின் காட்சிகள்!
அன்று,
கானல் நீரும்
கேள்வி நூறும்
கேட்டவனுக்கு
இன்று,
அரை நாள் லீவு
கேட்க தயக்கம்!
அன்று,
ஆதவன் மொத்தமும்
ஆண்டவன் அட்ரஸ்ஸும்
கேட்டவனுக்கு
இன்று,
ஆஃபீஸ் நம்பரிலிருந்து
ஃபோன் கால் வந்தால் பயம்!
தயக்கத்தின் spelling
தெரியாத
உலகத்தின் உக்கிரம்
அறியாத
அவசிய விடியல்களை
வெறுக்காத
அதிசய நொடிகளை
மறக்காத அரை டிக்கெட்டுகளாவோம்!

தள்ளிப் போகாதே

உனக்காக பலரும்
கனவோடு இருக்க
அதிகாலை மலரும்
எதிர் பார்த்துக் கிடக்க
வந்தெனை சேர்வாயென
தினம் தினம் வாடினேன்
திருமுக தரிசன
வரம் தர வேண்டினேன்!
சுமக்காத சுமையாக
சுலபத் தோற்றமேற்று
நீ எனை சாய்த்ததில்
தோற்றுப் போனேனோ?
எனக்கான உறவென
எல்லைகள் தாண்டி
நான் உனை சார்ந்ததில்
வெறுத்துப் போனாயோ?
உன் வருகையில் –
சிதறிய என் உலகம் மாறுமென
யோசிக்காமல் வாயடிக்கிறேன்!
உருகிய உலோகமாய்,
நீயோ சிக்காமல் வாயடைக்கிறாய்!
சொல் பேச்சு
கேட்குமா மெர்குறி
அதை மறந்த – நானோ
தடுமாற்றத் தர்குறி!
கல் வீச்சு
தாங்குமா கண்ணாடி
அதை மறந்த – நானோ
முட்டாள்களின் முன்னோடி!
நீ பிறக்காத குழந்தை
பல பெயர் வைத்து
மனம் மகிழ்கிறேன்
நீ திறக்காத கதவு
சில துயர் இருந்தும்
தினம் பார்த்திருக்கிறேன்.
உன்னிடம் தான்
எத்தனை அழகு
எத்தனை வேகம்
எத்தனை பொலிவு;
இருந்தும் – நான்
வருந்தும் நிலையில்
விட்டுச் செல்கிறாய்!
ஒவ்வொரு முறையும்
ஏதேதோ காரணம் சொல்லி
கைவிட்டுச் செல்கிறாய்!
போதும்! இனியும் ஒடாதே
எந்தன் இளமை தாங்காதே
என்றும் என்னோடு இருந்திடு
என் நாளையே… தள்ளிப் போகாதே!

என் தொலைதூரக் காதல் – 575

நாள் 1: தோழி ஒருத்தி அறிமுகம் செய்து வைத்தாள். நயம் கண்டு வியந்தேன்.

நாள் 2: மனம் தொலைத்தேன். மறுமுறை எப்போதென்று காத்திருந்தேன்.

நாள் 3: எதிர் பார்த்த ‘மறுமுறை’ எளிதில் வந்தது. எளிமையும் தோற்றமும் என்னை அடிமை ஆக்கியது.

நாள் 4: பேரும் ஊரும் தெரிந்து கொண்டேன். நினைவுகளில் நிரந்தர இடம் கொடுத்தேன்.

நாள் 5: லாங் டிஸ்டன்ஸ் ரிலேஷன்ஷிப் வேலைக்காகாது என்று பலர் சொல்லி கேட்டதால் பயம் தொத்திக் கொண்டது.

நாள் 6: காதலில் பயம் வெல்வதுண்டா… இல்லையே! என் தொலைதூரத்துக் காதலின் பெயரை சொல்லிப் பார்த்து அழகை கொண்டாடினேன்.

நாள் 7:
லாங் டிஸ்டன்ஸ் வேண்டாமென்று பலர் சொல்லினுமது,
ராங்கா போகாமல் இருந்தால் போதுமென மனம் சொல்லக் கேட்டு
,  
ஸ்ட்ராங்காக அடி எடுத்தேன் – ஹைக்கூ வசப்பட்டது.

ஜப்பானில் பிறந்து பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கிருக்கும் எனக்கு காதல் பரிசளித்திருக்கும் ஹைக்கூ என் புதிய காதல். எளிதில் என் வசப்படும் என்று நான் நினைத்தது தவறுதான். நினைத்தது நடந்த கதை என் வாழ்வில் இல்லை. அதிலும், நினைத்தது நடந்துவிட்டால் அது காதலில்லையே!  இருந்தும், முயல்கிறேன்.

காதல் என்னுடையது ஆனால், இதிலிருக்கும் ஹைக்கூ விவேகானந்தன் எனும் தமிழ் ஆர்வங்கொண்ட பெங்களூர் பையனுடையது!