LIFT கொடுத்தேன். கதை கொடுத்தார் – ஜெல் பேனா

‘நான் மூனாங்கிளாஸ் வரைக்கும் படிச்சதெல்லாம் ஆரணி, அதுக்கப்புறம் வெல்லூர் வந்துட்டேன் பாட்டி வீட்டுக்கு. அப்போவே எனக்கு ஒரு பொண்ண பிடிக்கும் ஏன்னா அவ ரொம்ப நல்லா படிப்பா. என்னடா இப்படி மார்க் வாங்குறாளேன்னு பார்ப்பேன். நான் ஊர விட்டு பாட்டி வீட்டுக்கு வந்தப்புறம் எப்போ லீவுக்கு ஆரணி பக்கம் போனாலும் அவ வீட்டு வழியா போவேன் எப்படியாவது அவ வெளிய வர்ற மாட்டாளா.. நான் பார்த்துட மாட்டேனான்னு.

அதை விடுங்க, வேற ஊருக்கு வந்து புது ஸ்கூல்ல சேர்ந்தேன்ல அங்க நான் ஏழாவது படிக்கும்போது ஒரு மேத்ஸ் மிஸ்.. பொறுமையானவங்க, நல்லா பேசுவாங்க. பேரு தீபலக்ஷ்மி. அவங்கள எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஏன் தெரியுமா? அவங்கதான் எனக்கு வாழ்க்கையிலயே மொதமுறையா என் பர்த்டேவுக்கு கிஃப்ட்டு வாங்கிக் கொடுத்தாங்க. காஸ்ட்லியான ஜெல் பேனா ஒன்னு வாங்கிக் கொடுத்தாங்க. க்ளாஸ்ல எல்லாருக்கும் முன்னாடி கொடுத்தாங்க மறக்கவே முடியாது. அதனாலயே எனக்கு மேத்ஸ்னா ரொம்பப் பிடிச்சுப் போச்சு.’

ஃபார்மல்ஸ், முதுகில் கம்பெனி பெயர் அச்சடிக்கப்பட்ட பை, கழுத்தில் ஐ.டி கார்ட்.. இப்படி அந்த ஏழாங்கிளாஸ் பையன் வளர்ந்து பெரிய ஆளாயிட்டான். இருந்தாலும் அந்த ஜெல் பேனா அவருக்கு மிக முக்கியமான விலை கொடுத்து வாங்கிவிடவே முடியாத ஒரு பொருளாகவே உயரமான இடத்தில் இருக்கிறது என்பது அவர் இந்தக் கதையை சொல்லும்விதத்தில் தெரிந்தது.

இந்தக் கதையை அவர் சொல்லி முடித்த சில நொடிகளில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது.

இப்படி எத்தனையோ தீபலக்‌ஷ்மி மிஸ்களால் எத்தனையோ மாணவர்கள் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள். ஒவ்வொரு முறை அவர்கள் பெரிய பெரிய பாராட்டுகள் வாங்குவதற்கும் அந்த ஒற்றை ஜெல் பேனாவும் அது கொடுத்த நம்பிக்கையும் ஒரு முக்கியமான காரணம். அதுதான் எல்லாவற்றிற்கும் ஆரம்பம். நான் மகிழ்ந்துகொண்டேன் அவரது வாழ்க்கையில் தீபலக்‌ஷ்மி மிஸ் போல ஒருவரை அவர் சந்தித்ததற்கு.

அன்பு சூழ் உலகடா அதை நம்பி நீ பழகுடா!

இடம் : ஃபோரம் விஜயா மால், சென்னை.Forum

‘அண்ணே! இன்னைக்கு உங்க பொறந்தநாளா?’

‘இல்லையேப்பா. ஏன் கேட்குறீங்க?’

‘நல்லா சிரிச்ச முகமா பொலிவோட இருக்கீங்க. இப்போ இறங்குனவங்க கூட உங்கள எதுக்கோ வாழ்த்திட்டுப் போறாங்க’

‘அதெல்லாம் ஒன்னுமில்லப்பா. நான் எப்பவுமே இப்படித்தான். என்ன கஷ்டம் வந்தாலும் சிரிச்சுட்டே ஓட்டிடறது’

‘அட.. அண்ணே நம்மாளா நீங்க!’

என்று ஆர்வமாய் அருகில் சென்று பக்கத்தில் நின்று கொண்டு மேலும் கதை கேட்டேன்.

‘சினிமாவுல இருந்திருக்கோம்.. அதனால அப்படியே பழகிடுச்சு’

‘என்னண்ணே சொல்றீங்க?’

‘ஆமப்பா.. வேலாயுதம், அவன் இவன் இப்படி நிறைய படங்கள்ல சின்ன சின்ன கேரக்டர் பண்ணியிருக்கேன். கடைசியா மெட்ராஸ் படத்துல MLA’

‘சூப்பர் சூப்பர். உங்க பேரு என்னண்ணே?’

‘சுபாஷ் சந்திர போஸ்’

ஒரு மூன்று முறை பேஸ்மென்டிற்கும் மூன்றாவது மாடிக்கும் அண்ணனோடு லிஃப்டில் பயணித்த அனுபவத்தில் சொல்கிறேன், இனியொரு முறை ஃபோரம் விஜயா மால் பக்கம் சென்றால் என் அன்புக்குரிய அண்ணனை பார்த்தால் முகம் மலர்ந்து வணக்கம் சொல்லுங்கள். நிச்சயம் பதிலுக்கு உலகின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை தரக்கூடிய சிரிப்போடு வரவேற்பார் சுபாஷ் அண்ணன்.

எங்கேயோ ஒரு வாடகை வீட்டில் சீலிங்கைப் பார்த்து மல்லாக்க படுத்துக்கொண்டு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்வது எந்தவிதத்தில் நியாயம் என்று கூட உங்களுக்குத் தோன்றலாம்.

ஆனால், இந்த மாதிரி சிரிச்ச முகமா தைரியமா சந்தோஷமா தினசரி வாழ்க்கையை எதிர்கொள்ளும் மனிதர்களை நம்மில் பலர் ஒற்றைக் கொம்பு ரைனோ, வெள்ளைப் புலி, பாண்டா வகையில் சேர்த்து என்டேஞ்சர்ட் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். சிலர் இன்னமும் மோசமாய் டைனோசர், டோடோ பறவை போல எக்ஸ்டிங்ட் என்றே நம்பத் தொடங்கிவிட்டோம்.

இவர்கள் இருக்கிறார்கள். இங்கேயே நமக்கு மத்தியிலேயே.. கண்டுகொள்வோம். அவர்களை கண்டுகொள்வதன் மூலம் நாம் நம்மை கண்டுகொள்வோம்.